Saturday, 11 June 2016

உச்சிப் பனைமரத்தில்... பாம்பு கொத்த.......

                                         கடந்துபோன காலங்கள்(7)

சில மாதங்களுக்கு முன்
மாவட்ட ஆட்சியரிடம்
ஊருக்காக மனு கொடுக்க
எங்கள் ஊரிலிருந்து
'கோதண்டராமன் ' ஆசிரியர்
தலைமையில் ஒரு
குழு வந்தனர்.....

கொடுத்த கோரிக்கைகளில்
ஒன்று சாப்டூர் அரசு
மருத்துவமனையில்
'பாம்புக்கடி'க்கு சிகிச்சை
அளிக்க மருத்துவரும்
மருந்தும் வேண்டும் என்பது.....

மேற்குத் தொடர்ச்சி மலையின்
அடிவாரம் என்பதாலோ
பெரியதோப்பு ,பாளையந்தோப்பு
என மரங்கள் வளர்ந்து நிற்பதாலோ
எங்கள் ஊரில் எப்போதும்
பாம்புக்கு பஞ்சமில்லை.....
பாம்புக்கடிக்கு மருந்துமில்லை....

பெரியதோப்பில்
பெரிது பெரிதாய்
பாம்புப் புற்றுகள்
இருக்கும்.....

காளையப்பன் மாமா
காட்டில் இருக்கும்போது
அவரது மகனை
நல்லபாம்பு கடித்துவிட
இளந்தாரி மகனைத்
தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு
'ஒன்பது ரூபாய் நோட்டு' நாவலில்
வரும் நாயகன் போல
ஊருக்குள் ஓடி வர
பாம்புக்கடிக்கு மருந்தில்லாமல்
கல்லுப்பட்டி 'முத்துக்கிருட்டிணன்'
மருத்துவமனையில் சேர்த்து
கால்கள் வீங்கி கருத்து
பின்பு மருத்துவத்தால்
நலமாகி வந்த கதை.....

சடையாண்டி தம்பி
பனைமரத்தில் ஏறி
மட்டை வெட்டப்போன இடத்தில்
உச்சிப் பனைமரத்தில்
மட்டைக்குள் உள்ளிருந்த
பாம்பு கொத்த
பதறிப்போன மனுசன்
பட்டென கையை விட்டு
கீழே விழாமல்
கீழே இறங்கி வந்து
ஊருக்குள் ஓடிவந்து
மருத்துவத்தால்
பிழைத்த கதை தனிக்கதை....

கடலைச்செடியை
பிடிங்கும்போது
சில நேரம் செடியோடு
ஒட்டி நிற்கும் 'சுருட்டை' பாம்பு
கவனியாமல் சேர்த்துப்பிடிங்கினால்
சிக்கல்தான் வாழ்க்கைக்கு....

இளம்வயதில்
அம்மா அவிச்சுப்போட்டு
வீட்டுக்குள்
உணர வைத்திருக்கும்
நெல்லின் மேல்
அழகாக 'பாம்பு 'ஊர்ந்த
தடம் இருக்கும்
காலையில் எழுந்தவுடன்
எங்களுக்குள்
ஆகா, நம்ம வீட்டுக்கு
விருந்தாளி வந்திருக்கு
போல
எனச்சிரித்துக்கொண்டே
சொல்லுவதும்
சில நேரம் கண்ணில் பட்டால்
அதனை அடிப்பதும்
இல்லெயெனில் நாங்களும்
அந்த அறைக்குள்ளேயே
தூங்குவதுமாய் வாழ்ந்த நாட்கள் ....

இன்னும் எங்கள் ஊரில்
பாம்புக்கடிக்கு நிரந்தமாய்
மருந்து  கிடைப்பதில்லை...

நகரத்தில் 'பாம்பு ' எனும்
பெயர் கேட்டாலே
சில பேர் பதறுவதைக் கண்டால்
சிரிப்புத்தான் வருகிறது ....

                                                    வா.நேரு.... 11.06.2016

No comments: