தமிழருக்குத் தைமுதல் நாளே
தமிழ்ப்புத்தாண்டு எனத்
தமிழ்ப்பெரியோர்கள்
வரையறைத்துத் தந்ததை
எம்மினத்துப் பரம்பரைப்
பகைவர்
மதமுகமூடி அணிந்து கொண்டு
அல்ல , அல்ல
சித்திரை முதல் நாளே
தமிழ்ப்புத்தாண்டு என்று
சொல்கின்றார் ,
அதற்கும் சிலர்
தமிழ் படித்தோர்
துணைக்கு நிற்கின்றார் !!!
சாதிகளால் பிரிந்து
வீதிகளில் சண்டையிடும்
தமிழனை 'நீ தமிழன்' என
நினைவுபடுத்த
தை முதல் நாள்
தமிழ்ப்புத்தாண்டு வருகிறது !
'பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும் 'என்னும்
குறள் வழியில்
ஆதியில் இல்லையடா ஜாதி !
இது தமிழர்கள் வாழ்வில்
பாதியில் வந்த அநீதி !
என்பதனை அறைந்து
செப்பும் நாளாய் தைமுதல் நாள்
தமிழ்ப்புத்தாண்டு வருகிறது !
பெருவிலங்குகள் மத்தியில்
உடைகள் இல்லா
சிறுவிலங்குகளாய்
மற்ற நாட்டுக் காடுகளில்
மாந்தர்கள் வாழ்ந்த நிலையில்
நாடு சமைத்து
நல் இல் அமைத்து
அகம் படைத்து புறம்படைத்து
அதற்கு இலக்கணமும் வகுத்து
வாழ்ந்த தமிழன்
இன்று வாழும் நிலைகண்டு
'ஏ, தாழ்ந்த தமிழகமே ! '
என உணர்த்தும் நாளாய்
தை முதல் நாள்
தமிழ்ப்புத்தாண்டு வருகிறது !
ஜாதி ஜாதியாய் நம்மைப்பிரித்த
குள்ள நரிக்குணமுடையார்
குறித்து வைத்த
சோதிடப்புரட்டுகளுக்குத்
துணை போகவே
அளக்கின்றார்
தமிழ்ப்புத்தாண்டு
சித்திரையென்று
செவியில் ஏற்றாதே !
செவிட்டில் அறைவதுபோல் சொல்
தைமுதல் நாளே
தமிழ்ப்புத்தாண்டு என்று !
தமிழர்கள் யாவருக்கும்
தமிழ்ப்புத்தாண்டு பொங்கல்
உழவர் திருநாள்
வாழ்த்துக்கள்!
எழுதியவர் : வா.நேரு
நாள் : 01/13/2015
Nantri : Eluthu.com
4 comments:
வாழ்த்துக்கள் அய்யா
எங்களது வாழ்த்துக்களும் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும்
பொங்கற் புதுநாளன்று புத்துலக வாழ்வு மலரட்டும்..
இல்லந்தோறும் உள்ளம் தோறும் பொங்குக புதுமை.. பொங்குக பொங்கல்.. பொங்கலோ பொங்கல்...!
நன்றி செந்தில். தங்களுக்கும் அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் இயக்கத்து தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்களும். ....பொங்கலோ பொங்கல்...!
Post a Comment