Sunday, 12 January 2014

நூல் அறிமுகம் : நெல்லித்தோப்பு -பாவண்ணன்

நூல் அறிமுகம்                       : நெல்லித்தோப்பு -சிறுகதைகள் தொகுப்பு
ஆசிரியர்                                      பாவண்ணன்
வெளியீடு                                  :  ஸ்நேகா , சென்னை-14
விலை                                         : ரூ 55.00

தொலைபேசித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் பாவண்ணனின் சிறுகதைகள் மனம் சார்ந்தது, மனித நேயம் சார்ந்தது. பரபரப்பான வாழ்நிலைக்கிடையில் இளைப்பாறவும், களைப்பாறவும் மட்டுமல்லாது மனித மனங்களை அறிந்து கொள்ளவும் முடிந்தவரையில் புரிந்து கொள்ளவும் இலக்கியங்கள் பயன்படுகின்றன.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமது செவிப்பறைகளை சினிமா வசனங்கள் ஆக்கிரமித்துக்கொண்டுதான் இருக்கின்றன.  உமிழ வேண்டிய பல விசயங்கள் ஒரே மாதிரியான வசனங்கள் மீண்டும் மீண்டும் நம்மைச் சுற்றி  ஆக்கிரமித்துக்கொள்கின்றன என்றாலும் உடன் இருப்பவர்களுக்காக சகித்துக்கொண்டுதான் போக வேண்டியிருக்கிறது.

                              ஆனால் இலக்கிய வாசிப்பு என்பது உள்மனம் சார்ந்தது. தனிமையில் மகிழவும் , நினைக்கவும், வெறுக்கவும், கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் இலக்கியங்களே அடிப்படையாகின்றன.
பாவண்ணனின் 18 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. பாவண்ணனின் வார்த்தைகளில் சொல்வதானால், 'இந்த உலகின் முன் என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். என்னை ஈர்க்கும் பலவற்றையும் ஈடுபாட்டுடன் கவனிக்கிறேன். அசை போடுகிறேன். உள்வாங்கிக் கொள்கிறேன். பறவையானாலும் சரி, மனிதனானும் சரி, மனசுக்குள் ஏந்திக் கொள்கிறேன். கீறல்கள், புண்கள், இரத்தக்கசிவுகள்,வசைகள் இல்லாமல் இல்லை. ஏற்றுக்கொள் என்கிறேன், என் மனதிடம். கைகுலுக்கல்கள், கைதட்டல்கள், பாராட்டுக்களுக்கு இடம் தருவதைப்போலவே இவற்றுக்கும் இடம் கொடு என்கிறேன். எல்லாவற்றையும் ஏற்று அனுபவத்துக்குள்ளாக்கிக் கொள்ள விரும்பு என்கிறேன். ஒரு மரத்தைப் போல, இந்த மண்ணைப் போல , அந்த மலையையும் கடலையும் போல எல்லாவற்றிற்கும் திறந்திரு என்கிறேன். இதொகுப்பின் கதை மாந்தர்களை இந்த வாழ்விலிருந்தே எடுத்திருக்கிறேன். இவர்களைப் பற்றி உணர வேண்டும் என ஆசைப்படுகிறேன். " எனச்சொல்ல வேண்டும்.
                          இந்தத்தொகுப்பில் உள்ள 'பயணம்' என்னும் சிறுகதை நீண்ட தூர சைக்கிள் பயணத்தில் கிடைக்கும் ஒரு சிநேகிதச்சிறுவனைப் பற்றியது.கள்ளம் கபட்மில்லாத குழந்தை ஆசையும் அதன் நேசமும் விரிவாகச்சொல்லப்பட்டுள்ளது. கமிசனும் கமிசனுக்குமான தொழிலுமாய் இருக்கும் உலகில் திடீரெனத் தள்ளப்படும் இரத்தன் எனும் கதாபாத்திரம் மனித உறவுகள் ஆதிக்கம் சார்ந்தும் நன்றியை விட நயவஞ்சகம் சார்ந்தும் இருக்கும் நிலையைக் காட்டுகிறது. 'பொய்' என்னும் சிறுகதையின் சிங்காரம் என்னும் கதாபாத்திரம் 'பொய்ம்மையும் வாய்மையிடத்த' என்னும் குறளை ஞாபகப்படுத்துகிறது. பொய்ச்சாட்சி, பொய்ச்சாட்சி என்று கேலி பண்ணிக்கொண்டே இருக்கும் அப்பாவைக் காப்பாற்ற சிங்காரத்தின் பொய்ச்சாட்சிதான் கை கொடுக்கிறது. 'சரண்' என்னும் சிறுகதை இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் நடுவே தடுமாறும் சுப்பையாசாமிகையும், மடத்திலும் கூட பதவிப்போட்டியால் குருசாமி ஜோதியில் கலந்து விட்டார் என்னும் சிஷ்யனின் பொய்யையும் பேசுகிறது.

                        தலைப்பாக அமைந்துள்ள நெல்லித்தோப்பு என்னும் சிறுகதை போலித்தனமான பரம்பரைப்பவுசையும் , முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தை மட்டுமல்லாது பெருமையையும் தொலைப்பதையும் வலுவாகச்சொல்லப்பட்டுள்ளது.

                       'வாழ்வின் நெருக்கடியான தருணங்களில் மனித மனம் கொள்ளும் தத்தளிப்புகளும் பதற்றங்களும் பாவண்ணனின் கதைகளில் பதிவாகின்றன. அவசரங்களும் ஆவேசங்களும் குழப்பியடிக்கிற உலகில் தலைகீழாகிவிடுகிறது வாழ்க்கை. எளிமையையும் ,அன்பையும் உதிர்த்த மனிதர்களுக்கு எல்லாவிதப் பிரச்சனைகளும் முளைக்கின்றன.அதன் கோலத்தை வடிப்பதில் பாவண்ணனின் எழுத்துக்கள் மும்முரமாக இயங்குகின்றன. எதார்த்த வாழ்வின் சாரம் எல்லாக் கதைகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. பாவண்ணனின் கதைகள் ஓசையின்றி எழுப்பும் கேள்விகளை நாமும் எழுப்பிக்கொள்ளும்போது இக்கதைகள் விரிவாக்கம் பெற்று நம் வாழ்வின் சங்கடங்களையும் இக்கட்டுகளையும் நமக்கு உணர்த்துகின்றன். ' இவை இச்சிறுகதைத் தொகுப்பை பதிப்பித்த ஸ்நேகா பதிப்பகத்தின் வார்த்தைகள். நீங்களும் இந்தப் புத்தகத்தை வாசித்துப்பார்க்கலாம்.

நன்றி : தோழர் ந.முருகன் அவர்கள் நடத்திய 'புதிய காற்று ' இதழில் நூல் அறிமுகம் என்னும் தலைப்பில் என்னால் எழுதப்பட்டது.

4 comments:

anandam said...

இலக்கிய வாசிப்பு என்பது உள்மனம் சார்ந்தது. தனிமையில் மகிழவும் , நினைக்கவும், வெறுக்கவும், கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் இலக்கியங்களே அடிப்படையாகின்றன. // நல்ல வரிகள். இந்தப் பழக்கம் குறைவதனால் தான் ,இந்தக் காலத்து 'மன அழுத்தம்' எல்லா வயதினருக்கும் கூடுகிறது. வாசிப்பை நேசிக்க வேண்டியது அவசியக் கடமை.

நா.முத்துநிலவன் said...

வணக்கம் தோழர். வாசிப்பை நேசிக்கும் தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் புதுமையாகவே உள்ளன. வாழ்த்துகள். தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், தோழர்கள், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்

முனைவர். வா.நேரு said...

நன்றி, 'வாசிப்பை நேசிக்க வேண்டியது அவசியக் கடமை.' உண்மைதான்,கடமையாகக் கொள்வோம், இளைய சமூகத்திற்கு வாசிக்கும் இன்பத்தை கற்றுக்கொடுப்போம்.

முனைவர். வா.நேரு said...

நன்றியும் எங்களது வாழ்த்துக்களும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும்.