Tuesday, 20 December 2016

அண்மையில் படித்த புத்தகம் : ஊரும் சேரியும் ----- சித்தலிங்கையா...தமிழில் : பாவண்ணன்.... தொடர்ச்சி

அண்மையில் படித்த புத்தகம் : ஊரும் சேரியும் ----- சித்தலிங்கையா...தமிழில் : பாவண்ணன்.... தொடர்ச்சி

           பகுதி மூன்று முழுவதும் அவருடைய விடுதி வாழ்க்கை பற்றியது. கோபாலஸ்வாமி ஐயர் தலித் மாணவர் விடுதியில் தன்னை தனது தாய் சேர்த்துவிட்டதையும் அந்த விடுதிலேயே தனது தாய் குப்பை கூட்டுபவராக வேலை பார்த்தையும் எழுதிச்செல்கின்றார். 'ஒவ்வொரு அறையிலும் பத்து முதல் முப்பது வரையிலும் மாணவர்கள் படுத்துக்கிடப்போம். மாணவர்கள் உடம்பில் படையும் சிரங்கும் ஏராளம். சிரங்கு உள்ளவர்கள் உடலெங்கும் மருந்தைப் பூசிக்கொண்டு வெயிலில் நிற்கிற காட்சி சாதாரணமான ஒன்றாகும் ' என்று தான் விடுதியில் தங்கிப்படித்த காலங்களை விவரித்து செல்கின்றார். பேய்,பிசாசு நம்பிக்கை மாணவர்களை என்ன பாடு படுத்தியது என்பதனை 'செண்பகமரமும் கொள்ளிவாய்ப்பிசாசும் , பிரார்த்தனைக்கு எழுப்பிய பேய்,சாப்பிட உட்கார்ந்த பேய் என்று பேய் நம்பிக்கை பற்றி சித்தலிங்கையா எழுதும் எழுத்துக்கள் படித்து படித்து ரசிக்கலாம், சிரிக்கலாம்.

 இந்த மூன்றாம் பகுதியில் ' ரயில் மறியல் போராட்டம்' என்ற வகையில் அவர் எழுதியிருக்கும் செய்தி, காவிரி நீர்ப்பிரச்சனையில் நமக்கு எதிராக நிற்கும் கன்னடியர்களுக்கு உண்மையை விளக்கும் வண்ணம் உள்ளது.

 " சிறீராமபுரத்தில் கன்னடர்களும் தமிழர்களும் ஒன்றாகவே சேர்ந்து வாழ்ந்தார்கள். அப்போது கன்னடக் கட்சி வலிமையோடு இருந்தது. இக்கட்சியின் சார்பில் நடந்த கூட்டங்களுக்கு கன்னட இலக்கியவாதிகள் பங்கேற்று மனதில் எழுச்சியையூட்டும் சொற்பொழிவுகளை ஆற்றிச்சென்றனர். அச்சொற்பொழிவுகளைக் கேட்க நான் செல்வதுண்டு. ....வாட்டாள் நாகராஜ் அடிக்கடி வந்து உணர்ச்சிப்பெருக்கான சொற்பொழிவாற்றுவார். இவர்களுடைய சொற்பொழிவுகளால் எழுச்சியுற்ற மக்கள் போராட்டத்தில் இறங்கினர். பெங்களூரில் இருந்து பம்பாய்க்குச்செல்லும் ரயிலை மறிக்கிற போராட்டத்தைத் தொடங்கினர். இந்த ரயில் மறிப்பு போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான பேர்கள் சேர்ந்தார்கள். ' மகாஜன் ரிப்போர்ட்டை அமுல் படுத்துங்கள் ' என்பதுதான் மக்களின் பிரதான கோஷமாக இருந்தது. மக்கள் கடலின் உற்சாகம் எல்லை மீறியது. 'உயிரைக் கொடுத்தாலும் கொடுப்போம்,பெல்காமை இழக்கமாட்டோம்' என்று ஒரே குரலில் மக்கள் குரல் எழுப்பினர்.

 அன்றைய போராட்டத்தின் முக்கியத்தலைவர்களாக இருந்த ஐந்து பேர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார்கள். ரயில் வரும் சத்தம் கேட்டது. தண்டவாளத்தின் இருபுறங்களிலும் கூடியிருந்தவர்களின் இதயங்கள் துடித்துக்கொள்ளத் தொடங்கின. கோஷங்கள் விண்ணைத் தொட்டன. ரயில்வருவது கண்ணுக்குப் புலப்படத் தொடங்கியது. மக்களின் பரபரப்பை சொல்லி மாளாது. தண்டவாளத்தில் படுத்திருந்தவர்களில் ஒருவர் தொலைவில் ரயிலைப் பார்த்ததுமே உயிர் மீது இருந்த யதார்த்த பயத்தின் காரணமாக மெல்ல எழுந்து ஓரமாக வந்து வியர்வையைத் துடைத்துக்கொண்டார். இன்னும் கொஞ்சம் ரயில் நெருங்கியதும் மேலும் மூன்று பேர் எழுந்து ஓரமாக வந்து திரளோடு சேர்ந்தனர். தண்டவாளத்தில் எஞ்சி இருந்தவர் ஒருவரே.'மகாஜன் ரிப்போர்ட்டை அமுல்படுத்து ' என்று கோஷமிட்டபடி அவர் ஒருவரே படுத்துக்கிடந்தார். கருணையே இல்லாத ரயில் அவர் மீது ஏறிக்கடந்தது. மக்கள் கண்ணீர் வடித்தனர். அன்றைய தினம் ரயில் மறியல் போராட்டத்தில் உயிரிழந்தவர் கோவிந்தராஜீ. அவர் தமிழர். பெங்களூரில் பல காலமாகக் கன்னட முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். ரயில் தண்டவாளங்களின் மேல் படுத்துக்கிடந்து, ரயில் வரும் சத்தத்தைக் கேட்டதும் எழுந்து ஓடி வந்த நான்கு பேர்களும் தூய கன்னடியர்கள்" பக்கம் (78).

 தான் கவிதை எழுதத்தொடங்கியது பற்றியும், அண்ணல் அம்பேத்கர் பற்றிப் பல இடங்களில் சொற்பொழிவு ஆற்றியது பற்றியும் இந்தப் பகுதியில் எழுதி செல்கின்றார்.

           பகுதி நான்கு ஆலை வேலைக்காரன் என்று சொல்லி பாத்திரம் கழுவும் வேலை பார்த்ததையும், பெரும்பாலும் பொழுதுபோக்கும் இடமாக தனக்கு சுடுகாடு இருந்ததையும், தனது கவிதை ஆர்வம் வளர்ந்த கதையையும், கவிதை போட்டியில் வெற்றி பெற்றதையும், கிடைத்த பரிசுக்கோப்பைகளை விற்றதையும் விளையாட்டுப் போக்கில் சொல்லிக்கொண்டே போகின்றார். நமக்குத்தான் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு சிறுகதைக்குரிய கருவையும் , சுருக்கத்தையும் கொண்டதாகத் தெரிகிறது. கவிதைப் போட்டியில் தன்னோட போட்டியிட வந்த ஒரு வருட சீனியர் டி.ஆர்.நாகராஜ் தனது வாழ் நாள் நண்பரான கதையை சொல்லிச்செல்கிறார்.

           பகுதி ஐந்தில் அறிவு ஜீவிகள் என்ற அமைப்பை நிறுவியதையும், தலித் மாணவர்களை ஒருங்கிணைத்ததையும் ஊர்வலம் நடத்தியதையும், 3000,4000 மாணவர்களை வைத்து நடத்திய தலித் மாணவர்கள் ஊர்வலத்தைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள் என்றும் போலீஸ்காரர்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்றும் எழுதிச்செல்கின்றார். அதன் விளைவாக தலித் மாணவர்களுக்கு விடுதியில் ,கல்லூரிகளில் இருந்த பல பிரச்சனைகளை தீர்க்க முடிந்ததையும் குறிப்பிடுகின்றார். ஒன்று சேர்ந்ததால் முதலமைச்சரே அழைத்து பேசியதைக் குறிப்பிடுகின்றார்.

பெங்களூருக்குத் தந்தை பெரியாரை அழைத்ததையும் அதற்கு எழுந்த எதிர்ப்புக்களையும் 'பெங்களுரில் பெரியார் ' என்னும் தலைப்பிட்டுத் தருகின்றார். இதோ அந்தச்செய்தி ' பெங்களூருக்கு பெரியார் ராமசாமி நாயக்கரை அழைத்திருந்தார்கள். இதை எதிர்த்து சிலர் எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டார்கள். பெரியாரை வரவேற்கும் குழுவில் நாங்கள் அனைவரும் இருந்தோம். பெரியார் கூட்டத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தபோதே, வெளியே 'ஒழிக' கோஷங்கள் முழங்கின. நாங்கள் ஜெய கோஷ்ங்கள் எழுப்பினோம். அப்போது பேசிய பி.லங்கேஷ் ' இந்த ஒழிக கோஷங்களுக்கெல்லாம் பெரியார் அஞ்சுபவர் அல்லர். அவர் எதிர்ப்புக்களின் நடுவிலேயே வளர்ந்தவர் ' என்றார். பெரியாரின் பேச்சு மிகவும் எழுச்சியூட்டுவதாக இருந்தது.. அடிப்படையில் பெரியார் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். தமிழ் நாட்டில் மிகப்பெரும் சக்தி மிக்க தலைவராக இருந்தவர். அங்கே மக்களின் அன்புக்குரிய தலைவர்களான அண்ணாதுரை, கருணா நிதி போன்றவர்கள் பெரியாரின் சீடர்கள். பெரியார் 'கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி' என்ற கோஷத்துடன் தன் பேச்சைத் தொடங்கினார். புராணக் கதைகளைக் கிண்டல் செய்வதில் அவர் மிகப்பெரிய ஆள். சின்னஞ்சிறிய எலியின் மேல் தொப்பை விநாயகர் உட்கார்ந்தால் எலி நசுங்கி விடாதா? என்று கேள்வி எழுப்பினார். பார்வதி தன் வியர்வை அழுக்கை உருட்டி விநாயகரை உருவாக்கினாள் என்றால் ,அவள் குளித்து எத்தனை ஆண்டுகள் ஆகின? என்று கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். புராணங்களின் செய்திகளையோ ,குறியீடுகளையோ அவர் பொருட்படுத்தவே இல்லை. புராணங்களின் மேல் எளிய தருக்கங்களைப் பிரயோகித்து அவர் பேசினார்.

பெரியாரின் பேச்சு ஈர்ப்புச்சக்தி மிக்கது . ஒருமுறை அவருடைய பேச்சைக் கேட்பவர்கள் அவருடைய ஆளுமைக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள். அன்று மாலை காந்தி நகரில் இருந்த விடுதியில் பெரியாரும் மாணவர் தலைவர்களும் உரையாடிக்கொண்டிருந்தனர். நானும் அக்ரஹார கிருஷ்ணமூர்த்தியும் வெளியே வந்தோம். விடுதிக்கு வெளியே நின்றிருந்த பெரியார் எதிர்ப்பாளர்கள் எங்கள் மீது பாய்ந்து தாக்கினார்கள். கிருஷ்ணமூர்த்திக்கு காயமுண்டானது. என் உதடு கிழிந்து ரத்தம் ஒழுக ஆரம்பித்தது.காலிலும் அடிபட்டு நொண்டும்படி ஆனது'.....பக்கம் 112 & 113.பின்பு ஒரு கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்று நடத்தியது அதன் விளைவாக ஏற்பட்ட கல்வரம், கருப்பாக இருந்தவர்களுக்கெல்லாம் விழுந்த அடி,உதை என்று விவரித்து செல்கின்றார்.

        'சூத்ர' என்னும் கன்னட பத்திரிக்கையில் தன்னுடைய கவிதைகள், அண்ணல் அம்பேத்கரின் சொற்பொழிவு மொழிபெயர்ப்பு வெளிவந்தது, முதுகலை வகுப்பில் மாணவராக சேர்ந்தது, விடுதி பணம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டபோது டாக்டர் கே.மருளசித்தப்பா ,டாக்டர் .சி.வீரண்ணா ஆகியோர் உதவியது, மார்க்ஸிஸ்ட் கட்சியுடன் ஏற்பட்ட தொடர்பு,சேரிப்புரங்களில் இரவுப்பள்ளிகள் நடத்தியது, தனது முதல் கவிதைத் தொகுதியான 'பறையர்கள் பாட்டு ' பிரசுரமானது, அந்தப் புத்தகம் ஒரே வாரத்தில் ஆயிரம் பிரதிகள் விற்றுத்தீர்ந்தது, முதுகலை படிப்பில் முதல் வகுப்பில் தேறி தங்கப்பதக்கத்தைப் பெற்றது. பின் பல்கலைக் கழகத்தில் கன்னட இலக்கியப்பிரிவில் உதவி ஆய்வாளர் வேலைக்கு விண்ணப்பித்து  வேலைக்கு சேர்ந்ததோடு தன் வரலாற்றை சித்தலிங்கையா முடிக்கின்றார்.

           டி.ஆர். நாகராஜ் அவர்களின் பின்னுரை ஆய்வுரைக் கட்டுரையாகவும், இந்தத் தன் வரலாற்றின் தன்மைகளை ஆராய்வதாகவும் அமைந்திருக்கின்றது. மிக்க செறிவான கட்டுரை.
முடிவில் இந்தப் புத்தகத்தினை மொழிபெயர்த்த எழுத்தாளர் பாவண்ணன் 'மொழி பெயர்ப்பாளர் குறிப்பு ' என்பதைக் கொடுத்திருக்கின்றார். பாவண்ணனின் மொழிபெயர்ப்பு அவ்வளவு விறுவிறுப்பாகவும் , சுவையூட்டக்கூடிய வாசிப்பு அனுபவத்தை தருவதாகவும் அமைந்திருக்கிறது. வாழ்த்துகள் மொழிபெயர்ப்பாளருக்கு.

       " நம் தமிழ்ச்சூழலிலும் ;ஊரும் சேரியும் ' போலப் பல உண்மைகள் உண்டு. அவமானங்கள் உண்டு. போராட்டங்களும் உண்டு. இந்நூலின் தூண்டுகோலாய் யாரேனும் ஒருவராவது முன்வந்து அவற்றையெல்லாம் எழுதத்தொடங்கினால் என் ஆசைக்குப் பலன் கிடைத்துவிட்டதாக எண்ணி மகிழ்வேன் ' என்று சொல்கின்றார் மொழிபெயர்ப்பாளர். படிப்பவர் எவரையும் பதியத்தூண்டும் மொழிபெயர்ப்பு இது. உறுதியாய் பாவண்ணனின் ஆசை நிறைவேறும்.

அண்மையில் படித்த புத்தகம் : ஊரும் சேரியும்
கன்னட மொழியில்          : சித்தலிங்கையா
தமிழில்                    : பாவண்ணன்
வெளியீடு                   : புத்தா வெளியீட்டகம், 3, மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலிபாளையம்,கோயம்புத்தூர்-641 015
வெளியிட்ட ஆண்டு          : டிசம்பர் 2004, 144 பக்கங்கள், விலை ரூ 60
மதுரை மைய நூலக எண்    : 155565

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி ஐயா
அவசியம் வாங்கிப் படிப்பேன்

முனைவர். வா.நேரு said...

அய்யா நன்றி , வருகைக்கும் கருத்திற்கும்