Thursday 30 January 2014

புத்தகப் பார்வை -1

புத்தகப் பார்வை என்னும் பகுதியில் "நுனிப்புல்லர்களுக்கு ஆதாரங்கள் தரும் ஆய்வு நூல் " என்ற தலைப்பில்  பிப்ரவரி -1-15, 2014 -இதழில் வெளியிட்ட உண்மை மாதம் இருமுறை இதழுக்கு என் நன்றி .  


நூலின் தலைப்பு : திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே !
                   தந்தை பெரியார் கருத்துகள் பற்றி  ஓர் ஆய்வு
நூல் ஆசிரியர்     :   சு.அறிவுக்கரசு
வெளியீடு             :    விழிகள் பதிப்பகம், சென்னை-41 -9444265152/9444244017
முதல் பதிப்பு       :    2013      பக்கங்கள்           :     256  விலை ரூ 160 

                              

       திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டுள்ள தந்தை பெரியாரின் வரலாறு- ஒரு புதிய நோக்கு என இந்த நூலைசொல்லலாம். நூலின் உள்ளடக்கம் பதிமூன்று தலைப்புகளில் உள்ளது. 'திராவிடர் ' என்னும் பெயரைத் தந்தை பெரியார் தேர்ந்தெடுத்ததன் காரணத்தை 'தொடங்கும் முன்' விளக்கும் இந்த நூலாசிரியர் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த அறியாமைகளை, மூட நம்பிக்கைகளை விளக்கமாக் எடுத்துரைத்து, சகுனம் பார்ப்பதான நிமித்தம் முதல் பூதம், பேய் நம்பிக்கை வரை  தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் இவை சுட்டப்பட்டுள்ளன என்பதனைப் பட்டிய்லிடுகின்றார். 'தமிழர்தம் அடையாளத்தை, பண்பாட்டை , பழக்கவழக்கங்களை மீட்டெடுக்க வேண்டாமா? ' அதற்கான முன்முயற்சிதான் பெரியார் கண்ட திராவிடர் கழகம் (பக்கம் 56 ) என்பதனை நிறுவுகின்றார். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை  ,மொழியின் தாழ்ச்சியை, இனத்தின் வீழ்ச்சியை  'தமிழர் வீட்டு வாழ்க்கை நிகழ்வுகளில் ,திருமணம் ,நினைவு நாள் போன்றவற்றில் தமிழ் இடம் பெறா நிலை '  எப்படி ஏற்பட்டது என்பதனை ஆய்வு நோக்கில் எடுத்து வைக்கின்றார்.
                                 வீழ்ச்சி அடைந்த தமிழ் இனம், தனது மொழியையே தாழ்ச்சியாக நினைத்த தமிழ் இனம் தந்தை பெரியாரின் வருகையால் எப்படி திருப்பம் அடைந்தது என்பதனை 'திருப்பு முனை ' என்னும் அத்தியாயத்திலும், தந்தை பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பிரித்து ' பார்ப்பனரல்லாதாருக்காக, சுயமரியாதைச் சமதர்மக்காரராக, நீதிக்கட்சிக்காரராக, திராவிடராக ' எப்படியெல்லாம் அவரின் கொள்கை நோக்கும் அதற்கான நடைமுறை ஆதரவும் எதிர்ப்பும்  அமைந்தது என்பதனை ஆதாரப்பட்டியல்களோடு அடுக்குகின்றார், விளக்குகின்றார் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள். காமராசர் ஆட்சிக்கு தந்தை பெரியார் கொடுத்த ஆதரவை , அன்றைய நிலைமையை 'முதல் எட்டு ஆண்டுகளில்' என்னும் தலைப்பில் விளக்குகின்றார். 'அண்ணாவின் வெற்றி' என்னும் தலைப்பில் 'தேனிலவு முடிந்து விட்டது' என்று ராஜாஜி சொன்னதையும். 'ஆம்,குடும்ப வாழ்க்கை தொடங்கிவிட்டது ' என்று அண்ணா சொன்னதையும் குறிப்பிட்டு , அண்ணாவிற்கு தந்தை பெரியார் தந்த ஆதரவை, அன்றைய நிகழ்வுகளை விரிவாகக் கொடுத்து, இன்றைய தலைமுறைக்கு ஆவணங்களாகக் கொடுத்துள்ளார். 'பொது வாழ்க்கையில் எந்தக் கொள்கைகளுக்காக 1917-ல் நுழைந்தாரோ அந்தக் கொள்கைகளைக் (Principles) கடைசி வரையில் கைவிடாமல் உழைத்தவர், கழகத்தவரை உழைக்கச்செய்தவர் பெரியார். அந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தமது நடைமுறைகளை ,அணுகுமுறைகளை,செயல்திட்டங்களை(Polices) சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் போராடியவர் பெரியார். அன்றைய தமிழ்ச்சமூகத்தின் நிலையை உயர்த்திட இந்தத் தந்திர உபாயங்களைக் கயாண்டார் . சமூக நீதிக்காக- பார்ப்பனர் அல்லாதார் சமுகத்தின் நிலையை உயர்த்துவதற்காக அவர்தம் செய்ல்முறைகள் மாற்றப்பட்டனவே தவிர - உயர்வுகளை நோக்கிப் பார்ப்பனர் அல்லாத திராவிடர்களை அழைத்துச்செல்வதற்காக மாற்றினாரே தவிர- அவர் மாறவே இல்லை! " பக்கம் 239 -ல் நூலாசிரியர் சொல்லும் உண்மையை விளக்கும் நோக்கத்தில் அமைந்த அற்புதமான ஆய்வேடாக, கருத்துப்பெட்டகமாக  இந்த நூல் அமைந்துள்ளது. பின் இணைப்பாக சுதந்திரம் பெற்றதாக சொல்லப்படும் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களும், மத்திய திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டி தலைவர் வேதாசலம் அவர்களும் விடுவித்த அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கைகளின் உண்மைத் தன்மை, இன்று 67 ஆண்டுகளுக்குப் பின்னாலும் படிப்பவர்களையும் சுடுகின்றது. 
                              'திராவிடர் கழகம் ஆட்சிக்கு வருபவர்களையெல்லாம் ஆதரிக்கும் ஒரு கட்சி ' என்று நுனிப்புல் மேய்வோரின் குற்றச்சாற்றுகளை மறுதலித்து , தந்தை பெரியார் இலட்சிய இலக்கிலேயே குறியாய்க் கொண்டதன் விளைவாகத்தான் ,இரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி அறிவுப் புரட்சியாகி ,ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மனித சமூகம் நம் நாட்டில் மனிதத்தன்மை, மனித உரிமைகளைப் பெற்றுத் தலை நிமிர்ந்தனர் என்பதைப் பல்வேறு கடந்த கால- மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்களை அடுக்கடுக்காகத் தந்து வாசகர்களை மிகவும் சிந்திக்க வைக்கிறார் என்றால் அது மிகையாகாது. அவரது ஆழ்ந்த ஆய்வுப்பார்வை தெளிவான வெளிச்சத்தை,,குழப்புவர்களுக்கும் கும்மிருட்டில் தடுமாறுவோர்க்கும்  தருவதாக அமைந்துள்ளது......

                         படித்துப் பயன்பெற வேண்டியவர்கள் இன்றைய இளைஞர்களும் , இனி வரும் தலைமுறையும்.
சிறப்பாகப் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி, திராவிடர் சமுதாயத்தின் நோய் நாடி, நோய் முதல் நாடி, அதற்குப் பெரியாரின் சிகிச்சை எந்தெந்தக் காலகட்டத்தில் எப்படியெல்லாம் நடைபெற்றுள்ளது என்பதை மிக அருமையாக விளக்கும் தொண்டுக்கு நூலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ' என்று திராவிடர் கழகத்தின் தலைவர் , அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்த நூலின் முன்னுரையில் வைரக்கற்களாய் பதித்துள்ள சொற்கள் ,நூலின் மேன்மையை, நூலாசிரியரின் தொண்டினை சிறப்பிக்கின்றன.

                             'யானை பள்ளத்தில் விழும்போது தவளை கூட ஓர் உதை உதைக்கும் ' என்றார் இங்கர்சால். திராவிடர்கள் என்னும் யானை பார்ப்பனர்கள் விரித்த  மூடப்பள்ளத்தில் விழுந்ததால் மொழியால், இனத்தால் வீழ்ச்சியுற்று, பார்ப்பனத்தவளைகள் எல்லாம் உதைக்கும் ஓர் இனமாய் , ஏமாற்றப்படும் இனமாய் இருந்தோம்.. இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் , நாம் யானை பலம் கொண்டவர்கள் என்பதனை உணர்த்திய தந்தை பெரியாரின் உழைப்பை, உண்மையை, அர்ப்பணிப்பை,தியாகத்தை, எதற்கும் அஞ்சாமல் பணியாற்றிய அடலேறுத் தன்மையை   இன்றைய்  தலைமுறை உணர்ந்து கொள்ளும். . இன்றைய தலைமுறையும் ,இனிவரும் தலைமுறையும் தந்தை பெரியாரின் இயக்கத்தை, திராவிடர் கழகத்தை  உணர்ந்து கொள்ள உதவும் ஆய்வேடு இந்தப் புத்தகம். படியுங்கள், பரப்புங்கள் தோழர்களே.

Saturday 25 January 2014

எங்கே கடவுள் ?

                                        எங்கே கடவுள் ?

ஆத்திகர்களாய் அடையாளம்
காட்டிக் கொண்டவர்களின்
கைகளில் கடப்பாரைகளும்
கத்திகளும்.....

இடித்தே தீருவோம்
உடைத்தே தீருவோம்
கட்டியே தீருவோமென்னும்
உறுதி மொழிகள்

எனது கடவுளே பெரிது
இடிக்கப்பட்டன்
புத்தர் சிலைகள்
தகர்க்கப்பட்டது மனித நாகரீகம்
ஆப்கானில் .........

எனது கடவுளே பெரிது
உனது வழிபாடு இருந்த
இடத்தில்தான் கட்டவேண்டும்
எனது வழிபாட்டுத்தலம்
இராம ஜென்ம பூமியா?....
பாபர் மசூதியா ?.....
வெறிபிடித்த கோஷங்களோடு
வளையவரும் மத-மனிதர்கள்...

மூன்று வய்துக்
குழந்தையின் முகத்தில் கத்தி
பாய்ச்சும் ஆத்திகர்கள்...
மொத்தமாய் ரெயிலுக்குத்
தீவைத்து பொசுக்கும்
மிருக எண்ணங்கள் !   ....

எரிக்கப்படும் உயிர்கள்.....
தகர்க்கப்படும் மனித நேயம்....
சிதைக்கப்படும் மனித உடல்கள் !...
அனைத்தும் ஆண்டவனின் பெயரால்....

எந்தக் கடவுள் பெரிது ?
எங்களுக்குத் தெரியவில்லை..
கடவுள் இருப்பது உண்மையெனில்
ஏதாவது ஒரு கடவுள்
இங்கே வாயேன்....
எதிரிகளிடம் சென்று
நானிருக்கும் இடமென்று
சொல்லித் தொலையேன்
                                                        - வா. நேரு-

தோழர் ந,முருகன் அவர்கள் நடத்திய 'புதிய காற்று' தனிச்சுற்றுப் பத்திரிக்கையில் 2002-ல் எழுதியது.

Thursday 23 January 2014

நூல் அறிமுகம் : குடும்பம் (ஒரு சீன நாவல்)

 நூலின் தலைப்பு : குடும்பம் (ஒரு சீன நாவல்)
நூல் ஆசிரியர்      : பா. ஜின்
தமிழில்                   : நாமக்கல் சுப்பிரமணியம்
பக்கங்கள்             : 272  விலை ரூ 85
வெளியீடு             : அலைகள் வெளியீட்டகம், சென்னை-24

                                  குடும்பம் எனும் அமைப்பு எவ்வாறெல்லாம் அதன் உறுப்பினர்களின் உணர்வுகளை சிதறியடிக்கிறது, மழுங்க வைக்கிறது, பத்தாம் பசலித்தனமான எண்ணங்களும் நடவடிக்கைகளும் எவ்வாறு திணிக்கப்படுகிறது என்பதனை விளக்கும் சீன நாவல். காவோ குடும்பம் -அதன் உறுப்பினர்கள், வேலைக்காரர்கள் என்னும் பாத்திரப்படைப்புகள் மூலம் விரிவாக சித்தரிக்கின்றது.

                              மீ-பெங் அடிமைப்பெண் இளைய முதலாளி ஜீகுவால் காதலிக்கப்படுகிறாள். இளைய முதலாளி இவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள இயலாத சமூக சூழல். ஒரு கிழவனுக்கு வைப்பாட்டியாக வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும்போது , அதனை விட சாவதே மேல் என ஏரியில் விழுந்து சாகின்றாள்.

                             மீ - உறவுப்பெண்ணை காதலிக்கிறாள். ஒரே வகுப்பு- ஆனால் ஜாதகப் பொருத்தம் சரியில்லையென்று வேறொருவனுக்கு மூத்தவர்களின் கட்டாயத்தால் கட்டி வைக்கப்படுகின்றாள். கொஞ்ச நாளில் கணவனை இழந்து , பின் மடிகிறாள்.

                              இதைப் போல ருஜீ என்னும் பெண். சமீபத்தில் ஒருவர் இறந்திருக்கும் வீட்டில் , பிரசவம் பார்க்கக்கூடாது என்னும் மூட நம்பிக்கை அடிப்படையில் ,ஊருக்கு வெளியே அனுப்பப்படுகிறாள். பிரசவ வசதி இல்லாமல் சாகின்றாள். மூன்று பெண்களின் இறப்புகள்- அதைச்சொல்லும் விதம்- பாத்திரப்படைப்பு மிக வலிமையாக இருக்கிறது. அதைப்போல ஜீக்சன்,ஜீமின், ஜீகு என்னும் ஆண் பாத்திரப்படைப்புகளும் நினைவில் நிற்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. " நான் கலைஞன் அல்லன். எழுதுவது என் வேலையுமல்ல. என் வாழ்க்கையில் முரண்பாடுகள் இருந்தன.படைப்பிலும் முரண்பாடுகள் உண்டு. அன்புக்கும் ,வெறுப்புக்கும் இருப்பதைப்போல், அறிவுக்கும் ஆத்திரத்திற்கும் இருப்பதைப்போல் , நினைவிற்கும் நடப்புக்கும் இருப்பதைப்போல், என் வாழ்வும் எழுத்தும் ஒரு துயரமான போராட்டம். என் எழுத்துக்களில் வித்தியாசமான நடைகளும் கோணங்களும் இருக்கலாம். ஆனால் அவற்றின் சாரம் ஒன்றாகவே இருக்கும். தொடக்க காலத்திலிருந்தே என் எதிரிகளைத் தாக்காமல் நான் எழுதியதே இல்லை. என் எதிரிகள் யார் ? காலங்கடந்த பழைய சிந்தனைகள். சமுதாய முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக நிற்கும் மடமைகள். மனித நேயத்தை அழிக்க முயலும் அனைத்தும் என் எதிரிகள் " என்கிறார் இந்த நூலின் முல ஆசிரியர் பா-ஜின். தனது கூற்றை நாவல் முழுக்க மெய்ப்படுத்தியிருக்கின்றார்.

                             இந்த நாவல் தமிழில் வரத்தூண்டு கோலாக இருந்த கு.சின்னப்பபாரதி அவர்கள் " இந்த அற்புதமான நாவல் , தமிழ் வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் பல படிப்பினைகளை வழங்கக்கூடியதென நான் கருதுகிறேன் " என்கிறார் முன்னுரையில் -உண்மை.

                        இந்த நாவலை தமிழாக்கியவர் நாமக்கல் சுப்பிரமணியம். தமிழ் இலக்கிய உலகின் சார்பாக மனதார,உளமாரப் பாரட்டப்படவேண்டியவர். சுந்தர ராமசாமி மொழி பெயர்த்த 'செம்மீன் 'போல, இளையபாரதி மொழி பெயர்த்த 'மய்யழிக்கரையொரம் ' போல, ஒரு அற்புதமான நாவலின் உயிரோட்டமான மொழி பெயர்ப்பு. நமது வீட்டு நூலகங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய மொழி பெயர்ப்பு நாவல்.


நன்றி : தோழர் ந.முருகன் அவர்கள் நடத்திய 'புதிய காற்று ' இதழில் நூல் அறிமுகம் என்னும் தலைப்பில் என்னால் எழுதப்பட்டது.

Sunday 19 January 2014

நிகழ்வும் நினைப்பும்(14) : நம்புகிறார்களா? நம்புவது போல நடிக்கின்றார்களா?

"சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
தொடர்புடைய விடயங்கள்

    துஷ்பிரயோகம்,
    கத்தோலிக்கம்,
    ஊழல்,
    மனித உரிமை,
    ஒருபாலுறவு

கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது.

ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன.

பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பவங்களை மட்டுமே வத்திக்கான் திருச்சபை இதுவரை அறிக்கையிட்டுள்ளது.

பாதிரிமாரின் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்களை கத்தோலிக்க திருச்சபை தலைமை மூடிமறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிவில் அதிகாரிகளுக்கு முறையிடாமல், சம்பந்தப்பட்ட பாதிரிமாரை வேறு கத்தோலிக்க பங்குப் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் வத்திக்கான் மீது விமர்சனங்கள் உள்ளன"
பி.பி.சி.செய்தி 18.1.2014

 கத்தோலிக்கப் பாதிரிமார்களின் இத்தகைய செயல்களை மதவாதிகள் எப்படி நியாயப்படுத்துவார்கள் எனத் தெரியவில்லை. பாலியில் உணர்வு என்பது வயது வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பான ஒன்று. அதனை முறைப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் வாழ்வியலில் நிறைய உள்ளன. அதனை விடுத்து விட்டு நான் முற்றும் துறந்தவன், திருமணம் செய்து கொள்ள மாட்டேன், கடவுளின் தூதுவர் சொன்ன செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் தூயவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு, சிறுவர்களிடம் இத்தகைய சேட்டைகள் பண்ணுவது எவ்வளவு பெரிய அநியாயம்? எவ்வளவு பெரிய அநாகரிகம்? அப்படி ஒரு கடவுள் உண்மையாகவே இருந்தால், தப்பு செய்யும் பாதிரியாரை அந்த நேரத்தில் படாரென்று அறைய மாட்டாரா? பார்த்துக்கொண்டு சும்மாவே இருப்பார் ? பிஞ்சுகளிடம் வம்பு செய்யும் பாதிரியார்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் திரிகிறார்கள் என்றால் கடவுள் என்று ஒருவர் இல்லை என்று தானே அர்த்தம் ?  இந்து மதக் கடவுள்களின்  ஏஜெண்டுகள் பண்ணும் அநியாயமும்  தாங்கமுடியவில்லை. ஒரு சாமியார் ? திடீரென்று பிரச்சனைக்கு உரிய நடிகையையும் சாமியாராக ஆக்கி விட்டேன் என்று சொல்லி விட்டார். தீட்சை பெற்றார், சாமியாராகி விட்டார் என்று  செய்தி கொடுத்து விட்டார். இதையெல்லாம் பார்த்தபிறகும் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்கள் என்றால் உண்மையிலேயே நம்புகிறார்களா? நம்புவது போல நடிக்கின்றார்களா? ஆத்திகர்களுக்கே வெளிச்சம்.

Saturday 18 January 2014

நிகழ்வும் நினைப்பும் (13) : நாத்திகர் என்பதற்காக அகதித் தஞ்சம்

"நான் ஒரு நாத்திகனாகிவிட்டேன், நாடு திரும்பினால் கொல்லப்படுவேன் என்று அச்சம் தெரிவித்த ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பிரிட்டன் அகதித் தஞ்சம் அளித்துள்ளது.

ஆப்கனில் நாளாந்த வாழ்க்கையில் மதம் மிக அதிக அளவில் கலந்துள்ளது என்றும், இந்த நபரால் தனது நாத்திக நம்பிக்கைகளை முற்றாக மறைத்து வாழ முடியாது என்று அவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

நாத்திகர் என்பதற்காக ஒருவருக்கு பிரிட்டனில் அகதித் தஞ்சம் அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது. சம்மந்தப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆப்கனில் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த இவர், 16 வயதில் பிரிட்டனுக்கு வந்தார். இங்கு அவர் நாத்திகரானார்.

இந்த குறிப்பிட்ட வழக்கு குறித்து கருத்துக் கூற உள்துறை அலுவலகம் மறுத்துவிட்டது. தேவைப் படுவோருக்கு அடைக்கலம் அளிக்கும் சிறப்பான பாரம்பர்யம் கொண்ட நாடு பிரிட்டன் என்று அது கூறியுள்ளது."
பி.பி.சி.செய்தி 14.1.14

நல்ல செய்தி. வரவேற்கப்படவேண்டிய செய்தி. உலகில் இன்னும் சில நாடுகளில் கடவுளை மறுப்பது என்பது, கடவுள் இல்லை என்னும் உண்மையைச்சொல்வது தண்டனைக்குரியது, அதுவும் மரணதண்டனைக்கு உரியது என்பது கொடுமையானது. ஒரு பக்கம் 21 ஆம் நூற்றாண்டு, செவ்வாய் கிரகத்திற்குப் போகப் போகின்றோம், வான வீதியில் வீடு அமைத்து வாழப்போகின்றோம், வான வீதியில் சுற்றுலா போகப்போகின்றோம் என்று சொல்லப்படுகின்ற நிலையில், இன்னொரு பக்கம் அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு, அதனைச சந்தேகப்பட்டால் கூட தண்டனை என்பது கொடுமை. கடவுள் காப்பாற்றப்படுவது கடுமையான தண்டனைகளால் என்பது அந்தக் கடவுள் எனும் கருத்துக்கு பெருமை அளிப்பதா ? அளவற்ற அருளாளன், தான் இல்லை என்று ஒருவன் சொல்கிறான் என்றால் நேரில் வந்து இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டுப் போவதை விட்டு விட்டு, கொல்லச்சொல்வாரா? அப்படிச்சொனனால் அவர் அருளற்ற அருளாரா? இப்படியெல்லாம் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்குத்தான்  கடுமையான தண்டனை என்று மதவாதிகள் அச்சுறுத்துகின்றார்கள் போலும். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் , க்டும் கோட்பாடு கொண்ட மதவாதிகளிடம் சிக்கித் தவிக்கும் நாத்திகர்கள், பிரிட்டனில் தஞ்சம் அடையட்டும். கடவுள் என்னும் பெயரால் தங்கள் நாடுகளில், பகுதிகளில் நடக்கும் கொடுமைகளை பட்டியலிடட்டும். அது ஒரு புதிய பார்வையை, புதிய வெளிச்சத்தை உலகத்திற்கு அளிக்கும். கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்னும் புத்த்கத்தில் ரிச்சர்டு டாக்கின்ஸ் சொன்னதைப் போல ஒரு மத நம்பிக்கையிலிருந்து விடுபடலாம், மாறலாம் என்பதே தனக்குத் தெரியாதே எனத் தன் துணைவியார் சொன்னதாக சொன்னது போல , மத நம்பிக்கையிலிருந்து விடுபடலாம், நாத்திகராக வாழலாம், இன்னும் நலமாக பிரிட்டனில் சென்று உழைத்து வாழலாம் என்பது நம்பிக்கைகுரிய செய்தியாக அந்த நாட்டில் வாழ்பவர்களுக்கு, நாத்திகர்களுக்கு  அமையும். உலகில் இத்தகைய அகதி முறையை முதன்முதலில் அமுல்படுத்தியிருக்கும் பிரிட்டனுக்கு பாராட்டுக்க்ள்.

Tuesday 14 January 2014

நிகழ்வும் நினைப்பும் (12) : அயல் நாட்டு அனுபவங்கள்

மதுரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் 12.1.2014 நடைபெற்ற கூட்டத்தில் 'அயல் நாட்டு அனுபவங்கள் ' என்னும் தலைப்பில் , மதுரை  மாநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சே.முனியசாமி சிறப்புரையாற்றினார். இளமையில் மிகவும் வறுமை நிலையில் இருந்த தான் வளர்ந்த நிலையையும் , வாழ்வில் உயர்ந்த நிலையையும் விவரித்துப் பேசுவதென்றால் 10 மணி நேரம் ஆகும் என்றார். உண்மைதான், அவ்வளவு அனுபவ்ங்கள், துயரங்கள் அவரின் வாழ்க்கையில் உள்ளது. அவருடைய அனுபவங்களை என்னிடம் (விஜயவாடா, நாக்பூர் போன்ற வெளிமாநிலங்களில் உள்ள இடங்களுக்கு சென்ற நேரங்களில்) விவரித்திருக்கின்றார். 3, 4 நாவல்களுக்கு உரிய கதைக்கரு உங்களிடம் இருக்கிறது என்று நான் அவரிடம் சொல்லியிருக்கின்றேன்.

                    அய்யா முனியசாமியின் வய்து 65. தன்னுடைய பிள்ளைகளை எல்லாம் ஆளாக்கி, அவரவர்க்கு வருமானம் வருவதற்கான கடை முதலிய ஏற்பாடுகளைச்செய்து நிம்மதியாக இருப்பவர். தன்னுடைய 50 வய்து வரை ஆத்திகராக இருந்தவர். 50 வயதிற்குப்பின்புதான், தந்தை பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக, திராவிடர் கழக உறுப்பினரானவர். செம்மையாக இருக்கும் அவர், 2010-ல்தான் வெளி நாடு போக ஆரம்பித்திருக்கின்றார். இதுவரை 14 நாடுகள் போய் வந்திருக்கின்றார். இந்த ஆண்டு 6 நாடுகள் போகப்போகின்றார். தான் பார்த்த சீனா, எகிப்து, ம்லேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளைப் பற்றி மிக விரிவாக தனது அனுபங்களை, நிழற்படங்களின் துணையோடு பேசினார். இந்தியாவையும் ,தான் பார்த்த நாடுகளையும் ஒப்பிட்டும், வேறுபடுத்தியும் ,பெரியாரியலோடு தொடர்பு படுத்தியும் அவர் பேசியது சிறப்பாக இருந்தது. பேச்சாளர் என்பதை விட, கருத்தாளராக தனது கருத்துக்களை எடுத்து வைத்தது சிறப்பாக இருந்தது.

                     சீனாவில் எல்லா இடங்களிலும் வெள்ளாமை(விவசாயம்) செய்கின்றார்கள். விவசாயம் செய்யப்படாத வெறும் நிலத்தையே பார்க்க முடியவில்லை. நம் நாட்டில் கிராமத்தில் ஒருவர் நெல் நாத்தைப் போட்டுக்கொண்டு இருப்பார்.பக்கத்து காட்டுக்காரர் 2 மாத நெல் பயிருக்கு களை எடுத்துக்கொண்டு இருப்பார். இன்னொருவர் நெல்லை அறுத்துக்கொண்டிருப்பார். ஒரு ஒழங்கற்ற நிலை , அவரவர் விருப்பத்திற்கு பயிரிடுகின்றார்கள். ஆனால் சீனாவில் ஒரு 400 கி.மீ தூரம் முழுமைக்கும் 2 மாத பயிர் என்றால் ஒன்று போல 400 கி.மீ தூரமும் 2 மாதப் பயிராக இருந்தது. விதைப்பது, வளர்ப்பது,அறுப்பது என்பது ஒன்று போல இருக்கின்றது அதிசயமாக இருக்கிறது என்றார். பக்கத்தில் இருந்த ஒருவர், விவசாயம் அந்த நாட்டில் அரசின் வழிகாட்டுதலில் என்றார். ஹாங்காங் நகரத்தின் அதிசயங்களை, மக்களின் உழைப்பை, வானுயர்ந்த கட்டிடங்களை விவரித்தார். வெறும் கடலும், மலையும் மட்டுமே உள்ள நகரம் அது , எப்படியெல்லாம் நவீன மயத்தைப் பயன்படுத்தி கட்டிடங்களை கட்டுகின்றார்கள், மலையைத் தகர்த்து அந்த இடத்தில் விவசாயம் செய்கின்றார்கள் என்பதையெல்லாம் விவரித்தார்.

                     எகிப்து என்னும் நாடு நைல் நதி இல்லையென்றால் அந்த நாடு இல்லை. மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. சுத்தம் இல்லை, உண்மை இல்லை. நாட்டில் உள்ள பல கோயில்கள் , பழமையான கோயில்கள், நமது நாட்டில் உள்ளது போல் இருக்கிறது என்றார். அந்தப் படங்களைக் காட்டினார். சுற்றுலாப்பயணிகளை ஏமாற்ற முயற்சிக்கின்றார்கள், எகிப்தில், விழிப்பாக இல்லையேல், பணத்தை இழக்க நேரிடுகிறது என்றார்.
அதனைப் போல சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளைப் பற்றியும் விவரித்தார்.

                       கூட்டத்தின் ஆரம்பித்தில் 'பெரியார் பேழை' என்னும் தலைப்பில், பா.சடகோபன் பேசினார். ' தானாகப் பிறக்காத  மனிதன், தனக்காக மட்டும் வாழக்கூடாது ' என்னும் தந்தை பெரியாரின் கருத்தை எடுத்துக்கொண்டு அதனை விளக்கிப் பேசினார். பேழை என்பது மிகுந்த மதிப்பு வாய்ந்த பொருளை பாதுகாக்கப் பயன்படும் ஒரு பெட்டி என்பதனைக் குறிப்பிட்டு, அதனைப் போன்றதுதான் தந்தை பெரியாரின் பொன்மொழிகள் என ஒப்பிட்டுப் பேசினார்.

                          மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் சுப.முருகானந்தம் அவர்கள் 'இம்மாத விடுதலை சிந்தனை ' என்னும் தலைப்பில் பேசினார். ஒரு இருபது நிமிடம், ஒரு மாதத்தில் வந்த விடுதலை நாளிதழின் முக்கியமான செய்திகளை தொகுத்து ஒருவர் உரையாற்றும் இந்தப் பகுதி முக்கியமானது. 75 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் , உலகத்தின் ஒரே நாத்திக தினப்பத்திரிக்கையான விடுதலையின் சிறப்பை, தனித்தன்மையை புதிதாக வருபவர்கள் தெரிந்து கொள்ள உதவும் உரை இந்த உரை. அருமையாக இதனைக் கொடுத்தார் அண்ணன் சுப.முருகானந்தம் அவர்கள். விடுதலையில் மின்சாரம் அவர்களின் மோடி யார் ? என்பதனை வெளிப்படுத்தும் கட்டுரை, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள், மறைந்த சிவகங்கை சுயமரியாதைச்சுடரொளி அம்மா இராமலக்குமி அவ்ர்களின் வரலாறு, இயக்கத் தொண்டு , விடுதலையில் ஒரு மாதத்தில் வந்த தலையங்கங்கள், ஒற்றைப்பத்தி, ஊசி மிளகாய் விமர்சனம் என அனைத்தையும் தொட்டு சுப.முருகானந்தம் மிக இயல்பான தன்மையில் உரையாற்றினார்.

                              நிகழ்வுக்கு தலைமையேற்ற முன்னாள் நீதியரசர் பொ. நடராசன், சிறப்பு பேச்சாளரை அறிமுகப்படுத்திய அய்யா அ.வேங்கைமாறன், உரையாற்றிய மூவர் என அனைவருமே மதுரைக்காரர்கள், இயக்கத் தோழர்கள். குறிப்பிட்ட நேரமும், குறிப்பிட்ட தலைப்பும் கொடுத்து அவர்களைப் பேச வைத்தபோது, ஒவ்வொருவரின் தனித்திறமையும், உரை ஆற்றலும், கருத்தை கேட்பவர் இனிக்க சொல்லும் ஆற்றலும் வெளிப்பட்டன. 

Monday 13 January 2014

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கொள்கை உறவுகள், உறவினர்கள், நண்பர்கள் , உடன் பணியாற்றும் தோழர்கள், தோழியர்கள் , அதிகாரிகள்,.வாசிப்போர் களம், எழுத்து இணையதளம், வலைத்தள, முக நூல் , டுவிட்டர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழன் எமது நாடு எனச்சொல்லும் நாடாய் சுதந்திரத் தமிழ் ஈழம் மலரட்டும்.. இப்புத்தாண்டில் சாதியெனும் சாக்கடை ஒழிய. மதமென்னும் மாயவித்தை மறைய, கடவுளெனும் கயமை காணாமல் போக உழைத்திட உறுதி ஏற்போம் . . உழைப்பவர்களின் உரிமையும் , பாடுபடும் விவசாயிகளின் குரலும் ஓங்கட்டும்.  இனிய தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

Sunday 12 January 2014

நூல் அறிமுகம் : நெல்லித்தோப்பு -பாவண்ணன்

நூல் அறிமுகம்                       : நெல்லித்தோப்பு -சிறுகதைகள் தொகுப்பு
ஆசிரியர்                                      பாவண்ணன்
வெளியீடு                                  :  ஸ்நேகா , சென்னை-14
விலை                                         : ரூ 55.00

தொலைபேசித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் பாவண்ணனின் சிறுகதைகள் மனம் சார்ந்தது, மனித நேயம் சார்ந்தது. பரபரப்பான வாழ்நிலைக்கிடையில் இளைப்பாறவும், களைப்பாறவும் மட்டுமல்லாது மனித மனங்களை அறிந்து கொள்ளவும் முடிந்தவரையில் புரிந்து கொள்ளவும் இலக்கியங்கள் பயன்படுகின்றன.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமது செவிப்பறைகளை சினிமா வசனங்கள் ஆக்கிரமித்துக்கொண்டுதான் இருக்கின்றன.  உமிழ வேண்டிய பல விசயங்கள் ஒரே மாதிரியான வசனங்கள் மீண்டும் மீண்டும் நம்மைச் சுற்றி  ஆக்கிரமித்துக்கொள்கின்றன என்றாலும் உடன் இருப்பவர்களுக்காக சகித்துக்கொண்டுதான் போக வேண்டியிருக்கிறது.

                              ஆனால் இலக்கிய வாசிப்பு என்பது உள்மனம் சார்ந்தது. தனிமையில் மகிழவும் , நினைக்கவும், வெறுக்கவும், கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் இலக்கியங்களே அடிப்படையாகின்றன.
பாவண்ணனின் 18 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. பாவண்ணனின் வார்த்தைகளில் சொல்வதானால், 'இந்த உலகின் முன் என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். என்னை ஈர்க்கும் பலவற்றையும் ஈடுபாட்டுடன் கவனிக்கிறேன். அசை போடுகிறேன். உள்வாங்கிக் கொள்கிறேன். பறவையானாலும் சரி, மனிதனானும் சரி, மனசுக்குள் ஏந்திக் கொள்கிறேன். கீறல்கள், புண்கள், இரத்தக்கசிவுகள்,வசைகள் இல்லாமல் இல்லை. ஏற்றுக்கொள் என்கிறேன், என் மனதிடம். கைகுலுக்கல்கள், கைதட்டல்கள், பாராட்டுக்களுக்கு இடம் தருவதைப்போலவே இவற்றுக்கும் இடம் கொடு என்கிறேன். எல்லாவற்றையும் ஏற்று அனுபவத்துக்குள்ளாக்கிக் கொள்ள விரும்பு என்கிறேன். ஒரு மரத்தைப் போல, இந்த மண்ணைப் போல , அந்த மலையையும் கடலையும் போல எல்லாவற்றிற்கும் திறந்திரு என்கிறேன். இதொகுப்பின் கதை மாந்தர்களை இந்த வாழ்விலிருந்தே எடுத்திருக்கிறேன். இவர்களைப் பற்றி உணர வேண்டும் என ஆசைப்படுகிறேன். " எனச்சொல்ல வேண்டும்.
                          இந்தத்தொகுப்பில் உள்ள 'பயணம்' என்னும் சிறுகதை நீண்ட தூர சைக்கிள் பயணத்தில் கிடைக்கும் ஒரு சிநேகிதச்சிறுவனைப் பற்றியது.கள்ளம் கபட்மில்லாத குழந்தை ஆசையும் அதன் நேசமும் விரிவாகச்சொல்லப்பட்டுள்ளது. கமிசனும் கமிசனுக்குமான தொழிலுமாய் இருக்கும் உலகில் திடீரெனத் தள்ளப்படும் இரத்தன் எனும் கதாபாத்திரம் மனித உறவுகள் ஆதிக்கம் சார்ந்தும் நன்றியை விட நயவஞ்சகம் சார்ந்தும் இருக்கும் நிலையைக் காட்டுகிறது. 'பொய்' என்னும் சிறுகதையின் சிங்காரம் என்னும் கதாபாத்திரம் 'பொய்ம்மையும் வாய்மையிடத்த' என்னும் குறளை ஞாபகப்படுத்துகிறது. பொய்ச்சாட்சி, பொய்ச்சாட்சி என்று கேலி பண்ணிக்கொண்டே இருக்கும் அப்பாவைக் காப்பாற்ற சிங்காரத்தின் பொய்ச்சாட்சிதான் கை கொடுக்கிறது. 'சரண்' என்னும் சிறுகதை இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் நடுவே தடுமாறும் சுப்பையாசாமிகையும், மடத்திலும் கூட பதவிப்போட்டியால் குருசாமி ஜோதியில் கலந்து விட்டார் என்னும் சிஷ்யனின் பொய்யையும் பேசுகிறது.

                        தலைப்பாக அமைந்துள்ள நெல்லித்தோப்பு என்னும் சிறுகதை போலித்தனமான பரம்பரைப்பவுசையும் , முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தை மட்டுமல்லாது பெருமையையும் தொலைப்பதையும் வலுவாகச்சொல்லப்பட்டுள்ளது.

                       'வாழ்வின் நெருக்கடியான தருணங்களில் மனித மனம் கொள்ளும் தத்தளிப்புகளும் பதற்றங்களும் பாவண்ணனின் கதைகளில் பதிவாகின்றன. அவசரங்களும் ஆவேசங்களும் குழப்பியடிக்கிற உலகில் தலைகீழாகிவிடுகிறது வாழ்க்கை. எளிமையையும் ,அன்பையும் உதிர்த்த மனிதர்களுக்கு எல்லாவிதப் பிரச்சனைகளும் முளைக்கின்றன.அதன் கோலத்தை வடிப்பதில் பாவண்ணனின் எழுத்துக்கள் மும்முரமாக இயங்குகின்றன. எதார்த்த வாழ்வின் சாரம் எல்லாக் கதைகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. பாவண்ணனின் கதைகள் ஓசையின்றி எழுப்பும் கேள்விகளை நாமும் எழுப்பிக்கொள்ளும்போது இக்கதைகள் விரிவாக்கம் பெற்று நம் வாழ்வின் சங்கடங்களையும் இக்கட்டுகளையும் நமக்கு உணர்த்துகின்றன். ' இவை இச்சிறுகதைத் தொகுப்பை பதிப்பித்த ஸ்நேகா பதிப்பகத்தின் வார்த்தைகள். நீங்களும் இந்தப் புத்தகத்தை வாசித்துப்பார்க்கலாம்.

நன்றி : தோழர் ந.முருகன் அவர்கள் நடத்திய 'புதிய காற்று ' இதழில் நூல் அறிமுகம் என்னும் தலைப்பில் என்னால் எழுதப்பட்டது.

Saturday 4 January 2014

நன்றி பாராட்டு விழா


 மதுரையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகத்தின் சிற்ப்புக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்து, செய்தியையும்  எழுதி அனுப்பிய பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் சுப.முருகானந்தம் அவர்களுக்கும், திராவிடர் கழக மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் அவர்களுக்கும் மிக்க நன்றி.   செய்தி வெளியிட்ட விடுதலை இதழுக்கு மிக்க நன்றி

மதுரை, ஜன.4- மதுரை மாநகர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஒடிய மொழியில் தந்தை பெரியாரின் கருத்துக்களை முதன் முதலாக மொழி பெயர்த்து "பெரியாரங்கா ரக்சனா" எனும் நூலை எழுதிய பேராசிரியர் தனேஸ்வர் சாகு அவர்களுக்கு நன்றி பாராட்டு விழா 30.12.2013 திங்களன்று மாலை 6.00 மணியளவில் மதுரை ஆர்த்தி உணவு விடுதியில்  நடைபெற்றது. விழாவுக்கு பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் முனைவர்.வா.நேரு  தலைமை தாங்கி னார். மதுரை மாநகர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக  தலைவர் சுப.முரு கானந்தம் அனைவரையும் வரவேற் றார். விழாவிற்கு முன்னிலை வகித்து திராவிடர் கழக அமைப்புச் செய லாளர் வே.செல்வம் அவர்கள் பேரா. தனேஸ்வர் சாகு அவர்களின் சீரிய முயற்சியினை பாராட்டி பேசினார்.
திராவிடர் கழக மண்டல தலைவர் மீ.அழகர்சாமி பேரா. தனேஸ்வர் சாகு அவர்களைப் பாராட்டி பயனாடை அணிவித்தார். திராவிடர்கழக மாநில வழக்கறி ஞரணி துணைத் தலைவர் நீதி யரசர்(நிறைவு) பொ.நடராசன் அவர் கள் தந்தை பெரியாரின் உழைப்பால் தமிழகத்திற்கு கிடைத்த இட ஒதுக்கீடு, சுயமரியாதை திருமண சட்டம் போன்ற பயன்களை எடுத்துரைத்தும் பேரா. தனேஸ்வர் சாகு அவர்களைப் பாராட்டியும் பேசினார். விழாத் தலைவர் முனைவர் வா.நேரு இந்திய பகுத்தறிவாளர்கள் அமைப் பில் செயல்பாட்டில் சிறந்து விளங்கு பவர் பேரா. தனேஸ்வர் சாகு என்பதை எடுத்துரைத்து, தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாள் விழாவிற்கு ஒரிசாவிலிருந்த வந்திருந்த பேரா. தனேஸ்வர் சாகு அவர்கள் , தான் மதுரைக்கு அகில இந்திய தத்துவ மாநாட்டிற்கு வருவதை தெரிவித்ததால் இந்தக்கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது என்பதையும், தமிழர் தலைவர் கைகளில் 1005 பவுன் தங்கத்திற்கான பணம் அளித்த விழாவில், தஞ்சையில் கலந்து கொண்டவர் என்பதையும், தமிழர் தலைவர் அவர்களை அழைத்து ஒரியாவில் தந்தை பெரி யாரின் மொழி பெயர்ப்பு நூலை வெளியிட வைத்து பெருமை சேர்த் தவர், தந்தை பெரியார் கொள்கை களின் பால், தமிழர் தலைவரிடம் மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர், இன்னும் தந்தை பெரியாரின் நூல்கள் பலவற்றை அவர் மொழி பெயர்க்க வேண்டும்,  அவருக்கு துணையாக தமிழகம் எங்கும் உள்ள திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக தோ ழர்கள் இருப்பார்கள். தொடர்ந்து இது போன்ற பணியில் அவர் ஈடுபட வேண்டும் என்றும், பெரியாரங்கா ரக்சனா நூல் எழுதி யமைக்கு மனமார்ந்த நன்றியதலையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா அவர்கள் , தந்தை பெரியார் - தமிழர் தலைவர் கருத்துக்கள் பொறிக் கப்பட்ட நினைவுப் பரிசினை பேரா. தனேஸ்வர் சாகு, , அவரது துணை வியார் பிரதிமா சாகு அவர்களுக்கும்  வழங்கினார். நிறைவாக பேரா. தனேஸ்வர் சாகு அவர்கள் "அறிவியல் மனப்பான்மை" எனும் தலைப்பில், இந்தியாவில் பிறந்த சமூக சிந்தனையாளர்களை எல்லாம் நினைவு கூர்ந்தும், தான் ஜாதி மறுப்பு, வரதட்சனை மறுப்பு திருமணம் செய்து கொண்டவர் என்ற முன்னுரை யோடு பலத்த கைதட்டலுக்கிடையில் அவரது உரையை ஆரம்பித்து, காலம் காலமாக மனித இனம் தவிர, மற்ற உயிரினங்கள் எந்தவித மாற்றமுமின்றி இருக்கையில் மனிதர்கள் தங்கள் அறிவியல் மனப்பான்மையால் தான் இன்றைக்கு வசதியான எளிதான வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார்கள். எதையும் கூர்ந்து நோக்குவது, ஆராய்ச்சி செய்து முடிவுகளை காண்பது, திரும்பவும் அந்த முடிவை களை செயல்படுத்தி சோதனை செய்து விதிகளை உருவாக்குவது அறிவியல் மனப்பான்மையின் அடிப்படைக் கூறுகள். இதை எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறோமோ அவ்வளவு மனிதர்கள் சிறப்புற வாழலாம் என்றும், தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டுக்களுக்கு நன்றி கூற வார்த் தைகளே இல்லை, மிகவும் நன்றி என்று உணர்ச்சிவயமாக பேசினார். அவரது ஆங்கில உரையை முனைவர். வா.நேரு தமிழில் மொழி பெயர்த்து கூறினார். இறுதியாக வழக்கறிஞர் நா.கணே சன் நன்றி கூறினார். விழாவில் , மதுரை புறநகர் மாவட்ட தலைவர் பவுன்ராசா, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அ.வேல் முருகன், மதுரை மாவட்ட தி.க. தலைவர் சே.முனியசாமி,மதுரை புற நகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மன்னர் மன்னன்,  மதுரை மாவட்ட தி.க செயலாளர் க.அழகர், மதுரை மாவட்ட தி.க துணைத் தலைவர் திருப்பதி,நா.முருகேசன் , காளியப்பன், இளைஞரணி தோழர் கள் பேக்கரி கண்ணன், வேல்துரை, மகளிர் அணித் தோழியர்கள் இராக்கு தங்கம்,நே.சொர்ணம் ,சுசிலா வேல் முருகன், நாகலட்சுமி,  போட்டோ இராதா, இரா.சடகோபன், மு.கனி., மோதிலால்,  ஆட்டோ செல்வம், மாரி முத்து,  மற்றும் கழகத் தோழர்களும் பகுத்தறிவாளர்களும் கலந்து கொண் டனர். நிறைவான நிகழ்ச்சியாக இருந்தது.