Sunday, 25 November 2012

அண்மையில் படித்த புத்தகம்-நேசத்துணை-திலகவதி

அண்மையில் படித்த புத்தகம்

நூலின் தலைப்பு : நேசத்துணை
ஆசிரியர்        : திலகவதி
பதிப்பகம்        : அம்ருதா பதிப்பகம்
முதல் பதிப்பு    : டிசம்பர் 2007
விலை          : ரூ 80 , 168 பக்கங்கள்

                                            நேசத்துணை எனபது நாவல். மொத்தம் 24 அத்தியாயங்கள் உள்ளன. தமிழில் நவீன எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் திலகவதி. காவல்துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர். கிரேன்பேடி போல மக்கள் பலரால் தமிழகத்தில் அறியப்பட்டவர். திலகவதியின் இந்த நாவல் நல்ல இல்லறத்திற்கு என்ன தேவை என்பதனை கேள்வியாகக் கேட்டு அதற்கு பதிலாக அன்பு  என்பதனைப் பதிலாக தரும் நாவல் எனலாம்.

                                                  160 பக்கம் கதையைப் போலவே திலகவதியின் முன்னுரையும் அருமையாக உள்ளது. ஜெயகாந்தன் தனது நாவல்களில் முன்னுரைகளில் நிறையப் பேசுவதுபோலவே திலகவதியும் பேசியிருக்கிறார். நாவல் ஆசிரியர்கள் முன்னுரையில் பேசவேண்டும்.

                                                   " பெண் , இன்று ஒரு மட்பாண்டம் இல்லை, யார் உடைத்தும் அவள் சிதறிப் போக மாட்டாள். அவள் இன்று கல்வி பெறுகிறாள், உயர்ந்த தேர்வுகளில் உயர்ந்த இடம் பெறுகிறாள். ...பெண் உயர்வு என்பது மானுட உயர்வு. மானுடம் என்பது அன்பினை ஆதாரமாகக் கொண்ட மன ஊற்று.இரு வேறு மனிதர்களை ஒன்றாய் இணைப்பதில் அன்பெனும் ரசாயனம் ஆகச்சிறந்த பங்கினை ஆற்றுகிறது....மனிதர்கள் சோற்றால் வாழ்வதில்லை. அன்பினால் ஜீவிக்கிறார்கள்.  இப்படியாகத் தங்களை அன்பினால் நிரப்பிக்கொண்ட ஒரு ஜோடியை எனக்கு தெரியும். அவர்களிக்கிடையே படிப்பு வித்தியாசம் இருந்தது. இன்னும் பலப்பல வேறுபாடுகள் இருந்திருக்கலாம், என்றாலும் அனைத்துக்குறுக்குச்சுவர்களையும் இடித்து நிரவி சமன்படுத்தியது இந்தப் புரிதலும் அன்புமேயாகும் " என்று முன்னுரையில் குறிப்பிடும் திலகவதி அந்த ஜோடியை வடிவேலு, நளினி பாத்திரங்களை மிக நன்றாக உருவாக்கி நாவல் முழுவதும் உலவ விட்டிருக்கிறார். வாழ்க்கை இணையர்களின் ஒற்றுமை என்பது ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுப்பதிலும் , ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலும்தான் இருக்கிறது என்பது மிக அழுத்தமாக இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது .

                                                   அதனைப் போலவே கஸ்தூரி பாத்திரமும். ஆனால் நளினி பாத்திரம் அளவுக்கு இல்லாமல் கொஞ்சம் செயற்கைத்தனம் இருக்கிறது . வடிவேலு , நளினி. கஸ்தூரி பாத்திரங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, " அவர்கள் ஏற்கனவே பூமியின்மேல் இருந்தார்கள், நான் அவர்களை அறிய நேர்ந்தது. உங்களுக்கு அவர்களை எழுதிக்காட்டியிருக்கிறேன். இப்போது என்னைப் பொறுத்தவரை இலக்கியத்தின் பயன் இதுதான் என்று நம்புகின்றேன் " பக்கம்-7 என்று சொல்கின்றார் திலகவதி. உணமைதான். செம்மைப்படுத்தவும் வாழ்க்கையை செழுமைப்படுத்தவும் ஆற்றுப்படுத்துதல்தானே நல்ல இலக்கியத்தின் நோக்கம்.பாகீரதி பாத்திரம் பெண்ணியவாதிகளை  கேலி செய்யும் விதத்தில் இருப்பது மனதைக் கொஞ்சம் நெருடுகிறது.

                               நாவல் விறுவிறுப்பாகவும் அதே நேரத்தில் இடையில் கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் ஆசிரியரால் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. நாவலைப் படித்து முடித்தவுடன் எனது மனைவியிடம் நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக அன்பு செலுத்த வேண்டும் என்று தோன்றியது. இந்த நாவலைப் படித்ததன் பயன் எனக்கு இது. நீங்களும் படித்துத்தான் பாருங்களேன்.

                           இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பக்கத்தில் " NESATHUNAI. A collection of short stories in Tamil by G. Tilakavathi " என்று போட்டிருக்கிறார்கள். நாவலை எப்படி சிறுகதைத் தொகுப்பு என்று அச்சிட்டார்கள் எனத் தெரியவில்லை. அடுத்த பதிப்புகளில் திருத்திக்கொள்ளலாம்.

                                           

No comments: