Tuesday 17 March 2015

ஒன்ற இயலுவதில்லை......

எப்படியோ
எங்கேயோ
ஆரம்பிக்கும் விரிசல்
அவ்வளவு எளிதாய்
ஆரம்ப நாட்களில்
கண்களுக்குத் தெரிவதில்லை

சுவற்றைப் பிளந்து
நிற்கும் விரிசல்
எளிதில் அடையாளம்
காட்டுகிறது
என்றோ ஆரம்பித்த
ஒவ்வாமையை

சுவற்றில் ஆரம்பிக்கும்
விரிசல்போல
ஏதோ ஒரு வார்த்தை
ஏதோ ஒரு செயல்
ஏதோ ஒரு உடலசைவு
ஏற்படுத்தும் விரிசல்
உடல் முழுக்கப் பரவி
மெல்லக் கொல்லும்
நஞ்சு போல
மனம் முழுக்கப் பரவி
விரிசலாய் விரிகிறது

நகமும் சதையமுமாய்
இருந்தார்களே
ஈருடல் ஓருயிர்போல
நட்பாக இருந்தார்களே
எல்லோரும் வியக்க
இணைந்து இயைந்து
இருந்தவர்களின்
விரிசல் எப்படி
ஆரம்பித்தது?
எங்கே ஆரம்பித்தது ?

விரிசலால்
விலகி நிற்பவர்கள்
வினாக்குறிகளாய்
பார்ப்பவர் பார்வைகளில்

விரிசலுக்கு ஆட்பட்டவர்களிடம்
விடைகள் கேட்டால்
பெரும்பாலும் மெளனமே
விடையாக
சில நேரங்களில் புன்னகை
மட்டுமே பதிலாக

சுட்ட மண்பாண்டங்கள்
களி மண்களாவதில்லை
மன விரிசல்கள்
உண்டான பின்
என்னதான் ஓரிடத்தில்
ஒன்றாய் நின்றாலும்
பழைய நிலையில்
ஒன்ற இயலுவதில்லை...

                        ..... வா.நேரு.....


நன்றி: எழுத்து.காம்

6 comments:

Yarlpavanan said...

"சுட்ட மண்பாண்டங்கள்
களி மண்களாவதில்லை
மன விரிசல்கள் உண்டான பின்
என்னதான் ஓரிடத்தில் ஒன்றாய் நின்றாலும்
பழைய நிலையில் ஒன்ற இயலுவதில்லை..." என்பதே
எனது தீர்வாக நானும் எண்ணுகிறேன்!

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா , வருகைக்கும் செய்தி சொன்னதிற்கும்....

முனைவர். வா.நேரு said...

நிலாசூரியன்:
மனதை தொட்ட உணர்வு, நட்பில் விரிசல் வந்தாலோ, உறவில் விரிசல் வந்தாலோ இந்த உணவுகள் மேலோங்கி மனதை கொள்ளும் தருணத்தை இதை வாசிக்கும்பொழுது உணர்ந்தேன்.

இரா-சந்தோஷ் குமார்:
மிக அருமை அய்யா..! மனதில் ஆழப்பதிந்த ஒவ்வாமை ரணங்களால் மீண்டும் உறவுகள்
புதுப்பிக்கப்பட்டாலும் அது பழைய நல்ல உறவாக இருக்காது என அழகாக கவிதையாக எடுத்துரைத்தீர்கள்.
சிவ ஜெயஸ்ரீ :
உணர்ந்து எழுதிய வரிகள் சிறப்பு ....
எழுத்து.காம் தளத்தில் வந்த எதிர்வினைகள் .

கரந்தை ஜெயக்குமார் said...

சுட்ட மண்பாண்டங்கள்
களி மண்களாவதில்லை

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா, வருகைக்கும் கருத்திற்கும்

Unknown said...

மிகச் சிறப்பாக உள்ளது அய்யா. . .