Tuesday, 11 October 2011

எங்கள் முத்தான புரட்சிக் கவியே !

கோவில் பல கட்டும் தமிழர்கள் பலர் கல்வித்தந்தைகளாகவும் இருக்கின்றார்கள் . கல்லூரிகளில் விளக்குபூஜை நடத்துகின்றார்கள், ஏன் சில கல்லூரிகளில் யாகம் கூட நட்த்துகின்றார்கள். இந்திய அரசியல் சட்டத்திற்கு நேர் விரோதமான செயல் என்றாலும் கூட இதனை நடத்துகின்றார்கள். மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டிய கல்விக்கூடங்கள் இவர்களைப் போன்றவர்களால் பாழ்படுத்தப்படுகின்றன. சில கல்விக்கூடங்களில் கோவில் கட்ட சித்தாள்களாக மாணவ , மாணவியர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள் .ஏதோ ஒரு கோவிலைக் கட்டி விட்டால் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டதைப் போல பெருமைப்பட்டுக்கொள்கின்றார்கள். இவர்களைப் பற்றி, இன்று இவ்வளவு சுய நிதிப் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், மெட்ரிக் பள்ளிகள் இருந்தாலும் கூட இவையெல்லாம் புற்றீசல் போல வராத காலத்தில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாடுகின்றார் பாருங்கள்

“ நேர்மையின்றிப் பிறர்பொருளில்
தம் பெயரால் கல்லூரி
நிறுவிப் பெண்ணைச்
சீர்கெடுத்தும் மறைவழியாய்ச்
செல்வத்தை மிகவளைத்தும்
குடி கெடுத்தும்
பார் அறியத் தாம் அடைந்த
பழியனைத்தும் மறைவதற்குப்
பார்ப்பான் காலில்
வேர் அறுந்த நெடுமரம்போல்
வீழ்ந்தும் அவன் விட்டதுவே
வழியாம் என்றும்”
கூறுகின்றார். ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து, பக்தி என்பது தனிச்சொத்து என்பார் தந்தை பெரியார். ஒருவனுக்கு பக்தி இல்லாவிட்டால் சமூகத்திற்கு நட்டமில்லை, ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் சமூகத்திற்கு கேடு என்பார்.

பார் அறியத் தாம் அடைந்த பழியனைத்தும் மறைவதற்குப் பார்ப்பான் காலில் வேர் அறுந்த நெடுமரம் போல வீழ்கின்றார்கள் ‘கல்வித்தந்தைகள்’ என்று சொல்கின்றார் . கணிதத்தில் நேர்விகிதம் (directly proportional) என்று சொல்வார்கள். அதைப் போல ஒழுக்கக்கேடு என்பது பக்திக்கு நேர் விகிதம் என்று பாடுகின்றார் புரட்சிக் கவிஞர். திரு. கிருபானந்தவாரியார் அவர்கள் “ பக்தி வளர்ந்திருக்கிறது, ஆனால் ஒழுக்கம் வளரவில்லை” என்று சொல்லியதை இங்கு நினைவு கூறலாம். பக்தி வளர்ந்தால் ஒழுக்கம் வளராது, குறையத்தான் செய்யும், ஒழுக்கம் வளரவேண்டும் என்று சொன்னால் பக்தி குறைய வேண்டும நாட்டில் .ஒழுக்கக்கேட்டை மறைக்கப் பயன்படும் முகமூடிதான் பக்தி என்னும் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வரவேண்டும்.

தமிழ்ச் சொற்களை
பார்ப்பன எதிர்ப்பின்
ஆயுதங்களாய்
வார்த்தெடுத்த
முதல் கவியே !
எங்கள் முத்தான
புரட்சிக் கவியே !

காட்டாற்று வெள்ளமாய்
கரை புரளும் உனது
கவிதைப் பரப்பில்
இரு கரைகளாய்
தமிழ் உணர்வும்
தன்மான உணர்வும்

புத்துணர்வு பெறுகின்றேன்
ஒவ்வொரு முறையும்
உனது
கவிதைகளைப் புரட்டும்போது
புதிய உணர்ச்சியும்
மகிழ்ச்சியும் பெறுகின்றேன்
ஒவ்வொரு முறையும்
உனது கவிதைகளை
மனப்பாடமாய்
மனதில் கொள்ளும்போது!

வா.நேரு – 12-10-2011

No comments: