Tuesday 14 January 2014

நிகழ்வும் நினைப்பும் (12) : அயல் நாட்டு அனுபவங்கள்

மதுரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் 12.1.2014 நடைபெற்ற கூட்டத்தில் 'அயல் நாட்டு அனுபவங்கள் ' என்னும் தலைப்பில் , மதுரை  மாநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சே.முனியசாமி சிறப்புரையாற்றினார். இளமையில் மிகவும் வறுமை நிலையில் இருந்த தான் வளர்ந்த நிலையையும் , வாழ்வில் உயர்ந்த நிலையையும் விவரித்துப் பேசுவதென்றால் 10 மணி நேரம் ஆகும் என்றார். உண்மைதான், அவ்வளவு அனுபவ்ங்கள், துயரங்கள் அவரின் வாழ்க்கையில் உள்ளது. அவருடைய அனுபவங்களை என்னிடம் (விஜயவாடா, நாக்பூர் போன்ற வெளிமாநிலங்களில் உள்ள இடங்களுக்கு சென்ற நேரங்களில்) விவரித்திருக்கின்றார். 3, 4 நாவல்களுக்கு உரிய கதைக்கரு உங்களிடம் இருக்கிறது என்று நான் அவரிடம் சொல்லியிருக்கின்றேன்.

                    அய்யா முனியசாமியின் வய்து 65. தன்னுடைய பிள்ளைகளை எல்லாம் ஆளாக்கி, அவரவர்க்கு வருமானம் வருவதற்கான கடை முதலிய ஏற்பாடுகளைச்செய்து நிம்மதியாக இருப்பவர். தன்னுடைய 50 வய்து வரை ஆத்திகராக இருந்தவர். 50 வயதிற்குப்பின்புதான், தந்தை பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக, திராவிடர் கழக உறுப்பினரானவர். செம்மையாக இருக்கும் அவர், 2010-ல்தான் வெளி நாடு போக ஆரம்பித்திருக்கின்றார். இதுவரை 14 நாடுகள் போய் வந்திருக்கின்றார். இந்த ஆண்டு 6 நாடுகள் போகப்போகின்றார். தான் பார்த்த சீனா, எகிப்து, ம்லேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளைப் பற்றி மிக விரிவாக தனது அனுபங்களை, நிழற்படங்களின் துணையோடு பேசினார். இந்தியாவையும் ,தான் பார்த்த நாடுகளையும் ஒப்பிட்டும், வேறுபடுத்தியும் ,பெரியாரியலோடு தொடர்பு படுத்தியும் அவர் பேசியது சிறப்பாக இருந்தது. பேச்சாளர் என்பதை விட, கருத்தாளராக தனது கருத்துக்களை எடுத்து வைத்தது சிறப்பாக இருந்தது.

                     சீனாவில் எல்லா இடங்களிலும் வெள்ளாமை(விவசாயம்) செய்கின்றார்கள். விவசாயம் செய்யப்படாத வெறும் நிலத்தையே பார்க்க முடியவில்லை. நம் நாட்டில் கிராமத்தில் ஒருவர் நெல் நாத்தைப் போட்டுக்கொண்டு இருப்பார்.பக்கத்து காட்டுக்காரர் 2 மாத நெல் பயிருக்கு களை எடுத்துக்கொண்டு இருப்பார். இன்னொருவர் நெல்லை அறுத்துக்கொண்டிருப்பார். ஒரு ஒழங்கற்ற நிலை , அவரவர் விருப்பத்திற்கு பயிரிடுகின்றார்கள். ஆனால் சீனாவில் ஒரு 400 கி.மீ தூரம் முழுமைக்கும் 2 மாத பயிர் என்றால் ஒன்று போல 400 கி.மீ தூரமும் 2 மாதப் பயிராக இருந்தது. விதைப்பது, வளர்ப்பது,அறுப்பது என்பது ஒன்று போல இருக்கின்றது அதிசயமாக இருக்கிறது என்றார். பக்கத்தில் இருந்த ஒருவர், விவசாயம் அந்த நாட்டில் அரசின் வழிகாட்டுதலில் என்றார். ஹாங்காங் நகரத்தின் அதிசயங்களை, மக்களின் உழைப்பை, வானுயர்ந்த கட்டிடங்களை விவரித்தார். வெறும் கடலும், மலையும் மட்டுமே உள்ள நகரம் அது , எப்படியெல்லாம் நவீன மயத்தைப் பயன்படுத்தி கட்டிடங்களை கட்டுகின்றார்கள், மலையைத் தகர்த்து அந்த இடத்தில் விவசாயம் செய்கின்றார்கள் என்பதையெல்லாம் விவரித்தார்.

                     எகிப்து என்னும் நாடு நைல் நதி இல்லையென்றால் அந்த நாடு இல்லை. மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. சுத்தம் இல்லை, உண்மை இல்லை. நாட்டில் உள்ள பல கோயில்கள் , பழமையான கோயில்கள், நமது நாட்டில் உள்ளது போல் இருக்கிறது என்றார். அந்தப் படங்களைக் காட்டினார். சுற்றுலாப்பயணிகளை ஏமாற்ற முயற்சிக்கின்றார்கள், எகிப்தில், விழிப்பாக இல்லையேல், பணத்தை இழக்க நேரிடுகிறது என்றார்.
அதனைப் போல சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளைப் பற்றியும் விவரித்தார்.

                       கூட்டத்தின் ஆரம்பித்தில் 'பெரியார் பேழை' என்னும் தலைப்பில், பா.சடகோபன் பேசினார். ' தானாகப் பிறக்காத  மனிதன், தனக்காக மட்டும் வாழக்கூடாது ' என்னும் தந்தை பெரியாரின் கருத்தை எடுத்துக்கொண்டு அதனை விளக்கிப் பேசினார். பேழை என்பது மிகுந்த மதிப்பு வாய்ந்த பொருளை பாதுகாக்கப் பயன்படும் ஒரு பெட்டி என்பதனைக் குறிப்பிட்டு, அதனைப் போன்றதுதான் தந்தை பெரியாரின் பொன்மொழிகள் என ஒப்பிட்டுப் பேசினார்.

                          மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் சுப.முருகானந்தம் அவர்கள் 'இம்மாத விடுதலை சிந்தனை ' என்னும் தலைப்பில் பேசினார். ஒரு இருபது நிமிடம், ஒரு மாதத்தில் வந்த விடுதலை நாளிதழின் முக்கியமான செய்திகளை தொகுத்து ஒருவர் உரையாற்றும் இந்தப் பகுதி முக்கியமானது. 75 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் , உலகத்தின் ஒரே நாத்திக தினப்பத்திரிக்கையான விடுதலையின் சிறப்பை, தனித்தன்மையை புதிதாக வருபவர்கள் தெரிந்து கொள்ள உதவும் உரை இந்த உரை. அருமையாக இதனைக் கொடுத்தார் அண்ணன் சுப.முருகானந்தம் அவர்கள். விடுதலையில் மின்சாரம் அவர்களின் மோடி யார் ? என்பதனை வெளிப்படுத்தும் கட்டுரை, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள், மறைந்த சிவகங்கை சுயமரியாதைச்சுடரொளி அம்மா இராமலக்குமி அவ்ர்களின் வரலாறு, இயக்கத் தொண்டு , விடுதலையில் ஒரு மாதத்தில் வந்த தலையங்கங்கள், ஒற்றைப்பத்தி, ஊசி மிளகாய் விமர்சனம் என அனைத்தையும் தொட்டு சுப.முருகானந்தம் மிக இயல்பான தன்மையில் உரையாற்றினார்.

                              நிகழ்வுக்கு தலைமையேற்ற முன்னாள் நீதியரசர் பொ. நடராசன், சிறப்பு பேச்சாளரை அறிமுகப்படுத்திய அய்யா அ.வேங்கைமாறன், உரையாற்றிய மூவர் என அனைவருமே மதுரைக்காரர்கள், இயக்கத் தோழர்கள். குறிப்பிட்ட நேரமும், குறிப்பிட்ட தலைப்பும் கொடுத்து அவர்களைப் பேச வைத்தபோது, ஒவ்வொருவரின் தனித்திறமையும், உரை ஆற்றலும், கருத்தை கேட்பவர் இனிக்க சொல்லும் ஆற்றலும் வெளிப்பட்டன. 

8 comments:

eraeravi said...

நன்றி .தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் !

முனைவர். வா.நேரு said...

நன்றி கவிஞர் இரவி அவர்களே, தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துக்கள், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்.

Unknown said...

அறிவிற்க்கு விருந்தளிக்கும் விடுதலை வாசகர் வட்டம் மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம்...!

anandam said...

நன்றிங்கண்ணே..

KARUPPIAH S said...

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நானும் நினைத்தேன். ஆனால் வேறு ஒரு பணியில் இருந்ததால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும், உங்களுடைய தொகுப்பு அந்த குறையை சரி செய்துவிட்டது நேரு.

முனைவர். வா.நேரு said...

நன்றி செந்தில். கோவையில் விடுதலை வாசகர் வட்டம் ஆரம்பிக்க இருக்கும் செய்தி படித்தேன். வாழ்த்துக்கள். அம்மாவுக்கு என் வணக்கங்கள்,

முனைவர். வா.நேரு said...

தொடரட்டும், விரைவில் சிறப்புரை : சுப.முருகானந்தம் என்று போஸ்டரைப் பார்க்க வேண்டும்.

முனைவர். வா.நேரு said...

எப்போழுதும் வினையூக்கியாய் ஊக்குவிக்கும் அண்ணனுக்கு நன்றி.