Tuesday, 11 October 2011

இவர்தான் பெரியார் நூல் அறிமுகம்

இவர்தான் பெரியார் நூல் அறிமுகம்
மதுரை
வானொலி நிலையம்


ஒலிபரப்பிய
நாள்:17.09.11


இன்று நாம் காண இருக்கின்ற புத்தகம் ‘இவர்தான் பெரியார்‘ என்னும் புத்தகம் ஆகும். இதன் ஆசிரியர் மஞ்சை.வசந்தன் ஆவார். கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் மார்ச் 2011–ல் வெளிவந்தது.மொத்தம் 216 பக்கங்கள் உள்ள புத்தகத்தின் விலை ரூ75 ஆகும்.

பெரியாரின் வாழ்வும் சிந்தனைகளும் முழுமையாக அடங்கிய நூல் என முகப்பில் கூறப்பட்டுள்ள இந்த நூல் பெரியாரைப்பற்றி விவரித்துக்கூறுகின்ற ஒரு நூலாகும்.முன்னுரையில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் “முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய எழுத்தாளர் தோழர் மஞ்சை வசந்தன் அவர்கள்...இவர்தான் பெரியார் என்ற இந்நூலின் மூலம் அறிவுலக ஆசான், நம் அனைவருக்கும் விழி திறந்த வித்தகர்,தொண்டு செய்து பழுத்த பழம் அய்யாவைப் பற்றி மிகவும் அருமையாக எழுதியுள்ளார்.எவரும் எளிதில் தந்தை பெரியார் வாழ்க்கை,தத்துவங்கள் இவை இரண்டினைப் பற்றியும் புரிந்துகொள்ளும் வண்ணம் சிறப்பாக எழுதியுள்ளார் மிகவும் சுருக்கமான குளிகைகள் மூலம் (capsules)மூலம் பல முக்கிய சம்பவங்களையும், விளக்கங்களையும் அருமையாக தந்துள்ளார்” என்று குறிப்பிடுகின்றார்.

இந்நூலின் ஆசிரியர் மஞ்சை வசந்தன் அவர்கள் தனது உரையில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் முழுவதையும் அறிந்தவர்கள் சிலரே, சுமார் பத்தாயிரம் பக்கங்களுக்கு மேல் அவர்கூறிய கருத்துக்களை பலரும் படித்தறிவது நடைமுறைச் சாத்தியம் இல்லை என்பதையும் எதையும் சுருக்கமாக அறிந்து கொள்ள முயலும் இன்றைய உலகின் உள நிலையையும் கருத்தில் கொண்டு பெரியாரின் வாழ்வை 80 பக்கங்களிலும், அவரது சிந்தனைகளை 140 பக்கங்களிலும் பிழிந்து தந்துள்ளேன் எனக் கூறுகின்றார்.

மொத்தம் 29து தலைப்புகளில் இந்தப் புத்தகம் வடிவமைக்கப் பட்டுள்ளது.பெரியாரின் பெற்றோர் பற்றியும்,அவரது பிறப்பு பற்றியும் ,அவரது திருமணம் பற்றியும் சொல்வதாக முதல் தலைப்பான ‘பிறப்பும் பிள்ளை வெறுப்பும்’ எனும் தலைப்பு அமைகிறது.1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம்தேதி பெரியார் பிறந்தார் என்பதும் அவரது திருமணம் 1898ம் ஆண்டு நாகம்மையாரோடு நடைப்பெற்றது போன்ற வரலாற்றுச் செய்திகள் இடம் பெறுகின்றன.பெரியார் துறவு பூண்டு காசிக்குச் சென்றதும் அங்கு நடைபெற்ற செயல்களால் வெறுப்புற்று ஈரோட்டுக்குத் திரும்பியதும் வியாபாரம் செய்ததும் அடுத்து விவரிக்கப்பட்டுள்ளன. “சாதி வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களுடனும் அன்போடு பழகினார்.எல்லா சமூதாய மக்களின் விழாக்களிலும் கலந்து கொண்டார்....பிளேக் நோய் ஈரோட்டில் பரவியபோது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க பெரிதும் உழைத்தார்”என பக்கம் 21-ல் குறிப்பிடுகின்றார்.

காங்கிரசில் பெரியார் சேர்ந்த சூழல் விவரிக்கப்படுகிறது “பெரியார் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்து வந்தாலும் ,1919ம் ஆண்டுதான் காங்கிரசில் உறுப்பினரானார்.இவ்வாண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையின் கொடுமையைக் கண்டு கொதித்த பெரியார் .,ஆங்கில ஆட்சியை ஒழித்தே தீர வேண்டும் என்று உறுதிகொண்டு காங்கிரசில் சேர்ந்தார்.ஈரோடு நகரசபைத் தலைவர் பதவி உள்ளிட்ட அவர் வகித்த 29 பதவிகளை துறந்தார்” என ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

பெரியாரின் பணியைக்கண்டு மகிழ்ந்த காந்தியார் கதர் இயக்கத்துக்கு பெரியாரை பொறுப்பாளராக நியமித்தார். இதனை பெரியாரே “ நான் எதிலும் தீவிரமாகவும் உண்மையாகவும் உழைக்கக் கூடியவன் என்கிற கருத்து காந்திக்கு இருந்ததால் கதர் இயக்கத்துக்கு என்னைப் பொறுப்பாளராக நியமித்தார்” என்று குறிப்பிட்டதைக் குறிப்பிடுகின்றார்.கள்ளுக் கடை மறியலில் முதன் முதலாக ஒருமாத சிறைதண்டனையை பெரியார் பெற்றதையும் அவரது குடும்பத்துப் பெண்களான மனைவி நாகம்மாளும் தங்கை கண்ணம்மாளும் மறியலில் ஈடுபட்டு சிறைபட்டதையும் கள்ளுக் கடை மறியலை நிறுத்த வேண்டும் என்று சொன்ன பொழுது காந்தியார்
“மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களின் கையில் உள்ளது அவர்களைக் கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டதை கூறுகின்றார் இன்று கூட பெண்கள் மறியலில் ஈடுபட்டு சிறை செல்வது அரிதாகவே உள்ளது.சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வு என்பது ஒரு கொள்கையை தான் பின்பற்றுவது மட்டுமல்ல, அதற்காக தான் சிறை செல்வது மட்டுமல்ல, தன் குடும்பத்துப் பெண்களையும் சிறை ஏற்கச் செய்தது என்பது வரலாற்று நிகழ்வு.

“ஒடுக்கப்பட்ட தோழன் நெஞ்சில் ஒளிச்சிலையாய் வாழ்கின்றார் பெரியார் “ என்பார் கவிஞர் கலி.பூங்குன்றன்.ஏன் என்பதனை வைக்கம் சென்றார் வழி திறந்து வென்றார் என்னும் தலைப்பில் நூலாசிரியர் விவரிப்பதைப் படித்தால் அறியலாம். அண்ணல் அம்பேத்கார் அவர்களுக்கே தூண்டுதலைக் கொடுத்த போரட்டமாக இப்போராட்டம் அமைந்தது என்கின்றார். சாதி என்னும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடியாக பெரியார் நடத்திய .சேரன்மாதேவியின் குருகுலத்து ஜாதி வேற்றுமை எதிர்ப்பு போராட்டமும், இட ஒதுக்கீட்டிற்காக போராடி போராடி பின்பு முடியாமல் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தையும் தொடர்ந்து குறிப்பிடுகின்றார்.

“ வெண்தாடியின் வெப்ப மின்னல்கள் என்னை இருட்டின் ஈசான்ய மூலையிலிருந்து இழுத்து வந்துவிட்டன” என்று கவிஞர் தாமரை பெரியாரை குறிப்பிடுவார்.பெண்களால் மாநாடு கூட்டப்பட்டு பெரியார் என்னும் பெயரை பெண்களால் கொடுக்கப்பட்டதை குறிப்பிடுகின்றார். “பெண்களுக்காக உழைத்தவர்களில் பெரியார் தான் உலகிலேயே முதலிடம் பெற்றவர் அந்த அளவிற்கு யாரும் சிந்தித்தும் இல்லை போராடியதும் இல்லை” .அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய இளம் வயது திருமணம்,விதவைக் கொடுமை, பெண்களுக்கு சொத்துரிமை இன்மை, கல்வியின்மை போன்ற கொடுமைகளை களைய எவ்வாறு போராடினார்.என்பதனை பல்வேறு புள்ளி விவரங்களொடு எடுத்துரைக்கிறார்.காலம் காலமாக அழுத பெண்களின் கண்ணீரை துடைத்த பெரியாரின் பணி, பெண்ணடிமை ஒழிப்பில் எவ்வாறு இருந்தது எனபதனை அறிய இன்றைய தலைமுறை ஆண்களும் பெண்களும் இதனை படிக்க வேண்டும். 

“ஆண்களுடன் பெண்கள் நெருங்கிப் பழகவும் சேர்ந்து படிக்கவும் இடம் கொடுத்துவிட்டால், கண்டிப்பாய் இன்றைய தினம் பெண்களுக்கு உள்ளது போன்ற அடிமை நிலை,அடுப்பூதும் நிலை,குழந்தை வளர்ப்பு,கும்மி,கோலாட்டம்தான் ஏற்றது என்ற நிலை பறந்தோடிப் போய்விடும்.

“பெண்கள் யாவரும் படிக்க வேண்டும்.அரசங்காத்தின் உத்தியோகங்கள் பெரும்பாலும் இனி பெண்களுக்கே வழங்கப்படுமாதலால் அவர்கள் படித்துத் தயாராய் இருக்க வேண்டும்.படித்த பெண்களையே ஆண்கள் மணக்க விரும்புவதாலும் பெண்கள் அவசியம் படிக்க வேண்டும்”.

“பெண்களுக்கு கும்மியும் கோலாட்டமும் கற்றுத்தருவதை ஒழித்துவிட்டு ஓடவும்,குதிக்கவும்,தாண்டவும் கைக்குத்து,குஸ்தி முதலியவற்றைச் சொல்லிக் கொடுத்து ஒரு ஆண்பிள்ளைக்கு உரிய பலம்,தைரியம்,உணர்ச்சி ஆகியவைகள் பெண்களுக்கும் உண்டாகும் படியாகச் செய்ய வேண்டும்.”

ஆண்களுக்கு ஏற்ற கலை வேறு, பெண்களுக்கு ஏற்ற கலை வேறு என்று சொல்லும் புத்தியை அறவே ஒழிக்க வேண்டும்.

ஆண்கள் படிக்காவிட்டாலும்கூட முதலில் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும்.பெண்கள் படித்து விட்டால் ஆண்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்கள்.ஆண்கள் இவ்வளவு அயோக்கியர்களாக இருப்பதற்குக் காரணம் பெண்கள் படித்து அறிவு பெறாமலிருப்பதுதான்” என்று பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் பெரியார்,

பெண்கள் உண்மையான மனிதப் பிறவிகளாக நடமாட வேண்டுமென்றால் மூன்று காரியங்கள் உடனே செய்யப்பட வேண்டும் முதலில் அடுப்பங்க்கரையை விட்டு அவர்கள் வெளியே வர வேண்டும்,இரண்டாவதாக நகைப் பற்றை அவர்களிடமிருந்து விரட்ட வேண்டும்,மூன்றாவதாக தற்போதுள்ள திருமணச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்.பெண்கள் பதவிகளில் அமர்ந்துவிடுவார்களேயானால் மேற்குறிப்பிட்ட மூன்றும் தாமே படிப்படியாக நிறைவேறிவிடும்.பெண்களுக்கு எல்லாவிதமான வேலையும் கிடைக்கும்படியாக அரசாங்க விதிகளைத் திருத்த வேண்டும் என பெரியார் குறிப்பிட்டதை எல்லா வேலைகளிலும் 50% பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என பெரியார் வலியுறுத்தியதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். “அவர்தந்த சிந்தனைகள் ஒற்றடைக் கொம்புகள் எங்கள் மூளைகளின் மூலை எல்லாம் மூடி மறைத்திருந்த நூலாம்படையை அந்த கம்போன்றோ அடித்தது”என்று கவிஞர் அப்துல் ரகுமான் கூறுவதைப் போல பெண்ணடிமை என்னும் நூலம்படையை பெரியார் எப்படியெல்லாம் நீக்கினார் என இந்நூல் மூலம் அறியலாம்.

உண்மையைக் காண வேண்டும் என்ற உணர்வோடும் சரியானதையே ஏற்க வேண்டும் என்ற முடிவோடும் சமுதாய பொறுப்போடும் கடவுள் உண்டா?என்ற ஆய்வை பெரியார் நிகழ்த்தி அதன்முடிவுகளை உலகுக்கும் எடுத்துக் கூறினார்.கடவுள் இல்லை என்பதனையும் கடவுள் நம்பிக்கையால் ஏற்படும் சீரழிவையும் நுட்பமாக ஆய்வு செய்து பெரியார் விளக்கியுள்ளார்.அவருடைய ஆய்வு அறிவு பூர்வமானது பிடிவாதமோ விதண்டாவாதமோ அவரிடம் இல்லை என பக்கம் 127-ல் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.புராண ஆய்வில் புகழ்பெற்ற பெரியார் என்னும் தலைப்பில் தன்னுடைய பிரச்சாரத்தில் பெரியார் பட்ட துன்பங்களை விளக்குகிறார்.அழுகிய முட்டை,செருப்பு,பாம்பு ஆகியவை அவர்மீது வீசப்பட்டன அப்போதுகூட பெரியார் அவர்களின் அறியாமையைக் கண்டு வருந்தினாரே அவர்களின் செயல்களுக்காக வருத்தப்படவில்லை. “ஆக்காத நூலில்லை ஆய்ந்து தேர்ந்து அளிக்காத கருத்தில்லை அழுத்தமாக தாக்காத பழைமையில்லை தந்தை நெஞ்சில் தழைக்காத உவமையில்லை தமிழ் நிலத்தில் நீக்காத களை இல்லை” என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டதைப் போல களைகளை நீக்க பெரியார் பட்டபாடுகள் விரிவாக நூலாசிரியரால் கூறப்படுகின்றன.

சிறிது காலத்திற்கு மக்கள் தொடர்ச்சியாக திருக்குறளைப் படித்து மனதில் ஆழப்பதியவைத்து வருவார்களானால் நம் நாட்டில், நம் மக்கள் வாழ்வில் ,நம் மக்கள் உள்ளத்தில் ஒரு புதிய உணர்ச்சி உறுதியாக ஏற்படும் என்பது என் கருத்து.மேலும் திருக்குறள் ஒன்று போதும் இந்நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை உண்டாக்க,ஒழுக்கத்தை உண்டாக்க வேறு மத நூல்கள் தேவையில்லை என்று கூறிய பெரியார் திருக்குறளை அச்சேற்றி மலிவு விலையில் எல்லோரும் படிக்கும்படி செய்தார்.திருக்குறளைப் பரப்ப பல மாநாடுகளை நடத்தினார்.பண்டிதர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த திருக்குறளை பாமரனும் படித்து பயன் பெறும் படி செய்த பெருமை பெரியாரைச் சாரும் என பக்கம் 170-ல் குறிப்பிடுகின்றார்.

இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டு ஏற்கப்பட்டபின் முதன்முறையாக திருத்தம் செய்யப்பட்டது.பெரியாரின் போராட்டத்திற்காக இடஒதுக்கீட்டிற்காக என்பது இந்திய வரலாற்றின் ஒரு சிறப்பிற்குரிய பெருமையாகும் என பக்கம்203-ல் குறிப்பிடுக்கின்றார். போராடு புரட்சிப்பாதை ஈரோடு என்னும் தலைப்பில் பெரியார் நடத்திய போராட்டங்களும் பெற்ற சிறைத்தண்டனைகளும் வரிசையாக்க் குறிப்பிடப்பட்டுள்ளன. “எரிமலையாய் சுடுதழலாய் இயற்கைக்கூத்தாய் எதிர்ப்புகளை நடுங்க வைக்கும் இடியொலியாய் இன உணர்வு தீப்பந்தப் போராளியாய் இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடு வாளாய்... எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்” என கலைஞர் அவர்கள் கூறியதைப் போல பெரியார் வாழ்ந்திட்டார் என்பதனை வரிசைப்படுத்துகிறார் நூலாசிரியர்.

இன்னல்களுக்கிடையே இறுதிவரை என்னும் தலைப்பில் பெரியாருக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளையும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சிங்கமென மேடைகளில் இறுதிவரை முழங்கியதையும் குறிப்பிடுகின்றார். “தமிழ்நாட்டின் சமூக விழிப்பு ஏற்பட பெரியார் ஆற்றிய பணி அவர் வகித்தப் பாத்திரம் மிகப் பெரியது.அவர் ஒரு மாபெரும் தேசபக்தர்” என்று பெருந்தலைவர் காமராசர், “ பெரியார் நயமிக்கதோர் தலைவர்,வீரமிக்கதோர் போராட்டக்காரர் “ என அன்றைய குடியரசுத்தலைவர் வி.வி.கிரி, “ஏற்றுக்கொள்ளப்பட்ட பல கருத்துக்களை எதிர்த்து அறைகூவி நின்றவர் பெரியார்” என அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, “பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஜாதி,மூட நம்பிக்கைகளை முழுமூச்சாக எதிர்த்த பெருந்தலைவர், இந்தியாவில் அவரைப் போன்று ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது” கொடுமைக்கு எதிராய் பெரும்போர் தொடுத்தவர்“ என ஜெயப்பரகாஷ் நாராயணன், “தமிழர் சமுதாயம் தனது பாதுகாவலரை –இன மொழி உயர்வுகளுக்காக அரசியல் பொருளாதார விடுதலைக்காகப் போராடி ,போராட்டத்திலேயே தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த விடுதலை வீரரை இன்றைக்கு இழ்ந்துவிட்ட்து “ என எம்.ஜி.ஆர் எனத் தலைவர்கள் தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு திசம்பர் 24-ம் நாள் மறைந்தபொழுது விடுத்த அறிக்கைகளை கடைசிப்பக்கங்களில் கொடுத்துள்ளார் நூலாசிரியர்.

“நின் அடையாளம் தாடியும் தடியும், நீதான் எங்கள் அடியும் முடியும்” என்பார் பெரியார் பற்றி கவிஞர் வைரமுத்து. அப்படித் திகழ்ந்த தந்தை பெரியாரின் வாழ்வை முழுமையாக அறிய படித்துப்பாருங்கள் !சமூகத் தொண்டாற்றும் விழிப்புணர்வு பெறுங்கள்!
நூலின் பெயர் “இவர்தான் பெரியார்”, ஆசிரியர் மஞ்சை வசந்தன் . கோவை விஜயா பதிப்பகம் , பக்கம் 216. விலை ரூ75. .

No comments: