Sunday, 15 February 2015

அண்மையில் படித்த புத்தகம் :' மஞ்சத்தண்ணி ' சிறுகதைத் தொகுப்பு-உரப்புளி நா.ஜெயராமன்.

அண்மையில் படித்த புத்தகம் :'  மஞ்சத்தண்ணி ' சிறுகதைத் தொகுப்பு .
ஆசிரியர் உரப்புளி நா.ஜெயராமன்,....9486101986
பதிப்பகம் : அட்சயா பதிப்பகம், பரமக்குடி.
வெளியிடப்பட்ட ஆண்டு மார்ச். 2014.
மொத்த பக்கங்கள்                           :   128 விலை  ரூபாய் 70
                                                  இத்தொகுப்பின் ஆசிரியர் திரு உரப்புளி நா.ஜெயராமன் தொலைபேசித்துறையில் 1971-சேர்ந்து, 2012-ல் பரமக்குடியில் சப்-டிவிசனல் என்ஜீனியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். 1971-முதல் 2011 வரை ஒரு நாற்பதாண்டு காலத்தில் அவர் எழுதிய கதைகளுள் பதினொன்றைத் தேர்ந்தெடுத்து இத்தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
"கதை சொல்வதும் , கதை கேட்பதும் மனித குலத்தின் இயல்பு. தத்தம் காலத்திற்கேற்பக் கதை சொல்வதும், கேட்பதும் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். நண்பர் திரு. நா.ஜெயராமன் சமுதாயத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளை எழுதுவதிலும் , சமுதாயம் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் காட்டி விழிப்பூட்டுவதிலும் , தீர்வுகளைக் காட்ட முயற்சிப்பதிலும் முற்பட்டிருப்பதை இச்சிறுகதைத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது" என அணிந்துரையில் முனைவர் மு.அருணகிரி குறிப்பிட்டுள்ளார்.

" வாழ்வு எப்போதும் புதிரும் , புன்னகையும் நிரம்பியதாகவே இருக்கிறது. புதிர்களின் வழி விழுகிற முடிச்சுக்களின் அதிர்வுகளும், புன்னகையின் ஊடே மிளிர்கிற சந்தோஷங்களுமாய் நம்மைக் கைப்பிடித்திருக்கிற வாழ்வை, படைப்புக்களின் வழியாக தரிசிக்கக் கிடைக்கிற தருணங்கள் எல்லாம் மகத்துவமிக்கதாக மாறி விடுகின்றன. உரப்புளி நா. ஜெயராமன் அவர்களின் இத்தொகுப்புக் கதைகளைப் படிக்க நேர்ந்த தருணமும் , எனக்கு அவ்வாறகத்தான் அமைந்தது " , " தினமும் மக்களைச்சந்திக்கும் தொலைபேசித்துறையில் பணியாற்றியவர் என்பதால் , எழுதுவதற்கான விஷயங்களை யதார்த்த வாழ்விலிருந்தே எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனாலேயே மனித இயல்புகள் பலவற்றைக் கூர்மையாக வெளிப்படுத்தும் நுட்பம் செறிந்த அழுத்தமான சிறுகதைகள் , அவரிலிருந்தே வெளிப்பட்டிருக்கின்றன. சமூக மாற்றத்திற்கான கனவுகளுக்கும், யதார்த்தத்திற்குமான பெரும் இடைவெளியை இட்டு நிரப்ப முய்ற்சித்தபடியே இருக்கிறது சமூக மேன்மைக்கு விழையும் அவரது மனம் "  என எழுத்தாளர் பா.உஷாராணி தன்னுடைய அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

                 சிறுகதை என்பது ஒரு நிகழ்வை எடுத்துக்கொண்டு , அந்த நிகழ்வை விரிவாகவும்,வாசகர் மனதில் பதியும்படியாகவும் சொல்லும் எழுத்துக்கலையாகும் .   . இந்தச்சிறுகதைத்தொகுப்பின் தலைப்பாக அமைந்துள்ள ' மஞ்சத்தண்ணி ' , இத்தொகுப்பின் முதல்கதையாக அமைந்துள்ளது. ஆசை, ஆசையாய் ஆட்டுக்குட்டியை வளர்க்கும் சரசு, ஆட்டுக்குட்டிக்கு ராசுக்குட்டி எனப்பெயர் சூட்டி , அழைத்து அழைத்து விளையாடி மகிழும் சரசு எனச் சிறுமி சரசுவுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் உள்ள பாசப்பிணைப்பை சித்திரம் போல வாசகர்கள் மனதில் தீட்டுகின்றார் இக்கதையாசிரியர். குலசாமி கோயிலில் ஆட்டை வெட்டப்போகிறார்கள் என்று அறிந்து கொண்ட சரசு, ஆடு தண்ணீர் தெளித்தவுடன் சிலிர்க்கவில்லையென்றால், வெட்ட மாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, ஆட்டின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் தண்ணீர் தெளித்து , பழக்கப்படுத்தி, ஆட்டை வெட்டக்கொண்டுபோகும் நாளில் ஆடு வெட்டப்படாமல் தப்பிக்க வழி செய்கின்றாள். ஆடு வெட்டமிடுத்திற்கு கொண்டுசெல்லப்பட்டவுடன் மயக்கமடையும் சரசு, ஆடு உயிரோடு வந்து தன்னை வந்து தொட்டவுடன் கண் திறக்கிறாள், உயிர் பிழைக்கிறாள். கிராமத்துப்பழக்க வழக்கங்கள், ஆடு வெட்டப்படும் முறை, கெடாய் வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்வு போன்றவற்றை கண் முன்னே நிறுத்தும் அருமையான கதையாக இக்கதை உள்ளது எனலாம்.

                  உழைக்கும் தொழிலாளி சிலம்பனுக்கு தண்ணீர் கொடுத்தால் தீட்டாகிவிடும் என்று சொல்லும் தெய்வானை அம்மாள் பற்றியும் , காக்கைக்கு உணவிடும் அவர் மனிதனுக்கு உணவு தேவை,தண்ணீர் தேவை என்பதைப் பற்றி உணராததைக் கூறும் ' மகனுக்குத் தெரிந்தது ...' என்னும் கதை மனதில் நிற்கிறது.  கிராமத்தில் டெலிபோன் இல்லாததால் அந்த ஊர் மக்கள் படும் வேதனை, கிராமத்தில் டெலிபோன் வைப்பதற்க்காக தெருத்தெருவாக வாடகை வீடு கேட்டு அலையும் தங்கச்சாமி, டெலிபோன் எக்சேஞ் தனது கிராமத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தனது பூர்விக வீட்டையே வாடகைக்கு கொடுக்கும்  தங்கச்சாமி, பூர்வீக வீட்டைக் கொடுத்ததால் வருடம் ஒருமுறை சாமி கும்பிட வரும் தனது தம்பிகள், தம்பி மனைவிகளிடம் வசவு வாங்கும் தங்கச்சாமி, அதனால் ஏற்படும் மோதலில் தலையில் காயப்பட்டு மயக்கமாகும் தங்கச்சாமி என தங்கச்சாமி எனும் கதாபாத்திரத்தின் மேன்மைக்குணங்களால் பின்னப்பட்டிருக்கும் ' சாமி வீடு ' என்னும் கதை , பொது நன்மைக்காகத் தன் நலத்தை விட்டுக்கொடும் மனிதர்கள் , உறவுகளிடம் ஏற்கும் ஏச்சுக்களை கோடிட்டுக்காட்டுகிறது. " நீங்க குலதெய்வம் கும்பிடுறதன்னு ஒரு முறை அவர் வீட்டுக்கு வர்றீங்க. நாங்க எல்லாரும் அவரைத்தான் குலதெய்வம்னு வருஷம்பூரா கொண்டாடுறோம். இந்த ஆண்டியூரு, ஒளியூரு, இருமுடிச்சாத்தான், குயவசேரி, கீரைக்கொல்லை, அய்யனேந்தல் இந்தக் கிராமமெல்லாம் இப்ப நல்லா இருக்குன்னா இவருதான் காரணம். இவரு டெலிபோன் எக்சேஞ் வைக்க இடம் கொடுத்ததாலே ஐம்பதே நாளில் நம்மளுடைய அத்தனை ஊருக்கும் டெலிபோன் கிடைச்சிடுச்சு. ஆண்டியூரிலே கள்ளச்சாராயம் வித்தவனுக தொழிலை விட்டுவிட்டு ,எஸ் டி டி , பி.சி.ஓ வச்சு நல்லாப் புழைச்சுக்கிட்டானுங்க. எங்க ஒளியூரிலே வருஷத்துக்கு ஒரு உசிராவது பிரவசத்திலே போயிரும். இப்ப ஒரு போன்ல ஊருக்கு டாக்ஸி வந்துருது. ஒளியூரிலே இண்டர்நெட் மூலமா புருஷனுங்க, பெண்டாட்டிகளோடு தினமும் பேசிக்கிறானுங்க. தவிப்பு இல்லை. அழுகை இல்லை ... " என்று எழுத்தாளர் அடுக்கும் காரணங்கள் கதையோடு ஒட்டி அதே நேரத்தில் தொலைத்தொடர்பு வசதிகளால் கிராமங்களில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசைப்படுத்துவது அருமை.

                   " ஆயி ...பொட்டி வாங்கலியோ ..ஆயி ! " என்று ஆரம்பிக்கும் பசிக்கொடுமை சிறுகதை , படித்து முடித்தபின்னும் மனதை விட்டு அகலாத கதையாக இருக்கிறது. ' அந்த ஒரு சேலையில் தன் பெண்மையைப் பூரா மறைக்க வேண்டும். தன் பிள்ளைக்கும் அதே சேலைக்குள் ஒரு தொட்டில் கட்டிக்கொள்ள வேண்டும். ரவிக்கை செய்யும் பணியையும் அந்த்ச்சேலை செய்ய வேண்டும். குழ்ந்தையை முதுகில் ஒரு விதத் தூளிவைத்துச் சுமந்துவரும் ஜப்பானியப்பெண்களின் பழக்கத்தை , அவள் நினைவுபடுத்துகிறாள். " என்று பக்கம் 73-ல் அந்த நார்ப்பெட்டி விற்கும் பெண்ணின் தோற்றத்தையும் , ஏழ்மையையும் , பசிக்கொடுமையையும் விவரிக்கும் நிகழ்வுகள் ஒரு கைதேர்ந்த புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்களின் எழுத்துக்களை நினைவுபடுத்துகின்றன. வசதியான வீடுகளுக்கு மத்தியில் கூவிக் கூவி நிற்கும் அவளது கோலத்தை, 4 ரூபா பெறுமானமுள்ள பெட்டியை எட்டணாவிற்கு கேட்கும் பெண்ணின் பணக்காரத்தனத் தோரணையை " பத்துப்படிப் பொட்டியை வச்சுக்கிட்டு இந்தத் தெருப்பூரா அலைஞ்சாலும் எவளும் பத்துப்பிடி போட்டுக்கூட வாங்க மாட்டா. என்னமோ...ஒன்னைக்கூப்பிட்டதும் ஒன் நிலையைப்பார்த்து பரிதாபம். முடிவாச்சொல்றேன். நீ வச்சிருக்கிற அலுமனியச்சட்டி நிறையப் பழசு போடுறேன். ஆணம் ஊத்துறேன். காசு எட்டணா கையிலே வச்சுக்க " என்று விவரிக்கின்றார். பேரம் பேசும் பெண்ணிடம் , அழும் குழ்ந்தையின் பசி பொருட்டு ஒத்துக்கொள்ளும் அவளிடம் உழைப்பாளி " உழைக்கிறவனகளுக்குத்தானே உழைக்கிற பொருள் அருமை தெரியும் . என் கிட்டே கொடுத்திருந்தா நாலு ரூபாயும் கம்மங்கஞ்சியும் கொடுத்திருப்பேன் " என்று சொல்ல, சேரித்தெருவுக்கு போக ஆசைப்பட்டாலும் பெண்ணிடம் ஒத்துக்கொண்டதற்காக காத்து நிற்க, தட்டுத் தடுமாறி கீழே விழுந்த அந்த வய்தான பெண், சகுனம் என்று திட்ட , நாலு ரூபாய்க்கு பெட்டியை வாங்கிக்கிறேன் என்று சொன்ன பெரியவரின் வீடு நோக்கி போவதாக இந்த பசிக்கொடுமை கதை முடிகிறது. பசிக் கொடுமையை அனுபவித்தவர்களுக்குத்தான் பசியின் கொடுமை புரியுமென்பது மிக அழுத்தம் திருத்துமாக இந்தச்சிறுகதையின் மூலமாக  ஆசிரியரால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

                 மணல் அள்ளும் குவாரிகள் , அதற்கு துணை போகும் அரசியல்வாதிகளைப்பற்றிப் பேசுகிற , ஒரு நல்ல காரியத்திற்காகப் போராடுகிற மருதமுத்து வாத்தியாரைப் பற்றிப் பேசுகிற ' விடியுமா ' என்னும் கதை எதார்த்தமாகவும், வரப்போகிற ஆபத்துக்களை மக்களுக்கு எடுத்துச்சுட்டுவதாகவும் இருக்கிறது. சுற்றுச்சூழல் கருத்துக்கள் நிறைந்த,'நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள் நிறைந்த பெருங்காடாக்க ' என்று புரட்சிக்கவிஞர் சொன்னதைபோல இயற்கை எழில்கள் எல்லாம் ,சில சுய நலம் பிடித்த மனிதர்களால் அழிக்கப்படும் அவலம் பற்றிச்சொல்லும் கதையாக  இந்த 'விடியுமா ? ' என்னும் கதை இருக்கிறது. " எங்க கிராமத்தருகே குவாரி வந்து என்னென்ன ஆச்சு தெரியுமா ? ஆத்துக் கரைக்கு கொஞ்சம் தள்ளி , கெட்டியாய்க் கட்டிய களம் பாளம் பாளமா தகர்ந்துருச்சு. காசுக்கு ஆசைப்பட்ட பயலுக, தங்களோட கடலை விளையுற வண்டல் காட்டு மணலை அள்ளச்சொல்லி காசாக்க, ஆறு அகண்டு போச்சு. பேச்சுக்கு ஒரு மீட்டர் ஆழந்தான் மணல் அள்ளுறம்ன்னு சொல்லிட்டு, கடைசியா களிமண் தெரியிற அளவுக்குத் தோண்ட கழுங்கு தாழ்ந்து போச்சு. செருப்புக்குக் காலை வெட்டினமாதிரி நல்லா இருந்த கழுங்கை வெட்டிக் குறைச்சாங்க. ஆத்துலே தண்ணி வந்து கால்வாயிலே பாஞ்சு , கம்மாய் நெறையணும். இவுங்க பண்ணுன கூத்துக்கு , கம்மாய் நெறைஞ்சாத்தான் , தண்ணி ஆத்துலே பாயும் போலிருக்கு " என்று கிராமத்து மொழியாடும், கிராமத்து மண் சார்ந்த வர்ணனைகளோடும் தொடரும் சிறுகதை நல்ல ஒரு விழிப்புணர்வுக் கதை எனலாம்

                        முழுக்க தொலைபேசி நிலையங்கள், அதில் உள்ள பல்வேறு டவர்கள், டவர்களின் வகைகள், ஆண்டெனாக்கள் என ஆங்கிலச்சொற்கள் பல கலந்த் கதையாக 'கால் முளைக்கும் மனசு ' என்னும் கதை உள்ளது. ஜீனியர் டெலிகாம் ஆபிசர், அருமை நாயகம், சப் டிவிசனல் இன்ஜீனியர் செண்பகராமன், டிவிசனல் இன்ஜீனியர் ராஜதுரை அவர்களின் செயல்பாடுகள், கிராமப்புறங்களில் இருக்கும் சாதிப்பிரச்சனைகள்,சாதி சார்ந்த இளைஞர்களின் முரண்பாடுகள், செயல்பாடுகள், யாரும் முன்வராத நேரத்தில் முன் வந்து பொதுத் தொலைபேசிக்கு பொறுப்பேற்கும் மாற்றுத்திறனாளி தங்கராசு என விரிகிறது இக்கதை. வில் போன் தொழில் நுட்பம் பற்றியெல்லாம் விவரிக்கும் இக்கதை ' இந்தப்பொதுத் தொலைபேசியை பொறுப்பா வச்சு நடத்துறவங்களுக்கு வசூலாகிற பில் தொகையிலிருந்து கமிசன் தர்றோம். இந்தப்போனிலிருந்து உங்க பயிருக்கு என்ன மருந்தடிக்கணுங்கிறதைப் பத்தி கேக்கலாம். ...பத்து வைக்கோல் படப்பு எறிஞ்சு சாம்பாலாகிக் கிடக்கிறதையும் வழியிலே பார்த்தேன். தீயணைப்பு நிலையத்துக்குப் போன் செய்தோம்னா இவ்வளவு சேதம் ஆகியிருக்காது " என்று பொதுத்தோலைபேசியைக் கிராமத்தில் எப்படி எப்படி எல்லாம் நன்மையாக பயன்படுத்தலாம் என்று பட்டியலே சிறுகதையின் வாயிலாக இந்த நூலாசிரியர் ந.ஜெயராமன் கொடுத்திருக்கின்றார்

                      தன்னுள் மிக அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்திய கதை என பா.உஷாராணியால் சுட்டப்படும் 'காறிச்சாமியும் வேயன்னாவும் ' என்னும் கதை இன்றைய எதார்த்தம். காலி இடத்தை பிளாட்டுகளாகப்போட்டு விட்டு, பிளாட்டின் அனுமதிக்காக காட்டப்பட்ட கோவில் மற்றும் பூங்கா நிலத்தையும் விலைக்கு விற்றுவிடும் ரியல் எஸ்டேட் விற்பனையாளர் வேல்முருகன் என்னும் வேயண்ணாவின் பக்தி வேடம் கபடமானது என்பதனை மிகக் கவனமாகவும், கனமாகவும் படைத்திருக்கின்றார் இந்த சிறுகதையின் ஆசிரியர். பைத்தியம் போல இருக்கும் காறிச்சாமி , வேயண்ணாவின் வேடங்களை ஒவ்வொன்றாகப் பார்த்த்வந்து முடிவில் வெடிப்பதாகவும் முடியும் கதை. ரோட்டின் மேல் எழுப்பப்படும் கோயில் எப்படியெல்லாம் தான் விற்ற கோயில் இடத்தை மக்கள் மனதில் இருந்து மாற்றும் என்பதனை அறிந்து காய் நகர்த்தும் வேயண்ணாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மிக விவரமாக விவரிக்கின்றார். " அவனவன் மனசிலே கட்டணும்டா, மனசுதான் கோயில் கட்டுற இடம். அதுலே மட்டும் கட்டு .அப்புறம் பாரு. எந்த புல்டோசராவது இடிச்சுடுமா ? எந்தக் கடப்பாறையாவது இறங்கிடுமா ? போங்க, இனியாவது கட்டப்பாருங்க; அதோட இங்கு வாழும் மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்ய வேண்டியிருக்கு; அதுக்கு உங்க உழைப்பையும் , பணத்தையும் நேரத்தையும் பயன்படுத்துங்க " என்று சாமியார் காறிச்சாமி கூறுவதாகக் கதையை முடித்திருப்பது நல்ல உத்தி.  .

                             இத்தொகுப்பின் கடைசிக்கதையாக் 'மாலதிகள் பள்ளிக்குப்போவார்கள் ' என்னும் கதை உள்ளது. மூன்று பெண்களைப் பெற்ற அப்பா செல்லத்துரை,தொலைபேசித்துறையில் வேலைபார்ப்பதாகவும்,அவரது மூன்றாவது மகள் சாந்தி மாலதி என்னும் பெணணோடு படிப்பதாகவும், வயதுக்கு வந்துவிட்டால் என்று வீட்டில் தள்ளி வைத்து தலைக்கு ஊற்றிய மாலதியின் பெற்றோர் , வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாலதியை பள்ளிக்குப்போகவேண்டாம் என்று தடுப்பதாகவும்., செல்லத்துரை மாலதியின் அப்பா மாணிக்கத்தைச்சந்தித்து பேசி, தன்னுடைய மூத்த பெண்கள் எல்லாம் வேலைக்கு செல்வதையும் , பெண்ணை படிக்கவைத்து வேலைக்குப் போகச்சொல்ல வேண்டும், அப்படி பெண்கள் வேலைக்குச்சென்றால் அவர்களும் துன்பப்படமாட்டார்கள், பெற்றோர்களும் துன்பப்படமாட்டார்கள் என்று எடுத்துச்சொல்லி  மாலதியை பள்ளிக்கு அவரது அப்பாமூலம் அனுப்பி வைப்பதாகவும் அமைந்த கதை .இந்தக்கதையையும் நா.ஜெயராமன் மிக நன்றாகச்சொல்லியுள்ளார். " டெலிபோன் எக்சேஞ்சிலே வேலைக்குச்சேரும் பெண்களைப்பார்த்திருக்கிறேன். முதலில் வரும்போது உடையில் நடையில் சாதாரணமாகத் தெரிவார்கள். முதல் மாதச்சம்பளத்தில் உடை மாறும். இரண்டாவது மாதச்சம்பளத்தில் நடை மாறும். போகப்போக அவர்களின் உடை,நடை,பாவனை அனைத்திலும் உயர்ந்த நாகரிகம் மின்னி மின்னிப் பிரகாசிக்கும்.கற்ற கல்வியால் வந்த செருக்கு, கையில் கிடைக்கும் சம்பளத்தின் மாட்சி, தன் காலிலே நிற்கிறோம் என்ற துணிவு இவையனைத்தும் வர அவர்கள் முகத்திலே ஒரு பிரகாசம். ஒரு பெண்ணுக்கு இவை கிடைத்தாலே போதும். அதற்கடுத்துத்தான் வாழ்க்கை. அதுவும் அவர்களுக்கு எளிதில் கைகூடுவதைப்பார்க்கிறேன் " என்றார் செல்லத்துரை என்று பக்கம் 126-ல் வரும் கருத்துக்கள், தன்னுடைய அனுபவத்தில் இருந்து பெண்கல்வியின் தேவையை, பெண்கல்வியால் ஏற்படும் மாற்றத்தை இந்த்ச்சிறுகதையின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். 

                  இத்தொகுப்பில் உள்ள எல்லாச்சிறுகதைகளுமே எதார்த்தமாகவும், வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளுமாக இருப்பது சிறப்பு.பத்து நாட்களுக்குள் நான் நாற்பது கதைகள் ,சிறுகதைகள் எழுதிவிட்டேன் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் ,நாற்பதாண்டுகளில் நான் எழுதிய 11 கதைகள் என்று கதையாசிரியர் குறிப்பிடுகிறார். அதனாலோ என்னவோ ஒவ்வொரு கதையும் நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறது, ஆக்கிரமித்துக்கொள்கிறது. "யாரோடும் குரோதமில்லாமல், யாருடைய வெளியையும் சேதப்படுத்தாமல், யாருடைய செல்வத்தையும் பிறர் அபகரித்து விடாமல், வாழும் வாழ்க்கையொன்றே, எல்லா சமூகப் பிரச்சனைகளுக்குமான தீர்வாக இருக்கும் என்ற சிந்தனை, இத்தொகுப்புக் கதைகளை வாசித்து முடித்த்வுடன் எழுகிறது. உரப்புளி நா.ஜெயராமன் என்கிற படைப்பாளியின் விருப்பமும் அதுதானே "என்ற அணிந்துரை உண்மைதான் என்பதனை இத்தொகுப்பை வாசித்து முடித்தவுடன் உணரமுடிகிறது. நீங்களும் வாசித்துப்பார்க்கலாம்.
( மதுரை ,அகில இந்திய வானொலி, புத்தக விமர்சனத்திற்காக தயாரிக்கப்பட்டது)

3 comments:

முனைவர். வா.நேரு said...
This comment has been removed by the author.
Kanniah Deivendran said...

super brother continue.....

முனைவர். வா.நேரு said...

நன்றி அண்ணே, வருகைக்கும் கருத்திற்கும்