Wednesday, 23 April 2025

புத்தகமும் நானும்(3)…

புத்தகமும் நானும்(3)…

 உலக புத்தக நாளை முன்னிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில்(2023,2024) எனக்கும் புத்தகத்திற்குமான உறவுகளை நினைத்துப் பார்க்கின்றேன். புத்தக வாசிப்பில் மிகப்பெரிய ஆர்வம் கொண்ட இரண்டு பெரியவர்களை இந்த இரண்டு ஆண்டில் நான் இழந்திருக்கிறேன் .அவர்களில் ஒருவர் திருவீரி(செட்டி) சார் அவர்கள். நிறைய ஆங்கிலப் புத்தகங்களையும் வாசிக்கக் கூடியவர். ஓய்வு பெற்ற பின்னர் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தவர். அதேபோல திராவிடர்கழகத்தின் செயலவைத் தலைவராக இருந்த அய்யா சு அறிவுக்கரசு அவர்கள்.அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் ஒரு 38 புத்தகங்களை எழுதி, அடுத்த தலைமுறை அவரைப் பற்றி தெரிந்து கொள்கின்ற அளவிற்கு ஒரு பதிவினை செய்துவிட்டுப் போயிருக்கிறார் எழுத்தின் மூலமாகவும்.

 திரு வீரி(செட்டி) சார் அவர்களைப் பொறுத்த அளவில் அப்படி ஒரு பதிவு இல்லை. ஆனால் அவர் இருந்த காலத்தில், அவர் பணியாற்றிய இடங்களில் சந்தித்த அனுபவங்களை எல்லாம் அவரிடமே கேட்டு,பதிவு செய்து, அதனை ஒரு நோட்புக்கிற்குள் எழுதி அவரிடமே காண்பித்து திருத்தி வாங்கி வைத்திருந்தேன். அவர் மறைந்த பின்பு,அவரைப்பற்றி ‘கனவு போலத்தான் நடந்தது’ என்ற எனது ஏழாவது புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் புத்தகம் மிகுந்த மன நிறைவினைக் கொடுத்த புத்தகம் .பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இந்த நூலினை தன்னுடைய ‘ கீழடி வெளியீட்டகம் ‘ வழியாக வெளியிட்டார். எனக்கு பத்தாம் வகுப்பு சொல்லிக் கொடுத்த எனது தலைமை ஆசிரியர்... பல ஆண்டுகளுக்குப் பின்னால் அவரைச் சந்தித்தது, பின்பு அவரோடு தொடர்ச்சியான தொடர்பினை புத்தகங்கள் ஏற்படுத்திக் கொடுத்தது அந்த புத்தகத்தின் வழியாக நடந்த உரையாடல்கள் அவரிடம் கிடைத்த எனக்கான அறிவுரைகள், அதன் தொடர்ச்சிகள் என்று இந்தப் புத்தகங்கள்தான் என்னையும் அவரையும் பின்னிப் பிணைத்தது என்று நினைக்கின்றேன்.

 இன்னும் கேட்டால் சில புத்தகங்களை வாசித்து விட்டு மனம் விட்டு அதனை என்னோடு விவாதிக்கக் கூடியவராக அவர் இருந்தார். அப்படி விவாதிப்பதற்கு ஒரு களத்தை கொடுத்ததும் புத்தகம் என்று தான் சொல்ல வேண்டும். அவர் புத்தகத்தை வாசிப்பது மட்டுமல்ல வாசித்த புத்தகங்களில் இருந்து தனக்குப் பிடித்த பகுதிகளை எல்லாம் தனியாக டைரியில்,நோட்டில் எழுதி வைத்துக் கொண்டே இருந்தவர் .எனவே அவருடைய வாழ்நாள் முழுவதும் புத்தகம் தான் அவருடைய உயிர்த் துடிப்பாக இருந்தது. அந்த வகையில் இந்த இரண்டு ஆண்டுகளில் புத்தகத்தை மிகவும் நேசித்த இரண்டு ஆளுமைகளை நினைவு கொள்ளும் தினமுமாகும் இந்த நாளை நினைக்க வேண்டி இருக்கிறது. ‘கனவு போலத்தான் நடந்தது’ என்ற புத்தகத்தை வாசித்த பலரும் தங்களுடைய ஆசிரியரை நினைவு கொள்வதற்கு, அவர்களைப் பற்றி நினைப்பதற்கு ஒரு மிகப்பெரிய தூண்டுதலாக இருக்கிறது என்று சொன்னார்கள். குறிப்பாகத் தொலைபேசித்துறையில் NFTE சங்கத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் சிவகுருநாதன் அவர்கள் படித்து விட்டு, தனக்குக் கற்பித்த ஆசிரியரை நினைத்து அழுது விட்டேன் என்று சொன்னார் . ஒரு மிகப்பெரிய நிறைவைக் கொடுத்த புத்தகமாக இந்த புத்தகம் எனக்கு அமைந்தது என்றால் மிகை இல்லை. திரு. இறையன்பு சார் அவர்கள் சேலம் புத்தகக் கண்காட்சியில் பேசுகின்ற பொழுது என்னுடைய இந்தப் புத்தகத்தை அவர் தன்னுடைய உரையிலே குறிப்பிட்டார்.ஆசிரியர்,எழுத்தாளர் சரவணன் அவர்கள் ,ஆசிரியர்களுடைய கூட்டத்தில் ஒரு 45 நிமிடங்கள் இந்த நூலைப் பற்றி உரையாற்றினார். எந்தப் போட்டிக்கும்,பரிசுக்கும் இந்த நூலை அனுப்பவில்லை என்றாலும் வாசித்தவர்கள் சொல்லும் வாழ்த்து மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

நிறைய புத்தகங்களை இந்த இரண்டு ஆண்டுகளில் வாசிக்க முடிந்திருக்கிறது .வாசித்த புத்தகங்களில் மனதில் நின்ற புத்தகங்களில் சிலவற்றை எனது வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். வழக்கம்போல ‘’வல்லினச்சிறகுகள்’ பன்னாட்டு இதழிலும் பதிவு செய்திருக்கிறேன். பல கூட்டங்களில் புத்தகங்களைப் பற்றிப் பேசி இருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தைச்சார்ந்த ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்கள் எழுதிய 'பனையோலை' என்னும் நாவல் பற்றி எழுதிய புத்தக விமர்சனத்தை எனது வலைத்தளத்திலும் படைப்பு முக நூல் பக்கத்திலும் பகிர்ந்திருந்தேன். முக நூலில் 2024,ஜூன் மாதம் நூல் விமர்சனம் பகுதியில் படைப்பு குழுமம் சிறந்த படைப்பு என்று தேர்ந்தெடுத்து அறிவித்து இருந்தார்கள்.. மற்றும் லதா அவர்களின் 'கழிவறை இருக்கை' ,தோழர் பொள்ளாச்சி அபி அவர்களின் 'பாட்டையா',தோழர் ந.தேன்மொழியின் 'உயிர்வலி',தோழர் மதிகண்ணனின் 'ஆர்டருக்காக காத்திருப்பவர்கள்',தோழர் கல கல வகுப்பறை சிவாவின் ‘ஆசிரிய வாழ்வினிது’,தோழர் சோலச்சியின் ‘முட்டிக்குறிச்சி’,தோழர் விட்டல்ராவ் அவர்களின் ‘தொலைபேசி நாட்கள்’,அய்யா டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களின் ‘அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள்’, மதுரை சே.முனியசாமி அவர்களின் ‘விறகு வண்டி முதல் விமானம்வரை’ மதுரை வழக்கறிஞர் இராம.வைரமுத்து அவர்களின் ‘திராவிடம் வென்றது’,இரா.நரேந்திரகுமார் அவர்களின் ‘திராவிட ஆய்தம்’, அண்ணன் கி.தளபதிராஜ் அவர்களின் ‘நாலு தெருக்கத’,அம்மா கவிதா அவர்களின் ‘உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்’,அமெரிக்காவில் இருக்கும் கவிஞர் ம.வீ.கனிமொழியின் ‘நெருப்புச் சிலிர்ப்புகள்’,தோழர் கோமதி உள்ளிட்ட நால்வரின் படைப்பான ‘அவள் இவள் உவள் ‘,தமிழர் மரபு அறக்கட்டளை தோழர் சுபாஷிணி அவர்களின் ‘தமிழர் புலப்பெயர்வு’ உள்ளிட்ட பல நூல்களின் விமர்சனங்கள் எனது வலைத்தளமான (vaanehru.blogspot.com) –l ல் கிடைக்கின்றன.வாசிக்க நேரமிருப்பவர்கள் வாசிக்கலாம். பனையோலை நாவலின் மதிப்புரை படித்துவிட்டு,நன்றிகூறி வெகு நேரம் பேசிய எழுத்தாளர் பால்ராசய்யா இப்போது இல்லை. 

இந்த காலகட்டத்தில் சில நூல்களுக்கு நான் அணிந்துரையும் எழுதியுள்ளேன்.இது தவிர பல நூல்களுக்கும் அணிந்துரை,வாழ்த்துரை எழுதியுள்ளேன்.அதில் குறிப்பிடத்தகுந்தது தங்கை இளவரசி சங்கர் அவர்களின் ‘தணியாது எரியும் காடு’.தோழர் குமரன்தாஸ் அவர்களின் உண்மையில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பான ‘மொழி பிரிக்கும் பெரியார் இணைப்பார் ‘போன்றவை 

 கடந்த இரண்டு ஆண்டுகளில்,திராவிடர் கழகம் சார்ந்த,திராவிடர் இயக்கம் சார்ந்த புத்தகங்கள் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பேசப்பட்டிருக்கின்றன. தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா,டாக்டர் கலைஞர்,திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி,துணைத்தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் என மூத்த முன்னோடிகள் முதல் இன்றைக்கு எழுதும் தோழர்களின் புத்தகங்கள் வரை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தில் பேசப்படுகின்றன.இந்த உரைகள் தனிப்புத்தகமாகக் கொண்டு வரக்கூடிய அளவிற்கு தகுதி வாய்ந்தவை.தனித்தன்மை உடையவை. ஒவ்வொரு புத்தகமுமே நம்முடைய சமூகத்தின் அகக் கண்ணைத் திறக்கக் கூடியதாக, பல்வேறு உள்ளுணர்வுகளை கொடுக்கக்கூடிய புத்தகங்களாக இருக்கிறது.

  எனது மகன் அன்புமணி நிறைய புத்தகங்களை இப்போது வாசிக்கிறான்.போட்டித்தேர்வுக்கு தமிழ் இலக்கியத்தை எடுத்துப் படித்தவன்,நிறைய நாவல்களை,கவிதைகளை,கதைகளை வாசிக்கிறான். தமிழில் ஏற்கனவே தனது முதல் கவிதைப் புத்தகமான 'கரைந்து போ மனமே' வெளியிட்டான். இப்போது இரண்டாவது கவிதைப் புத்தகத்தைக் கொண்டு வருவதற்கான பணிகளில் இருக்கிறான்.எனது மகள் ‘ஆழினி’ நாவல் எழுதிய கையோடு தன்னுடைய ஆய்வுகளில் மூழ்கிவிட்டார்.வீடுமுழுக்க சங்க இலக்கியப் புத்தகங்களும்,உளவியல் புத்தகங்களுமாக இருக்கிறது.அவரின் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு அப்படி. 

 பகுத்தறிவு எழுத்தாளர் மன்றப்பொறுப்பாளர்கள் நிறைய நூல்களை தொடர்ச்சியாக வெளியிடுகிறார்கள்.மாநிலச்செயலாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்,மாநிலச்செயலாளர் அண்ணன் பாவலர் சுப.முருகானந்தம் இருவரும் மரபுக் கவிதை நூல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு இருக்கின்றனர்.அண்ணன் கோ.ஒளிவண்ணன் நாவல் எழுதி வெளியிட்டு இருக்கிறார். ‘தணியாது எரியும் காடு ‘ என்ற நூலினை எழுதிய தங்கை இளவரசி சங்கர்,இப்போது மூன்று நூல்களை வெளியிடுகிறார். அம்மா திருப்பத்தூர் கவிதா,அய்யா ஞான வள்ளுவன்,அண்ணன் தளபதிராஜ்,தோழர் தேன்மொழி எனப் பலர் அடுத்தடுத்த நூல்களைக் கொண்டு வந்துள்ளனர்.அதைப்போல தோழர் ஓவியா,தோழர் வழக்கறிஞர் அருள்மொழி,பொதுச்செயலாளர் அய்யா துரை.சந்திரசேகரன் எனப்பலர் புதிய நூல்களைக் கொண்டு வந்துள்ளனர். அய்யா பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் ‘அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள்’ என்று ஓர் அருமையான புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதைப் பற்றிப் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது 

 புதிய புதிய புத்தகங்களை வாசிப்பதற்கும் அதைப் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்பும் நிறைய இந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்திருக்கிறது. அதைத் தாண்டி பல நூல்களுக்கு அணிந்துரை அல்லது வாழ்த்துரை என்ற வகையிலே அந்த நூல் வெளிவருவதற்கு முன்னரே அதைப் பற்றிப் படிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது ‘விறகு வண்டி முதல் விமானம் வரை’ என்ற நூலினை மதுரையைச் சார்ந்த திராவிடர் கழகக் காப்பாளர் அய்யா சே.முனியசாமி அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.அய்யா ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக வெளியிட்டு, அவரைப் பாராட்டி அந்த நூலினை வெளியிட்டார்கள். அந்த நூல் உருவாவதற்கு ஒரு காரணியாக இருந்தது என்பது ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது இதன் தூண்டுதலால் புதுச்சேரி மாநில தி.க.தலைவர் அய்யா சிவ.வீரமணி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை நூலாக எழுதிக்கொண்டுள்ளார்.திராவிடர் கழகத்தோழர்களின்,தலைவர்களின் வாழ்க்கை பதியப்படவேண்டும்.எதிர் நீச்சல் வாழ்க்கை அவர்களின் வாழ்க்கை.அது பதியப்படும்போது பலருக்கு பாடமாக அமையும். 

 கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.புதிய புத்தகங்கள் சுடச்சுட வாசிக்கக் கிடைக்கிறது. சில புத்தகங்களை எனது மகன் அன்புமணி வாசித்து விட்டு, நன்றாக இருக்கிறது அப்பா,வாசித்துப்பாருங்கள் என்று கொடுக்கிறான்.அப்படி கொடுத்த புத்தகம்தான் ‘அரிவாள் ஜீவிதம் ‘ என்னும் மலையாள நூலின் மொழிபெயர்ப்பு.மலையாளத்தில் ஜோஸ் பாழூக்காரன் எழுதியது,தமிழில் யூமா வாசுகி மொழி பெயர்த்திருக்கிறார்.அரிவாள் நோய் பற்றியும் அதனால் பாதிக்கப்படும் பழங்குடி மக்கள் பற்றியும்,அவர்களைப் பாழ்படுத்தும் மூட நம்பிக்கைகள் பற்றியும் அந்த நோயால் பாதிக்கப்பட்ட ஜகந்தி என்னும் பெண் எப்படி அதனை எதிர்கொள்கிறாள் என்பதைப் பற்றிய கதை.ஜோஸ் பாழூக்காரன் இந்த நோய் பற்றி எழுதியதால்,அந்தப் பகுதி மக்களுக்கு கிடைத்த தீர்வு பற்றியும் அறிய முடிந்தது. அதைப் படித்து முடித்ததோடு,நூலகத்தில் திருப்பிக்கொடுத்துவிட்டு,சொந்தமாக நூலினை வாங்கி வீட்டில் வைத்து விட்டேன்.’வல்லினச்சிறகுகள்’ இதழுக்கு நூல் விமர்சனமும் இந்த நூல் பற்றி எழுதியிருக்கிறேன்.

கடந்த சில நாட்களுக்கு முன் வாசிப்போர் களம்,மதுரை ஒருங்கிணைப்பாளரும் ,ஹோமியோபதி மருத்துவருமான அண்ணன் சு.கருப்பையா(DGM BSNL,Rtd) அவர்கள் இரண்டு நூல்களை வெளியிட்டார்.அதில் ஒரு நூலை நான் பெற்றுக்கொண்டு உரையாற்றினேன்.தோழர் மு.சங்கையா தொடர்ச்சியாக  நூல்களை எழுதி வெளியிட்டுக்கொண்டு வருகின்றார்.அதைப்போல திரு.பாலகுமார் விஜயராகவன் அவர்களும் நாவல்,மொழிபெயர்ப்புகள் எனத்தொடர்ச்சியாகக் கொண்டு வருகின்றார்.மதுரை பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் படைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தில் ,எனது மகள் சொ.நே.அறிவுமதியின் 'ஆழினி'  நாவல் முதலில் அரங்கேறியது.பின்னர் எனது 'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித  நேயமும்...' நூலும் .அண்மையில் எனது மகன் சொ.நே.அன்புமணியின் 'கரைந்து போ மனமே ' கவிதை நூல் அரங்கேறியது.மூன்று நூல்களையும் மதிப்புரை செய்த பெருமக்களுக்கு பெரும் நன்றி.ஹைக்கூ கவிதைகள் பற்றிய கவிஞர் ம.காளிதாஸ் அவர்களின் காட்டமான நூலினைப் பற்றி உலகத்தமிழ்ச்சங்கத்தில் நான் மதிப்புரை செய்யவும் வாய்ப்புக் கிடைத்தது.

 சில போட்டிகளுக்கு நடுவராக இருந்திருக்கிறேன்.இருக்கிறேன்.அதன்வழியாக நிறையப் புத்தகங்களைப் படிக்கவும்,அவற்றைப் பற்றி மதிப்பிடவும் வாய்ப்புக் கிடைக்கிறது. நிறைய புத்தகங்களுக்கு அணிந்துரைகள்,வாழ்த்துரைகள். புத்தகங்களை வாசிப்பது,புத்தகங்களைப் பற்றிப்பேசுவது ,எழுதுவது என்று வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. அனைவருக்கும் இனிய புத்தக நாள் வாழ்த்துகள். 

 தோழமையுடன் வா.நேரு,23.04.2025


புத்தகமும் நானும்(1)...முனைவர் வா.நேரு



புத்தகமும் நானும்(2)...முனைவர் வா.நேரு


8 comments:

கவி said...

புத்தகத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கும் தங்கள் பெருவெளியில் சிறுதுளியான நாங்களும் பெருமைப்பட்டு நிற்கிறோம் நன்றி அய்யா!🙏

வா.நேரு said...

மகிழ்ச்சியும் நன்றியும் அம்மா..

சு.கருப்பையா said...

அருமையான , அர்த்தமுள்ள பதிவு . சமூகத்திற்கு உரமாக வாழும் மனிதர்களில் நீங்களும் ஒருவர்.

வரலாற்றில் உங்களுக்கான ஒரு இடம் இருக்கத்தான் செய்யும். வாழ்த்துகள். 💐🙏

வா.நேரு said...

நன்றிங்க அண்ணே...

எஸ்.சுப்பிரமணியம்(SS) said...

👏👏👏👍👍👍உதாரணமாக வாழ்கிறீர்கள். வாழ்த்துகள்.

வா.நேரு said...

நன்றிங்க சார்.

மு.சங்கையா said...

வாழ்த்துகள் தோழர்.

வா.நேரு said...

நன்றி தோழர்