Friday, 27 February 2015

அண்மையில் படித்த புத்தகம் : மாப்பசான் சிறுகதைகள்-புலவர் சொ.ஞானசம்பந்தன்

அண்மையில் படித்த புத்தகம் : மாப்பசான் சிறுகதைகள்
மொழிபெயர்ப்பு ஆசிரியர்        : புலவர் சொ.ஞானசம்பந்தன்
வெளியீடு                                  : கமலகுகன் பதிப்பகம்,மேடவாக்கம், சென்னை -302. பேசி : 22530954
முதல் பதிப்பு                             : 2007 , 248 பக்கங்கள் , விலை ரூ 110
மதுரை மைய நூலக எண்       : 180152

                                                          உலகப்புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் மாப்பசான் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் அவருடைய சிறுகதைகள் நிறையப்படித்ததில்லை. 300 சிறுகதைகளுக்கு மேல் எழுதியிருக்கும் மாப்பசானின் சிறுகதைகளில் 25 சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து கொடுத்திருக்கின்றார்கள்.

                                             அச்சம் என்ற சிறுகதை முதல்கதை. ஒரு கொலையைச்செய்துவிட்டு பயந்து போயிருக்கும் ஒருவனின் குடும்பமே அச்சத்தில் உறையும் கதை. கடைசியில் நாயை ஆவி என நினைத்து சுட்டுக்கொல்லும் கதை. திகில் கதை போல உள்ளகதை. பிள்ளை(யின்) பாசம் என்னும் கதை , இரண்டு பிள்ளைகள் இரண்டு ஏழைக் குடும்பங்களில், ஒரு பணக்காரக்குடும்பம் முதல் குடும்பத்தில் வந்து தத்து கேட்க, முடியாது என்று திட்டி விரட்டிவிடுகின்றார்கள் பெற்றோர்கள். இரண்டாவது குடும்பத்தில் மாதம் மாதம் பணம் பெற்றுக்கொள்ள இசைவு தெரித்து பிள்ளையைத் தத்து கொடுத்து விடுகின்றார்கள். 25 வருடம் கழித்து, தத்து கொடுக்காமல் வளர்த்த மகன், தத்து கொடுத்த பக்கத்து வீட்டுப்பையனின் செல்வச்செழிப்பைப் பார்த்து, 'முட்டாள்களே ' என்று பெற்றோரைப் பார்த்து திட்டுவதாக வரும் கதை, பார்வை மாறுபடும் விதம் அருமை.

                        இரவல் வாங்கும் நகையால் ஏற்படும் துன்பம் பற்றிய கதையான ' நெக்லஸ் ' ஏகப்பட்ட பட்டிமன்றங்களில் கேட்ட கதை. ஆனால் இதன் ஒரிஜனல் உரிமையாளர் மாப்பசான் என்பது இப்போதுதான் தெரிகிறது. இரவல் நகையை வாங்கித் தொலைத்துவிட்டு, ஒரிஜினல் நகையை கடன்பட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு, 10 ஆண்டுகளாக உழைத்து கடனை அடைக்கும் நேரத்தில் இரவல் வாங்கிய நகை கவரிங் நகை என்று தெரிவதாக வருகின்றது . நல்ல வருணனை உள்ள கதையாக உள்ளது. அப்பா பெயர் தெரியாமல் , பலரிடம் இழிவுப்பேச்சு வாங்கும் சிமோனுக்கு, அப்பாவாக பிலிப்ரெமி என்பவர் கிடைப்பதைப் பற்றிக்கூறும் 'சிமோனின் அப்பா' கதை என்னவென்றே தெரியாமல் சிறுவயதில் இழிவு படும் சிமோனை விவரிக்கின்றது. உளரீதியாக சிமோன் படும் வேதனைகளை மிக நன்றாக விவரித்துள்ளார்.

                     பழைய பகையால் , அநியாயமாக திருடன் எனப் பழிசுமத்தப்படும் ஓஷ்கோர்னே என்னும் கதாபாத்திரம் , கடைசிவரை அந்தத் திருடன் என்னும் பழியைத் துடைக்கமுடியாமல் புலம்பியே சாகும் ' கயிறு ' என்னும் கதை , அப்படி நோய் வந்து விடுமோ இப்படி நோய் வந்து விடுமோ என்று பயந்து பயந்து சாகும் பனார் என்னும் கதாபாத்திரம் பற்றிச்சொல்லும் ' ஆரோக்க்கியப் பயணம் ' என்னும் கதை நல்ல கிண்டலும் கேலியும் கலந்த கதை. இன்றைக்கும் இக்கதை பொருந்தும். எச்சரிக்கை என்ற பெயரில் படாதபாடு படுத்தும் மனிதர்களைப் பற்றிய கதை.

                       குடும்பத்தை விட்டு வெகுதூரம் போன சித்தப்பா ழுய்ல் , பெரிய பணக்காரனாக ஊருக்கு வருவான் என்று நம்பிக்கொண்டிருந்த வேலையில் , பக்கத்து தீவுக்குப்போன இடத்தில் பிச்சைக்காரக் கோலத்தில் பார்த்துவிட்டு தன் தந்தையும் ,தாயும் சித்தப்பாவைத் தெரியாதவர்கள் போல வந்து விட பொருளை வாங்கிக்கொண்டு இனாமாகப் பணமும் சித்தப்பாவுக்கு கொடுத்துவிட்டு வரும் சிறுவனின் கதை. மனிதர்கள் பொருள் இல்லையென்றால் எவ்வளவு மதிப்பிழந்து போவார்கள் என்பதைச்சொல்லும் கதை.' சிற்றப்பா ழுய்ல் '. கஞ்சத்தனம் பிடித்த மனைவியிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் ஒரேயின் கதை சொல்லும் 'குடை ' கதை போன்றவை நல்ல நையாண்டி கதை.

                                      பாதிரியார்களின் பொய்மைகளைத் தோலுரிக்கும் ' நார்மாண்டிப் பாதிரியார்' , போர் வீரனின் அச்சத்தைச்சொல்லும் ' வால்ட்டரின் கனவு ', சாகக்கிடக்கும் தாய்க்கு துணையாக ஆளை அமர்த்தும் மகன், வேலைக்காரியாக வந்த பெண்ணும் மகனும் போடும் பொருளாதாரக்கணக்கு, பொருளாதாரக்கணக்குப்போட்டு 'பேய்' வேசம் போட்டு கிழவியைச்சாகவைக்கும் கதை சொல்லும் 'பேய் ' போன்ற கதைகள் இன்றைக்கும் கூடப்பொருந்தும்.

                            'சிறுமி ரோக்கு ' என்னும் கதை, ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று விட்ட ஊர்ப்பெரியவர், மேயர் தன்னுடைய பேச்சுத்திறனால் , நடிப்பால் அந்தக் கொலையை யார் செய்தார் என்பதே தெரியாமல் மறைத்துவிடுகின்றான். ஆனால் எல்லாம் முடிந்த பிறகு கொல்லும் அவனது மனச்சாட்சியால் பீதியடைந்து நித்தம் நித்தம் செத்துப்பிழைத்து, கடைசியில் தற்கொலை செய்து கொளவதாக வரும் கதை.

                               மன ரீதியாக ஏற்படும் அச்சம், உள்ளத்தில் ஏற்படும் குழப்பம், நடுக்கம் , இயலாமை, சாப்பாடு இல்லாமல் படும் பாடு, பசியை ஆற்ற திருடிக்கூட சாப்பிடும் கதாபாத்திரங்கள், பணக்காரர்கள் மற்றும் பாதிரியார்களின் வேடங்களை வெளிக்காட்டும் கதாபாத்திரங்கள் என இருக்கின்றன. ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கதைகள். அன்றைய சூழல், நம்பிக்கைகள்  போன்ற பலவற்றையும் தாண்டி இன்றைக்கும் படிக்கக்கூடிய கதைகளாக இருக்கின்றன. தமிழ் மொழிபெயர்ப்பும் நன்றாக உள்ளது. கதை ஓட்டம் எந்தவிதத்தடங்கலும் இல்லாமல், தமிழ் எழுத்தாளர் கதைபோலவே ஓடுவது  மொழிபெயர்ப்பாளர் புலவர் சொ.ஞானசம்பந்தன் அவர்களின் வெற்றி எனலாம். இந்தக் கதைகளைப் படித்தபிறகு, மாப்பசானை முழுவதுமாகப்படிக்கவேண்டும் என்ற ஆவல் பிறந்திருக்கிறது. பிரெஞ்சு மொழி தெரிந்தால், மூல மொழியிலேயே மாப்பசானை படிக்கலாமே என்ற எண்ணமும் பிறக்கின்றது.

6 comments:

குலவுசனப்பிரியன் said...

எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு மிகவும் பிடித்த கதாசிரியர் மாப்பசான். பிரெஞ்சு மொழியிலேயே படித்து புரிந்துகொள்வேன் என்பார். அவர் சொல்லியதால் சில கதைகளை ஆங்கிலத்தில் படித்தேன். இந்த தமிழ் மொழிபெயர்ப்பு அவரை மேலும் பலரிடம் சேர்க்கும். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்

முனைவர். வா.நேரு said...

அய்யா குலவுசனப்பிரியன் அவர்களே , நன்றி,வருகைக்கும் கருத்திற்கும். "தமிழ் பதிவர்களின் பதிவுகளை படிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவன்". மிக்க மகிழ்ச்சி, தொடரட்டும் தங்கள் பணி.

முனைவர். வா.நேரு said...

அய்யா,
நன்றி.

shivkumar T said...

வணக்கம் அய்யா இந்தப் புத்தகம் எனக்கு வேண்டும். நீங்கள் கொடுத்திருக்கும் எண்ணிற்கு அழைத்தேன். போகவில்லை. சரியான தகவல் தந்து உதவுங்கள். நன்றி.
லக்ஷ்மி சிவக்குமார்.
தஞ்சாவூர்

முனைவர். வா.நேரு said...
வணக்கம். நூலகத்தில் எடுத்த புத்தகம் அது.
தங்கள் ஊரின் நூலகத்தில் தேடிப்பாருங்கள். எனக்கும் அந்த எண் கிடைக்கவில்லை. தகவல் கிடைப்பின் தெரிவிக்கிறேன். நன்றி.