வணக்கம் தங்களுக்கு…
தோழர் என்னும்
சொல்
வெறும் சொல்லல்ல..
வேற்றுமையைப் புதைக்கும்
வெடிப்புச்சொல்…
நீயும் நானும்
ஒன்று என
உரத்துச்சொல்லும்
உரிமைச்சொல்…
ஆண்டான் அடிமை
என்னும்
ஆதிக்கத்திற்கு
அதிரடியாய் வேட்டு
வைக்கும் சொல்..
தோழர் பெரியாரைத்
தோழர் இராமசாமி
என
அவரின் இணையர்
நாகம்மையார் அழைத்த
வரலாறு உண்டு தமிழ்நாட்டில்
கணவனின் பெயரைச்
சொல்லக்கூடாது
என
இருந்த வழக்கத்திற்கு
விழுந்த
சம்மட்டி அடிச்சொல்
அது..
ஆணுக்கும் பெண்ணுக்குமான
பொதுச்சொல் அது…
வணக்கம் தோழரே
எனப் பெண்பால்
தோழர்களை
அழைக்கும்போது
அவர்களின்
உற்சாகம் தனித்துவமானது…
நாங்களும் தோழரே
எனச்
சிலரைத் திருத்திய
தோழமைகளை நான்
அறிவேன்…
ஆணும் பெண்ணும்
சமம்!
மண்ணில் மனிதராய்ப்
பிறந்திட்ட அனைவரும்
சமம்
என்பதைச் சொல்லும்
சமத்துவச் சொல்
‘தோழர்’...
ஆண்டவரின் முகத்தில்
தாங்கள் பிறந்ததாய்க்
கதைவிடுவோர்க்கு
கன்னத்தில் அறைவதுபோல்
சொல்லும் சொல்
‘தோழர்’ …
‘பிறப்பொக்கும்
எல்லா
மனிதர்க்கும் ‘
என்பதை
அடித்துச் சொல்லும்
சொல் ‘தோழர்’…
இதை வாசிக்கும்
தோழரே!
வணக்கம் தங்களுக்கு…
வா.நேரு,20.10.2024
1 comment:
🙏
Post a Comment