இன்று
உலகப் புத்தக நாள்(23.04.2026). தோழமைகள் அனைவருக்கும் புத்தக நாள் வாழ்த்துகள்.
புத்தக வாசிப்பு என்பது
உயிர் மூச்சு போல பல ஆண்டுகளாக இருக்கிறது. சென்ற
ஆண்டிற்குப் பிறகு உண்மை இதழில் பல கட்டுரைகள் தொடர்ச்சியாக நூல்கள் பற்றியும்
நூலகங்கள் பற்றியும் எழுதி இருக்கிறேன்.புத்தகமும் நானும்
கட்டுரைகளையும் உண்மையில் வெளிவந்த
கட்டுரைகளையும் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டு வரவேண்டும்
பகுத்தறிவு
எழுத்தாளர் மன்ற மாநிலத்துணைத்தலைவர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் வாருங்கள் படிப்போம், வாருங்கள் படைப்போம் என்னும் அமைப்புகளை தோற்றுவித்து நடத்துகிறார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் வாருங்கள் படிப்போம், வாருங்கள் படைப்போம் குழுக்களும் இணைந்து வளரும்
எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் உலகத் தமிழ்ச்சங்கத்தோடு
இணைந்து நடத்தினோம்.பெரும் வெற்றியும் மன நிறைவும் அளித்த
நிகழ்வுகள் அவை. தோழர் கவிதா,அண்ணன்
குமரன் போன்றவர்களின் நன்கொடையும் அன்பும் பெரிதும் துணை புரிந்தவை.அந்த
நிகழ்வில் பங்கு பெற்ற பல மாணவ மாணவிகள் தங்கள் படைப்புகளை எனக்கு அனுப்புவதும் அதன்
மீதான என் கருத்துகளை அளிப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
ஒரு
புத்தக வாசிப்பு என்பது வேறு ஒரு உலகத்திற்கு, நாம் அறியாத
உலகத்திற்கு அழைத்துச்செல்கிறது.அதினும் புதின்ங்கள் வழியாக
அறியும் உலகம் புதுமையாகவும் வேறுபட்ட பல அனுபவங்களைக் கொடுப்பதாகவும் இருக்கிறது.
இந்த வருடம் படித்த புதினங்களில் மருத்துவர் பிரியா விஜயராகவன்
எழுதிய அற்றவைகளால் நிரம்பியவள்,தோழர் சாம்ராஜ் எழுதிய
கொடைமடம், ,தோழர் சித்ரா சிவன் அவர்கள் எழுதிய அத்தினி
என்னும் புதின்ங்கள் குறிப்பிடத்தக்கவை.மிகச்சிறப்பான நூல்கள்.இந்த மூன்று புதினங்கள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் புதினத்தில்
தேவையற்று பயன்படுத்தப்பட்டிருக்கும் கெட்ட வார்த்தைகள் தவிர்க்கப்படலாம்
என்றுதான் தோன்றுகிறது. புதினம் என்பது கூட ஒரு மேடையில்
பேசுவதுபோலத்தான். உட்கார்ந்து இருக்கும் ஒவ்வொருவரிடமும்
தனித்தனியாகப் பேசுவது. என்றாலும் … என்று
வலிந்து திணித்திருக்கிறார்கள். நல்ல புதினம் என்றால் நாலு
கெட்ட வார்த்தை இருந்தால்தான் நல்ல புதினம் என்று எவரேனும் புதிதாக தமிழ் இலக்கணம் வகுத்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
சுந்தரபுத்தன்
எழுதிய ‘பெரியவன் ‘ நாவல் பெரும் விருப்பத்தோடு படித்த நாவல்.அதைப்போல மொழிபெயர்ப்பு நாவலான அன்னைவயல்.அற்புதமான
நாவல்.. விமர்சனம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. நண்பர் பாலகுமார் விஜயராமன் அவர்கள் எழுதிய கறுப்பு ஜோக்கர் இன்றைய
சூழலுக்கு மிகவும் தேவைப்படும் நாவல் அண்ணன் ஒளிவண்ணன்
அவர்களின் ஐ லவ் யூ சென்னை,கண்ணன் ஒரு நாத்திகன் போன்ற
நாவல்களைப் படித்து எனது வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.அதைப்போல பல சிறுகதைத் தொகுப்புகளை( அண்ணன் குமரன்
அவர்களின் யாதுமாகினாய், நண்பர் சரவணன் அவர்களின்
அன்பிற்கினியாள்,முனைவர் சோமசுந்தரியின் சில்லாட்டை) படிக்கவும் எழுதவும் பேசவும் வாய்ப்புக்கிடைத்தது.பல
புத்தகங்களை தொடர்ச்சியாக வாங்கி வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு இணையாக தபால் மூலம் என் மகன் சொ.நே.அன்புமணியும் புத்தகங்களை வாங்கி வாசித்துக்கொண்டிருக்கிறான்.இந்த வருடம் ‘அலைகளிலிருந்து தீண்டப்பட்ட காலடிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் ,’பூபும் இஓ’ என்ற கவிதைத் தொகுப்பு நூலையும் வெளிக்கொணர்ந்து இருக்கிறான்.
புதிதாக
எழுத முயற்சிக்கும் பலர் தங்கள் படைப்புகளை அனுப்புகிறார்கள். நன்று
எனில் நன்று என்று சொல்லிவிடுகின்றேன். விமர்சனம் இருக்கும்
படைப்புகளை, இன்னும் படைப்பு மேம்படவேண்டும் என்று எண்ணும்
படைப்புகளை படைப்பாளர்களிடமே பட்டென்று சொல்லி விடுகின்றேன்.எழுத
வருகின்ற சிலரின் எழுத்துகளைப் பார்க்கிறபோது ,வாசிப்பே
இல்லாமல் நேரடியாக படைக்க வந்துவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது.புதிய படைப்பாளர்களை உருவாக்கும்,செழுமைப்படுத்தும்
அமைப்பாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் திகழ்கிறது. திராவிட
இயக்கம் சார்ந்த இன்னும் பல எழுத்தாளர்களை அடையாளம் காணவேண்டும்.புதிய படைப்பாளர்கள் எழுதுவதற்கு இன்னும் பெரிய பெரிய களங்களை உருவாக்க
வேண்டும்.
தொடர்ந்து
கவிதை நூல்கள் ,கட்டுரை நூல்கள் வாசிப்பும் பதிவும் தொடர்கிறது. அய்யா
பெருமாள் முருகனின் ‘தோன்றாத்துணை ‘என்னும்
கட்டுரை நூல் மிகவும் பாதித்த நூல்.அவரது தாயாரைப் பற்றிப்படிக்கும்போது
எனது தாயாரும் நினைவுகளில் வந்து கொண்டிருந்தார். வாசிப்போர் களம் அண்ணன்
சு.கருப்பையா ஹோமியோபதி மருத்துவம் சார்ந்து இரண்டு புதிய புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார்.
தோழர் மு.சங்கையா இரண்டு நூல்களைக் கொண்டு வந்திருக்கிறார். நானும் இரண்டு நூல்களைக்
கொண்டு வரவேண்டும்.அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மதுரையில்
அமைந்திருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப்பெரிய வாய்ப்பு.புதிய
புதிய புத்தகங்களை எடுத்து வாசிக்க முடிகிறது.மிக அதிக விலையுள்ள
புத்தகங்களை எடுத்து வாசித்து பின்பு திருப்பிக் கொடுக்க முடிகிறது. குறிப்பிட்ட
காலத்திற்குள் படித்து முடிக்கவேண்டும் என்னும் கட்டாயமும் உடனே வாசிக்க
வைக்கிறது.இந்த வருடம் நூலகத்திற்கு இன்னும் அதிக நேரம் ஒதுக்கவேண்டும். உலகத்தமிழ்ச்சங்கத்தில்
சொற்பொழிவு,கலைஞர்
நூற்றாண்டு நூலகத்தில் சிறப்புச்சொற்பொழிவு என்று இலக்கியம் நடமாடும் இடங்களில் நூல்கள் குறித்து உரையாற்றவும் வாய்ப்புக்
கிடைத்திருக்கிறது.இன்னும் இதனை அதிகப்படுத்தவேண்டும்.
இப்போதும்
அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மதுரைக்கு வரும்போதெல்லாம்
புத்தகம் கொடுத்து வரவேற்பது தொடர்கிறது.அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் படிக்காத புத்தகமாக தேர்ந்தெடுப்பதுதான் பெரிய சவாலாக
இருக்கிறது. 93 வயதிலும் தொடர்ந்து வாசிக்கும் அவரின் ஆர்வம்
,அதை வாழ்வியல் சிந்தனைகளில் பகிர்ந்து மற்றவர்களையும்
புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தூண்டும் அவரின் ஊக்கம் பெரும் வாய்ப்பாக
அமைந்திருக்கிறது.
உயிரோடு
இருக்கும்வரை தொடர்ந்து வாசிப்போம். வாசித்து மகிழ்ந்ததை மற்றவர்களுக்கும் பகிர்ந்து
வாசிக்கவைப்போம்.மீண்டும் உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்.
நட்புடன்
வா.நேரு,23.04.2026
https://vaanehru.blogspot.com/2023/04/2.html புத்தகமும் நானும்(2)
https://vaanehru.blogspot.com/2022/04/23042022.html புத்தகமும் நானும் (1)
No comments:
Post a Comment