Thursday, 15 December 2016

கருஞ்சட்டை இயக்கத்தின் கம்பீரமான வணக்கமும், வாழ்த்துகளும்.....

கருஞ்சட்டை இயக்கத்தின் கம்பீரமான வணக்கமும், வாழ்த்துகளும்

நானும் எனது மகனும் மதுரையில் உள்ள திரையரங்கில் 'மாவீரன் கிட்டு ' படம் பார்த்தோம். உண்மையாக நடப்பவற்றை அப்படியே திரையில் காட்டும் படம். நாம் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய படம். மற்றவர்களை பார்க்கச்சொல்ல வேண்டிய படம். 'மாவீரன் கிட்டு ' படம் பற்றி 'விடுதலை'யில் வந்த தலையங்கம் இனி .......

‘மாவீரன் கிட்டு’ என்று கேள்விபட்டால், அது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தளபதிகளுள் ஒருவராக இருந்தவரின் பெயர் நினைவிற்கு வரக்கூடும்; அப்படி நினைத்து திரையரங்குக்குச் சென்றவர்கள் சற்று ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும்.

ஆனாலும் இன்னொரு கோணத்தில் மன நிறைவுடன் தான் திரையரங்கினை விட்டு வெளியே வந்திருப்பார்கள்.

இந்தப் பெயரில் ஒரு திரைப்படம் இயக்குநர் சுசீந்திரன் முத்திரையோடு வெளிவந்திருக்கிறது.

திரைப்படத்தின் உரையாடலைக் கவிஞர் யுகபாரதி தீட்டியிருக்கிறார். இவ்விரண்டு பேர்களுமே திராவிடர் கழகத்தால் பாராட்டப்பட்ட நமது இனத்தைச் சேர்ந்த பொறுக்கு மாமணிகள்!

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இன்னமும் தேநீர்க் கடைகளில் இரண்டு கிளாசுகள், செத்துப் போய் சுடுகாட்டுக்குச் சுமந்து செல்லும் பாதையில் ஜாதி வெறிக் கண்ணோட்டம், ஆணவக் கொலைகள் நடந்து கொண்டுதானே உள்ளன.

இந்த அசிங்கத்தை, ஆபாசத்தை, அறிவுக்குப் பொருத்தமற்ற அநாகரிகத்தை தத்ரூபமாக ‘எக்ஸ்ரே’ எடுத்துக்காட்டும் திரைப்படம் இது.

தங்களுக்கு மேல் உயர் வருணம் என்று கூறி கால் நீட்டிக் கொண்டிருக்கும் பேர் வழிகளின் கால் களைத் தங்கள் தலையில் சுமந்து நிற்கும் அவமரி யாதையைப்பற்றிச் சற்றும் பொருட்படுத்தாமல் தனக்குக் கீழும் தாழ் ஜாதியினர் இருந்தால், அது தனக்குக் கவுரவம் என்று கருதும் மனநோயாளிகளை மக்கள் மன்றத்தில் முகமூடியைக் கிழித்துத் தொங்கவிடும் திரைப்படம் இது! ‘சபாஷ்’ என்று ஒரு முறைக்குப் பலமுறை கைதட்டத் தோன்றுகிறது.

தாழ்ந்த ஜாதிக்காரர் - ஊர்த் தலைவர் என்று மெச்சத் தகுந்த ஒருவர் இறந்தபோது- அவர் உடலை தங்கள் வீதியாக சுமந்து செல்லக்கூடாது என்று தோள்தட்டி துடை தட்டி எழுந்தது மட்டத்தில் உசத்தியான ஒரு ஜாதிக் கும்பல்.

பிரச்சினை உயர்நீதிமன்றம் வரை சென்று முட்டுகிறது. பொது வீதியில் பிணத்தைத் தூக்கிச் செல்லலாம் என்பது உயர்நீதிமன்றத்தின் உத்தரவு!

நீதிமன்றம் சொன்னால் என்ன? ஜாதி வீதிமன்றம் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டுமே! காவல்துறை உதவி ஆய்வாளரே காக்கிச் சட்டைக்குள் ஜாதி வெறிப் பனியனை அணிந்துகொண்டிருக்கும் பேர்வழி!

பொது வீதியில் பிணத்தைத் தூக்கிச் செல்லலாம் என்பதுதான் நீதிமன்றத்தின் ஆணையே தவிர தாழ்த்தப் பட்டவர்கள்தான் தூக்கிச் செல்லவேண்டும் என்ற ஆணை இல்லையே என்று குதர்க்கமான வியாக்கியானத்தை தெரி விப்பவரும் அந்தக் காவல்துறை உதவி ஆய்வாளர்தான்.

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவன் சின்னராசு அதற்குக் கூட ஒப்புக்கொள்கிறார். பொது வீதியில் தாழ்த் தப்பட்டவரின் பிணம் செல்லுவது ஒரு வெற்றி- அந்தப் பிணத்தை அந்த மட்டத்தில் உசத்தி ஜாதிக்காரர்கள் தாங்களே தூக்கிச் செல்லு கிறார்கள் என்பது இன்னொரு வெற்றி! ஆக, ஒரு கல்லில் இரண்டு காய்கள் வீழ்த்தப்படுகின்றன.

அத்தோடு ஆதிக்க ஜாதிக்காரர்களின் கண்மூடித்தன திமிர் ஒடுங்கிவிட முடியுமா? ஊருக்குப் பேருந்து வருவ தால்தானே தாழ்த்தப்பட்டவன் எல்லாம் பள்ளிக்குச் செல்லு கிறான்? சட்டமன்ற உறுப்பினர் நல்லது செய்யாவிட்டலும் ‘கெடுதல்’ செய்வதன்மூலம்தானே அந்த மட்டத்தில் உசத்தி ஜாதியினரின் நன்மதிப்பைப் பெற முடியும்.

பேருந்து நிறுத்தப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை நாயகன் சின்னராசும், பள்ளி மாணவர்களும், நிதி வசூல் செய்து பேருந்து ஒன்றுக்கு வழி செய்யப்படுகிறது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அதுவும் எரிக்கப்படுகிறது.

இதற்கிடையே மாணவன் கிட்டு - தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் - மாநிலத்திலேயே முதல் மதிப் பெண் பெற்று வருகிறார். மாணவர்கள் மத்தியிலும், பொதுவானவர்கள் மத்தியிலும் நல்ல பெயர்!

மட்டத்தில் உசத்தி ஜாதி மாணவியைப் பாம்பு கடித்தபோது 6 கல் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு மாணவர்கள் ஒத்துழைப்போடு தூக்கிச் சென்று உயிரைக் காப்பாற்றினாலும், அந்த மட்டத்தில் உசத்தி ஜாதியினர் என்ன சொல்லுகிறார்கள்! என் பெண் செத்தாலும் பரவா யில்லை; கீழ்ஜாதிக்காரன் எப்படித் தொட்டுத் தூக்கலாம் என்று மீசை முறுக்கித் துள்ளுகிறார்கள்.

மாணவன் கிட்டுமீது பொய் வழக்குகள், காவல் நிலை யத்தில் சித்திரவதை, இன்னோரன்ன அட்டூழியங்கள் ஒரு புறம். அந்த மாணவன்மீது அந்த மட்டத்தில் உசத்தி ஜாதிப் பெண் காதல் கொள்ளுதல் - இருவரும் ஈருடல் ஓருயிராகப் பழகிய தன்மை - இப்படியாக கதை ஓடிக் கொண்டிருக்கிறது விறுவிறுப்பாக!

ஒரு கொலை வழக்கில் அபாண்டமாகச் சிக்க வைத்து கிட்டுவை சிறையில் தள்ளவேண்டும் என்பது திட்டம்.  ஏனெனில் அவன் சிறப்பாகப் படித்துக் கலெக்டராக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறான். கொலை வழக்கில் சிக்க வைத்து சிறையில் தள்ளினால், அவன் அய்.ஏ.எஸ். படிக்க முடியுமா? இதனை அந்தக் காவல்துறை உதவி ஆய்வாளரே வெளிப்படையாகவே சொல்லும் நிலை!

இறுதியில் மாணவன் கிட்டு குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் தன்னையே மாய்த்துக் கொள்ளும் நிலை. அவனது பிண ஊர்வலத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொண்டு  அந்த மட்டத்தில் உசத்தி ஜாதிக் காரர்களின் தெருக்கள் வழியாகக் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்ட பாடையில் வைத்துத் தூக்கிச் செல்லப்படுகிறது.

சின்னராசாக நடிக்கும் பார்த்திபன் தொடக்க முதல் கடைசிவரை கருப்புச்சட்டையிலேயே காட்சியளிக்கும் கம்பீரம்! உரிமைக்கு உரத்த முறையில் குரல் கொடுக்கும் தன்மானம் - வீரம்!

ஜாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான தத்துவம் அந்தக் கருஞ்சட்டைக்குள் இருக்கிறது என்பதை உணர்த்தும் நோக்கும் - போக்கும் தந்தை பெரியார் அவர்களையும், அவர்கள் கண்ட கழகத்தையும் சமுதாயத்திற்கு அடை யாளம் காட்டுவதாகவே கொள்ளவேண்டும்.

சட்டமும், அதிகாரமும் ஜாதி வெறியர்களின் கைப் பாவையாக எப்படி சலாம் போடுகிறது என்பதை வெளிச்ச மிடும் அழுத்தமான உரையாடல்கள், அரிவாள் வீச்சாக இருப்பது தனிச்சிறப்பு!

குத்தாட்டமும், கும்மாளமும், அடிதடியும், ஆபாச இரட்டை வசனங்களும்தான்  சினிமாத்தனம் என்று ஆகி விட்ட ஒரு காலகட்டத்தில் சமுதாயத்தில் அடிப்படையான நோயின் மூல விக்கிரகத்தை சல்லி சல்லியாக உடைத்துச் சிதறடித்து, ஒரு சிந்தனைச் செழுமையைத் தீட்டும் இதுபோன்ற திரைப்படங்கள் காலத்தின் பசியை ஆற்றக் கூடிய அருமருந்து என்று சொல்லுவதுதான் சரியான மதிப்பீடாக இருக்க முடியும்!

தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள், திரைக்கதை உரையாடல், பாடல் ஆசிரியர்களுக்குக் கருஞ்சட்டை இயக்கத்தின் கம்பீரமான வணக்கமும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்!நன்றி : விடுதலை 13.12.2016

No comments: