Saturday, 10 December 2016

இறை மறுப்பாளர் ,பன்முக ஆளுமை வா.செ.குழந்தைசாமி மறைந்தார்....

பன்முக ஆளுமை வா.செ.குழந்தைசாமி மறைந்தார்
(மணிவண்ணன் மணி ,கணினித் தமிழ் வல்லுநர் , எழுத்தாளர்)

அவரது கணீரென்ற குரல். துல்லியமான சிந்தனை. அதைப் பேச்சிலும் கொண்டு வரும் திறமை. பண்டைக்காலப் பேரரசர்களின் ஆணைகளை அமைச்சர்கள் இப்படித்தான் அறிவித்திருப்பார்களோ என்ற மிடுக்கு. இப்படித்தான் அவர் எனக்கு அறிமுகமானார்.
அவரது மேடைப்பேச்சைப் பார்வையாளானாக இருந்து கற்றுக் கொண்டேன். பின்னால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
இறை மறுப்பாளர்
"துணைவேந்தர்களுக்கெல்லாம் துணைவேந்தர்" என்று அவர் மீது பேரன்பு கொண்டிருக்கும் பேராசியர்களால் பாராட்டப்பட்ட பெரியவர், என்னிடம் சமமாக அமர்ந்து வாதாடுவார். அப்படி வாதாடும்போதும் அவரது மிடுக்கு குறையாது. இருந்தாலும் அவரிடம் உரிமையுடன் பேச முடியும் என்ற வரவேற்பு இருந்தது. பெரியாரின் மீது ஈடுபாடு கொண்டு இறுதி வரை இறை மறுப்பாளராகவே வாழ்ந்தவர்.
ஆணையிட்டுத் தம் கொள்கைகளைத் திணிப்பதைக் காட்டிலும் ஏரணத்துடன் ( Logic) தம்முடன் மாறுபட்டவர்களை மாற்றலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவருடையது.
நீண்ட சாதனைப்பட்டியல்
அவருடைய சாதனைப்பட்டியல் நீண்டது. கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் 1929 இல் பிறந்தவர். தமிழ்வழி அரசுப்பள்ளிகளில் படித்தவர். அப்போதெல்லாம் அவர் போன்ற மாணவர்களுக்கு இருந்த வாய்ப்புகள் மிகக் குறைவு. வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் உயர்ந்த அவர், தம் வேர்களை மறக்கவேயில்லை.
நீர்வளத்துறை வல்லுநரான பேரா. குழந்தைசாமி கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின் ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் மேற்படிப்பைத் தொடர்ந்தார். ஜெர்மனியில் அவர் படித்த போது ஜெர்மனி மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீவிரமான அலசல்கள் நடந்து கொண்டிருந்தன. ஏற்கனவே பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை ஆதரித்திருந்த பேரா. வா.செ.கு.வுக்கு தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய புதிய எண்ணங்கள் பலவற்றுக்கு விதை அங்கேதான் விழுந்தது.
தொடர் துணை வேந்தர்
அமெரிக்காவின் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நீர்வளத்துறை ஆய்விலக்கியத்தில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. பிறகு தமிழகம் திரும்பி சென்னை கிண்டி பொறியியற் கல்லூரியில் பல ஆண்டுகள் பேராசிரியராக ஆய்வுப்பணி, கற்பித்தலை மேற்கொண்டார். தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பொறுப்பை அவர் ஏற்றபோது ஆசிரியர் பணியிலிருந்து கல்வி மேலாண்மைப் பணிகளுக்கு மாறினார். உடனடியாகவே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார் (1978-79).
பழம்பெரும் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து பொறியியல் தொழில்நுட்பக்கல்லூரிகளைப் பிரித்துத் தொடங்கிய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அவர் துணைவேந்தரான போது (1981), இது பெயர்பெறுமா என்ற ஐயம் இருந்தது. மூன்று முறை தொடர்ந்து அண்ணா பல்கலையின் துணைவேந்தராக இருந்து அது உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் என்று பெயர் பெறும் அளவுக்கு அதை வளர்த்தார்.
தொடர்ந்து இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகத் தலைமை ஏற்று (1990-94) அந்த நிறுவனத்தையும் செழுமைப்படுத்தினார்.
தமிழ் கற்கும் குழந்தைகள் (கோப்புப்படம்)Image copyrightGETTY IMAGES
இலக்கியப் பணி
பேரா வா.செ.கு. பெருந்தமிழறிஞர் தேவநேயப் பாவாணரிடம் தமிழ் கற்றதைப் பெருமிதத்துடன் சொல்வார். அந்தத் தமிழ் ஈடுபாட்டை வாழ்நாள் முழுதும் தொடர்ந்தார்.
கவிஞர் குலோத்துங்கன் என்ற பெயரில் கவிதைகளை எழுதினார். எண்ணற்ற கட்டுரைகளை அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, இலக்கியம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்தார். அவரது "அறிவியல் தமிழ்", "வாழும் வள்ளுவம்", "உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்" ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1980 ஆம் ஆண்டு இவரது தமிழ்த்தொண்டுகளைப் பாராட்டிக் கௌரவ முனைவர் பட்டமளித்தது.
தமிழ் இலக்கியப் பணிகளுக்காக 1988 இல் சாகித்ய அகாடமி விருது பெற்ற இவருக்கு, கவிதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைகளுக்காக 1999 ஆம் ஆண்டு தமிழக அரசு திருவள்ளுவர் விருது வழங்கியது.
தமிழைச் செவ்வியல் மொழியாக இந்திய ஒன்றிய அரசு அறிவித்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
கல்வி மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் இவரது தொண்டிற்காக 1992 இல் பத்மஸ்ரீ விருதையும் 2002 இல் பத்மபூஷன் விருதையும் பெற்றார். இந்தியாவிலும் ஏனைய காமன்வெல்த் நாடுகளிலும் நெடுந்தொலைக் கல்வி, திறந்த நிலைக்கல்வி ஆகியவற்றுக்கு இவரது தலைமையையும் தொண்டையும் பாராட்டி 1999 இல் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பு விருது வழங்கியது.
பன்னாட்டு அளவில் நீர்வளத்துறையில் பல பொறுப்புகளை ஏற்றுப் பணிபுரிந்தார். பல ஆய்வுக்குழுக்களிலும், திட்டக்குழுக்களிலும் தலைமை வகித்தார். சென்னை ஆசியக் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.
''தமிழர்களின் அடையாளம் தமிழால் மட்டுமே ''
உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழர்கள் தம் அடையாளத்தைத் தமிழ் மொழியின் மூலம் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த நோக்கத்தில் தமிழைப் புலம்பெயர்ந்த தமிழர்களும் எளிதாகக் கற்கத் தமிழ் எழுத்துகளைச் சீரமைக்க வேண்டும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகப் போராடினார்.
கணினித் தமிழ் தமிழ்நாட்டில் வேரூன்றத் தொடங்கும்போது தமிழக அரசு நாடிய குறிப்பிட்ட சில தலைவர்களில் ஒருவர்.
இணையம் வழியாகத் தமிழைக் கற்பிக்க நிறுவிய தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நிறுவனத் தலைவராக வழி காட்டினார்.
தமிழில் உயர்மட்ட அறிவியலும் தொழில்நுட்பமும் கற்பிப்பதில் பெருமுனைப்பு கொண்டு பல முயற்சிகளைத் தொடங்கினார். பல துறைகளின் ஆங்கிலக் கலைச்சொற்களைத் தொகுத்து அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்த பெரும்பணியை இவர் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் செயல்படுத்தினார்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்த முயற்சிகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை. அவர் வாழ்நாளில் பெரும்பகுதி எழுத்துச் சீர்திருத்தத்துக்கான போராட்டம்தான். அதனால் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என்றாவது ஒரு நாள் நான் அவரது எழுத்துச் சீர்திருத்தக் கோட்பாட்டின் தேவையையும், ஏரணத்தையும் புரிந்து கொண்டு ஏற்பேன் என்பார்.
எழுத்துச்சீர்திருத்தத்தைச் "சீரழிப்பு" என்று நான் சொல்வதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே அது மேடைப்பேச்சு rhetoric, வருங்காலத்தில் தமிழர்கள் முன்னேறுவதற்குத் தமிழெழுத்தே தடையாக இருக்கிறது என்பார். பல நிறுவனங்களை நிறுவி, நிலைநாட்டி வெற்றிப்பாதையில் கொண்டு சென்ற தலைவர். அவரைப் போன்ற தொழில்நுட்ப, மேலாண்மைத்தலைவர்கள், இவ்வளவு ஆழமாகத் தமிழையும் கற்று எழுதுபவர்கள் இல்லவே இல்லை எனலாம். தமிழர்களின், தமிழ்மொழியின் வருங்காலம் பற்றித் தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த அவரது மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பு.

நன்றி : பி.பி.சி. தமிழ் - 10.12.2016
அய்யா வா.செ.குழந்தைசாமி அவர்களுக்கு வீரவணக்கம்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

ஓரிரு முறை இவர்தம் வீட்டிலேயே இவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளேன்
ஆழ்ந்த இரங்கல்கள்