அண்மையில் படித்த புத்தகம் : அமினா
மூல நூல் ஆசிரியர் : முகமது உமர் (நைஜீரியா)
தமிழ் மொழிபெயர்ப்பு : தருமி
முதல் பதிப்பு : ஜீலை 2009
மொத்த பக்கங்கள் : 368, விலை ரூ 200
மதுரை மைய நூலக எண் : 187630
மூல நூல் ஆசிரியர் : முகமது உமர் (நைஜீரியா)
தமிழ் மொழிபெயர்ப்பு : தருமி
முதல் பதிப்பு : ஜீலை 2009
மொத்த பக்கங்கள் : 368, விலை ரூ 200
மதுரை மைய நூலக எண் : 187630
" ஒரு நைஜீரிய பெண் போராளியின் உணர்ச்சிகரமான வாழ்க்கை. 29 மொழிகளில் வெளிவந்து உலகக் கவனத்தை ஈர்த்த நாவல்" என முன் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கின்றது. மொத்தம் 27 அத்தியாயங்கள் கொண்ட ஒரு மொழிபெயர்ப்பு நாவல்.முதலில் மொழி பெயர்ப்பாளர் முன்னாள் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் தருமி அவர்களுக்கு பாராட்டுகள். வாசிக்கும்பொழுது எந்த இடத்திலும் ஒரு அன்னிய மொழி நாவலை, மொழி பெயர்ப்பு நாவலைப் படிக்கின்றோம் என்ற எண்ணமே ஏற்படாத வண்ணம் மொழி பெயர்ப்பு செய்தமைக்கு பாராட்டுகள் வாழ்த்துகள். இது ஒரு பெண்ணிய அரசியல் நாவல். பெண்ணியமா? அரசியலா? அச்சச்சோ என்று நினைக்கிறவங்க எல்லாம் இதற்கு மேல் படிக்கவேண்டாம்....
பல்கலைக் கழக விடுதியிலிருந்து வெளியே வரும் ஒரு மாணவியாக அமினா அறிமுகப்படுத்தப்படுகின்றாள்.அவள் பல்கலைக் கழக மாணவி மட்டுமல்ல நைஜீரிய நாட்டின் மாநில மக்களைவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்ஹாஜி ஹருணாவின் 4-வது மனைவி என்றும் அறிமுகப்படுத்தப்படுகின்றாள். மூன்று மனைவிகள் உயிரோடு இருக்கும்போது 4-வது மனைவியாக அந்தப் பெரிய அரசியல்வாதி பணக்காரனுக்கு வாக்கப்படுகின்றாள் அமினா. அமினாவின் கணவனது செல்வச்செழிப்பும் அதனால் அமினாவுக்கு கிடைக்கும் சுகபோக வாழ்க்கையும் நாவலின் ஆரம்பத்தில் வர்ணிக்கப்படுகின்றது. தான் தனியாகத் தொழில் ஆரம்பித்து இன்னும் பெரிய பணக்காரி ஆக வேண்டும் என்பதுதான் அமினாவின் ஆசையாக திருமணம் முடிந்தவுடன் இருக்கின்றது.அமினாவைப் போன்றே மிகப்பெரிய பணக்காரியாக இருக்கும் குலு ஒரு பெரிய அரசு அதிகாரியின் மனைவி. அவள் இன்னும் பெரிய பணக்காரி ஆக வேண்டும் என ஆசை கொண்டவள். அமினாவைத் தன் பக்கம் இழுத்து தொழில் அதிபராக ஆக்கவேண்டும் என்பது குலுவின் எண்ணம்.
அமினாவின் பல்கலைக் கழகத்தோழி பாத்திமா. பெரிய பணக்காரனுக்கு வாக்கப்பட்டு விவாகரத்து செய்யப்பட்டவள். பெரிய பணக்காரனின் மகள். தன் அப்பாவும், கணவனும் பணத்திற்காக என்னவெல்லாம் செய்கின்றார்கள் என்பதனை அமினாவுக்கு எடுத்துச்சொல்கின்றாள். பாத்திமா ,நாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காக உழைக்கும் ஒரு அமைப்பில் உறுப்பினராக இருக்கின்றாள். அமைப்பாகத் திரள்வதற்கு வேண்டிய வேலைகளைத் தீவிரமாகச்செய்கின்றாள். அவளது அமைப்பு பல்கலைக் கழகத்தில் அரசால் தடை செய்யப்படுகின்றது. ஆனால் அடுத்த கட்டத்திட்டங்களைச்செயல்படுத்த வேண்டும். அதற்கு கூடிப்பேச ஓர் இடம் வேண்டும். அமினாவின் வீட்டில் வந்து பேச அனுமதி கேட்கின்றாள் பாத்திமா. தோழி என்ற முறையில் வா, வந்து பேசுங்கள். நான் டீ,பிஸ்கட் தந்து உபசரிக்கின்றேன். எனக்கு அரசியல் தேவையில்லை என்று அமினா சொல்கின்றாள். அதே மாதிரியே செய்கின்றாள், தனது இயகக்திற்கு ஏதேனும் உதவி புரிவாள் என்று எதிர்பார்த்த பாத்திமாவிற்கு ஏமாற்றம் ஏற்படுகின்றது. இருந்தாலும் பாத்திமா நாட்டில் நடைபெறும் அரசியல் பற்றியும், படித்த அதிகாரிகளின் பேராசை பற்றியும், சொத்து சேகரிப்பு பற்றியும், அரசியல்வாதிகளின் ஆடம்பர ஊதாரி வாழ்க்கைகள் பற்றியும் பேசிக்கொண்டே இருக்கின்றாள். அமினாவிற்கு அதில் ஈடுபாடு ஏற்படவில்லை.
அமினா 4-வது மனைவி. அவள் கணவனின் 3-வது மனைவி அமினா பற்றி வத்தி வைத்து விடுகின்றாள். மாதம் ஒரு நாள் ,இரு நாள் மட்டும் வீட்டிற்கு வரும் அமினாவின் கணவன் ஒரு நாள் வந்து அமினாவை தாறு மாறாக அடிக்கின்றான். இவள் எதற்கு அடிக்கின்றான் எனப்புரியாமலேயே அழுகின்றாள். தான் செய்த குற்றம் என்ன என்று கேட்கிறாள். உனக்கும் நம் பங்களா கார் டிரைவருக்கும் தொடர்பு எனக் குற்றம் சாட்டுகிறான். தொலைத்துவிடுவேன் என்று எச்சரித்து உடம்பு முழுவதையும் ரண களமாக்கி விட்டு வெளியேறி விடுகின்றான். அவள் கணவனின் மூத்த மனைவி வந்து ஆறுதல் கூறி மருந்தெல்லாம் கொடுக்கின்றாள். அபாண்டமான குற்றச்சாட்டால் துவண்டு, நொந்து நூலாகிக் கிடக்கும் நிலையில் பாத்திமா வருகின்றாள்.கொடுமையைக் கண்டு அமினாவிடம் பேசுகின்றாள். " ஆண்கள் ஆளப்பிறந்தவர்கள். அதுதான் அல்லாவே விதிச்சது.அதை மாத்த யாரால் முடியும் ? " பக்கம்(35 ) என்று அமினா கூறுகின்றாள். பாத்திமா நம்மால் முடியும் என்று சொல்கின்றாள். அமினாவுக்கு உடன்பாடில்லை. பாத்திமா அப்பொழுது நீ அரசியலுக்கு எல்லாம் வரவேண்டாம். ஊருக்குள் சென்று சாதாரணப் பெண்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்று பார் எனச்சொல்லி, ஒரு முகவரியைக் கொடுத்து லாரா என்னும் பெண்ணைப் போய் பார்க்கச்சொல்கின்றாள்.
மறுநாள் அந்த லாரா என்ற பெண்ணைப் பார்க்க அமினா செல்கின்றாள்.13 வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, 14 வயதில் ஒரு குழந்தைக்குத் தாயாகி,15 வயதில் சிறு நீரகத்தொற்று ஏற்பட்டு, ஒரு குடிசையில் குழந்தைக்கு கொடுக்க பாலில்லாமல் வற்றி வதஙகிப் போய் கிடக்கும் லாராவையும், அந்தச்சூழலையும் பார்த்தவுடன் அமினாவிற்கு புத்தருக்கு அரண்மனையை விட்டு வெளியில் வந்தவுடன் கிடைத்த அனுபவம் போல கிடைக்கின்றது. உனது கணவனை எங்கே என்று அமினா லாராவிடம் கேட்க ,அவன் வேறு ஒரு திருமணம் முடித்துக்கொண்டு சென்று விட்ட கதையை லாரா சொல்கின்றாள். லாராவையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு, தனது வீட்டில் ஒரு பகுதியில் இருக்கச்சொல்லி, உணவு கொடுக்க ஏற்பாடு செய்கின்றாள்.மருத்துவம் பார்க்கச்செய்கின்றாள். லாரா அமினாவிற்கு மிக நெருக்கமாகின்றாள். தன்னைப்போன்ற பல பெண்கள் இருப்பதையும் அவர்கள் கதையையும் அமினாவிடம் சொல்கின்றாள். இப்படிப்பட்ட பெண்களுக்கு உதவி செய்வதற்காக தான் வாழும் பகுதியான பக்காரோவின் அடிப்படையில் 'பக்காரோ உதவிக்குழு ' என்னும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, பெண்களை ஒன்றுதிரட்டவும் அவர்களுக்கு கற்பிக்கவும் அமினா முற்படுகின்றாள்.
அடித்த கணவன் மறுபடியும் வந்து அமினாவிடம் மன்னிப்பு கேட்கின்றான்.அமினா சமாதானமாகின்றாள். அமினாவிற்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கின்றது.பக்காரா உதவிக்குழுவில் நேரடியாகச்
செயல்படமுடியவில்லை என்றாலும் ஆலோசனைகள் சொல்கின்றாள்,வழிகாட்டுகின்றாள். பின் மூன்றுமாதம் கழித்து மறுபடியும் முழு மூச்சாக இறங்கி,சாதாரணப்பெண்களோடு இணைந்து வேலை செய்கின்றாள். பெண்களின் கல்வி,சுகாதாரம், வேலை வாய்ப்பு போன்றவைகளோடு கைவிடப்பட்ட பெண்களைப் பற்றியும் நிறையப்பேசுகின்றாள். அரசியல்வாதியான கணவன், இந்த வேலையெல்லாம் நமக்கெதற்கு ? நன்றாக உல்லாசமாக இருக்க, அனுபவிக்க பழகு என்று சொல்கின்றான். இவளுக்கு நாட்டமில்லை. கணவன் அமினா வீட்டிற்கு வருவதைக் குறைத்துக்கொள்கின்றான்.
ஒரு நாள் அமினாவின் ஆறுமாதக் குழந்தைக்கு காய்ச்சல் மிக அதிகமாக அடிக்கின்றது.ஒரு கட்டத்தில் காய்ச்சலால் வலிப்பு வருகின்றது. உதவிக்கு யாரும் அருகில் இல்லாமல், மாத்திரை ,மருந்து வாங்க ஆளில்லாமல் தவிக்கின்றாள். இரவு நேரம் என்பதால், குதிரை மேய்க்கும் வேலைக்காரப்பையனை அழைத்து மாத்திரை வாங்கி வரச்சொல்கின்றாள், வாங்கி வருகின்றான்.அந்த மாத்திரையை தண்ணீரில் கலக்கிவிட்டு குழந்தைக்கு ஊற்றுவதற்காக அந்தப்பையனை உதவி செய்யச்சொல்லி, குழந்தைக்கு மருந்து ஊற்றிக்கொண்டிருக்கின்றாள். அப்பொழுது அங்கு வரும் அமினாவின் கணவன், அவளைச்சந்தேகப்பட்டு, அடிக்கின்றான். குழந்தைக்கு முடியவில்லை என்பதனைக் கவனித்திலேயே கொள்ள மறுக்கின்றான். விழுந்த அடியால் அமினாவிற்கு நகர முடியாத நிலைமை.வலிப்பால் துடிக்கும் குழந்தை... .அப்படியே போட்டுவிட்டு கணவன் போய்விடுகின்றான். குழந்தை இறந்து விடுகின்றது. உலகமே வெறுத்துப்போய் கொஞ்ச நாட்கள் இருந்த அமினா, நீண்டும் பக்காரோ உதவிக்குழுவில் மிகத்தீவிரமாக இயங்க ஆரம்பிக்கின்றாள்.
பக்காரோ உதவிக்குழுவைப் பார்த்து அரசாங்கம் பயப்படுகின்றது. இவர்கள் புரட்சியெல்லாம் பேசவில்லை, பெண்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றார்கள், அதற்கு தீர்வு என்ன என்பதனைக் கேட்கின்றார்கள் என்று சொல்லும்போது அமினாவை மறைமுகமாகப் பயமுறுத்துகின்றார்கள். பணக்காரி குலுவை வைத்து ஆசை காட்டுகின்றார்கள். அமினா மயங்கவில்லை.அமினாவின் கணவனின் நண்பன் ஒரு வெளிநாட்டுக்காரன் வெள்ளைக்காரன் வந்து அமினாவிடம் தொழில் தொடங்குவது பற்றிப் பேசுகின்றான். அவர்களின் திருட்டுத்தனத்தை,மொள்ள மாரித்தனத்தை பிட்டு பிட்டு அமினா வைக்க அவன் நைஜீரியா நாட்டில் தொழிலே தொடங்கவில்லை என்று ஓடி விடுகின்றான்.
பெண்கள் ஒன்று சேரக்கூடாது,உரிமைகள் கேட்கக்கூடாது என்பதற்காக அந்த நாடு ஒரு சட்டம் போடுகின்றது. முழுக்க முழுக்க ஆணாதிக்கம் கொண்ட, பெண்களுக்கு எதிரான அந்தச்சட்டத்தை அமினாவும் பக்காரோ உதவிக்குழு அமைப்பும் எதிர்க்கின்றனர். பெண்கள் ஒன்றிணைகின்றனர். அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றச்சொல்லி போராடுகின்றனர். ஆனால் அவர்களின் நியாயமான போராட்டத்தை உருக்குலைக்க அரசு வன்முறையைக் கையில் எடுக்கின்றது. அந்த அமைப்பின் ஒரு தலைவி சுட்டுக்கொல்லப்படுகின்றாள். பெண்கள் அனைவரும் குண்டாந்தடிகளால் தாக்கப்படுகின்றனர். அரசு முழுமையான வன்முறையை தூத்துக்குடி போல உபயோகிக்கின்றது. அமினா குறிவைத்து தாக்கப்படுகின்றாள்.ஊமைக்காயங்களாக அரசு அதிகாரிகள் அவளுக்கு ஏற்படுத்துகின்றனர். சிறையில் அடைக்கப்படுகின்றாள். ஜெயிலுக்கு வரும் அமினாவின் கணவன் அவளைக் குறை கூறுகின்றான். இந்த வேளை உனக்கு எதற்கு என்று சொல்கின்றான்.
தன்னை நிரந்தரமாக சிறையில் வைக்க வேலைகள் நடப்பதை அமினா உணர்கின்றாள்.
விசாரணை நீதிபதி நியாயமாக நடந்து கொள்கின்றார். அமினாவின் மீது குற்றமில்லை என்று உணர்கின்றார்.ஆனால் ஆண்களுக்கு எதிராக, அரசாங்கத்திற்கு எதிராக இப்படி போராடுவது தவறில்லையா என்று கேட்கின்றார். அமினா பதில் சொல்கின்றாள். அமினாவின் கல்லூரித் தோழி ,இப்போது வழக்கறிஞராக இருப்பவள் அமினா வழக்கை எடுத்து நடத்துகின்றாள். சிறைத்தண்டனை இல்லாமல் அமினாவும் அவளது தோழியர்களும் விடுதலை செய்யப்படுகின்றார்கள்.
இதுதான் சுருக்கமான கதை. ஆனால் நாவலுக்குள் பெரும் அரசியல் உரையாடல் இருக்கின்றது. மதங்களைப் பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றன. உண்மையிலேயே கடவுள் பக்தனாகக் காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கடவுளுக்குப் பயப்படுவதில்லை என்னும் செய்திகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் இருக்கும் பெண்கள் நிலைமை, ஏன் இப்படி என்னும் கேள்விகள், அதற்கான பதில்கள் இருக்கின்றன. மார்ச்-8 சர்வதேசப்பெண்கள் தினத்தில் பக்காரோ உதவிக்குழு கூட்டத்தில் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் அனுபவங்களை, வேதனைகளைப் பகிர்ந்து கொள்ளும் பதிவு உலகம் முழுவதும் இருக்கும் பெண்களின் துன்பங்களைச்சொல்வது போல் இருக்கின்றது.
மிக ஆழமான விவாதங்கள். நேரிடையாகக் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் நிகழ்வுகள் மூலம் அப்படியெல்லாம் ஒருவன் இல்லை என்பது அழுத்தமாகச்சொல்லப்படுகின்றது. பெண்கள் இணைந்தால் எவ்வளவு பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும், பெண்கள் தங்கள் பிரச்சனைகளை பொதுவான அரங்கில் பகிர்ந்துகொள்ளும்போது எப்படிப்பட்ட உத்வேகத்தை அது தரும்,மாற்றத்திற்கு எப்படி காரணமாகும் என்பது போன்றவை சொல்லப்பட்டிருக்கின்றன. தங்கள் வீட்டுப்பெண்களாக இருந்தால்கூட அரசியல்ரீதியாக பெண்கள் ஒன்றிணையும்போது அரசியல்வாதிகள் எவ்வளவு கொடூரமாக,மோசமாக மாறுவார்கள் என்பதெல்லாம் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது.இந்தியாவிற்கு, தமிழகத்திற்கு அப்படியே பொருந்தும் நாவல் இது.
.முடிவாக மார்ட்டின் லூதர் கிங் ஜீனியர் சொன்னதாக புத்தகத்தின் உள்ளே போடப்பட்டிருக்கும் வாசகத்தோடு முடிக்கின்றேன். " நம்மை பாதிக்கும் விசயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது " ... மார்க்சீம் கார்க்கியின் 'தாய் ' நாவலைப் படித்து முடித்தவுடன் மனதில் ஏற்பட்ட ஒரு எழுச்சி போல எனக்கு இந்த 'அmiனா' நாவலைப் படித்து முடித்தவுடன் ஏற்பட்டது. முழுக்க முழுக்க பெண்களின் போராட்ட பங்களிப்பை, பெண்களின் ஒருங்கிணைப்பின் அவசியத்தை வலியுறுத்தும் அதே நேரத்தில் அவர்களுக்கு உதவும் சில ஆண்களையும் குறிப்பிடும் நாவல் இது
3 comments:
அழகான பெருமைப்படுத்தும் கட்டுரை. மனமார்ந்த நன்றி.
https://dharumi.blogspot.com/2019/01/1015.html
https://www.facebook.com/sam.george.946/posts/10215775710978999
எழுத்தின் மூலம் ஓய்வு வாழ்க்கையை எப்படிப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்வது என்பதைத் தங்கள் செயல்கள் மூலம் பாடம் நடத்திக்கொண்ட் இருக்கிறீர்கள் பேராசிரியர். நன்றி.
Post a Comment