Wednesday, 12 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக் கவிஞரும்

நமது சமூகம் சாதிகளால் ஆன சமூகம். மனிதர்களை சாதியால் மட்டுமே பல நேரங்களில் அடையாளப்படுத்தும் சமூகம். செத்த பின்பும் கூட இன்றும் தனித்தனியாய் சுடுகாடும் இடுகாடும் வைத்து மனிதர்களைப் பிரித்து எரிக்கும்,புதைக்கும் சமூகம். குறிப்பிட்ட மக்களை மனிதர்களாய் மதிக்காது மாடுகளைப் போல மதித்து மனநிலையில் இன்னும் விலங்குகளாய் இருக்கும் கேடு கெட்ட சமூகம். புராதனப் பெருமையுனும் புணுகு பூசி ,சாதியால் அழுகிக்கிடக்கும் சமூகத்தை மணக்க வைக்க முயற்சி செய்யும் சமூகம். இப்போது இருக்கும் நிலையைப் போல நூறு மடங்கு சாதி இறுக்கமாய் இருந்த நேரத்தில்தான் பொது வாழ்வில் தந்தை பெரியார் நுழைந்தார். எனக்குச் சரியெனப்பட்டதைச் சொல்வேன், எனக்குச் சரியெனப்பட்டதை- இந்த சமூகம் மேன்மையுறச் செய்வேன். அதற்காக நீ கொடுக்கும் சிறைத்தண்டனையை ,அவதூறுகளை,அவமானங்களைச் சகித்துக்கொள்வேன். சாதி ஒழிப்பே எனது வாழ்வின் இலட்சியம் எனக்கொண்டு சுழன்று சுழன்று பணியாற்றினார். தனது பணியில் பெரும் வெற்றியும் கண்டார்.

தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புக் களத்திலே தோளோடு தோள் நின்றவர்கள் பலபேர். தங்களது வாழ்க்கையை, சொத்தை, சுகத்தை அனைத்தையும் துறந்துவிட்டு தலைவா, நீ ஆணையிடு,சாதியை ஒழிக்க நீ ஆணையிட்டு களம் அமைத்தால் சாதாரண சிறை என்ன, கடும் சிறையையே சந்திக்கத் தயார் எனத் தந்தை பெரியாரின் பின்னால் நின்று, சிறையேகி செத்து மடிந்த சுயமரியாதைச் சுடரொளிகளின் நாடு இந்தத் தமிழ்நாடு.பதவியா, பணமா, புகழா எதுவும் வேண்டாம் எங்களுக்கு, நம்மைப் பிடித்து ஆட்டும் இந்தச் சாதி செத்துத் தொலையட்டும் என்பதற்காக தங்களைத் தாங்களே கருக்கிக் கொண்ட கருப்பு மெழுகுவர்த்திகளின் நாடு இந்தத் தமிழ்நாடு.1957-ல் சாதி ஒழிப்புக்காக இந்திய அரசியல் சட்ட்த்த்தையே எரித்து சாரை சாரையாய் சிறையேகிய சாதி ஒழிப்புத் தீரர்களின் நாடு இது.

தந்தை பெரியாரின் பெரும்படையில் இணைந்து சாதி ஒழிப்பும் போரில் பணியாற்றிய, பணியாற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்கள், தோழியர்கள் மேடைப் பிரச்சாரம் என்றாலும், திண்ணைப்பிரச்சாரம் என்றாலும் பயன்படுத்தும் கவிதை வரிகள் சில உண்டு. ரசிய மண்ணைப் பக்குவப்படுத்துவதற்கு தோழர் லெனினுக்கு கிடைத்த மார்க்சிம் கார்க்கி போல தந்தை பெரியாருக்கு கிடைத்த இலக்கியவாதி அவர். போர்க்களத்திலே எதிரிகள் சுற்றி வளைக்கும்போது,போராடும் வீரரின் கையிலே இருக்கும் கத்தி போல, கேடயம் போல ஆண்டாண்டு காலமாய் இந்தச் சமூகத்தை சாதியெனும் சங்கிலியால் கட்டிப்போட்ட சதிகாரர்கள் சுற்றி இருக்கும் நிலையிலே, அவர்கள்தான் நம்மைக் காப்பவர்கள் என்று தமிழர்கள் எண்ணி ஏமாந்து நிற்கும் நிலையிலே அவர்களின் சிந்தையிலே சுருக்கென்று தைக்கும் அளவுக்கு சொல்வதற்கு சில சாதி ஒழிப்புக் கவிதைகள் தமிழில் உண்டு – அந்தக் கவிதை வரிகளுக்கு சொந்தக்காரர் புரட்சிக் கவிஞர்.

பாரதிதாசன் என்று தன்னை அழைத்துக்கொண்டாலும் தமிழன் எவனுக்கும் எந்த நாட்டுக்கும் தாசனாக இருக்கக்கூடாது என்பதற்காகப் பாடிய தமிழ்ப்புலவர் புரட்சிக்கவிஞர். சாதியால் வெந்து, நொந்து புலம்பிக்கொண்டிருந்த தமிழன் கைகளிலே சாதி ஒழிப்பு அணுகுண்டுக் கவிதைகளை கொடுத்த தன்மானப்புலவன். “மனிதரில் நீயுமோர் மனிதன், மீசை முறுக்கு,எழு,விழி, கொலை வாளினை எட்டா, மிகு கொடியோர் செயல் அறவே” எனத் தீரம் பாடிய செந்தமிழ்க்கவிஞன் .தமிழ்க் கவிதைகளைப் பொறுத்தவரை தனக்குப் பின்னால் தமிழை ஆள பரம்பரைக் கவிஞர்களை தந்து சென்ற பாவேந்தன். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிஞர்களில் வேறு எவரும் எழுதாத அளவுக்கு 41000 வரிகளை எழுதிக் குவித்த சுயமரியாதைக் கவிஞன். தனது கவிதை வரிகளைப் படிப்பதாலேயே படிப்பவனுக்கு உணர்ச்சியும் மனதிலே அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் எனும் கிளர்ச்சியும் தந்த கவிஞன், தமிழுக்கு கிடைத்த பெரும்கொடையாம் புரட்சிக் கவிஞர் சுயமரியாதை இயக்கத்தவர்களைத் தவிர மற்றவர்களால் புகழப்பட்டாரா? ஏற்றுக் கொள்ளப்பட்டாரா? இல்லை, இல்லை, மறைக்கப்பட்டார், மிகச் சாதுர்யமாக ஒதுக்கப்பட்டார், மிகத் தந்திரமாக முற்போக்கு முகமூடி அணிந்தவர்களால் கூட விலக்கி வைக்கப்பட்டார். ஏன்? ஏன்?....
வா.நேரு 13-10-11

No comments: