Monday, 5 August 2024

அமெரிக்காவின் முதல் தீவிரவாதி… -முனைவர் வா.நேரு

 இன்றைக்குச் சந்திரனில் சென்று வாழலாமா? செவ்வாய் கிரகத்தில் சென்று வாழலாமா? என்று மனிதர்கள் முடிவு செய்யும் அளவிற்கு அறிவியல் வளர்ந்திருக்கிறது.

இன்றைய அறிவியல், நாகரிக மேம்பாடு என்பன பற்றியெல்லாம் அறியாத மக்கள், இன்றைக்கும் மலைகளில் – காடுகளில் வேட்டையாடி, இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையை மேற்கொண்டிருக்கின்றனர். தங்களுக்கென ஒரு வாழ்க்கை முறையை – மொழியை – பண்பாட்டை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களை உலகம் பழங்குடி இன மக்கள் என அழைக்கிறது. அவர்களில் சிலர் நாகரிக வாழ்க்கைக்குள் வந்தாலும் பலர், தங்களைத் தாங்களே உலகத்திடமிருந்து தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்கின்றனர். பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாளாக ஆகஸ்ட் 9ஆம் தேதியை உலக அய்க்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது.



வெள்ளை நிறமுடையவர்கள் பெரும்பாலும் பழங்குடி இன மக்களுக்குப் பெரும் கொடுமைகளை இழைத்திருக்கிறார்கள்.அமெரிக்காவில் கொலம்பஸ் வருவதற்கு முன் வாழ்ந்த பழங்குடி மக்கள் அவ்வளவு அருமையாக. வெகுளியாக வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து வந்திருக்கின்றனர்.இந்தியா என்று எண்ணி அமெரிக்காவில் இறங்கிய கொலம்பஸை அந்தப் பழங்குடி மக்கள் நட்போடும் வியப்போடும் வரவேற்று இருக்கிறார்கள். ஆனால், வெள்ளைத்தோல் உடைய கொலம்பஸ் மனதில் அவர்களை அடிமைப்படுத்தி, உடல் உழைப்பினைச் செய்ய வைக்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது.கொலம்பஸ் தனது குறிப்பேட்டில் இப்படி எழுதி இருக்கிறான்…

“அவர்கள்… கிளிகளையும், பருத்திப் பந்துகளையும், வேல் கம்புகளையும், மற்றும் பல பொருட்களையும் கொண்டு வந்தனர். அவற்றை, கண்ணாடிப் பொருட்கள் மற்றும் மணிகளுக்காகப் பண்டமாற்று செய்துகொண்டனர். அவர்களிடமிருந்த அனைத்தையும் விரும்பி வியாபாரம் செய்தனர்… அவர்கள் நல்ல உடற்கட்டுகளுடன், அழகான தோற்றத்துடன் இருந்தனர்… அவர்கள் ஆயுதங்களைத் தாங்கி நிற்கவில்லை.நான் அவர்களுக்கு ஒரு வாளைக் காட்டினேன். அவர்கள் அதன் கூர்ப்பகுதியைக் கையால் பிடித்து, அறியாமையால் கையை வெட்டிக்கொண்டனர். அவர்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை… அவர்களுடைய வேல் கம்புகள் பிரம்புகளாலானவை.

அவர்கள் அருமையான பணியாளர்களாக மாறக்கூடிய வர்கள். ஒரு அய்ம்பது அடியாட்களைக் கொண்டு அவர்களை அடிபணியவைத்து, நாம் நினைத்த வேலைகளையெல்லாம் செய்விக்கலாம்” (ஹாவாட் ஜின் – தமிழில் க.மாதவ் – சிந்தன் புக்ஸ் வெளியீடு) என்று எழுதிய கொலம்பஸ் அதே மாதிரி அந்தச் செவ்விந்திய மக்களை அடிபணிய வைத்தான். கொடுமைப்படுத்தினான். கொன்று அழித்தான் என்பதை எல்லாம் நாம் படிக்கும்போது கண்ணீர் வடிக்கும் வரலாறு.

“கொலம்பஸ் அமெரிக்காவின் முதல் தீவிரவாதி, கொடூரமானவன், இன அழிப்பாளன், பூர்வகுடிப் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நடத்தியவன், நிலங்களை அபகரித்தவன் என்றே அமெரிக்கச் செவ்விந்திய மக்கள் இன்றளவும் கொலம்பஸை அடையாளப்படுத்துகிறார்கள்” என்று ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். இன்றைக்கும் மண்ணின் மக்களான பழங்குடி மக்கள் உலகமெங்கும் வேலையாட்களாகத்தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.

இன்றைக்கும் இந்தியாவில் பழங்குடி இன மக்களுக்குக் கிடைக்கவேண்டிய கல்வி, பணி என்பதெல்லாம் முழுமையாகக் கிடைக்காதவாறு இந்தியப் பார்ப்பனிய ஆளும் வர்க்கம் பார்த்துக்கொள்கிறது.

பழங்குடி இன மக்களில் சுமார் 200 குழுக்கள் தற்போது உலகம் முழுவதும் வாழ்கின்றனர். அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்கின்றனர். பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்வடார், இந்தியா, இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா, ,பெரு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் இயற்கை வளங்கள் நிறைந்த தொலைதூரக் காடுகளில் அவர்கள் வாழ்கின்றனர்.

அவர்களின் உயிருக்கே பெரும் அச்சுறுத்தல் இன்றைக்கு உலகத்தில் உள்ளது. ஓர் இடத்தில் வாழும் மனிதர்கள் அவர்கள். அவர்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படுகின்றன.இருக்கும் இடத்தில் இருந்து விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.அவர்கள் வெளியில் வந்தால் தண்ணீரை விட்டுத் தரைக்கு வந்த மீன்கள் போலத் தவிக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு உரித்தான வாழ்விடத்தை, சூழலைப் பாதுக்காக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தோன்றியதுதான் இந்தப் பழங்குடிகள் தினம்.

“உலகின் 90 நாடுகளில் 476 மில்லியன் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.அவர்கள் உலக மக்கள் தொகையில் 5 சதவிகிதத்
திற்கும் குறைவாக உள்ளனர். ஆனால், ஏழைகளில் 15 சதவிகிதம் பேராக அவர்கள் உள்ளனர்.அவர்கள் உலகின் மதிப்பிடப்பட்ட 7000 மொழிகளில் பெரும்பாலான மொழிகளைப் பேசுகிறார்கள்.உலகின் 5000 வெவ்வேறு கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்“ என்று புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.

பழங்குடி இன மக்கள் தினமான ஆகஸ்டு 9 பற்றிப் பல விரிவான தகவல்கள் அய்க்கிய நாடுகள் சபையின் இணையதளத்தில் கிடைக்கின்றன. (https://www.unesco.org/en/international-day-worlds – indigenous-peoples) பழங்குடி இன மக்கள் மத்தியில் பணியாற்ற விரும்பும் தன்னார்வத் தொண்டர்களை வரவேற்கிறோம் என்றும் அதில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை இம்மண்ணின் மக்களான தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்தினர்.

“ஆரியர்கள் என்று இந்நாட்டில் காலடி எடுத்து வைத்தார்களோ அன்று முதல் தமிழையும்,
தமிழரின் கலைகளையும், கலாச்சாரத்தையும் ஒழிப்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்து வந்திருக்கிறார்கள்….ஆரியர்கள் தம்மை எல்லோரையும்விட உயர்ந்தவராகவும் தமக்கடுத்த உயர்வுள்ளவர்களாக அரசர்களையும் அதற்கும் அடுத்து உயர்வுள்ளவர்களாக வணிகர்களையும் மற்றவர்களைத் தம் எல்லோருக்கும் அடிமைகளாகவும்(சூத்திரர்களாகவும்) கடவுள் படைத்தாரென்று கூறி அரசர்களுக்கு மற்றையோரைக் காட்டிலும் தனி உயர்வைக் கற்பித்து விடவே, அவர்கள் ஆரியத்திற்குச் சுலபத்தில் அடிமையானார்கள்.” (மறைமலையடிகள்,இவர் தமிழர் இல்லை என்றால்
எவர் தமிழர்? ப.திருமாவேலன், பக்கம் 131)

வலிமையாய் இருந்த திராவிடர்களைப் பார்த்து ,இவர்களைப் போர்களால் வெல்ல முடியாது என்று வஞ்சகம் செய்து ,சூழ்ச்சி செய்து, திராவிட இனத்து மன்னர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு திராவிட இன மக்களைச் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் வர்ணாசிர அமைப்பில் சொல்லி நம்மை ஆண்டாண்டு காலமாக உடல் உழைப்புத் தொழிலாளர்களாக மட்டுமே ஆக்கி வைத்த ஆரியத்தையும் உணர்ந்து கொள்ளும் நாளாக நாம் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும். கொலம்பஸ் போன்ற ஆங்கிலேயர்கள் மீது அமெரிக்கச் செவ்விந்திய மக்களுக்கு இருந்த வெறுப்பைப் போல ஏன் நம் மக்களுக்கு ஆரியர்கள் மீது இல்லை என்பதையும் இணைத்துப் பார்க்கும் நாளாக இந்தச் சர்வதேச மண்ணின் மைந்தர்கள் நாளை, பழங்குடியினர் நாளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

இன்னும் தமிழ்நாட்டின் மலைகளில் அல்லது அதன் அருகில் இருக்கும் பள்ளத்தாக்குகளில் வசிக்கும் பழங்குடி இனமக்களைப் பற்றி அறிந்து கொள்ளும் நாளாகவும்,அவர்களுக்கு உரிய உரிமைகள் அவர்களுக்குக் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளும் நாளாகவும்,அவர்களின் இடஒதுக்கீட்டைப் போலியான சான்றிதழ்கள் மூலம் வேறு பிரிவினர் அபகரித்துக்கொள்வதைத் தடுக்க உறுதி எடுத்துக்கொள்ளும் நாளாகவும் நம்மைப் போன்றோர் இந்த நாளைக் கடைப்பிடிக்கலாம்.பார்ப்பனரல்லாத மக்கள் அனைவரும் ஒன்றே என்னும் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாட்டின்படி நமது உடன்பிறப்புகளான பழங்குடி மக்கள் மீது இன்னும் கூடுதல் கவனம் செலுத்தும் நாளாகச் சர்வதேசப் பழங்குடிகள் நாளான ஆகஸ்ட் 9 அமையட்டும்.

நன்றி : உண்மை இதழ் ஆகஸ்ட் 1-15,2024

No comments: