Tuesday, 11 October 2011

வணக்கம் டீச்சர் நூல் அறிமுகம்

வணக்கம் டீச்சர்
மதுரை
வானொலி நிலையம்

ஒலிபரப்பிய நாள்:24.09.11

இன்று நாம் காண இருக்கின்ற புத்தகம் ‘வணக்கம் டீச்சர் ‘ என்னும் புத்தகம் ஆகும். இதன் ஆசிரியர் தங்கவேலு மாரிமுத்து ஆவார். கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் செப்டமபர் 2010–ல் வெளிவந்தது.மொத்தம் 144 பக்கங்கள் உள்ள புத்தகத்தின் விலை ரூ55 ஆகும்.

இந்த வணக்கம் டீச்சர் என்னும் புத்தகம் 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. கல்வி அதன் நோக்கங்கள் என்னும் முதல் தலைப்பில் எதற்காக கற்க வேண்டும்,ஏன் கற்க வேண்டும் என்னும் கேள்வியைக் கேட்டு கல்வி என்பது எழுதப் படிக்கக் கற்றுத்தர,வேலைக்கோ தொழில் தொடங்கவோ வேண்டிய தகுதிகளைப் பெற,சிந்தனைத்திறனை சீர்படுத்த, வாழ்க்கைக்கான வலிமையான அஸ்திவாரத்தை அமைத்து தர,வருங்கால சவால்களை சந்திக்க, பிறந்த நாட்டை சிறந்த நாடாக்கும் குடிமக்களை உருவாக்க எனப் பட்டியல் இடுகின்றார் இதன் ஆசிரியர் தங்கவேலு மாரிமுத்து. கல்வியின் நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய பெரும் பொறுப்பு ஆசிரியர்களிடம் இருப்பதால் மீண்டும் உங்களுக்கு வணக்கம் டீச்சர் எனக் கூறுகிறார்.
ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் உண்டு எந்த முகத்தை எவரிடம் எப்போது காட்டுகிறோம் என்பதுதான் வெற்றியின் அடிப்படை என்பர்.இந்த நூலின் ஆசிரியர் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய சில முகங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.ஆசிரியர் என்பவர் பாடம் சொல்லித் தருகிறவர்,இரண்டாவது பெற்றோர்,முதல் நண்பன்,குரு,மாணவன் என்னும் கல்லில் வேண்டாத பழக்கங்களை நீக்கும் சிற்பி,பாதையைக்காட்டும் வழிகாட்டி,அச்சங்களைப் போக்கும் ஆலோசகர், தனது நடத்தையால் மாணவனுக்கு முன் உதாரணமாகத் திகழும் ஆதர்சன மனிதர்(ROLE MODEL) என பல முகங்கள் ஆசிரியர்களுக்கு வேண்டும் எனக் கூறுகின்றார். இன்றைக்கு மாணவர்களின் ரோல் மாடல்களாக சினிமா நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களுமே இருக்கிறார்கள் என வேதனைப் படுகின்றார்.

மாணவர்கள் விருப்பத்தோடு சில ஆசிரியர் வகுப்பிலே அமர்கின்றார்கள், சில ஆசிரியர்கள் வகுப்பினில் வெறுப்போடு அமர்ந்திருக்கிறார்கள்.மாணவர்கள் விருப்பத்தோடு அமரவேண்டுமானால் ஆசிரியர்களிடம் இருக்க வேண்டியது என சிலபண்புகளை பட்டியலிடுகிறார் இந்நூலின் ஆசிரியர்,ஆசிரியர்களே உங்கள் பணி குறித்து பெருமிதம் கொள்ளுங்கள் என்கின்றார்.முன்னால் குடியரசுத்தலைவர் திரு.அப்துல்கலாம் திண்டுக்கல் வந்து தனது ஆசிரியர் சின்னத்துரையை சந்தித்து மரியாதை செலுத்தியதை குறிப்பிடும் நூலாசிரியர் பெருமிதம் கொள்ளுங்கள் ஆசிரியர்களே பெருமிதம் கொள்ளுங்கள். நேர்த்தியான உடை, நிமிர்ந்த நன்னடை, காந்தமும் கவர்ச்சியும் கொண்ட பார்வை,இனிமையான,அன்பான,தெளிவான பேச்சு போன்றவை ஆசிரியர்களுக்கு தேவை என்கின்றார்.பிறருக்கு எரிச்சல் ஊட்டும் படியான மூக்கை நிமிண்டுதல் தாடையைத் தடவுதல், தலையைச் சொரிதல் போன்ற பழக்கங்களை கைவிடல் வேண்டும் என்கின்றார்.ஆசிரியர்களுக்குத் தேவைப்படுகிற மனோபாவங்களாக உயர்ந்த சுயமதிப்பு, தன்னம்பிக்கை, பொறுமை,கனிவு,உற்சாகம் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றார். ஆசிரியர்களுக்குத் தேவைப்படுகின்ற திறமைகளாக சுவையூட்டும் திறமை,கவுன்சிலிங்க் திறமை, மனித உறவுத் திறன்,நேர நிர்வாகத் திறன்,ஊக்கப்படுத்தும் திறன் போன்றவற்றை பட்டியலிடுகின்றார்.கற்றுக் கொண்டே இருப்பவர் தான் நல்ல ஆசிரியர்களாக விளங்கமுடியும் என்பர் அவ்வகையில் கூடுதல் அறிவுகளாக பொது அறிவு,கணினி அறிவு,உளவியல் அறிவு போன்றவற்றை ஆசிரியர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

எப்படி பாடம் நடத்த வேண்டும் என்பதனைப்பற்றி நான்காம் அத்தியாயம் ஆன கற்பித்தல்- அடிப்படை அம்சங்கள் என்னும் பகுதியில் விவரிக்கின்றார்.ஆசிரியருக்குப் புரிந்தால் தான் மாணவனுக்கு புரியும்படி நடத்த முடியும்.பாடத்தை ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக ஆசிரியர் ஏற்றால்தான் மாணவனுக்கு மகிழ்ச்சியாக நடத்த முடியும்.கற்பித்தலில் ரசனை கலந்து இருக்க வேண்டும்,உயிரோட்டம் இருக்க வேண்டும், ஆன்ந்தம் இருக்க வேண்டும்.கற்பித்தலில் அன்பும் நட்பும் அடிப்படையானவை கற்பித்தலில் ஏற்கனவே தேவைப் படுகின்ற ஒன்று ஒத்திகை, ஒத்திகை என்று ஒன்று இருந்தால் தானே நாடகமும் சினிமாவும் மிகச் சிறப்பாக அமைய முடிகிறது.ஆக ஆசிரியர்கள் தங்களின் அறிவுத் திறனை அதிகரித்துக் கொள்வதற்கும்,கற்பிக்கும் திறனை செம்மைப் படுத்திக் கொள்வதற்கும் ஹோம் ஒர்க் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றார்.ஏற்கனவே தயாரிப்பு இருக்கும் பொழுது எந்த வேலையும் செய்வது எளிது.

மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும் என்றால் கல்வியை அவர்கள் முதலில் விரும்ப வேண்டும்.விரும்பாவிட்டாலும் பரவாயில்லை கல்விமீது அவர்களுக்கு எந்த விதமான வெறுப்பும் வந்து விடக் கூடாது.அதற்கு பள்ளிக்கூடச் சூழல், வகுப்பறை சூழல்,கற்பிக்கும் உபகரணங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதனை கற்பித்தல் சில தேவைகள் என்னும் தலைப்பில் இன்றைக்கு இருக்கக்கூடிய நவீன அறிவியலின்,உளவியலின் அடிப்படையில் கூறுவது நன்று.

வயலில் விதைப்பதற்க்கு முன் மண்ணை பக்குவப் படுத்துவது போல மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு முன் அவர்களின் மனங்களைப் பக்குவப்படுத்தல் அவசியம்.அதற்கு சில யுக்திகளைக் கூறுகின்றார்.கல்வியினால் அவர்கள் அடையப் போகும் நன்மைகளை அதாவது வருமானம், சமூகத்தில் மதிப்பு, உயர் பதவி, குடும்ப நிலை உயர்வது, வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றை மாணவர்களின் மனங்களிலே பதிய வைக்கலாம்.மாணவர்களைப் பேச விடுங்கள்,ஆசிரியரே பேசிக் கொண்டிருப்பது அதாவது சொல்லிக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு நீண்ட வறட்டு உரை நிகழ்த்துவது ஒரு நல்ல ஆசிரியருக்கு அடையாளம் அல்ல.அதை ஒரு டேப் ரெக்கார்டர் அழகாக செய்யும். அதற்குப் பெயர் கற்பித்தல் அல்ல என்கின்றார். கற்பித்தலில் திறமை முழுமை எப்படி வரும் என்பதற்கு நூலாசிரியர் சொல்லக்கூடிய சுவையூட்டுதல், நடித்தல், வீட்டுப் பாடங்கள், செய்முறை வேலைகள், வெளியுலக தொடர்பு போன்ற தலைப்புகளில் சொல்லும் ஆலோசனைகள் வரவேற்கத்தக்கவை. பெற்றோர்களிடம் எப்படி பேசுவது,பெற்றோர்களின் நேர்மறை சக்தியை ஆசிரியர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதெல்லாம்,நடைமுறை வாழ்வியலை அடிப்படையாக்க் கொண்டு அமைந்திருக்கிறது.

கற்றுக்கொள்வதில் மாணவர்கள் பலவகை.ஆசிரியர்களிடம் நடந்து கொள்ளும் முறைகளில் மாணவர்கள் பலவகை. பலவகையான மாணவர்களை ஆசிரியர்கள் எப்படி கையாளுவது.கையாளுவதில் அதிகாரவழியைப் பயன்படுத்துவதா, அன்பு வழியைப் பயன்படுத்துவதா என்பதனை பக்கங்கள் 104 முதல் 111ம் பக்கம் வரை விவாதிக்கின்றார்.சில தீர்வுகளைக் கூறுகின்றார்.பிரச்சனைக்குரிய மாணவன் என்று யாரும் கிடையாது, பிரச்சனை உடைய மாணவர்கள் தான் உண்டு.பிரச்சனையைத் தீர்த்துவிட்டால் மாணவர்களால் பிரச்சனையில்லை.மாணவர்களை முறையாக திறமையாகக் கையாளுவது ஒரு நல்ல ஆசிரியரின் அடையாளங்களில் ஒன்று எனக் கூறுகின்றார்.

தோட்டத்திலே நல்ல பூச்செடிகளை வளர்ப்பதர்க்கு சில வழிகளைப் பயன்படுத்துவதைப் போல மாணவர்களை மேம்படுத்துவதற்கு சில வழிமுறைகளை இந்நூலின் ஆசிரியர் கூறுகின்றார். தேவையற்ற பயம்,தாழ்வு மனப்பான்மை,எதிர்மறை எண்ணம்,கூச்சம் போன்றவற்றை மாணவர்களிடமிருந்து நீக்க ஆசிரியர்களே முயற்சி செய்யுங்கள் நல்ல வாழ்க்கைக்கான சில கொள்கைகளைச் சொல்லுங்கள்,நல்ல கொள்கைகளுடன் வாழ்ந்த சில தலைவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.ஆசிரியருக்கென்று ஒரு தனிமரியாதை இன்றும் இருக்கிறது அந்த மரியாதை வெறும் படிப்பை மட்டும் சொல்லித் தருகிற ஆசிரியர்களுக்கு கிடைப்பதேஇல்லை.படிப்புடன் வாழ்க்கைக்குத் தேவையான விசயங்களிலும் மாணவர்களின் சிந்தனையை செலுத்தி அவனை வல்லவனாக,நல்லவனாக உருவாக்குவதற்கு அக்கறை காட்டுகின்ற ஆசிரியர்களுக்குத்தான் அந்த மரியாதை கிடைக்கிறது ஆசிரியர்களே அந்த மரியாதையை ஏன் விட்டுத் தருகிறீர்கள் இன்று கிடைக்கும் மன நிறைவையும் நாளைகிடைக்கப் போகும் மதிப்பு மரியாதையையும் ஏன் இழக்க நினைக்கிறீர்கள் முயற்சி செய்யுங்களேன் என்று வேண்டுகோள் விடுக்கின்றார்.

நல்ல ஆசிரியர்களை உருவாக்க கல்வி நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதனை பக்கம் 117-ல் இருந்து 124 வரை எடுத்துக் காட்டுகளோடு விவரிக்கின்றார். அரசின் பங்குபற்றி 11வது அத்தியாயத்தில் பல்வேறு யோசனைகளை குறிப்பிடுகின்றார்.அவை,ஆசிரியர்களை கற்பிபதைத் தவிர மற்ற பணிகளில் ஈடுபடுத்துவதை குறைக்க வேண்டும் தவிர்க்க வேண்டும். சிறப்புப் பயிற்சிகளை அவ்வப்போது ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.ஸ்போக்கென் இங்க்லிஷ் கென்று வாரம் ஒரு வகுப்பாவது ஒதுக்கும்படி பாடத்திட்டம் அமைப்பது போன்றவற்றை குறிப்பிடுகின்றார்.கடைசித்தலைப்பாக வணக்கம் டீச்சர் எனக் குறிப்பிட்டு ஆசிரியர் பணியின் மேன்மையை,உயர்வை குறிப்பிடுகின்றார்.உங்கள் வகுப்பில் நாளைய குடியரசுத் தலைவர் இருக்கிறார்,நாளைய ஆளுநர் இருக்கிறார்,நாளைய மாவட்ட ஆட்சித் தலைவர் இருக்கிறார். “இந்த ஆசிரியரிடம் இந்த நல்ல விசயத்தைக் கற்றுக்கொண்டேன்,இந்த நல்ல குணத்தைப் பெற்றுக் கொண்டேன் இந்த அணுகுமுறையைத் தெரிந்து கொண்டேன்” என்று உங்கள் பெயரை குறிபிட்டுச் சொல்லி “என்னை உயர்த்தியவர்களில் அவரும் ஒருவர்” என்று நாளைக்கு அவர்கள் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுப்பார்கள் நீங்களும் படிக்கத்தான் போகிறீர்கள் என்று இந்நூலாசிரியர் ஆசிரியர்களுக்கு ஊக்கம் ஊட்டுகிறார்.

(“A GOOD TEACHER TEACHES; A BETTER TEACHER COACHES; THE BEST TEACHER INSPIRES; AN EXCELLENT TEACHER MOTIVATES” ) என நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஆசிரியர் தினமான செப்டம்பர்5-ல் பிறந்த டாக்டர்.இராதகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடுவார்.ஊக்கப்படுத்துகிற அருமையான ஆசிரியராக திகழ்வதற்கான வழிமுறைகளை,பல்வேறு யோசனைகளை வணக்கம் டீச்சர் என்னும் இந்த நூலின் ஆசிரியர் தங்கவேலு மாரிமுத்து கொடுத்திருக்கிறார்.கற்பித்தல் என்னும் கடல் பயணத்திற்கு நிச்சயமாக இது ஒரு பாதுகாப்பான நல்ல தோணி என்னும் நூலாசிரியரின் கூற்று உண்மைதான்.படித்துப் பாருங்கள் பயன் பெறுங்கள்.

‘வணக்கம் டீச்சர்‘ என்னும் இந்தநூலின் ஆசிரியர் தங்கவேலு மாரிமுத்து ஆவார்.கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் செப்டம்பர் 2010–ல் வெளிவந்தது.மொத்தம் 144 பக்கங்கள் உள்ள புத்தகத்தின் விலை ரூ55 ஆகும்.
நன்றி வணக்கம்

No comments: