Monday, 12 November 2012

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்

                                  அண்மையில் படித்த புத்தகம்

    புத்தகத்தின் தலைப்பு  : ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்
    ஆசிரியர்                           : மாலினி சிப்
     தமிழில்                             : ஐஸ்வர்யன்
     வெளியீடு                        : விகடன் பிரசுரம் ( 628)
     முதற்பதிப்பு                    :  டிசம்பர் 2011
     மொத்த பக்கங்கள்       :    248        
      விலை                             :  ரூ 100

                                                          சுயசரிதையை படிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த செயல். அந்த வகையில் மாலினி சிப் என்னும் பெண்ணின்  இந்த சுய சரிதை என்பது அற்புதமான ஒரு வாசிப்பு அனுபவமாகவும் , அதே நேரத்தில் சமூக சிந்தனையோடு சுயபரிசோதனை செய்யும் விதமாகவும் அமைந்தது என்றால் அது மிகையில்லை.

                                                     தன் கதையை தானே விவரிக்கும் விதமாக அமைந்த இந்த மாலினி சிப்பின் வரலாறு என்பது படிக்கும் பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடியது. பிறவியில் ஏற்படும் சிறு குறைபாடுகளுக்கே அலுத்துக்கொண்டு வாழ்வில் சலித்துக்கொள்வோர் எல்லாம் அவசியம் படிக்க வேண்டிய கதை இது.

                                                    "செரிப்ரல் பால்ஸி' நோய் என்றால் என்ன்வென்று இந்த நூலைப் படிப்பதற்கு முன்னால் எனக்குத் தெரியாது , ஆனால் இந்தப்புத்தகத்தைப் படித்துமுடித்தபோது அந்த நோய் என்ன செய்யும் , அந்த  நோய் பாதிப்பு ஏற்பட்டால் குடும்பத்தினர் செய்ய வேண்டியது என்ன, சமூகத்தினர் செய்ய வேண்டியது என்ன  போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலும், அப்படிப்பட்ட இயல்பான ஒரு பதிவாக இப்புத்தகம் அமைந்துள்ளது இதன் சிறப்பு.

                                                   இந்தப் புத்தகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி - வேர்கள் என்ற தலைப்பில் 1 முதல் 72 பக்கம் வரை. டாக்டர்கள் சொன்னது பொய்யாப்போச்சு என்னும் முதல் அத்தியாயம் 1966 -ஜீலை மாதம் மாலினி சிப் பிறந்தது, இயல்பான வளர்ச்சி இல்லாததால் , பரிசோதனைகள் மூலம் 'செரிப்ரல் பால்ஸி' என்ற நோய் பாதிப்பு மாலினி சிப்பிற்கு உள்ளது என்பதனை கண்டுபிடித்தது, கடைசிவரை இந்தக் குழந்தை காலம் முழுக்க படுக்கையிலே கிடப்பாள் என்னும் மருத்துவர்களின் கூற்றை மாலினி சிப்பின் பெற்றோர்கள் மனதளவில் மறுத்து மாற்று வழி தேடியது, மாலினி சிப்பின் மருத்துவத்திற்காகவே இவரது பெற்றோர்கள் லண்டனுக்கு சென்றது என்று பல தகவல்கள் கதையாக விவரிக்கப்பட்டுள்ளன.

                                               மாலினி சிப்பின் 6 வயதில் இந்தியாவுக்கு வருகின்றார்கள். லண்டன் பள்ளிக்கும் , இந்தியாவில் கிடைத்த அனுபவத்திற்கும் உள்ள வேறுபாட்டை மாலினி சிப் பக்கம் 34-ல் குறிப்பிடுகின்றார் இப்படி " அந்தப்பள்ளியைச் (லண்டன்) சேர்ந்தவர்கள் , வார்த்தை விவரிக்கு அப்பாற்பட்டு, அன்பாக, இதமாக, உணர்வுபூர்வமாக என்னோடு பழகியதை, எனக்குச் சம உரிமைவழங்கிப் பராமரித்த்தை இன்றளவும் என்னால் மறக்க இயலவில்லை. கண்ட நாள் முதலே அவர்கள் என்னை ஒரு சிறுமியாகத்தான் பார்த்தார்களே தவிர ' ஊனமுற்ற சிறுமி'யாக அல்ல.ஆனால் .இந்தியாவில் கிடைத்த எதிர்மறையான அனுபவமோ சொற்களால் ,வெளிப்படுத்த முடியாத அளவு வலியும் வேதனையும் தந்திருந்தது....முரட்டுத்தனம்,அதிகாரப்போக்கு, அகந்தை, மிரட்டும் போக்கு என சகல கருப்பு அம்சங்களும் நிறைந்திருக்க...அவர்கள் அளித்த சிகிச்சைகள் என்னைக் குணப்படுத்தாமல் காயப்படுத்தின " .

                                                  குழந்தைப் பருவ நிகழ்வுகள், மாலினி சிப்பின் அப்பாவிற்கும் அம்மாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு, அதனால் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட விவாகரத்து, கணவரைப் பிரிந்த வேதனையை வெளிக்காட்டாமல் அவரது அம்மா அவரை வளர்த்தது, சிறப்புப்பள்ளியில் படித்தது, ஹாஸ்டல் வாழ்க்கை எனத் தன் குழ்ந்தைப் பருவ நிகழ்வுகளை விவரிப்பதாக - வேர்கள் என்னும் இந்த முதல் பகுதி அமைந்துள்ளது. எலெக்டிரிக் நாற்காலி என்னும் அந்த கருவி எவ்வளவு தூரம் அவரது வாழ்க்கையை மாற்றியது என்பதனை விவரிப்பது அருமை.

                                                  நூலின் இரண்டாம் பகுதியான வளர் பருவத்தில் (பக்கம் 73 முதல் 132 வரை )  மாலினி சிப்பின் இளமைக்காலமும் படிப்பும் விவரிக்கப்பட்டுள்ளது. பம்பாயின் புனித சேவியர் கல்லூரியில் பி.ஏ. படித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றார். " பொதுவாகப் பத்திரிக்கைக்காரர்கள் திரும்ப திரும்ப கேட்ட ஒரு கேள்வி, கல்லூரியில் படித்த காலத்தில் நான் மற்றவர்கள் மத்தியில் வித்தியாசமாக உணர்ந்தேனா என்பதே. நிச்சயமாக உணர்ந்தேன். செயிண்ட் சேவியர் கல்லூரிக் காலத்தில்தான் அந்த வித்தியாசம் நேரடியாக என்னைத் தாக்கிற்று. " பக்கம் -75  எனக்குறிப்பிடும் மாலினி சிப் மேலை நாட்டுப்படிப்பையும் நமது நாட்டுப் படிப்பையும் ஒப்பிடுகிறார். மிகவும் நன்றாகப் பாடம் நடத்தும் உமா என்னும் ஆசிரியர் இறுக்கமாக மாணவிகளிடம் நடந்து கொள்ளும் தன்மையை சொல்லும் விதம் நன்றாய் உள்ளது. ஒயினை ருசித்ததைப் பற்றித் தனி அத்தியாயமே உள்ளது. கன்னிப்பருவத்திலே என்னும் தலைப்பில் அமெரிக்கா சென்றிருந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றார் மாலினி சிப். " எனது அமெரிக்கப் பயணமே எனது கண்களைத் திறந்த பெருமைக்கு உரியது. தங்களுக்கென ஒரு வாழ்க்கையை கவுரமாக வாழும் அத்தனை மாற்றுத்திறனாளிகளை நான் அமெரிக்கபயணத்துக்கு முன் சந்தித்தே இல்லை " என்று சொல்லும் அவர் மாற்றுத் திறனாளிகள் பற்றிய சமூகப் பார்வையைச் சொல்கின்றார். " மாற்றுத் திறனாளிகள் எப்போதுமே அடுத்தவரைச் சார்ந்தவர்கள் என்றும், வேறு கதி இல்லாதவர்கள் என்றும்தான் நமது சமுதாயம் குறுகிய பார்வை கொண்டிருக்கிறது. அது நியாயமா ? முதலில் நாங்களும் மனிதர்கள். அப்புறம்தான் மாற்றுத்திறனாளிகள் . ஆனால்,பெரும்பாலோர் கண்ணுக்கு மாற்றுத்திறனாளிகளின் குணங்கள் கண்ணுக்குத் தெரிவதற்குமுன்  அவர்களின் அங்கக் குறைபாடுதான் கண்ணுக்குத் தெரிகிறது" பக்கம் -114.
இதனைப் போன்ற பல்வ்று தன்னுடைய  மன் ஓட்டங்களை இந்த நூலில் பதிந்திருக்கின்றார் மாலினி சிப்.

                                                 நூலின் மூன்றாம் பகுதியான சுதந்திரக்காற்றில் , மறுபடியும் லண்டன் சென்றதைப் பற்றி எழுதியுள்ளார். பேசுவதிலும் எழுதுவதிலும் தனக்கு இருந்த பிரச்சனையை சரிசெய்யப் பயன்பட்ட கருவிகளைச் சொல்கின்றார். " இமெயில் வசதி என் வாழ்க்கையில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது எனலாம் . அனைவருடனும் என்னால் சுயமாகவே தொடர்புகொள்ள முடிந்தது" - (பக்கம் 151) எனச்சொல்லும் மாலினி சிப் இணையமும் , எழுது உபகரணமும்  தன் வாழ்வில் ஏற்படுத்திய மாற்ற்த்தை விவரிக்கும் விதம் அருமை. 'சொந்தக் காலில்'  நிற்கும் திறனையும் துணிச்சல்காரியாக மாறியதையும் சொல்கின்றார். வாகை சூடினேன் என்னும் தலைப்பில் " அந்த ஒற்றைச் சிறு விரல்  எனது வல்லமையின் பொக்கிஷமாக இருந்தது. சிரமமின்றி இமெயிலை உபயோகித்தேன் . " எனக்குறிப்பிடும் மாலினி சிப், எழுத்தாளர் ஜென்ஸி மோரிஸின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டதை விவரிக்கின்றார். அவரை " மாற்றுத் திறனாளிப்  பெண் ஒருத்தி அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளப்போராடிக் கொண்டே , புற உலகோடும் இணைந்து செய்ல்படும்போது சந்திக்க நேரிடும் சிரமங்களை விளக்கமாகச்சொல்லி, பெரியதொரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார் " (பக்கம் 182) எனக்குறிப்பிடுகின்றார்.

மாற்றுத்திறனாளிகள் செக்ஸ் ரீதியாக புறக்கணிக்கப்படுவதை மிக விரிவாக எழுதும் மாலினி சிப், "நீ ஊனமுற்றவள், உனக்கு செக்ஸ் கிடையாது " என்னும் தன் கட்டுரையின் தாக்கம் பற்றியும் விவரிக்கின்றார். ' பெண்ணியம் பற்றி தெரிந்தால்தான், நமது அன்றாட வாழ்வை அலசி ஆராய்ந்தால்தான் பெரிய அளவிலான பெண் அடக்குமுறையை எதிர்த்துப்போராட முடியும் எனும் விழிப்பு உணர்வு எனக்கு ஏற்பட்டது " (பக்கம் - 188) எனச் சொல்கின்றார் .என்னாலும் வாழமுடியும் என்று தன்னம்பிக்கை பெற்றதையும் , இன்னொரு எம்.ஏ.பட்டம் பெற்றதையும் விவரிக்கின்றார். தன்னுடைய துன்பத்தையும் குறிப்பிட்டுச்சொல்கின்றார். " மற்றவர்களுக்கெல்லாம் ஒரு மணி நேரமே ஆகக்கூடிய ஒவ்வொரு பணியும், ஒற்றை விரலைக்கொண்டு செய்து முடிக்க எனக்கு ஒரு நாள் ஆகிவிடும் " என்பதைச் சொல்கின்றார் . தனக்கு மும்பையில் வேலை கிடைத்த்தையும் , ADAPT ( Able Disabled All People Together) என்னும் அமைப்புக்கு உயிரூட்டியதையும் அதில் வேலை செய்து மாற்றுத் திறனாளிகளை ஒன்றிணைத்தையும் குறிப்பிடுகின்றார்.
                 2004-ல் மும்பை மராத்தான் ஓட்ட பந்தயத்தின் பந்தய விதிமுறைகளில் " சக்கர நாற்காலிகளுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை " எனும் குரூரமான வாசகமும் அதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்ததை, போராடியதை மாலினி சிப் பதிந்துள்ளார்.

                தனக்கு ஏற்பட்ட அவமானங்களை, அவமதிப்புக்களை, ஒதுக்கப்பட்டதை மிக நுட்பமாக நூல் முழுவதும் பதிந்துள்ளார் மாலினி சிப். " ஒருவருக்கு  மட்டுமே தனிப்பட்ட முறையில் நிகழ்வு நிகழ்ந்ததுகூட சக்தி மிக்க ஆயுதமே . அதை மறைப்பதும் ,புதைப்பதும் கூடவே கூடாது. அது மக்கள் மத்தியில் பேசப்பட்டு, ஆதரவு திரட்டப்படும் பட்சத்திலேயே பின்னாளில் அது போன்ற அவலம் நிகழாமல் தவிர்க்க இயலும்" (பக்கம் 234 ) . ஆம் உண்மைதான், இந்த நூலின் நோக்கத்தை விளக்கும் பகுதி இது எனலாம்.

                                                      மாற்றுத் திறனாளிகள் மற்ற நாடுகளில் மனித நேயத்தோடு அணுகப்படுவதற்கும் , நமது நாட்டில் அவ்வாறு அணுகப்படாமைக்கும் என்ன காரணம் என்பதனை மாலினி சிப் சொல்லும் விதம் சிந்திக்கத்தக்கது, மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படவேண்டியதும்கூட " ஒழுங்கற்ற எங்கள் உடல்களை மட்டும் பார்த்து மதம் சார்ந்த நம்பிக்கையாக முற் பிறப்புப் பாவங்களின் சின்னமாகவே எங்களைக் கணிக்கிறார்கள். பல தடவை ' நான் அப்படி என்ன பாவம் செய்து விட்டேன் ? ' என்று நிஜமாகவே  நான் யோசித்தது உண்டு " பக்கம் - 244. இந்த்  நாட்டில் மாற்றுத் திறனாளிகள் ஏன் மனிதாபிமானத்தோடு நடத்தப்படுவதில்லை என்றால், இவர்கள் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள், அதனால் இப்படி இருக்கின்றார்கள் என்னும் மன்ப்பான்மை ஊறிப்போயிருக்கிறது என்கின்றார். ஒரு கொலைகாரனுக்கு தண்டனை கிடைத்தால்  எப்படி மக்கள் அவன் செய்த செயலுக்கு தண்டனை என்று நினைக்கின்றார்களோ , அதைப்போல மாற்றுத்திறனாளிகள் என்றால் அவர்கள் முற்பிறப்பில் கொடுமை செய்தவர்கள் என்ற நினைப்பு மக்கள் மத்தியில், மதத்தின் அடிப்படையில் இருக்கிறது என்கின்றார்.

                                                                        இந்த நூல் என் அம்மாவுக்கு என்று மாலினி சிப் காணிக்கையாக்கியுள்ளார். மாலினி சிப்-ன் வெற்றிக்கு அவரது அம்மா எவ்வளவுதூரம் உறுதுணை என்பதனை படித்துப்பாருங்கள் , புரியும்.இப்படி அம்மாக்கள் வாய்த்தால், எந்த மாற்றுத்திறனாளியும் மனம் கலங்க மாட்டார்கள். படிக்க வேண்டிய புத்தகம், மற்றவர்களையும் படிக்கச்சொல்ல வேண்டிய புத்தகம். ஒரு நல்ல புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்த ஐஸ்வர்யனுக்கும், சிறப்பாக வெளியிட்டுள்ள விகடன் பிரசுரத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

7 comments:

கருப்பையா.சு said...

தோழர் நேரு, இந்த நூலின் ஆசிரியர் மாலினி சிப் அவர்களுடன் நூல் முழுவதும் சேர்ந்தே பயணித்துள்ளார் என்றே கருதுகிறேன். ஒரு தேர்ந்த படைப்பாளன் நல்ல வாசகனுமாய் இருப்பான் என்பதற்கு நேரு உதாரணம். நான் படித்த மிகச்சிறந்த புத்தக வாசிப்பனுபவம் இது தான். நன்றி நேரு. கட்டாயம் வாசிக்கிறேன்

முனைவர். வா.நேரு said...

மகிழ்ச்சி.நன்றிங்க அண்ணே...நன்றி பல ஆண்டுகள் கடந்தும் சொல்லலாம்...

Anonymous said...

அருமை அண்ணா!! புத்தகத்தை படிக்க தூண்டியமைக்கு நன்றி!!

Jamuna Ramajeyam said...

அருமை அண்ணா!! புத்தகத்தை படிக்க தூண்டியமைக்கு நன்றி!!

Jothi S Themozhi said...

நல்லதொரு நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி தோழர்

முனைவர். வா.நேரு said...

மகிழ்ச்சி.நன்றி தங்கையே

முனைவர். வா.நேரு said...

@Jothi S Themozhi..நன்றி தோழர்.