Friday, 14 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக் கவிஞரும் (2)

இந்தியாவில், தமிழகத்தில் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசுகிற எவரும் பார்ப்பன எதிர்ப்பையும் சேர்த்துப் பேசவேண்டும். பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கார் அதனைச் செய்தார். தந்தை பெரியார் அதனைச் செய்தார்,அவரது இயக்கமான திராவிடர் கழகம் இன்றும் செய்கின்றது-ஏனெனில் பார்ப்பனர் பிழைப்பும் சாதி அமைப்பும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. அவ்வளவு எளிதில் பிரிக்கமுடியாதவை. சாதி எனும் அமைப்பு தோன்றுவதற்கும் அது ஆண்டாண்டு காலமாக இம்மண்ணில் முள்ளாக வளர்ந்து விசச் செடியாய் மண்டிப்போய்க் கிடப்பதற்கும் பார்ப்பனர்களே, அவர்கள் வளர்த்தெடுத்த பார்ப்பனீயமே காரணம்.

இன்றைய நிலையில் இதனை நாம் சொல்கின்றபோது சாதி அமைப்பை பாதுகாக்கின்றவர்களாக பிற்படுத்தப்பட்டவர்கள்தானே இருக்கின்றார்கள், ஆதிக்க வெறியர்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதியின் பெயரால் வன்கொடுமை புரிகின்றவர்களாக பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்கள்தானே இருக்கின்றார்கள் என்னும் உண்மை சுட்டப்படுகின்றது. உண்மைதான், இதனை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.வெட்கப்படவேண்டும், வேதனைப்படவேண்டும். அப்போதுதான் இதற்கு தீர்வு என்ன என்பது பற்றி யோசிக்கமுடியும். டாகடர் அம்பேத்கர் அவர்கள் சுட்டிக் காட்டிய ஏணிப்படிகள் போன்ற இந்த சாதி அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்,. சின்னக்குழந்தைகள் சில நேரம் அமர்ந்திருக்கும், பக்கத்தில் வரும் பெரியவன் ஒருவன் அக்குழந்தையின் கன்னத்தில் குழந்தையின் கைகளை எடுத்தே அடிக்க வைப்பான், பார்ப்போருக்கு குழந்தை தன் கன்னத்தில் தன் கைகளாலேயே அடித்துக் கொள்வதுபோலத் தோன்றும்.ஊன்றிக் கவனித்தால்தான் இன்னொருவனின் கைங்கரியம் தெரியும் அதனைப் போல சாதி அமைப்பை ஊன்றிக் கவனித்தால்தான் பார்ப்பானர்களின் சூழ்ச்சியும் தந்திரமும் புரியும். சாதாரண மக்களுக்கு இதனைப் புரிய வைக்கவேண்டும், எளிதில் புரிய வைக்க புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகள் கையில் வேண்டும்

ஆரியர்கள் வருவதற்கு முன்னர் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் பிறப்பின் பெயரால் பேதமில்லை, பெருமிதத்துடன் திராவிடர்களாய் வாழ்ந்தோம் என்பதனை
“ஆரியர்கள் இங்கே அடிவைக்கும் முன்னமே
வேரிட்டு வாழ்ந்த வெற்றித் திராவிடரின்
பேரர்க்குப் பேரனே ! பிள்ளையாய் நீ கண்ணுறங்கு “ என்று பாடுகின்றார் புரட்சிக் கவிஞர் ஆண் குழந்தை தாலாட்டில் . வெற்றித் திராவிடரின் பேரனுக்குப் பேரன் எப்படி தாழ்த்தப்பட்டவனானான், பிற்படுத்தப்பட்டவனான், எப்படி நான் மேல் என்றும் நீ கீழ் என்றும் சண்டையிட ஆரம்பித்தான் சொல்கின்றார் புரட்சிக் கவிஞர்.

“ஆண்டார் தமிழர் இந்நா
ட்தன்பின் ஆரியர் என்போர்
ஈண்டுக் குடியேறினார் –சகியே
ஈண்டுக் குடியேறினார் “ என்று தொடங்கி சமத்துவப் பாட்டில் பார்ப்பனர்கள் எப்படி வஞ்சகமாக தமிழர்களை ஏமாற்றினார்கள் என்பதனை பட்டியலிடுகின்றார் புரட்சிக் கவிஞர்

“ வெள்ளை யுடம்பு காட்டி
வெறும் வாக்கு நயம் காட்டிக்
கள்ளங்கள் செய்தாரடி ......”

“மேலே மூலோகம் என்றார்
கீழே மூலோகம் என்றார்
நூலெல்லாம் பொய் கூறினார்...”

“சுவர்க்கத்தில் தேவர் என்போர்
சுகமாய் இருப்பதுண்டாம்
அவர்க்குத் தாம் சொந்தம் என்றார்...”

அறிவியல் எவ்வளவோ வளர்ந்து விட்டது. மனிதன் சந்திரனுக்குப் போய் வந்து விட்டான், செவ்வாய்க்குப் போகப் போகின்றான் அண்டங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஆழமாய்ப் போய்க்கொண்டேயிருக்கிறது ஆனால் எவரும் சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்த்தாகத் தெரியவில்லை,கண்டு பிடித்த்தாகத் தெரியவில்லை. பார்ப்பனர்கள் , சொர்க்கம் என்று ஒன்று இருக்கிறது, அதில் தேவாதி தேவர்கள் என்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் யார் என்றால் இந்த உலகில் வாழும் பார்ப்பனர்களுக்கு மாமன் , மச்சி,அண்ணன் ,தம்பி என்று கதை கட்டிய கதையை புரட்சிக் கவிஞர் மேற்கண்ட கவிதையிலே எடுத்துரைக்கின்றார்.....
வா.நேரு -14-10-11

1 comment:

anandam said...

"இந்தியாவில், தமிழகத்தில் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசுகிற எவரும் பார்ப்பன எதிர்ப்பையும் சேர்த்துத் தான் பேசவேண்டும்."சாதி ஒழிப்பின் பால பாடத்தை ரத்தினச்சுருக்கமாக கூறியுள்ளீர்கள்."பொதுவுடமையின் பால பாடம் நாத்திகமே" என்னும் தந்தை பெரியாரின் வரிகளை நினைவூட்டுவதாக உள்ளது.அருமை.