Tuesday 6 November 2012

டாக்டர் பால்கர்ட்ஸ்


அமெரிக்க நாட்டுத் தத்துவப் பேராசிரியர், மனிதநேயத் தலைவர் டாக்டர் பால்கர்ட்ஸ் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் இரங்கலுரை
சென்னை,நவ.6-அமெரிக்க நாட்டுத் தத்துவப் பேராசிரியரும், மனிதநேய அமைப்பின் தலைவருமான டாக்டர் பால்கர்ட்ஸ் (Dr. Paul Kurtz) அவர்கள் 2012 அக்டோபர் மாதம் 20ஆம் நாள் காலமானார். பால்கர்ட்ஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நவம்பர் 5ஆம் நாள் மாலை நடை பெற்றது.
பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாடு செய்த இரங்கல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி பால்கர்ட்ஸ் அவர்களின் படத்தினை திறந்துவைத்து இரங்கல் உரையாற்றினார். கூட்டத்தில் பொருளாதார நிபுணரும், சீரிய பகுத்தறிவாளருமான பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் மற்றும் பகுத்தறி வாளர் கழகத்தின் மேனாள் தலைவர் முனைவர் மா.நன்னன் ஆகியோர் உரையாற்றினர்.
பால்கர்ட்ஸ் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரை: டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களின் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:
ஒருவர் காலமாகும் பொழுது ஏற்படுகின்ற வருத்தத் தின் அளவு அவர் சமுதாயத்திற்கு எந்த அளவிற்குப் பயன்பட்டார் என்பதைப் பொறுத்ததாக அமையும் என்று தந்தை பெரியார் கூறுவார். அமெரிக்க நாட்டுத் தத்துவப் பேராசிரியர் டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களின் மறைவு நமக்கெல்லாம், மனிதநேயம் தழைத்திடப்  பாடுபடும் அமைப்புகளுக்கெல்லாம் மாபெரும் இழப்பை, வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பல அறிஞர்கள் சிந்தனையாளர் களாக விளங்கியுள்ளார்கள். அறிவியல் அறிஞர்கள் பலர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். டாக்டர் பால்கர்ட்ஸ் துணிச்சல் மிக்க சிந்தனையாளர். தான் சிந்தித்ததை துணிச்சலாக வெளியிட்டவர். மனிதர்களுக்கு மனித நேயம் முக்கியம்; வாழ்க்கையினை அமைதியானதாக ஆக்கி வாழ்ந்து மகிழ வேண்டும்; வாழும்பொழுது மனநிறைவில் திளைக்க வேண்டும் என வலியுறுத்தியவர். அமெரிக்க நாட்டில் நாத்திக மனப்பான்மையுடன் பலர் இருக்கிறார்கள். ஆனால் தங்களை நாத்திகர் என வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் பெரியார் போட்டுத் தந்த பகுத்தறிவுப் பாதையில் பெரும்பான்மையானவர்கள் பயணித்து தங்களை நாத்திகர் என வெளிப்படையாகக் காட்டுவதில் உலகத்திலே பெரும்பான்மையானவர்களைக் கொண்ட மாநிலமாக இருப்பது தமிழ்நாடுதான். நாத்திகர் உலகிற்கு தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது.
உலகில் மத அடிப்படையில்தான் போர்கள் பல நிகழ்ந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மதம் அமைதியான வாழ்வினை அளிக்க வில்லை. பகுத்தறிவிற்கு மதம் புறம்பானது. பகுத்தறி வாளர்களுக்கு மதம் பிடிக்காது; மதமும் பிடிக்காது.
டாக்டர் பால் கர்ட்ஸ் மனிதநேயம் என்பதை மதவாதிகளின் பிடியில் இருந்து மீட்டு மதச்சார்பற்ற மனிதநேயம் (Secular Humanism) என அடையாளப் படுத்தி வலியுறுத்தி வந்தார். Living without Religion (மதம் நீங்கிய வாழ்வு) என ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி யுள்ளார். அழகான ஒரு புதிய ஆங்கிச் சொல்லை உருவாக்கினார். Eupraxophy என்பதே அந்த சொல். மதம் என்ற வேர்ச்சொல் ஆங்கில மொழியில் கிடையாது. Religion  என்பது டச்சு மொழிச் சொல்லாகும். டச்சு மொழியில் Religion என்பதன் பொருள் கடவுளுக்குச் சேவை செய்வது என்பதாகும். ஆங்கிலத்தில் Religion என்ற சொல் ஆரம்பத்தில் கிடையாது.
மனிதரை மேம்படுத்த மதம் தேவையில்லை. மதம் மனிதனை பின்னடையவே செய்திடும். Eupraxophy எனும் சொல்லில் Eu என்பது நல்லது என பொருள்படும். Praxis என்பது செயல் ஆகும். Sophia என்பது அறிவுடைமை (Wisdom) என பொருள்படும். எனவே eupra xophy என்பதுதான் முழுப்பொருள் நல்ல நடைமுறைக்கான அறிவுடைமை (Good practical wisdom) எனக் கொள்ளலாம்.
மனித நேயம் என்பது மதமல்ல என்பதை வலியுறுத்த eupraxophy எனும் ஆங்கிலச் சொல்லை புதிதாக உருவாக்கி மானிடத் திற்கு அளித்தவர் டாக்டர் பால்கர்ட்ஸ். மதம் என்பதே மற்றவர்களை புண்படுத்து வதாகும். சிந்திக்காதே! நம்பு! ஏற்றுக்கொள்! கேள்வி கேட்காதே! என தடைபோடுவது மதமாகும். மனித நேயத்தின் முழுப்பயன் மானிடத்திற்கு கிடைக்க வேண்டுமானால் மனிதநேயம் மதமாக இருத்தல் கூடாது. மதத்தின் பிடியிலிருந்து மீட்கப்படவேண்டும். என சிந்தித்து, தனது கருத்தினை நடைமுறைப் படுத்தியவர் பால் கர்ட்ஸ் அவர்கள் - தனது சிந்தனை களை பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களாக வடித்து அதைப் பதிப்பிப்பதற்காக புரோமிதியஸ் புக்ஸ் (Prometheus Books) எனும் வெளியீட்டகத்தினை நிறு வினார். தனது புத்தகங்களோடு, பிற அறிஞர்களின் புத்தகங்களையும் பதிப்பித்து வெளியிட்டார். புரோமிய தியஸ் என்பது கிரேக்க புராணப் பெயராகும். பெரியார் இயக்கத்துடன் தொடர்பு
மனிதநேயத்தினை வலியுறுத்திய புராண காலத்தில் வாழ்ந்தவர் பெயராகும். டாக்டர் பால்கர்ட்ஸ் 20 ஆண்டுகளுக்கு முன்பு பம்பாயில் பெரியார் இயக்கத்திற்கு அறிமுகம் ஆனவர். அது முதல் பெரியாரின் பணிகளைப் படித்து அறிந்து, கேட்டு அறிந்து பெரியாரது இயக்கத் தின்பால் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். அமெரிக்க நாட்டிலுள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தினர் அவருடன் தொடர்பில் இருந்தனர். அமெரிக்கா செல்லும்பொழுது அவரது இடத்திற்குச் சென்று அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அதுபோல 2007ஆம் ஆண்டில் நமது அழைப்பினை ஏற்று சென்னை-பெரியார் திடலுக்கு வருகை தந்தார். கருஞ்சட்டைத் தோழர்க ளுடன் கலந்துரையாடினார். தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.
டாக்டர் பால்கர்ட்ஸ் ஆற்றிய மனித நேய மேம்பாட்டுப் பணியினை பெருமைபடுத்தும் விதமாக மதிப்புறு முனைவர் (D. Litt)
பட்டத்தினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வழங்கியது.
பெரியார் இயக்கம் நடத்திடும் கல்வி நிலையங்களை பார்த்துவிட்டு ஒரு பகுத்தறிவு இயக்கம் கல்வி மேம் பாட்டுக்கு இந்த அளவிற்கு செயல்பட முடியுமா? என வியந்து பாராட்டினார் டாக்டர் பால்கர்ட்ஸ்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை பிறநாடுகளில், தமது எழுத்துகளின் மூலம் பரப்பிடுவதில் ஒரு குறிப்பிட்ட பங்காற்றியவர் டாக்டர் பால்கர்ட்ஸ். பெரியார் கொள்கை பரப்பு தூதுவர் என்பது மிகவும் பொருத்தம். தந்தை பெரியார் உலகமயமாகும் சூழலில் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்கள் காலமானது நமக்கெல்லாம் பேரிழப்பாகும். டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களது சிந்தனைகள், போற்று தலுக்குரியன. அவருடைய மனிதநேய மேம்பாட்டிற்கான பங்களிப்பு நினைவு கூர்ந்து பாராட்டப்பட வேண்டியது. வாழ்க பால்கர்ட்ஸ் சிந்தனைகள். வாழ்க அவரது புகழ்!
-இவ்வாறு தமிழர் தலைவர் பால்கர்ட்ஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உரையாற்றினார்.
முனைவர் மு.நாகநாதன் உரை
டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய பொருளாதாரப் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் குறிப்பிட்டதாவது:
பொதுவுடைமை தத்துவத் தந்தை காரல் மார்க்ஸின் துணைவியார் ஜென்னி மார்க்ஸ் தனது கணவருக்கு துணையாக இருந்த ஒரு நாத்திகப் போராளி. தந்தை பெரியாருக்கு வாழ்க்கைத் துணைவியாக, இயக்கத் துணைவியாக, அவரது மறைவிற்குப்பின் இயக்கத்தினை வழி நடத்திய பெருமைமிக்க அன்னை மணியம்மையார் பெயரில் அமைந்துள்ள இந்த மன்றத்தில் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடை பெறுவது சிறப்புக்குரியது.
அமெரிக்க நாட்டில் நாத்திக கருத்துகள் பரவலாக இருக்கும் நிலையினை எதிர்த்து கடவுள் பற்றினை வளர்த்தெடுக்கும் விதமாக லட்சக்கணக்கில் டாலர் களை செலவழிக்கும் குழுமங்கள் உருவாகி உள்ளன. இத்தகைய சூழல் நிலவும் அமெரிக்க நாட்டில் டாக்டர் பால்கர்ட்ஸ் ஆற்றிய நாத்திகப் பணி, அறிவியல் மனப்பான்மை வளர்ப்புப் பணி, மனிதநேய பணி அளப்பரியது; மகத்தானது.
1973ஆம் ஆண்டு அமெரிக்க மனிதநேய சங்கம் (American Humanist Association) வடித்துக் கொடுத்த மனிதநேயர் அறிக்கை (Humanist Manifesto) தயாரிப்பில் டாக்டர் பால் கர்ட்ஸ் முக்கிய பங்காற்றினார். மூடநம்பிக்கையை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். உலகியலை மதச்சார்பற்ற வகையில் பார்க்கும் உளப்பாங்கு உருவாகிட அயராது சிந்தித்து உழைத்தவர் அந்தப் பெருமகனார். தனது எழுத்துகளில் அத்தகைய சிந்தனை களை வலியுறுத்தி கூறியவர். அண்மையில் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி மார்கண் டேய கட்ஜு ஊடகங்களைத் தாக்கும் போதைகளாக மத மூடத்தனம், சினிமா, மட்டைப் பந்து ஆகியவற்றைக் குறிப் பிட்டார். தந்தை பெரியாரின் இயக்கமும் அதன் இன்றைய தலைவரான வீரமணியார் அவர்களும் அந்தப் போதை எதிர்ப்புப்பிரச்சாரம்தான் செய்து வருகின்றார்.  மனித நேயம் தழைப்பது பகுத்தறிவா ளர்கள் கையில் தான் உள்ளது. மதம் நீங்கிய மனிதநேயத்திற் காகப் பாடுபட்டவர் பால் கர்ட்ஸ். பெரியார் இயக்கத்தின் உற வோடு சமு தாயப் பணி ஆற்றிய வர். பால் கர்ட்ஸ் அவர்களின் நினைவுகள் மனிதநேயம் மனித ரிடம் பெருகிட உறுதியாகப் பயன்படும், பயன்படுத்திட வேண்டும்.
முனைவர் மா.நன்னன்
பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் தலைவர், தமிழாய்ந்த பகுத்தறிவு அறிஞர் முனைவர் மா.நன்னன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
பகுத்தறிவாளர்களுக்கு, மனிதநேயர்களுக்கு நாடு, மொழி, எல்லைகள் கிடையாது. அவர்களது சிந்த னைகள், செயல்பாடுகள் உலகளாவியவை. ஒருநாட்டு எல்லைக்குள் அவர் களைச் சுருக்கிவிடக் கூடாது. பால் கர்ட்ஸ் அத்தகைய ஒருமனிதநேயர். இழப்பு என்பது வருத்தத்தை அளித்தாலும், மானிட இயல்பு அது. வருத்தத்தில் மூழ்கிவிடாமல், இறந்தவர் ஆற்றிய சமுதாயப் பணியினை நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும்.
அப்பொழுதுதான் மனிதநேயம் மேலும் வலுப்படும். ஒருவரின் மறைவினை காலமாகிவிட்டார் எனக் கூறுதல் மிகவும் பொருத்தமாகும். காலமாகிவிட்ட வருக்கு வைகுண்ட பதவிகள், சிவலோக பதவிகள் மத மூடநம்பிக்கையினால் அளிக்கப்படுகின்றன.
மோசமான வருக்கு நரகபதவி அளிக்க யாரும் முன் வருவதில்லை. மதம், மத உணர்வுகள் என்பதே ஒருவரது விருப்பத்தின் வெளிப்பாடு. பொதுவாழ்வுப் பணி புரிந்தோருக்கு பகுத்தறிவாளர் இரங்கல் கூட்டம் நடத்தும் பொழுது வீரவணக்கம் எனச்சொல்வதை விடுத்து காலமான வரை நினைவு கூருகிறோம் என மரியாதை செலுத்துவது பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் அண்மையில் காலமான மனிதநேயர் முனைவர் பால்கர்ட்ஸ் அவர்களை நினைவுகூர்வோம்.
இரங்கல் கூட்டத்தின் துவக்கத்தில் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களுக்கு பெரியார் இயக்கத்துடன் உள்ள தொடர்புகளைக் குறிப்பிட்டு, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அறிமுகவுரை யாற்றினார். டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பின் சுருக்கத்தினை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சமா.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் வாசித்து நிகழ்ச்சியினை தொகுத்தளித்தார்.
டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களின் இரங்கல் கூட்டத்திற்கு லண்டன் மாநகரிலிருந்து பன்னாட்டு மனிதநேய நன்னெறி அமைப்பின் (International Humanist and Ethical Union) மற்றும் ஒடிசா பகுத்தறி வாளர் சங்கத்தினர் செய்தி அனுப்பி இருந்தனர்.
இரங்கல் கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், புதுமை இலக்கிய அணிச் செயலாளர் வீரமர்த்தினி, திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, சென்னை மாநகர மேனாள் மேயர் சா.கணேசன் திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் மனிதநேய உணர்வாளர்கள் பலர் வருகை தந்தனர்.

No comments: