Thursday 20 June 2024

ஜாதி, மதப் போதை ஒழிப்பு நாள்…- முனைவர் வா.நேரு

 ஜூன் 26 என்பது “உலகப் போதை ஒழிப்பு தினம்” மற்றும் “சட்டவிரோதக் கடத்தல் தடுப்புத் தினம்” ஆகும். போதைக்குள் மாட்டிக்கொண்ட மனிதர்களால், அவர்களின் குடும்பம் படும்பாடு சொல்லி மாளாது. இந்தக் கடத்தலைச் செய்பவர்களும் மனிதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்தாம். உழைக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருப்பதைப் போலவே உழைக்காமல் உண்ண வேண்டும் என்று எண்ணுகிற ஒரு கூட்டமும் இந்த உலகத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.அந்த மனச்சாட்சி அற்ற கூட்டம்தான் பெண்களையும் குழந்தைகளையும் கடத்துகிறது.





போதைப்பொருளை உட்கொள்ளும்போது உட்கொள்ளும் மனிதர்களின் அறிவைப் போதை தடுக்கிறது. சிந்தனையின்றி விலங்குகள் போல வேட்டி அவிழத் தெருக்களில் போதைகளில் படுத்துக் கிடக்கும் மனிதர்களைத் தாண்டித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். எனவே, போதைப் பொருட்களின் கெடுதலை மக்கள் மத்தியில் பரப்புரை செய்யவேண்டியது மிகவும் தேவையே.

ஆனால், குடிப்பழக்கத்திற்கோ அல்லது கஞ்சா,அபின் போன்ற போதைப் பொருள் பழக்கத்திற்கோ அடிமையாகிற ஒருவனுக்கு அவனுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி இருக்கிறது. நாம் ஒரு தவறு செய்கிறோம், இதனால் அசிங்கப்படுகிறோம்.பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகிறது என்பது அவனுக்குப் புரிகிறது. பழகிவிட்ட இந்தத் தவறினை விட முடியவில்லையே என்னும் ஏக்கம் இந்தப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்ட பலருக்கு இருக்கிறது. அதிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தால் கூட வழுக்கு மரத்தில் ஏறுவது போலச் சறுக்கிச் சறுக்கி வாழ்க்கையில் அவர்கள் விழுந்து தோற்பதைப் பார்க்கின்றோம். இது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் இது மிக நல்லது, இது மனித வாழ்விற்குத் தேவையானது என்று பெரும்பாலான மக்களால் கருதப்படுகிற இன்னொரு கொடுமையான போதை என்பது உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அது மதப்போதை.

அந்த மதப் போதைக்கு ஆட்பட்ட பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை இளம் வயதிலேயே சட்டவிரோத ஆள் கடத்தல் போலத் தங்களுடைய மதத்திற்குக் கடத்துகின்ற வேலையை அவர்கள் செய்கின்றார்கள். அப்படிச் செய்வதுதான் தங்களுடைய தலையாய பணி என நினைத்து அதற்காக நிறைய நேரம் செலவழிக்கிறார்கள். அப்படித் தங்கள் மதத்திற்காகத் தங்கள் குழந்தைகளை உருவாக்கும்போது மற்ற மதங்கள் மேல் வெறுப்பு உள்ளவர்களாகவும் அவர்களை மாற்றுகிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் இதை மிகக் கவனமாகச் செய்கிறார்கள். இது தங்கள் கடமை என்று உளமார நினைக்கிறார்கள்.

தோழர்களே, ஜூன் 26 போதை ஒழிப்பு நாள் என்று வருகின்ற பொழுது, இந்த மதப் போதையையும் இணைத்துத்தான் நாம் பார்க்க வேண்டும். குடி போதை போதைப் பொருள் போதை போன்ற போதைகளிலிருந்து குறிப்பிட்ட பயிற்சிகளின் மூலம் விடுபட இயலும். அப்படி விடுபட்டவர்கள் உலகம் முழுவதும் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால், மதபோதையில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. மதபோதையில் இருக்கும் ஒருவனுக்குத் தன் பக்கத்தில் இருப்பவனைப் பார்த்தால் மனிதன் என்று தோன்றுவதில்லை அடுத்த மதத்தைச் சார்ந்தவன், வேறு கடவுளைக் கும்பிடுகிறவன், தான் கடவுளாக மதிக்கும் விலங்கைச் சாப்பிடுபவன் என்ற அளவில் தான் அவன் மனதுக்குள்ளே ஒரு வெறி உண்டாகிறது. எப்படிப் போதை உட்கொண்டால் மனதிற்குள்ளே ஒரு வெறி ஏற்படுகிறதோ அதைப்போல இந்த மதபோதையும் ஒரு வெறியைத்தான் ஊட்டுகிறது.

எனவேதான் தந்தை பெரியார் அவர்கள், ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்றார். மனிதனை நினைக்க வேண்டும் என்று சொன்னால் கடவுளை மறக்க வேண்டும். ஆனால், மதங்கள் தொடர்ச்சியாக எப்படிக் குடிகாரனுக்கு அந்தக் குடிக் (மதுக்)கடையைப் பார்த்தால் உடனே அங்கு போய்க் குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, கஞ்சா குடிப்பவருக்கு கஞ்சா விற்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அங்கே போய் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அதைப் போலவே தெருத்தெருவாக, ஊர் ஊராக, நாடு நாடாக, வழிபாட்டுத் தலங்களை ஏற்படுத்தி, அந்தப் போதையில் இருந்து மக்கள் விடுபடாத வண்ணம் தொடர்ச்சியான பரப்புரையைத் தொடர்ச்சியான – ஏதேனும் ஒரு வகையிலான செயல்பாட்டை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் போதையில் இருந்து விடுபட மக்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. எனவேதான் இந்த நாளை மதப் போதை ஒழிப்பு நாளாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய ஒரு நாளாகவும் நாம் இதை ஆக்க வேண்டும்.

போதை என்று வருகின்ற பொழுது அது வெறுமனே உடலுக்குத் தீங்கிழைக்கின்ற போதை மட்டுமல்ல; மனிதத்திற்குத் தீங்கு விளைவிக்கின்ற, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கின்ற, மனிதர்களுடைய மனதுக்குத் தீங்கு விளைவிக்கின்ற மதப் போதையைப் பற்றியும் நாம் பேச வேண்டும். மதபோதை என்பது வெறுமனே கடவுள் போதையாக மட்டும் அமைவதில்லை, அது ஹிந்து மதத்தைப் பொறுத்த அளவில் ஜாதிப் போதையாகவும் அமைகிறது. பெற்ற மகனையும், மகளையும் கூட ஆணவக் கொலை செய்யத் தூண்டும் அளவுக்கு அந்த ஜாதி வெறி என்பது அவர்களை ஆட்படுத்துகிறது.. அப்படிப்பட்ட நிலையில் ஜாதிப் போதை ஒழிப்பு நாளாகவும், மதப் போதை ஒழிப்பு நாளாகவும் ஜூன் 26 என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

“மதம் என்கிறது, மேல் நாட்டுக்காரன் சொன்னான் அபினி என்று.அறிவைக் கெடுக்கும்படியான ஒரு போதை வஸ்து என்று.அதற்கேற்றாற்போல் நம் நாட்டிலே மதம் மனிதனுடைய அறிவைத் தடை பண்ணுகிறது; வளர்ச்சியைத் தடை பண்ணுகிறது; சிந்தனையைத் தடை பண்ணுகிறது. அதன்படிக்கு நடந்தால்தான் நன்மை, நடக்காவிட்டால் தீமை என்று ஒரு அநாவசியமான பயத்தை முன்னேற்றத்தைத் தடை பண்ணுகிறான்.” என்றார் தந்தை பெரியார்.

ஆம், உண்மைதான்! மதம் என்பது கண்ணுக்குத் தெரியாத, பலரின் மூளைக்கு எட்டாத போதை. அந்தப் போதையால் அல்லல்படும் இந்த உலகம் இருக்குமா? அல்லது மூன்றாவது உலகப்போர் வந்து உலகமே அழிந்து விடுமா? என்னும் கேள்வி தொக்கி நிற்கிறது. இன்றைய இஸ்ரேல்-பாலஸ்தீனப்போருக்கான அடிப்படைக் காரணம் மதமே. உலகம் முழுவதும் எனது மதம்தான் சிறந்தது என்னும் மனப்பான்மை கொண்ட வலதுசாரி மனிதர்கள் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறார்கள். தங்கள் மூளைக்குள் ஏற்றிக்கொண்ட மதபோதை மூலம் மற்ற மனிதர்களை அச்சுறுத்துகிறார்கள்.

ஜூன் 26 அன்று இந்த மதபோதை, ஜாதிப் போதையைப் பற்றி நாம் ஊடகங்களில் விழிப்புணர்வுப் பதிவுகளை இடுவோம். டுவிட்டர் போன்ற தளங்களில் மதபோதை ஒழிப்போம், ஜாதி போதை ஒழிப்போம் என்னும் # டேக்குகளை இடுவோம். இன்றைய அறிவியல் உலகம் புதிய புதிய கண்டுபிடிப்புகளால் கடவுளைக் காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்தக் கடவுள் பெயரைச் சொல்லிப் பயன் அனுபவிப்பவர்கள். மதத்தால் பலன் அனுபவிப்பவர்கள், ஜாதியால் பலன் அனுபவிப்பவர்கள், எப்படிப் போதைப்பொருள் விற்பவர்கள் இது மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கிறது எனத் தெரிந்தாலும் தங்கள் சுயநலத்திற்காக விற்பனை செய்கிறார்களோ அப்படிக்கடவுளை மதத்தை,ஜாதியை விற்பனை செய்கிறார்கள். நாம் அவர்களை அம்பலப்படுத்தவேண்டும். மதத்திலிருந்து விடுபட்டவர்கள் பலர் தங்கள் கருத்தை இணையதளங்களில் பதிவிடுகிறார்கள்.எக்ஸ் முஸ்லிம்,(ex-muslims), முன்பு கிறித்துவர்கள் (former-christian-reveal-turning-points), மேனாள் ஹிந்து இந்நாள் நாத்திகர்கள் (exhinduatheists.org) போன்ற இணையதளங்கள், எப்படித் தாங்கள் மதபோதையிலிருந்து வெளியில் வந்தோம் என்ற முந்தைய மதவாதிகளின் வாக்குமூலங்களை அளிக்கின்றன. அதனைப் படிப்போம், பரப்புவோம். ஜாதி,மதபோதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அதற்கான நாளாகவும் ஜூன்-26ஆம்
தேதியை நாம் கடைப்பிடிப்போம்; பயன் விளைவிப்போம்.

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜூன் 16-30,2024

No comments: