Tuesday 20 August 2024

நினைவுகளில் நிறைந்து நிற்கிறான் என் நண்பன்

 எனது அருமை நண்பன் திருப்பூரில் வசித்து வந்த கா.சுப்பிரமணியன் நிரந்தரமாக விடை பெற்றுக் கொண்டான் ,கடந்த பதினெட்டாம் தேதி அன்று (18.08.2024).எனக்கும் அவனுக்கும் இப்போது 60 வயதாகிறது ஒன்றாம் வகுப்பு முதல் அவனது இறுதிக்காலம்வரை தொடர்ந்த  நட்பு. இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து வந்த நண்பன் அவன் .


இருவரும் சாப்டூரில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்து பின்பு  பிளஸ் ஒன் பிளஸ் டூ தே.கல்லுப்பட்டியில ,காந்தி நிகேதன் ஆசிரமத்தில் படித்தோம். பீறகு  நான் திருச்செந்தூர் ஆதித்தனார்      கல்லூரியில்  பி.எஸ்.எஸி வேதியியல் படிக்க, அவன் விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் படித்தான். ஆதித்தனார் கல்லூரியில்  படித்த பல சமயங்களில் திருச்செந்தூரில் இருந்து வரும் வழியில் இருக்கும விருதுநகர் கல்லூரியில் இறங்கி ,அங்குப் படித்துக் கொண்டிருந்த எங்கள் ஊரைச் சார்ந்த சுப்பிரமணி ,சுந்தரசேகர்                      பேரையூரைச் சார்ந்த கண்ணன் போன்றவர்களைப் பார்த்து பேசி விட்டு மறுபடியும் பேருந்து ஏறி ஊருக்கு வருவது வழக்கம்.மிக வறுமை மிகுந்த குடும்பச் சூழலில் பி.எஸ்.எஸ்ஸி. விலங்கியலைக் கஷ்டப்பட்டு படித்து முதல் வகுப்பில் வெற்றி பெற்றான்.படித்து முடித்து விட்டு ஊரில் விவசாய வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.




 கொஞ்ச நாட்கள் ஊரில் அவன் சும்மா இருந்த காலத்தில், நான் தொலைபேசித்துறையில்  உசிலம்பட்டியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் நானும் நண்பர்கள் சுப்பிரமணி ,சுந்தரசேகர்,கணேசபூபதி மூவரும் இணைந்து எங்கள் வீட்டில்  ஒரு டியூஷன் சென்டர் வைத்தோம் நிறையக் குழந்தைகள் அப்போது படித்தார்கள். பின்பு அவன் திருப்பூருக்கு வேலைக்குச் சென்றான். கடினமான வேலையை மிகப் பொறுமையாக,லோகு  பேப்பர் ஸ்டோர் ன்னும் கடையில் வேலை பார்த்தான்.திருப்பூரில் முதல் ரெயில்வே கேட் ரோட்டில் இருந்த ஒரு விடுதியில் தங்கி இருந்தான். மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சம் திருப்பூரில்(1986-87) இருந்த காலம். ஓரிரு நாள் அந்தச் சூழலில் தாக்குப் பிடிப்பதே கடினம். ஆனால் அங்குத் தாக்குப் பிடித்து வாழ்ந்தான்.

 அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது தனியாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குப் பிறந்தது. கடை கடையாக  பேக்கிங் மெட்டீரியல்ஸ் பொருட்களைச் சிலவற்றை வாங்கிக் கம்பெனிகளுக்குக் கொடுக்க  ஆரம்பித்தான்  அந்தச் சமயத்தில்தான் கொஞ்சம் பணம் சேர்த்து ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்றான். அப்போது நான் திண்டுக்கல் தொலைபேசி  நிலையத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.  திண்டுக்கல்லில் என்னிடம் இருந்த சைக்கிளை லாரியில் போட்டு அனுப்பி வைத்தேன் நீ பயன்படுத்திக்கொள், எனக்கு இங்கே சைக்கிள் தேவை இல்லாமல் தான் இருக்கிறது என்று சொன்னேன். சரி என்றான். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேகரித்து  தனியாக ஒரு கடையை எஸ்.எம்.பேக்கிங் மெட்டிரியல்ஸ் என்னும் பெயரில்  ஆரம்பித்தான்.முறையாக அனுமதி வாங்கி ஆரம்பிக்கப்பட்ட கடை. கடினமான முதலாளியாக இருந்த லோகு பேப்பர் ஸ்டோர் முதலாளி திரு.லோகு அவர்கள் ,புதிய கடைக்கு வந்து இவனை வாழ்த்தி கையில் 10000 ரூபாய் கொடுத்து விட்டுப்போனார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.தன் கடையில் வேலை பார்த்த பையன் ,தன் கடையைப் போன்ற இன்னொரு கடையை வைத்த பொழுது,வந்து மனதார வாழ்த்தி,பணமும் கொடுத்துவிட்டுச்சென்றது. இவனது அணுகுமுறை அப்படி இருந்திருக்கிறது வேலை பார்த்த இடத்தில்,

கோயம்புத்தூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னுடைய இன்னொரு நண்பன் எங்கள் ஊர் ஜோ.ராஜேந்திரன் வனோடு பார்ட்னர் ஆக 
சேர்ந்தான். அதற்குப் பிறகு  வாழ்க்கையில் இருவருக்கும் வெற்றிதான். அவர்கள் இருவரும் இணைந்து ஏறத்தாழ ஒரு 40 ஆண்டுகள் அந்த கடையை வெற்றிகரமாக நடத்தி, நல்ல லாபம் பெற்று  மேலும் கடைகள், இடங்கள், வீடுகள் என்று ஒரு நல்ல பொருளாதார வசதியைப் பெற்றனர். எனது திருமணத்திற்குப் பின்பு ஒரு 20 நாட்களில் அவனுக்கும் பிரபாவிற்கும் திருமணம் நடைபெற்றது,1993-இல் அவனுடன்  இணைந்து பெண் பார்க்கப் போனது முதல் அந்தத் திருமணத்தில் முக்கியப் பங்கு என்னுடையது. அதனால என்னவோ அவனது மாமனார் அவனது மாமியார் இருவரும்                  அவர்களின் இறுதி மூச்சு வரை என்மேல் மிக பாசமாக இருந்தார்கள் .

பின்பு அவனுக்கு  இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.விக்னேஷ்,சுகந்தன்.. இருவரும் நன்றாகப் படித்து பொறியியல் பட்டதாரிகளாகி வேலைக்குச் சென்றனர் முதல் மகனுக்குத் திருமணத்தை முடித்து வைத்தான்.  இனிமேல் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் மதுரையில் செட்டில் ஆவதா அல்லது பேரையூரில் செட்டில் ஆவதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னான் ஒரு இரண்டு வருடங்களுக்கு 
முன்பு.அவன் முன்னேறியது மட்டுமல்லாது தன்னுடைய அண்ணன்கள் குடும்பம,அக்கா,தங்கை குடும்பம் என அனைவருக்கும் உதவியாக இருந்தான். 

18 மாதங்களுக்கு முன்பு  பெருங்கொடுமையாய் அவனுக்குப் புற்று நோய் இருப்பது தெரிந்தது.  அதற்கான அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டான்.  நன்றாக இருந்தான். இரண்டாவது மகனுக்குத் திருமணத்தை முடித்தான். முதல் மகனின் மனைவிக்கு வளைகாப்பு 2 மாதங்களுக்கு முன்னால் திருப்பூரில் நடந்தது.அன்று கொஞ்சம் சோர்வாக இருந்தான்.எப்போதும் கொஞ்சம் சோர்வாக இருக்கிறது , எனது மகன்களும், மனைவியும் நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள் ,அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன் என்றான்.அன்றுதான் அவனைக் கடைசியாகப் பார்த்துப்,பேசியது.
 
நன்றாக இருக்கிறேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தான், 15 நாட்களுக்கு முன்னால் பேசிய பொழுது கூட அப்பப்ப கோயம்புத்தூருக்கு செக்கப்  போக வேண்டியிருக்கிறது, மற்றபடி நன்றாகச் சாப்பிட முடிகிறது நன்றாக இருக்கிறேன் என்றான். 18ம் தேதி அவன் இறந்து விட்டான் என்ற செய்திதான் வந்தது. ஆடிப்போய் விட்டேன்.  இடையில் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவனது எண்ணில் பதில் இல்லை..

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு இதய  ஆபரேஷன் சென்னையில் நடைபெற்றது ஆபரேஷன் நடப்பதற்கு ஒரு பத்து நாட்களுக்கு முன்னால் கட்டாயமாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொன்ன பிறகு சரி செய்து கொள்வோம் என்று முடிவு செய்தோம். கையில் உடனடியாகப் பணம் இல்லை.  பணத்தைத் திரட்டி நாலு லட்ச ரூபாய் சேர்த்த பிறகு சென்னையில் சென்று ஆப்ரேஷன் செய்து விடுவோம் என்று இருந்தேன். தற்செயலாகக் கூப்பிட்ட சுப்பிரமணி, சென்னைக்குப் போனாயே என்ன சொன்னார்கள் டாக்டர் என்று கேட்டான். இப்படிக்குக் கட்டாயம் ஆப்ரேஷன் பண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள், 4 லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டும் அதற்காக நான் பணம் திரட்டிக்  கொண்டிருக்கிறேன்,எங்கள் சொசைட்டியில் கடன் கேட்டிருக்கிறேன் என்று சொன்னேன் 

அப்படியா என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.  மறுநாள் காலை நாலு லட்ச ரூபாய் பணத்தோடு வீட்டில் வந்து நின்றான். இதை வைத்து முதலில் ஆபரேஷன் செய், உடனே சென்னைக்குக் கிளம்பு, மற்றவற்றையெல்லாம்   பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அனுப்பி வைத்தான். மிகப்பெரிய ஆபரேஷன் இதய ஆபரேஷன். சில நேரம்  உயிருக்குக்கூட ஆபத்தாக முடியும் ஆப்ரேசன். அப்படிப்பட்ட நிலையில் 4 லட்ச ரூபாயை  மிதத்துச்சமாக மதித்து நண்பனின் உயிர் பெரிது என்று வீட்டிற்கு வந்த பணத்தைக் கொடுத்த நண்பன். 2 வருடங்கள் கழித்து பணத்தைத் திருப்பிக் கொடுத்தபோது பெற்றுக்கொண்டான்..வங்கி வட்டியாவது தருகிறேன் என்றபோது ,'அடி வாங்காத,சும்மா  இருடா' என்று சொல்லி விட்டான்.

உரிமையாகத் திட்டுவான்.அறிவுரை சொல்வான்.அதுபோல நான் திட்டுவதை,சொல்வதைக் கேட்டுக்கொள்வான்.திருத்திக் கொள்வான்.இறப்பு வீட்டில் அவனது மைத்துனர் சுந்தரபாரதி ." மாமா.ஒவ்வொருவருக்கும் பல நண்பர்கள் உண்டு. ஆனால் ஆத்மார்த்தமான நண்பன் என்று ஒருவர்தான் இருப்பார்கள்.அந்த நண்பனிடம் எல்லாவற்றையும் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். எனது மாமா சுப்பிரமணி அப்படித்தான் உங்களை வைத்திருந்தார். உங்களைப் பற்றிப் பேசாத நாளே இருக்காது " என்றார்.அழுகைதான் வந்தது.அவனது மூத்த அண்ணன் இறப்பு வீட்டில் " ஆலமரம் சாய்ஞ்சிருச்சுடா நேரு,எல்லோருக்கும் உதவி பண்ணியவன் சாஞ்சிட்டாண்டா " என்று அழுது புலம்பினார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் எனது வீட்டில் , 'எனது இறப்பிற்குப் பின்னால் சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது,எனது உடலை மருத்துவமனைக்குக் கொடுக்கவேண்டும் ' என்று நான் எழுதி வைத்திருந்ததைக் காட்டி, 'டேய், நம்ம ஊர்க்காரர்கள் ,சொந்தக்காரர்கள் இதைச்செய்வதில் பிரச்சனை செய்தால் ,நீதான் முன்னின்று எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்' என்றேன். அவன் பக்தன்தான் என்றாலும் என்னை நன்றாகப் புரிந்தவன். 'அதெல்லாம் அப்ப பார்ப்போம். சும்மா இருடா' என்றான். அவனுக்கு முன்னால் நாம் இறந்து விடுவோம்  என்பது எனது எண்ணமாக  இருந்தது.அதனால் அவனிடம் சொல்லி வைத்தேன். ஆனால் கொடுமை.  நினைவுகளில் நிறைந்து நிற்கிறான்  என் நண்பன். 

வா.நேரு
20.08.2024

15 comments:

Anonymous said...

வணக்கம் அய்யா.
தங்கள் இருவரின் நட்பு தந்தை பெரியாரும் ராஜாஜியும் போல இருந்துள்ளது. இதை வாசிக்கும் பொழுது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் இதுபோன்ற நண்பன் அமைவது கடினம். தாங்கள் இருவரும் நட்புக்கு சிறந்த உதாரணம். உங்கள் நண்பனின் இழப்பிற்காக மிகவும் வருந்துகிறேன். அவரின் குடும்பத்தாருக்கும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முனைவர். வா.நேரு said...

இல்லை. நானும் அவனும் முரணாக இல்லை.விடுதலைக்கு சந்தா கொடுப்பான்.நிகழ்வுக்கு நன்கொடை கேட்டால் கொடுப்பான். கொரனா காலத்தில் நான் இயக்க நிகழ்ச்சிகளில் பேசியதைக் கேட்டு,சில திருத்தங்கள்,மேம்படுத்துவதற்குக் கருத்துகள் சொன்னான்.பக்தனாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொண்ட கொள்கை மீது மதிப்பும் மரியாதையும் அவனுக்கு இருந்தது.உன்னை மாதிரி என்னால் இருக்க முடியலடா என்பான்.ஊர் சுத்த முடியலடா,எப்பிடிடா இப்படி ஊர் ஊராக சுத்துகிறாய் என்பான். நண்பன் முன்னேறுவதில் அவனுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் இருந்தது.கருத்திற்கு நன்றி.தங்கள் பெயர் வரவில்லை.

Sundararajan said...

நெகிழ்வான பதிவு. ஆழ்ந்த இரங்கல் தோழர் - சுந்தரராஜன்

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழர்...

Anonymous said...

ரொம்ப வருத்தமாக இருக்கிறது. Very sorry.ஆழ்ந்த இரங்கல். சூரியா நகர் இடம் நினைவிருக்கிறது.

Anonymous said...

பெயர் வரவில்லை...சரிங்க..

Anonymous said...

Maheswari Murugan

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க ..மதுரையில் சில இடங்களில் (சூரியா நகர்,தபால் தந்தி நகர் ) போன்ற இடங்களில் இடத்தை வாங்கிப்போட்டு, குறுகிய காலத்தில் குறைந்த இலாபத்தில் விற்று விட்டான். ஆனால் அதனை வைத்து திருப்பூரில் முதலீடு செய்துவிட்டதால் அவனுக்கு நட்டமாகத் தெரியவில்லை. வியாபாரம் என்பதே மாற்றி மாற்றி முதலீடு செய்து இலாபம் பார்ப்பது தானே..

மு.இரா.மாணிக்கம். said...

இது போன்று நட்பு அமைவது வெகு சிலருக்குத் தான். உங்கள் நினைவலைகள் நெகிழ்ச்சி யுறச் செய்கிறது. இருந்தாலும், மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்.

Anonymous said...

ஆமாங்க அய்யா...நன்றி

Anonymous said...

உற்ற உயிருக்கு உயிரான நல்ல நண்பனை இழந்தது மனம் வேதனையாக இருக்கிறது.
ஆறுதல் சொல்ல வேறு வார்த்தைகைள் இல்லை சகோதரர் அவர்களே.

Anonymous said...

இதுதான் சகோதரா நட்பு.அவரின் இரண்டாவது சம்பந்தி நான் பணிபுரியும் பையிங்ஆபீஸில்தான் பணிபுரிகிறார்.அப்பப்போ சொல்லுவார் சம்பந்தியைப்பற்றி.ஆத்மா சாந்தியடையட்டும்.ஓம்ஷாந்தி.

Anonymous said...

அண்ணாரதுஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க ஆறுதலுக்கு...

முனைவர். வா.நேரு said...

நன்றி சகோதரரே..ஆறுதலுக்கு...