தோழர் ஓவியாவின் பதிவு..
ஏன் தீபாவளிப் பணிடிகையை எதிர்க்க வேண்டும்?
‘தீபாவளி பண்டிகை எதிர்ப்பு’ என்பது திராவிடர் கழகத்தின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் தீபாவளி வரும்போதெல்லாம் தீபாவளியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கின்ற உந்துதல் ஒவ்வொரு பெரியார் தொண்டர் மனதிலும் எழுந்து விடும்.
கிறிஸ்மஸ், ரம்ஜான் என்று தொடங்குகிறவர்கள் கவனிக்கவும்……
தீபாவளி எதிர்ப்பு என்பது எங்களுக்கு வெறும் கடவுள் மறுப்புக்கானது மட்டுமல்ல. உண்மைக் கதையா, வெறும் கட்டுக் கதை புராணமா என்பது வேறு விசயம்.
ஆனால் தீபாவளி வெளிப்படையாக ஓர் இனக் கோட்பாட்டுக் கதையை முன்வைக்கிறது. இந்தக் கதையில் வரும் தேவர்கள் ஆரிய இனம் என்கின்ற கற்பிதம். அவர்கள் நிறத்தைக் குறிப்பதன் மூலம் முன்னிறுத்தப் படுகிறது. தேவர்கள் ஆரியர்கள் என்று புரிய வைக்கப் பட்டிருக்கிறது. இது இரண்டாயிரம் ஆண்டு கால வேலையாகும். எது உண்மையான வரலாறு என்பதெல்லாம் தேவையில்லை. அதேபோல் திராவிட இனத்தைச் சேர்ந்த கறுப்பான மனிதர்கள் அசுரர்கள். கறுப்பான மனிதர்கள் அசுரர்கள் தீயவர்கள். மிக எளிமையாக இந்த மண்ணின் மக்கள் யார் அவர்கள் நிறம் என்ன என்கின்ற கேள்வியை ஒருவர் எழுப்பி சிந்தித்தாலே இக்கதை இந்த மண்ணின் மக்களை இழிவுபடுத்தி எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தேவர்களை அசுர மன்னர்கள் கொடுமைப்படுத்தினார்கள். எனவே தேவர்கள் அசுர மன்னர்களை அழித்தார்கள். அவ்வாறு அழித்து விட்டு அந்த இன மக்களையே அதாவது திராவிட இன மக்களையே தங்களது தோல்வியை தங்களது நாட்டின் முக்கிய பண்டிகையாக கொண்டாட வைத்ததன் மூலம் இம்மண்ணிலிருந்து தங்களுக்கு வெளிப்பட்டிருக்க வேண்டிய வெறுப்பு எதிர்ப்பு இவற்றை உள்ளடக்கிய தொடர் போர்களை தந்திரமாக தவிர்த்து விட்டார்கள். முருகனின் சூரசம்ஹாரம் இராமாயணம் தீபாவளிக் கதைகள் சாதித்தது இதனைத்தான்.
இப்படிப்பட்ட மயக்க மருந்துகளின் மூலம்தான் தன்னுணர்வற்றவர்களாக இம்மக்கள் மாறினார்கள். தேவர்களின் அம்சமாக அறிவின் அம்சமாக உயர்வின் அம்சமாக பார்ப்பனர்களை பார்க்க பழகினார்கள். கல்வி கோவில் சடங்குகள் ஏன் தங்கள் வீட்டுத் திருமணங்கள் உட்பட அனைத்துத் தலைமையையும் பார்ப்பனர்கள் காலடியில் வைத்தார்கள். இந்தப் பண்டிகைகள் வழியாகக் காற்று மாசுபடுவதெல்லாம் ஒருபக்கமிருக்கட்டும். எத்தனையோ வழிகளில் அதெல்லாம் மாசுபட்டுக் கொண்டுதானிருக்கிறது. இந்த பட்டாசுகளால் குடிமுழுகிப் போச்சு என்பதல்ல விசயம். இங்கு ஓர் இனத்தின் வரலாறு மாசுபட்டுக் கொண்டிருக்கிறது. அது தொடர்ந்து காப்பாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியம்.
இந்த வரலாறுதான் தீபாவளி இம்மண்ணின் மக்கள் கொண்டாட வேண்டிய பண்டிகை அல்ல அதனை தங்கள் இனத்தின் அழிவு நாளாக துக்க நாளாக திராவிடர்கள்/ தமிழர்கள் உணர வேண்டும் என்று பெரியார் அறிவுறுத்தியதன் பின்னணியாகும். எனவே இந்த அளவுக்கான எதிர்ப்பை கிறிஸ்துமஸ்க்கோ அல்லது ரம்ஜானுக்கோ காட்ட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அதற்காக அவற்றை ஆதரிக்கவோ ஏற்கவோ இல்லை நாம்.
ஆனால் தீபாவளியை எதிர்ப்பது வெறும் மத நம்பிக்கையை எதிர்ப்பது மட்டுமல்ல. இந்த மக்களின் மானம் மற்றும் அறிவின் மீட்சிக்காக பணி செய்யும் எவருக்கும் தீபாவளியை எதிர்ப்பது முதற்கடமையாகும். அது வெறும் நாத்திகப் பிரச்சாரமோ சுற்றுச் சூழல் காப்புப் பிரச்சினையோ அல்ல.
தீபாவளிக் கொண்டாட்டத்தை எதிர்ப்போம். தீபாவளிக்கு மறுபெயர் சூட்டும் வேலையையும் சேர்த்தே எதிர்ப்போம். வேதத் தத்துவங்களை எதிர்த்து உலகின் முதல் சமத்துவக் குரலாக உருவான புத்தமதம் இன்று இந்து மதத்தின் ஒரு பகுதி. எனவேதான் தீபாவளியை வேறு பெயரில் தொடர்ந்து மக்கள் கொண்டாடிட அவர்கள் மறுபெயர் சூட்டி அதனைக் காப்பாற்ற நினைக்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள். மார்க்சு இதனை போலி மயக்கம் இதிலிருந்து விடுபட வேண்டும் என்றுதானே சொன்னார் என்றால் இல்லை மதம் இதயமற்றவர்களின் இதயம் என்பார்கள்.
சரி இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தில் எது மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது…. புதுச் சட்டை,,, தீபாவளிக்கு தீபாவளி புதுச்சட்டை எடுத்த காலம் இப்போதில்லை. சாப்பாடு….இனிப்பு கூட ஸ்வீட் ஸ்டால் இனிப்புதான் நண்பர்களுக்கே கொடுக்கப் படுகிறது. அதுவும் அரிதாய்க் கிடைக்கும் பொருளாக இல்லை. வேறு என்னதான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்… விடுமுறை..தொலைக்காட்சி பெட்டி அது கூட இப்போது ஈர்ப்பாயில்லை ஒவ்வொருவர் கையிலும் அலைபேசி. முந்திக் கொண்டு தீபாவளி வாழ்த்து சொல்லுகின்ற, ,’எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லைதான்…. ஆனால்’ என்று ஆனால் போடுகிற நண்பர்களிடம் கேட்கிறேன்…. அது என்ன மகிழ்ச்சி…தீபாவளியன்று கூரையைப் பிய்த்துக் கொண்டு குதிக்கிறது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்?
பி,கு தீபாவளிக்கு மறுநாள் அரசு பொது மருத்துவமனைகளுக்கு சென்று பார்த்தால் மக்கள் மகிழ்ச்சியின் மகத்துவம் புரியும். இதற்குதான் வாழ்த்துகிறீர்கள் போலும்.
#தீபாவளி #இந்துமதம் #மதப்பண்டிகைகள் #பெரியார்....
தோழர் ஓவியா...
எனது பெரும் மதிப்பிற்குரிய சில பெரியவர்கள்,உடன் வேலை பார்த்த அதிகாரிகள்,எனக்கு அதிகாரிகளாக இருந்தவர்கள்,உயர் பொறுப்பில் இருப்பவர்கள், என் மீது பெரும் அன்பு கொண்டிருக்கக்கூடிய சில தோழர்கள்(இருபால்) தீபாவளி வாழ்த்துகள் என்று நேற்று முதல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பலருக்கும் (தங்கள் அன்பிற்கு நன்றி( ஆனால் நாங்கள் தீபாவளி கொண்டாடும் வழக்கமில்லை ) )என்று பதில் அனுப்பினேன்.நன்றி தோழர் முத்து நிலவனுக்கு.அவர்தான் முதலில் இப்படி ஒரு குழுவில் பதிவிட்டிருந்தார்.சிலர் வருத்தப்படுகிறேன் அனுப்பியதற்கு என்று பதில் அனுப்பி இருந்தார்கள்.பலருக்கும் தங்கள் அன்பிற்கு நன்றி என்பதோடு இந்த வலைத்தளத்தில் இதற்கு முந்தைய பதிவான எனது தீபாவளி பற்றிய கவிதையையும் மேலே இருக்கும் தோழர் ஓவியாவின் இன்றைக்குத் தேவையான பதிவையையும் அனுப்பி இருந்தேன். என்னோடு படித்த நண்பன்,இன்றைக்கு காவல் துறை அதிகாரியாக இருக்கும் அந்த நண்பன்'டேய், நீ எப்படி டென்சன் ஆகிற..என்று பார்க்கத்தான் உனக்கு நான் வாழ்த்து அனுப்பி வச்சேன். " என்று பதில் அனுப்பி இருக்கிறான். வாழ்த்து இப்படியும் அனுப்பி வைப்பீங்களா?...
No comments:
Post a Comment