Thursday, 22 January 2015

நிகழ்வும் நினைப்பும் 30 : இயக்க நிகழ்விற்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் -அண்ணன் சி.மனோகரன்

நிகழ்வும் நினைப்பும் 30 : இயக்க நிகழ்விற்கு  கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் -அண்ணன் சி.மனோகரன்

நெல்லை மண்டல திராவிடர் கழகத்தலைவர், முன்னாள் தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் அண்ணன் சி.மனோகரன் அவர்கள் மறைவுற்றார் என்னும் செய்தி 09.01.2014 இரவு 9 மணியளவில் தோழர் ஈரோடு அவர்கள் மூலமாக கேட்டபோது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அண்ணே, கடையில்தான் இரவு 7 மணிவரை இருந்தார். பின்பு வீட்டிற்குச்சென்றார். வீட்டிற்குச்சென்றவுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அப்பாவும்( அய்யா தே.எடிசன்ராசா) அண்ணன் செல்வமும் (திராவிடர் கழக மாநில அமைப்புச்செயலாளர் ) சென்றார்கள். சென்று அடைவதற்குள் உயிர் பிரிந்துவிட்டது என்றார். மனோகரன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திராவிடர் கழகத்தலைவர் அய்யா சிவனைந்தபெருமாள அவர்களின் மகன். சுயமரியாதைக்காரரின் மகனானக்ப்பிறந்து இறுதிமூச்சுவரை சுயமரியாதைக்காரராக வாழ்ந்து மறைந்திருக்கின்றார். அவர் மறைந்தவுடன் , சிலர் வந்து அவரின் இறுதிச்சடங்கிற்கு எப்படி ஏற்பாடு செய்வது என்று கேட்டவுடன் அவரது துணைவியார் பேராசிரியர் கஸ்தூரிபாய் மனோகரன் அவர்கள் , பெரியாரியல் முறைப்படிதான் இறுதி நிகழ்வுகள் நடக்கும் என்பதைச்சொன்னதோடு மட்டுமல்லாது, எங்கள் மாமனார் காலத்திலிருந்து எங்கள் வீட்டு நிகழ்வுகள் எல்லாம் எந்தவிதமான சடங்குகளும் இல்லாமல்தான் நடக்கும் என்பதனை மிகத்தெளிவாகவும் இயல்பாகவும் சொன்னார்கள் என்பது பெருமைக்குரியது.
தன்னுடைய வாழ்வை ஒரு தொண்டற வாழ்வாக அமைத்துக்கொண்டவர் அண்ணன் சி.மனோகரன் அவர்கள். அவரோடு நெருங்கிப்பழகிய  அய்யா சே.முனியசாமி (மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் )  இறுதி நிகழ்வில் உரையாற்றியபோது பல நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாகத்தான் அவரோடு நான் பழகினேன். முழுவதுமாக என்னை வ்சீகரித்துக்கொண்டார், அவரின் பழகும்தன்மையும் நகைச்சுவை உணர்வும் , எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கும் எவருக்கும் வாய்க்காது.எனது உயிரைப்போன்று ஒப்பற்ற நண்பராக விளங்கினார் என்றார்.எதற்கும் கலங்காத அவர் கண்ணீர் விட்டு அழுதார். அண்ணன் தே.எடிசன்ராசா அவர்கள், என் தந்தை பே,தேவசகாயமும், அண்ணன் ம்னோகரன் அவர்களின் தந்தை சிவனைந்தபெருமாளும் ஒன்றாக இயக்கப்பணியாற்றியவர்கள். நானும் அவரும் ஒன்றாகப் பணியாற்றினோம். அண்ணன் ம்னோகரன் அவர்கள் தலைமுறை இடைவெளி இல்லாமல் பழகக்கூடியவர் . என்னோடு பழகுவது போலவே எனது மகன்கள் ஈரோட்டுப்பெரியார், செல்வப்பெரியாரிடமும் பழகக்கூடியவர். ஒரு அருமையான இயக்கத்தவரை, குடும்ப நண்பரை இழந்தோம் என்றார். தூத்துக்குடி, திரு நெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டக் கழகப்பொறுப்பாளர்கள் அனைவரும் கண்ணில் நீர் மல்க இரங்கலுரை ஆற்றி அண்ணன் மனோகரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

               அண்ணன் சி.மனோகரன் அவர்களின் கண்கள் மதுரையில், மதுரையில் உள்ள அரவிந்த கண் மருத்துவமனைக்குத்  தானமாக வழங்கப்பட்டன.அவரது உடல் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் தானமாக வழங்கப்பட்டது. திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் வீ.அன்புராஜ் அவர்கள் , உடலைத் தானமாக வழங்கும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கலுரை ஆற்றினார். அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இரங்கலுரையை வாசித்தும், தன்னுடைய வீர வணக்கத்தைச்செலுத்தியும் , தூத்துக்குடியில் அய்யா பெரியார் சிலை அமைவதற்கும் , படிப்பகம் அமைவதற்கும் அவரின் பங்களிப்பை, கொடையுள்ளத்தை நினைவு கூர்ந்தும் உரை நிகழ்த்தினார்.

                           முதலில் அவர்கள் குடும்பத்தில் , அண்ணன் சி.மனோகரன் அவர்களின் தம்பி பேராசிரியர் சி.மகேந்திரன் அவர்களைத்தான் நான் அறிவேன். பேரா.சி.மகேந்திரன் அவர்களின் துணைவியார் திருமதி வெண்ணிலா அவர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதல்பரிசு பெற்றவர். அவரின் திருமணத்தின் மூலம் சி.மகேந்திரன், பின்பு அவரின் மூலம் அண்ணன் சி.மனோகரன் அவர்கள் பழக்கம். ஆனால் பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே அவரின் வெள்ளை உள்ளமும், நகைச்சுவை உணர்வும், இயக்க நிகழ்வுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்னும் உந்துதலும் மிக நெருக்கமாக ஆக்கியது. அடிக்கடி மதுரை தல்லாகுளம் வருவார். ஏதேனும் ஒரு இடத்தில் ஒரு டீயைக் குடிப்போம். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மய்யத்திற்குச்செல்வோம். லேட்டஸ்டாக வந்த லேப்டாப் , ஆண்டிராய்டு எனக்கையில் வைத்திருப்பார். மைக்ரோ சிம், நானோ சிம் என செல்லில் போடுவார். எங்கு சென்றாலும் இண்டர் நெட் பயன்படுத்துவார். எனது மெயிலுக்கு விடாமல் ஏதேனும் தகவலகள், உலக அதிசயங்கள், மருத்துவக்குறிப்புகள் என அனுப்பிக்கொண்டே இருப்பார்.கடந்த முறை குடும்பத்தோடு குற்றாலம் சென்ற நேரத்தில் அவரின் உதவி மறக்க முடியாதது.

                     வெளியூர் செல்வது, மற்றும் இயக்க நிகழ்ச்சிகளுக்கு குறித்த நேரத்தில் சரியாக வந்துவிடுவார். அவர் வருகிறார் என்றாலே தாமதமாக வரும் ஆட்கள்கூட சரியான நேரத்திற்கு வந்து விடுவார்கள். கடந்த மாதம் சேலம் பொதுக்குழுவுக்குச்சென்ற போது, காலை 6 மணியிலிருந்து நாகமலைப்புதுக்கோட்டையில் வீட்டிற்குவெளியே நின்றிருக்கிறார், நாங்கள் சென்றது 6.30க்கு. அரைமணி நேரமாக வாசலிலேயே நிற்கிறேன் என்றார். ஏன் வந்தவுடன் வீட்டிற்குள்ளிருந்து வரலாமே என்றால் , என்னால் லேட் ஆகக்கூடாது என்றார். அதே போல் வெளியூர் செல்லும்போது பேச ஆரம்பித்தால் பட்டாசு வெடித்ததுபோல நாம் சிரித்துக்கொண்டே போகலாம். அவ்வளவு நகைச்சுவை இருக்கும் அவரது பேச்சில். பணத்தை எப்போதும் பெரிதாக் நினைக்க மாட்டார். ஆனால் எப்போதும் கணக்கு வழக்கு சரியாக் இருக்கவேண்டும் என நினைப்பார். பெரியாரியல் அடிப்படையில் சிலரோடு வாதிட்ட வாதங்களை விவரிப்பார். மிகவும் ஆர்வமாக இருக்கும். ஆறாவது படிக்கும்போது தந்தை பெரியார் அவர்கள் தூத்துக்குடியில் விடுதியில் தங்கியிருந்தபோது வாயிற்காப்பாளராக நின்ற கதையைக் கூறுவார். எல்லோருக்கும் உதவுவார். இயக்க நிகழ்வுகளுக்கு கொடுப்பதற்கு யோசிக்க மாட்டார். தாராளமாக தருவார். உடன் பிறந்தவர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார். இயக்க தோழர்களுக்கு மிகப்பெரிய தோழராக வாழ்ந்திருக்கிறார். தான் மறைந்த பின்பும் தனது கண்களையும், உடலையும் தானமாக வழங்கி பெரியாரியல் அடிப்படையில் வாழ்ந்ததுபோலவே மறையவும் செய்திருக்கிறார். இறக்கும்போது கூட ஏதாவது நகைச்சுவையாக கூற வேண்டும் என நினைத்திருப்பார் போலும். மலர்ந்த முகமாய் உடல் இருந்தது. இருப்பவர் எல்லாம் ஒரு நாள் இறப்பது உறுதி. ஆனால் இருந்தபோதும், இறந்தபோதும் மற்றவர்களின் நலனை முன்னிறுத்திய, இயக்க நிகழ்வுகளுக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் அண்ணன் சி.மனோகரன் அவர்களின் புகழ என்றும் நிலைத்து நிற்கும். வாழ்க அவரின் தொண்டறம்.  

6 comments:

தமிழ் ஓவியா said...

அய்யா வின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். அய்யாவைப் பற்றி மிக அருமையாக விவரித்துள்ளீர்கள். அய்யாவுக்கு வீரவணக்கம்

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா, நிறைய எழுதப்பட வேண்டியவர் அவர்.

Senthil Krishnasamy said...

// இயக்க நிகழ்வுகளுக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் அண்ணன் சி.மனோகரன் அவர்களின் புகழ என்றும் நிலைத்து நிற்கும். வாழ்க அவரின் தொண்டறம்... // என்றும் ஏந்துவோம் அவர் உயர் எண்ணங்களை...!

முனைவர். வா.நேரு said...

ஆமாம் செந்தில் . தந்தை பெரியாரின் உயர் எண்ணங்களை பரப்பிய, உயர் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் சொந்தக்காரர் அண்ணன் சி.மனோகரன் அவர்கள்.

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா யாழ்பாவாணன் அவர்களே !