Tuesday, 13 December 2016

அண்மையில் படித்த புத்தகம் : ஊரும் சேரியும் ----- சித்தலிங்கையா...தமிழில் : பாவண்ணன்

அண்மையில் படித்த புத்தகம் : ஊரும் சேரியும்
கன்னட மொழியில்          : சித்தலிங்கையா
தமிழில்                    : பாவண்ணன்
வெளியீடு                   : புத்தா வெளியீட்டகம், 3, மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலிபாளையம்,கோயம்புத்தூர்-641 015
வெளியிட்ட ஆண்டு          : டிசம்பர் 2004, 144 பக்கங்கள், விலை ரூ 60
மதுரை மைய நூலக எண்    : 155565

                       ஊரும் சேரியும் என்னும் இந்த நூல் கன்னட நூல் .  சித்தலிங்கையாவால் எழுதப்பட்ட தலித் சுயசரிதை. " கடந்த இருபது ஆண்டுகளாக கன்னடச்சூழலில் கவிஞராகவும் சமூகப்போராளியாகவும் அறியப்பட்டு வருபவர் சித்தலிங்கையா(3.12.1954).பெங்களுர் பல்கலைக்கழகத்தில் கன்னடத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மூன்று கவிதைத் தொகுப்புகளும் மூன்று நாடகங்களும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் இவரது பிற படைப்புகள். இவருக்கு முனைவர் பட்டத்தைத் தேடித்தந்த நாட்டுப்புறக்கடவுள்கள் பற்றிய ஆய்வேடு இன்றளவும் ஆய்வுலகத்தில் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இரண்டாம் முறையாகச்சட்ட மேலவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். தலித் சுயசரிதைகளுக்குக் கன்னட இலக்கிய உலகில் முக்கிய இடமுண்டு.ஊரும் சேரியும் தொடராக வந்த சமயத்திலேயே பெரிதும் வரவேற்கப்பட்ட படைப்பு . ஏழ்மையும் போர்க்குணமும் நிறைந்த தலித்துகளின் வாழ்வை, குறும்பும் கிண்டலும் மிகுந்த தொனியில் தன் சுயசரிதையில் முன்வைக்கிறார் சித்தலிங்கையா. புதைந்த காற்று மூலம் கன்னடத் தலித் படைப்புலகைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய பாவண்ணன் தற்சமயம் ஊரும் சேரியும் நூலை மொழிபெயர்த்துள்ளார்"- இது இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் உள்ள வாசகங்கள்.

 இந்த நூலினை மொழிபயர்க்க வேண்டிய எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பதனை மொழிபெயர்ப்பு எழுத்தாளர் பாவண்ணன் 'வலியின் சுவடுகள் ' என்னும் தலைப்பில் " இந்த தேசத்தில் இன்னும் கல்வியை எல்லோருக்கும் கிட்டக்கூடிய ஒன்றாக உருவாக்க இயலாததற்கான காரணங்களில் , வறுமையும் ஒன்றெனச்சொல்லலாம். இந்த வறுமைக்கொடுமையோடு  சாதிக்கொடுமையும் சேர்ந்துகொள்ளும்போது இயலாமையும் ஆற்றாமையும் இன்னும் தீவிரமடைகின்றன. வறுமைக்கான காரணத்தையும் சாதிக்கான காரணத்தையும் என்னவென்றே அறியாத ஓர் இளம்நெஞ்சம் இக்கொடுமைகளிடையே உழல நேரும்போது படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. மிகச்சாதாரணமாக் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்கூட இந்த இரண்டு காரணங்களால் சின்னஞ்சிறுவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய கொடுமை. இத்தகு சூழலில் அங்குலம் அங்குலமாக நகர்த்தும் எதிர்ப்புகளை விவேகமுடன் எதிர்கொண்டும் இவர்கள் முன்னேறி வரவேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தை அனைவரும் அறியத்தரவேண்டியது அவசியம் என்கிற என்ணம் தான் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதை மொழிபெயர்க்கத் தூண்டியது " எனச்சொல்கின்றார். (பக்கம் 8)

            இந்த நூல் புனைவு இல்லை, சிறுகதைத் தொகுப்பு இல்லை , திரு.சித்தலிங்கையா அவர்களின் சுயசரிதை. ஆனால் அவரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அவர் விவரிப்பது ஒவ்வொரு நிகழ்வும் ஒரு சிறுகதை போல இருக்கிறது. அதனால்தான் முன்னுரையில் பாவண்ணன் '. எந்த இடத்திலும் அரற்றல் இல்லை. ஆவேசம் இல்லை. தன்னிரக்கமும் இல்லை.இது இந்த நூலின் மிகப் பெரிய பலம். ஒவ்வொரு பகுதியிலும் தெளிவு இருக்கிறது. குறும்பும் சிறுநகையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இழைபோடுகின்றன. தன்னம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு அனுபவத்தையும் கலைத்தன்மையோடு முன்வைக்கும் ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலே இச்சுயசரிதையை மிகமுக்கியமான நூலாகக் கருதவைக்கிறது' எனச்சொல்கின்றார் .உண்மைதான்.

          இந்த நூல் முதலில் புத்தா வெளியீட்டகத்தின் பதிப்புரை என ஆரம்பித்து , மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை, 5 பகுதிகளாக அமைந்த சித்தலிங்கையாவின் சுய சரிதை,  ' ஏழைகளின் சிரிக்கும் சக்தி ' எனத்  தலைப்பிடப்பட்ட .டி.ஆர். நாகராஜ் என்பவர் எழுதிய பின்னுரை, சுயசரிதையில் வரும் சிலரைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய குறிப்புகள், முடிவில் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு என்பதாக முடிகின்றது.
            பகுதி ஒன்று - 'சேரியின் கடைசி வீடு எங்களுடையதாகும் ' என்று ஆரம்பிக்கும் இப்பகுதியின் முதலிரண்டு பக்கங்களிலேயே, 'ஐயரின் நிலத்தில் இரண்டு பேர் தம் கழுத்தில் நுகத்தடியை சுமக்க ஒருவன் கலப்பையை அழுத்தி உழுது கொண்டிருந்தான். நுகத்தடியைச்சுமந்த இருவரும் எருதுகள் போலச்சென்றுகொண்டிருக்க , மூன்றாவது ஆள் பின்னால் இருந்த உழுத அக்காட்சி ஏதோ மாயாஜாலக் காட்சியைப்போல இருந்தது. ஆனால் நுகத்தடியைச்சுமந்த இருவரில் ஒருவர் எனது தந்தை என்று தெரிந்தபோது என் மனத்தில் இனம் புரியாத வேதனை பரவியது ' என்று சொல்கின்றார். இந்த வேதனையும் எதார்த்தக் கொடுமைகளும் அவலங்களும் நூல் முழுக்க பரவிக்கிடக்கிறது. ஆனால் அதனை சொல்லும்விதத்தில் இருக்கும் நையாண்டித்தனமும் அதனைத் தாண்டி நிற்கும் உள்வேதனையும் உளக்குமுறலும் படிக்கும் எவரையும் உருக்கும்.பிராமணர் வீட்டில் எஞ்சிய சாப்பாடு, ..,மண்டெஸ்வாமியின் பரம்பரை,மாரியம்மன் கோவிலில் 'மாரியம்மன் ' வந்து இறங்கும் தனது பாட்டியைப் பற்றிச்சொல்லும் 'நற நறவென்று பல்லைக் கடிக்கும் ஜல்தகெரே அம்மா ' ,உடைந்து போன நட்பின் அடையாளமாக தனித்தனியாகக் கிழித்து மீண்டும் தொங்கவிடப்பட்ட நண்பர்களின் புகைப்படைக்கதையையும் அப்பா செல்ல ஏரிட்ட 'போலீஸ் ஸ்டேசன் ' பற்றிச்சொல்லும் 'கந்தர்வ உலக லம்பாணிகள் ', ...'கணவன் மனைவி சண்டையின் முதல் பாடம் ' என அவரின் வீடு, தெரு, அவரின் பரம்பரை, சுற்றி இருக்கும் உறவினர்கள் , அவர்களின் சூழல், அவர்களின் கடவுள், நம்பிக்கை போன்ற பல செய்திகளை சொல்லும் பகுதியாக பகுதி ஒன்று இந்தப்புத்தகத்தில் இருக்கிறது.

         பகுதி இரண்டு- தனது கிராமமான மஞ்சணபெலேயில் இருந்து பெங்களூரின் சிறீராமபுரம் குடிபெயர்ந்தது பற்றியும் அதன் வாழ்க்கை பற்றியும் பேசுகிறது. பகுதி இரண்டு தொடங்கியவுடனேயே சொல்லும் 'ஆட்டுக்கார சாமி' நல்ல ஈர்ப்பான செய்தி . 'பக்கத்து ஊரில் வசித்து வந்த ஒருவன் மேல் சாமி வருவதுண்டு. மக்கள் அதை 'ஆட்டுச்சாமி' என்று அழைப்பதுண்டு.சாமி வந்ததுமே அவன் 'ஆடு ஆடு ' என்று கூச்சலிடுவான். பக்தர்கள் பயத்தோடு 'எந்த ஆடு தாயே ?' என்று கேட்பார்கள். அப்போது 'ஏதாவது ஒரு ஆடு ' என்று சாமி சொல்லும். ஓடிச்செல்லும் பக்தர்கள் ஏதாவது ஒரு ஆட்டைப்பிடித்து வந்து சாமியின் முன் நிறுத்துவார்கள். சாமி உடம்பிலிருந்து விலகியபிறகு பூசாரியும், பக்தர்களும் கூடி ஆட்டை வெட்டிச்சமைத்து நன்றாகச்சாப்பிடுவார்கள். ஆட்டை இழந்தவர்களாலோ வெளிப்படையாய் எதையும் சொல்லவும் முடியாது. விருந்துக்குச்சென்று அனுபவித்து சாப்பிடவும் முடியாது. மறுத்துப்பேசினால் தெய்வக்குற்றம் நேர்ந்துவிடுமோ என்கிற பயம். ஒருமுறை சாமி வந்து 'ஆடு ஆடு' என்று கூச்சலிட்ட சமயத்தில் என் மாமாவும் அங்கே இருந்தார். சுற்றி இருந்த பக்தர்கள் அக்கம்பக்கத்தில் சட்டென்று கைக்கு கிடைத்த ஆட்டைப்பிடித்துக்கொண்டுவந்து நிறுத்தினார்கள். எதற்காகவோ,'இந்த ஆடு எனக்கு வேணாம், வேறு ஆடு கொண்டாங்க ' என்றது சாமி. மக்களைப் பயம் சூழ்ந்தது.தங்களால் ஏதாவது பிழை நேர்ந்திருக்குமோ என்று கவலை கொண்டார்கள்.'எதற்காக சாமி வேணாம் ? ' என்று தாழ்மையோடு கேட்டார்கள். 'தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவேண்டும் ' என்று கெஞ்சிக்கேட்டுக்கொண்டார்கள். சாமி எந்த வார்த்தைக்கும் மசியவில்லை. 'இந்த ஆடு வேணாம்ன்னா வேணாம்தான் ,' என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற மாதிரி சாமி கறாராய்ச்சொல்லி விட்டது. பிரச்சனைக்கு முடிவில்லாமல் போனது. ஊர்க்காரர்களைப் பார்த்த மாமா 'இந்த ஆடு யாருது ' என்று கேட்டார். ஊர்க்காரர்கள் இதைப் பற்றி யோசித்தேயிருக்கவில்லை. அந்த ஆட்டை நன்றாக உற்றுப்பார்த்து அடையாளம் கண்டுபிடித்த ஒருவன் ' இது சாமி வந்து ஆடுற பூசாரிக்குச்சொந்தமான ஆடு ' என்றான். 'இது பூசாரியுடைய ஆடு அதனாலதான் வேணாங்கறான் ' என்பது ஊர்க்காரர்களுக்குப் புரிந்தது.சாமி வருகிற விஷயமெல்லாம் ஆட்டுக்கறி தின்பதற்காகப் போடுகிற நாடகம் என்று புரிந்துவிட்டது. இதற்குமுன்பு ஆட்டைப் பலி கொடுத்தவர்களெல்லார்க்கும் கோபம் தலைக்கேறி விட்டது. சாமி வந்து ஆடிய பூசாரிக்குச்செமத்தியாய் உதை கிடைத்தது. அன்றிலிருந்து ஆட்டுச்சாமியின் தொல்லை நீங்கியது ". (பக்கம் 31) இந்தப் பகுதியில் சாமி, பேய்களின் தொல்லை பற்றியும் , மனைவியின் தொல்லை பற்றியும் எழுதிச்செல்லும் செய்திகள் எல்லாம் புனைவுகளில் கூட கிடைக்க அரிதான செய்திகள். சொற்பொழிவாற்றக் கற்றுக்கொண்டதைப்பற்றியும் அதனால் தனக்கு ஏற்பட்ட மரியாதை பற்றியும் பயிற்சி பற்றியும் எழுதுவது கிண்டலோடு கூடிய உற்சாகம் தரக்கூடிய செய்திகள்....
                                                                                                               ( தொடரும் )


No comments: