Friday 16 November 2012

அண்மையில் படித்த புத்தகம் -தோல்விகளைத் துரத்தி அடி

 அண்மையில் படித்த புத்தகம்

நூலின் தலைப்பு : தோல்விகளைத் துரத்தி அடி
ஆசிரியர்                : எழில் கிருஷ்ணன்
பதிப்பகம்               : கிழக்கு பதிப்பகம்
முதல் பதிப்பு       : டிசம்பர் 2008
விலை                    : ரூ 75 , 160 பக்கங்கள்

                                               இது ஒரு சுய முன்னேற்றப்புத்தகம். படிக்கட்டுகள் எனத்தலைப்பிட்டு 8 தலைப்புகளில் கருத்துக்கள் உள்ளன.  வெற்றி பெற்றவர்கள் சிலரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள், ஜென் துறவிகள் சொன்ன சில உண்மைகள், நிகழ்வுகள் என நூல் முழுவதும் பல தகவல்கள், சுய முன்னேற்றக் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ள நூல் இது.கையில் எடுத்தால் படிக்கத்தூண்டுமளவு விறுவிறுப்பாய், பல்வேறு விசயங்களை மாறுபட்ட கோணத்தில் சொல்கின்ற புத்தகமாய் இந்தப்புத்தகம்

                                             ஒரு புத்தகச்சந்தையில் எப்படிப்பட்ட புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்று ஒரு பதிப்பாளரைக்க் கேட்டபொழுது , நிறைய ஜோதிடப்புத்தகங்கள் விற்கின்றன, அதற்கு அடுத்தாற்போல் சுய முன்னேற்றப்புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்றார். இரண்டுமே சுய நலம் சார்ந்த புத்தகங்கள் என்றார் பக்கத்தில் இருந்த நண்பர் . எப்படி என்றபோது ஜோதிடம் பொய் , ஆனாலும் நிறையப்பேர் படித்தவர்களே நம்பி ஏமாந்து போகிறார்கள் என்றவர், சுய முன்னேற்றப்புத்தகங்கள் பலவும் கூட நீ மட்டும் ஜெயிக்க என்ன வழி என்று சொல்பவைதான் என்றார்.

                                            தோல்விகளைத் துரத்தி அடி என்னும் புத்தகத்தில் கவனித்த ஒரு விசயம் இவர்களின் நோக்கம் என்ன என்பதனைத் தெளிவாக்கியது . " வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களிடம் சில பொதுப்பண்புகள் இருக்கும். வம்புதும்புக்குப் போக மாட்டார்கள் . அடுத்தவர் பிரச்சனையில் தலையிட மாட்டார்கள். மூக்கை நுழைக்க மாட்டார்கள். தன் வேலையுண்டு , தானுண்டு என்று இருப்பார்கள்.

                                                                                                  கலாட்டா செய்ய மாட்டார்கள்.யூனியன் மீட்டிங் அது ,இது என்று எந்தப்புறக்காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள். கவனித்துப்பாருங்கள், எந்தப் பெரிய ஆளாக இருந்தாலும் அவன் வேலையத் தவிர எதிலும் சிறு ஆர்வம்கூட காட்டிக்கொள்ள மாட்டான் அப்போதுதான் தன் வேலையில் முழுக்கவனம் செலுத்த முடியும் என்பது புத்திசாலிக்குத் தெரியும் " பக்கம் 83.
                        "அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப்போராடாது, அநீதி களைய முடியாது", "ஒன்று படுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம் " என்பது தொழிற்சங்கங்க கூட்டங்களில் , போராட்டங்களில் எழுப்பப்படும் முழக்கங்கள். அமெரிக்கக் கன்வுகளோடு இருக்கும் நமது இளைஞர் கைகளில் தவழும் சுய முன்னேற்றப்புத்தகங்களில் தென் படும் உன் வேலையத் தவிர வேறு எதையும் கண்டு கொள்ளாதே என்பது ஆபத்தானது மட்டுமல்ல, இப்போது இருக்கும் பணக்காரர்களையும் , உயர் ஜாதிக்காரர்களையும் பாதுகாக்கும் வேலை என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.  


                                                    

No comments: