Friday, 2 January 2015

நிகழ்வும் நினைப்பும் (28) மூடத்தனத்தின் முடை நாற்றம் : போலி பெண் சாமியார் பேச்சைக் கேட்டு பெற்ற தாயைக் கொடூரமாகக் கொன்ற சகோதரர்கள்

நிகழ்வும் நினைப்பும் (28) மூடத்தனத்தின் முடை நாற்றம் : 

                    படித்தவர்கள் மத்தியில் பரவிக்கிடக்கும் மூடத்தனத்தையே ஒழிக்க முடியவில்லை; படிக்காத -அறியாமையில் கிடக்கும் இந்திய மனிதர்களை எப்படி மாற்றுவது என்று யாருக்கும் தெரியவில்லை. பில்லி, சூனியம் மந்திரம் செய்ய என்னை நாடுங்கள், எனது செல்போனில் கூப்பிடுங்கள் என்று அரசு பேருந்தில் விளம்பரம் செய்கின்றார்கள். கடவுள் இல்லை, கடவுள் இல்லை , கடவுள் இல்லவே இல்லை என நாம் விளம்பரம் செய்கிறோம் என்று எழுதிக்கொடுத்தால் பேருந்தில் போடுவார்களா என்ன ? சாமியார்கள், மந்திரவாதிகள் என்று தங்களைத்தாங்களே சொல்லிக்கொள்பவர்களின் மூடத்தனமான பேச்சுக்களைக் கேட்டு ,தங்கள் மூளையைக் கழட்டிவைத்து அஞ்ஞானத்தில் ஆழும் மனிதர்களை என்ன செய்வது ? நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு செய்தி தமிழ் இந்து நாளிதழில் வந்துள்ளது. படித்துப்பாருங்கள். சோதிடன் சொன்னதைக் கேட்டு பெற்ற பிள்ளையைக் கொல்பவர்கள், சாமியார் சொன்னாள்.  என்று தாயைக் கொல்பவர்கள் என்னும் செய்திகளோடுதான் சொர்க்கவாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி என்னும் செய்திகளும் வருகின்றன. இரண்டுக்கும் ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லை; பொய்யை நம்பி மூடத்தனத்தில் மூழ்கும் கொடுமைதான் .இது ஆரம்பம், அது உச்சம். இனி செய்தி :

போலி பெண் சாமியார் பேச்சைக் கேட்டு பெற்ற தாயைக் கொடூரமாகக் கொன்ற சகோதரர்கள்: மகாராஷ்டிராவில் பயங்கரம்

"உங்கள் பணக்கஷ்டம் தீர வேண்டுமென்றால் பலிகொடுப்பது அவசியம் என்று பெண் மந்திரவாதி கூறியதால் பெற்ற தாயையும், இரு சகோதரர்கள் கொன்றனர்."

அக்டோபர் 30-31 தேதிகளுக்கு இடையிலான நள்ளிரவில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஆனால், பலியிடப்பட்ட இரண்டு பேர்களின் உடல்கள் திரம்பகேஸ்வரில் உள்ள தேகிஹார்ஷ் என்ற கிராமத்தில் கிடைத்ததையடுத்து துப்பு துலக்கப்பட்டு இந்தச் செய்தி இரண்டு சகோதரர்களை கைது செய்த பிறகே வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட தாயாரின் பெயர் புதாபய் டோரி (65), இவரது உறவினர் காஷிபாய் வீர் (வயது 80).

இந்த பயங்கரக் கொலைகள் தொடர்பாக போலீஸார் தாயைக் கொலை செய்த 2 சகோதரர்கள் உட்பட 10 பேரை கைது செய்து, பல்வேறு கிரிமினல் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி போலீஸ் தரப்பு கூறுவதாவது: காசிநாத், கோவிந்த் டோரி என்கிற 2 சகோதரர்கள் பொருளாதார அளவில் கஷ்டமான காலத்தில் இருந்துள்ளனர். இதனையடுத்து யார் யார் பேச்சையோ கேட்டு பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கே என்பவரைச் சென்று சந்தித்துள்ளனர். தங்களது குடும்ப உறுப்பினர்கள் விவரம் உட்பட அனைத்தையும் அந்த பெண் மந்திரவாதியிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த மந்திரவாதி உடனே, சகோதரர்களின் தாயார் புதாபாய் டோரி மற்றும் அவரது சகோதரி ஆகியோரிடையே தீயசக்திகள் உள்ளன. அத்தீய சக்திகளை ஒழித்தால் மட்டுமே உங்கள் கஷ்டம் நீங்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்த சகோதரர்கள் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.

“பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கேயின் அறிவுரையின் படி சகோதரர்கள் தன் தாயார் புதாபாய் டோரியையும் அவரது சகோதரி ராஹிபாய் பிங்ளி என்பவரையும் அழைத்து வந்தனர். 80 வயது உறவினர் காஷிபாய் வீர் என்பவரும் உடனிருந்துள்ளார். பூஜை செய்வதான பாவனையுடன் தொடங்கியது பரிகாரம். 

திடீரென அந்தப் பெண் மந்திரவாதி சகோதரர்களின் தாயார் புதாபாயையும், 80 வயது காஷிபாய் மற்றும் ராஹிபாய் பிங்ளி ஆகியோரை தாறுமாறாக அடித்து நொறுக்கத் தொடங்கினர். இதில் 65 வயது தாயார் புதாபாய் மற்றும் 80 வயது காஷிபாயும் கொலை செய்யப்பட, ரிஷிபாய் பிங்கிள் எப்படியோ அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்”என்று நாசிக் ஊரகக் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் மோஹித் கூறினார்.

கொலை செய்ததோடு புதாபாயின் கண்களையும் எடுத்துள்ளார் பெண் மந்திரவாதி. நவம்பர் 1ஆம் தேதி தாயார் மற்றும் காஷிபாய் உடல்களை சகோதரர்கள் கிராமத்தில் இருந்த வயல் ஒன்றில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். ....

ந்ன்றி : தி இந்து -தமிழ் - 31.12.2014 

2 comments:

Alagiri Samy said...

மூடநம்பிக்கையால் விளைந்த விபரீதம்

முனைவர். வா.நேரு said...

அய்யா, நன்றி , வலைத்தளத்திற்கு வருகைக்கும் கருத்திற்கும்.