உலகம் முழுவதும் அக்டோபர் 16 உலக மயக்க மருந்துகள் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடச் சொல்வது அய்க்கிய நாடுகள் சபை அல்ல, மயக்க மருந்து நிபுணர்களின் உலகக் கூட்டமைப்பு(WFSA-World Federation of Societies of Anaesthesiologists) இந்தக் கூட்டமைப்பு 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கிறது. இந்தக் கூட்டமைப்பின் சார்பாகத்தான் 1955 முதல் ஆண்டுதோறும் இந்த மயக்க மருந்து நாள் கொண்டாடப்படுகிறது.
1846ஆம் ஆண்டு அக்டோபர் 16 தான் உலகில் முதன்முதலில் மயக்க மருந்து கொடுத்து ஒருவருக்கு வலி தெரியாமல் அறுவை சிகிச்சை செய்யமுடியும் என்பதை உறுதி செய்த நாள். உடலில் ஏற்படும் வலிகளிலேயே மிகுந்த வலியைத் தரும் வலி பல்வலி. அதை அனுபவித்தவர்கள் அறிவார்கள். 1846ஆம் ஆண்டுக்கு முன்னால் அப்படி பல்வலி வந்தவர்களுக்கு எந்த மயக்க மருந்தும் கொடுக்காமல் துள்ளத் துடிக்கப் பல்லைப் பிடிங்கியிருக்கிறார்கள். இதனைச் செய்து கொண்டிருந்த பல் டாக்டர் வில்லியம் மார்டன் மயக்க மருந்து கொடுத்து, வலி தெரியாமல் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்பதைச் சிந்தித்து அதற்கான முயற்சிகளைச் செய்திருக்கிறார்.
அவருக்கு முன்னரே சிலர் இதனைப் போன்ற முயற்சிகளைச் செய்திருந்திருந்தாலும் அவை பலர் முன்னிலையில் மெய்ப்பிக்கப்படவில்லை; அல்லது அந்தப் பரிசோதனைகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. ஆனால், டாக்டர் வில்லியம் மார்டன் அக்டோபர் 16, 1846 அன்று ஈதர் என்னும் மயக்க மருந்தின் மூலம் முதன் முதலில் வெற்றிகரமான செயல்விளக்கத்தை உலகத்திற்கு அளித்துள்ளார். கழுத்தில் இருந்த கட்டியை அகற்றுவதற்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டு நோயாளிக்கு வலி தெரியாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் செயல்விளக்கம் மருத்துவ வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கான தொடக்கமாக இருந்திருக்கிறது. எனவேதான் அந்த நாள், அக்டோபர் 16 உலக மயக்க மருந்து நாளாக நினைவு கூரப்படுகிறது. இதற்குக் காரணமான டாக்டர் வில்லியம் மார்டன் ‘மயக்கவியலின் தந்தை‘ என்று அழைக்கப்படுகிறார்.
இப்போதெல்லாம் பல்லைப் பிடுங்கும்போது பல்லிற்கு மேல் இருக்கும் ஈறில் ஓர் ஊசி போட்டு விடுகிறார்கள். அந்த இடத்தில் மட்டும் வலி தெரியாமல் இருக்கிறது. இப்படி குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் வலி தெரியாமல் கொடுக்கப்படும் மயக்க மருந்தை local மயக்க மருந்துகள் என்று அழைக்கிறார்கள். அதனைப் போல இடுப்புக்கு கீழே ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றால் ஒரு மயக்க மருந்தை இடுப்புக்கு கீழே செலுத்தி இடுப்புக்கு கீழே மட்டும் கொஞ்ச நேரம் வலி தெரியாமல், மரத்துப்போகும்படி செய்துவிடுகிறார்கள். இப்படிக் கொடுக்கப்படும் மயக்க மருந்தினை பகுதி (Regional) அல்லது பிராந்திய மயக்க மருந்துகள் என்று அழைக்கின்றார்கள். முதுகு, மூளை, இருதயம் ஆகியவற்றில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு முழுமையாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பல மணி நேரம் மயக்க நிலையிலேயே நோயாளிகள் வைக்கப்படுகிறார்கள். இப்படிக் கொடுக்கப்படும் மயக்க மருந்திற்கு பொது மயக்க மருந்து(General) என்று அழைக்கின்றார்கள்.
1846இல் மயக்க மருந்து செலுத்துவதற்கு அமைக்கப்பட்ட மருத்துவக் கருவியும் விளக்கமும் இணையத்தில் கிடைக்கிறது. மிகப்பெரிய வடிவத்தில் உள்ள கருவியோடு இணைக்கப்பட்டு குழாய் மூலமாக முதன்முதலில் மயக்க மருந்து செலுத்தப்பட்டு உள்ளது. எவ்வளவு மயக்க மருந்து செலுத்த வேண்டும், அது எந்த அளவிற்கு நோயாளிக்குப் பாதுகாப்பு அளிக்கும் அல்லது பாதிப்பு உண்டாக்கும் என்பதெற்கெல்லாம் தகுந்தவாறு அன்றைக்கு கருவிகள் இல்லை. அனுபவத்தின் மூலமாகவும், மயக்க மருந்து அதிகமாகச் செலுத்தும்போது ஏற்பட்ட பாதிப்புகள் மூலமாகவும் இந்த மயக்கவியல் துறை மருத்துவத் துறையில் வளர்ந்து கொண்டே வந்துள்ளது.
தமிழில் டாக்டர் எஸ்.மாணிக்கவாசகம் அவர்கள் எழுதிய ‘தூங்காமல் தூங்கி‘ என்னும் புத்தகம் ‘ஒரு மயக்கவியல் மருத்துவரின் நினைவோடை‘ என்னும் குறிப்போடு சந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. 35 ஆண்டுகள் மயக்க இயல் மருத்துவராகப் பணியாற்றிய மருத்துவரின் வாழ்க்கை நிகழ்வுகளும், மருத்துவ நிகழ்வுகளும் இணைந்து எழுதப்பட்டிருக்கின்ற புத்தகம். ஓர் அறுவை சிகிச்சைக்கு ஒரு மயக்கவியல் மருத்துவர் எவ்வளவு முக்கியமானவர் என்பது டாக்டர் மாணிக்கவாசகம் அவர்களின் புத்தகத்தைப் படித்தபோதுதான் எனக்குத் தெளிவாகப் புரிந்தது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த மயக்கவியல் நாளுக்கான ஒரு கருப்பொருளை வெளியிடு
கின்றனர். இந்த ஆண்டுக்கான கருப்பொருள் மயக்கவியல் துறையில் பணியாற்றுபவர்களின் நலன் என்பதாகும். மயக்கவியல் மருத்துவர் டாக்டர் எஸ்.மாணிக்கவாசகம் அவர்கள் தான் பணியில் இருந்த காலத்தில் எப்படி எல்லாம் மனதளவில் துன்பம் மயக்கவியல் பணியால் ஏற்பட்டது என்பதனை விளக்கியிருப்பார். அப்படிப் பணியாற்றுபவர்களின் நலன்(Work Force Well being) குறித்துப் பேசுவதுதான் இந்த ஆண்டின் கருப்பொருள்.
கணினி, இணையம், பல புதிய மருத்துவக் கருவிகள் என மருத்துவத் துறையில் வந்தபின்பு மயக்கவியல் துறையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக மயக்கவியல் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அறுவைச் சிகிச்சையின் ஒவ்வொரு நிலையிலும் கண்காணிப்பதற்கும் நோயாளிகளுக்கு வலி தெரியாமல் இருப்பதற்கும் உதவுக்கூடிய பல நுட்ப அறிவியல் கருவிகள் இப்போது வந்துவிட்டன.
செயற்கை நுண்ணறிவு மயக்கவியல் துறையிலும்
பயன்படுத்தப்படுவதாக இணையக் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன. செயற்கை நுண்ணறிவு
1) மயக்க மருந்து கண்காணிப்பின் ஆழம்
2) மயக்கமருந்து கட்டுப்பாடு
3) நிகழ்வு மற்றும் ஆபத்து கண்காணிப்பு
4) அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதல்
5) வலி மேலாண்மை மற்றும்
6) இயக்க அறை தளவாடங்கள்
என்னும் ஆறு வழிகளில் பயன்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.
புற்று நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் இயல்பான சிகிச்சையின் போது அவர்களுக்கு வலி தெரியாமல் இருப்பதற்கு மயக்க மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள புற்று நோயாளி களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் இந்த
மருந்துகள் மிகப்பெரிய ஆறுதலைக் கொடுக்கின்றன.
இன்று பல அறுவைச் சிகிச்சைகள் சில மணித் துளிகளில் வலி இன்றி நிகழ்த்தப்படுகின்றன. அறுவைச் சிகிச்சை செய்துகொண்டோம் என்பதே
மற்றவர்கள் சொல்லித்தான் நாம் அறியவேண்டிய அளவிற்கு வலி இன்றி அறுவைச் சிகிச்சைகள் செய்து கொள்கின்றோம். இதற்கான அடித்தளத்தை ஏறத்தாழ 178 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியவர் டாக்டர் வில்லியம் மார்டன். இனி நாமோ ,நம் உறவினர்களோ அறுவைச் சிகிச்சைக்குச் செல்லும்
போது இந்த மயக்கவியல் நாளான அக்டோபர் 16ஆம் நாளை நினைவில் வைத்துக் கொள்வோம். நாம் அறிந்த மயக்கவியல் மருத்துவர்களை அழைத்து அக்டோபர் 16இல் வாழ்த்துகள் சொல்வோம்.
No comments:
Post a Comment