Wednesday 12 June 2024

ஆண்கள் போட்ட அடித்தளமோ?...

 

     ஆண்கள் போட்ட அடித்தளமோ?

 

கணவர்களின்

சுடுசொற்கள்தான்

பெரும்பாலும்

மனைவிகளை

தீக்குள் உடலைவிட்டு

உயிரை விடச்செய்கிறது…

 

இராமாயணத்தில்கூட

இராமனின் சுடுசொற்கள்

வாசிக்கும்போதே

நம்மைச்சுடுகிறது…

அபலை சீதையின்மேல்

அனுதாபம் வரச்செய்கிறது…

 

தீக்குள் உடலைவிட்டு’

திரும்பி பத்திரமாய்

சீதை வந்ததாய்

இதிகாசக் கதை சொல்லும்!

எதார்த்தத்தில் எவர்

வருவார் திரும்பி?

 

கடவுளைக் கடவுள்

திட்டுகிறது…

இறங்கச்சொல்கிறது…

இதைப் பற்றி

உனக்கு என்ன கவலை?

உங்கள் கேள்வி புரிகிறது…

 

ஆனால்

ஆண்கடவுள்

அப்படித்திட்டியதை…

தீக்குள் இறங்கச்சொன்னதை…

மறுக்காமல் பெண்கடவுள்

செய்த செய்கை

ஏனோ எனக்கு

எதார்த்தமாகத் தெரியவில்லை…

 

பெண் கடவுளே !

மறுப்பு ஏதும் சொல்லவில்லை…

எதிர்த்துக் கேள்வி

ஏதும் கேட்கவில்லை…

சாதாரண மனுசி நீ..

அடங்கிப் போ என்னும்

ஆதிக்கத் திமிருக்காக

ஆண்கள் போட்ட

அடித்தளமோ என

எண்ணத்தோன்றுகிறது எனக்கு…

உங்களுக்கு ?....

 

                      வா.நேரு

                      12-06-2024

 

 

8 comments:

இரம்யாநடராஜன் said...

பெண் கடவுளுக்கு தீயினின்று வெளி வரும் வலிமை தனக்கு உண்டு என்று தெரியும்.மனுசிகள் தன் வலிமை அறிந்தால் போதும்.

முனைவர். வா.நேரு said...

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை கவிஞரே...

Anonymous said...

அதை ஆண் கடவுள் செய்யவில்லை. அதற்கு பின்னால் இருக்கும் சமூகம் செய்யத் தூண்டியது என்று சொல்லலாம். கற்பு இன்றளவும் பெண்ணின் குறியீடு தானே

இரம்யாநடராஜன் said...

தீயில் இறங்கினால் தனக்கு ஒன்றும் ஆகாது என்று தெரிந்து தான் அந்த பெண் கடவுள் இறங்கியது.மறுப்புசொல்லவில்லை..எதிர்த்து கேட்கவில்லை.

வா.நேரு said...

கருத்திற்கு நன்றி..ஆண் கடவுளையும் சமூகம்தான் இயக்குகிறதா.?...

வா.நேரு said...

கருத்திற்கு நன்றி..உங்கள் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன்...

Kavitha Elango said...

தங்கள் எண்ணம் சரிதான்! ஆம் என்று ஆயிரம் முறை வழிமொழியலாம்!

வா.நேரு said...

வழி்மொழிந்தமைக்கு நன்றிங்க...