Saturday 9 January 2016

தொண்டைக்கு கீழே ஒரு சாண் கிழித்து .....

தலையை மெல்ல
வருடும் கைகளின்
மென்மை
வலியின் வன்மையைப்
போக்குகிறது ...

தடவும் கைகளைத்
தாண்டி
வந்து விழும்
சில கண்ணீர்த்துளிகள்
ராபின் சர்மாவின்
' நீ இறக்கும் போது
யார் கதறுவார் '
எனும் ஆங்கில நூலை
நினைவு படுத்துகிறது !

இருவர் மட்டுமே
இருக்கும் நேரம்
வாய்க்காதா என
சில ஆண்டுகளுக்கு முன்
அலைந்து திரிந்த
நாட்கள் போல அல்லாது
அவளும் நானும்
மட்டுமே இருக்கின்றோம்
நாள் கணக்காய் !

எனக்கு
கொடுக்க வேண்டிய
மருந்தினை மாத்திரையை
மனப்பாடம்
செய்துகொண்டேயிருக்கிறாள்
மணிக்கணக்காய் ....

மருந்து கொடுக்கும்
நேரங்களையெல்லாம்
ஒழுங்கு படுத்த
ஒலி எழுப்பிகளை
செல்பேசிகளில்
ஒழுங்குபடுத்துகிறாள் ...

பெருங்குரலெடுத்து
பேசும் வழக்கமுடையாள்
தனக்குக் கூட கேட்காத
ஒலி அளவில் பேசுகிறாள் ....

தொண்டைக்கு கீழே
ஒரு சாண் கிழித்து
நெஞ்சினைப் பிளந்து
இதயத்தை வெளியில் எடுத்து

செத்துப்போன உடலை
செயற்கை இதயத்தால்
சில மணி நேரம் இயக்கி

இதயத்தில் பழுதுபட்ட
வால்வை எடுத்து
தூர எறிந்து விட்டு
புதிதாக
இயந்திர வால்வை மாட்டி
இயற்கை இதயத்தை
மீண்டும் உடலோடு மாட்டி

கிழித்த நெஞ்சினை
நரம்பால் தைத்து
மயக்கத்திலிருப்பனை
நினைவுக்கு வரவழைத்து

அப்பப்பா ! ஏதோ
கதையில் படிப்பது போல்தான்
இருக்கிறது
நிகழ்ந்த நிகழ்வுகள்
எனினும்
அறிவியல் இப்படி
அற்புதங்களை நிகழ்த்துகிறது !

தலையைத் தடவும்
கைகளோடு வந்து
விழும் சில கண்ணீர்த் துளிகள்

உடலைத் தள்ளி நிறுத்தி
உதட்டில்
கன்னத்தில் இடும் முத்தத்தில்
இரவு பகலாய்
அவள் செய்யும் செயல்களில்
தெரிகிறது வள்ளுவரின் வரிகள்
' அன்பெனப்பட்டதே
இல் வாழ்க்கை '

  • எழுதியவர் : வா. நேரு
  • நாள் : 9-Jan-16, 5:16 pm
  • Nantri : Eluthu.com

7 comments:

Geetha said...

வணக்கம் அய்யா..அறுவை சிகிச்சை நடந்ததா?தற்போது நலமாக உள்ளீர்களா..உடல்நலத்தைக்கவனித்துக்கொள்ளவும்..நன்றி அய்யா.

முனைவர். வா.நேரு said...

வணக்கம். நடந்தது. இப்போது தேறி வருகின்றேன். வலைப்பதிவர் விழாவை மிகச்சிறப்பாக , வரலாற்று நிகழ்வாக புதுக்கோட்டையில் இணைந்து நடத்தியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.

Anonymous said...

கவிதை அருமை.இல்லை இல்லை வாழ்க்கை அருமை.இல்லை இல்லை இல்வாழ்க்கை அருமை. வாழ்த்துகள்.

முனைவர். வா.நேரு said...

வருகைக்கும் , வாசிப்பிற்கும் ,வாழ்த்திற்கும் நன்றி.

ANBU said...

அறம் என்பதன் அர்த்தம் புரிந்தது நேரு சார்
உயிரை காப்பாற்றும் இதய அறுவை சிகிச்சை
அற்புதம் என்றால்
அதைவிட அற்புதம் நல்லறமாம் இல்லறமும் தங்கள் உயிரோட்டமான கவிதையும்

ANBU said...

அறம் என்பதன் அர்த்தம் புரிந்தது நேரு சார்
உயிரை காப்பாற்றும் இதய அறுவை சிகிச்சை
அற்புதம் என்றால்
அதைவிட அற்புதம் நல்லறமாம் இல்லறமும் தங்கள் உயிரோட்டமான கவிதையும்

முனைவர். வா.நேரு said...

நன்றி அன்பு, வருகைக்கும் கருத்திற்கும்.