Sunday, 19 March 2023

உலகக் கவிதை நாளும் திராவிட இயக்கமும் – முனைவர் வா.நேரு

 உலகம் முழுவதும் கவிதையைக் கொண்டாடும் நாளாக மார்ச் 21- கடைப்பிடிக்கப்படுகிறது. மார்ச் 21 உலகக் கவிதை நாள் என்று 1999-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது. அந்த ஆண்டு முதல் மார்ச் 21 என்பது கவிதையை வாசிக்க, எழுத, வெளியிட ஊக்கம் அளிக்கும் நாள் என உலக முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.



கவிதையை உருவாக்க ஒரு தேவையும் நோக்கமும் வேண்டும். ஆம், “எல்லோருக்கும் எல்லாம்” என்பதே திராவிட இயக்கத்தின் நோக்கம்.. அந்த நோக்கத்தை அடையத் தேவை ஜாதி ஒழிந்த, பெண்ணடிமைத்தனம் ஒழிந்த சமத்துவ சமுதாயம் ஆகும். அந்த சமத்துவ சமுதாயத்தை அடைவதற்குத்தான் தந்தை பெரியார் தன் வாழ்நாள் எல்லாம் உழைத்தார்.. தந்தை பெரியாரின் வழிவந்த தொண்டர்கள், தலைவர்கள் எல்லாம் அந்த நோக்கத்திற்காக உழைத்தனர்; உழைக்கின்றனர்.

ஒரு நோக்கத்திற்காக உழைப்பவர்களுக்கு கையில் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் கவிதை.கவிதை இசையோடு அமைந்த பாடலாக உருவெடுக்கும்போது எளிய மனிதர்களின் மனங்களில் ஊடுருவுகிறது.இசையில்லை என்றாலும் கூட மீண்டும் மீண்டும் கவிதை வரிகளை நாம் சொல்கிறபோது மனதிலே உணர்ச்சி எழுகிறது; எழுச்சி உருவாகிறது.அந்த வகையில் திராவிட இயக்கத்தின் முதன்மைக் கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார்கள்.

எல்லோரும் கவிதைக்குப் பொழிப்புரையாக உரைநடையை எழுதுவார்கள். ஆனால், தந்தை பெரியார் பேசிய உரையை எல்லாம் கவிதையாக மாற்றியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆவார்.

தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புக் கருத்தை, பெண்ணடிமை ஒழிப்புக் கருத்தை,பெண்ணுக்கு கல்வி வேண்டும் என்னும் கருத்தை, விதவை மறுமணம் வேண்டும் என்னும் கருத்தை, நாத்திகத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை என்னும் கருத்தை எல்லாம் கவிதைகளாகப் படைத்துக் கொடுத்தவர் புரட்சிக் கவிஞர் ஆவார்.நூறு ஆண்டுகளைக் கடந்து நடைபோடும் திராவிட இயக்கப் பேச்சாளர்கள் ஊர்தோறும் முழங்கிய கவிதைகள் புரட்சிக் கவிஞரின் கவிதைகள். 90 வயதில் 80 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அனைத்து உரைகளிலும் புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகள் இன்றும் இடம் பெறுவதைக் காண்கின்றோம்.

புரட்சிக் கவிஞரின் நேரடி மாணவனாக,அவரிடம் கல்வி பயின்றது மட்டுமல்லாது, கவிதையையும் பயின்றவர் கவிஞர் வாணிதாசன்.ரங்கசாமி என்னும் இயற்பெயர் கொண்ட வாணிதாசன் புரட்சிக் கவிஞரைப் போலவே இயற்கையைப் பற்றிப் பாடியவர்.வாணிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பு இயற்கையைப் பாடி பெரும் புகழ் பெற்ற நூல். அதனாலேயே ‘தமிழ் நாட்டின் வேர்ட்ஸ்வெர்த்’ என்று அறிஞர்களால் பாராட்டப்பட்டவர் வாணிதாசன். பகுத்தறிவையும் இயற்கையையும் பாடிக் குவித்த கவிஞர் வாணிதாசன்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகளில் உவமைகளுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் இயற்பெயரான கனக சுப்புரத்தினம் என்னும் பெயரைச் சுருக்கி சுரதா (சுப்புரத்தினதாசன்) எனப் புனை பெயர் வைத்துக்கொண்ட இராசகோபாலன் அவர்கள் உவமைக் கவிஞர் சுரதா என்றே அழைக்கப்பட்டார்.கொட்டும் அருவி போல கவிதைகளுக்குள் உவமையையும் உருவகத்தையும் வைத்துப் பாடியவர் சுரதா.பகுத்தறிவையும் சாதி ஒழிப்பையும் மிகச்சிறப்பாக பாடியவர்.

 

டாக்டர் கலைஞர் அவர்கள் கட்டடங்-களுக்குள் நடத்தப்பட்ட கவியரங்குகளை ஆயிரக்கணக்கான மக்களின் மத்தியில் தெருவில் நடத்தியவர்.
‘பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் / ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்…” எனப் பாடியவர்.
இதைப்போல கவிஞர் கருணானந்தம்,புலவர் குழந்தை, கவிஞர் வேழவேந்தன்,புலவர் புலமைப்பித்தன், கவிஞர் குலோத்துங்கன் எனப் பல கவிஞர்கள் நம் கண்முன்னே வருகின்றனர்.கவிதையைப் படைத்து பகுத்தறிவுப் பாய்ச்சலுக்கு வழிவகுத்த, வழி வகுக்கும் பல கவிஞர்களை திராவிட இயக்கம் தந்து கொண்டே இருக்கிறது.

இன்றைக்கு திராவிடர் கழகத்தின் துணைத்-தலைவர் அய்யா கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் கவிதை ‘‘ஆடுமயிலே! பாடு குயிலே! அறிவு பிறந்தது ஈரோடு என்று’’ தமிழ்நாட்டின் தெருக்கள் தோறும் இசைப்பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
மரபுக் கவிதைகள் வழியாக மட்டுமல்ல, புதுக்கவிதைகளில் வழியாகவும் திராவிட இயக்கத்தைச் சார்ந்தோர் கவிதைகளைப் படைத்துப் பரப்பிக் கொண்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி, கவிஞர் சல்மா, நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்,ம.வீ.கனிமொழி போன்றோர் அற்புதமான நவீனக் கவிதைகளைப் படைக்கின்றனர். கவிஞர் கலாப்பிரியா, கவிஞர் கவிதைப் பித்தன்,கவிஞர் ஈரோடு தமிழன்பன் என இன்று கவிதை படைக்கும் திராவிட இயக்கக் கவிஞர்களின் பட்டியல் பெரியது.

அண்மையில் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் கடலைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் மிக அதிக அளவில் பகிரப்-பட்டது.அந்தப் படத்தைப் பார்த்து கவிதை எழுதச்சொல்லி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக போட்டி வைக்கப்பட்டது.உலகின் பல பகுதிகளில் இருந்தும் கவிதைகள் எழுதி அனுப்பினர்.மகிழ்ச்சியாக இருந்தது.

“நாட்டில் இலக்கியங்கள் இருந்தால் அதுநாகரிகத்திற்கு ,அறிவு வளர்ச்சிக்கு ,புரட்சிக்கு, முற்போக்கு மாறுதலுக்கு உதவிடவேண்டும்” என்றார் தந்தை பெரியார். (விடுதலை 3.9.96). கவிதை என்பது கூர்வாள் போன்றது. எளிதில் அறியாமையைக் கிழித்து அகற்றி விடும் தன்மை கொண்டது.சில வரிகளில் பெரும் கருத்துகளை மனிதர்களிடத்தில் பரப்ப வல்லது. மீண்டும் மீண்டும் மனிதர்கள் தனக்குத்தானே சொல்ல வைக்கும் ஆற்றல் மிகுந்தது.

இணையம் இன்றைக்கு பலருக்கும் கவிதையை வெளிப்படுத்தும் ஊடகமாக இருக்கிறது. ஜாதி ஒழிப்பு குறித்தும்,பெண் உரிமை குறித்தும் கவிதைகள் நிறைய வருகின்றன.உலகம் முழுவதும் இருக்கும் பெண்கள் கவிதைகள் படைக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நேஹா சிங்ரத்தோர் போன்ற படைப்பாளிகள், கவிதைகளைப் படைத்து,இசை அமைத்து பாடி இந்துத்துவ அரசுக்கு மிகப்பெரும் பயத்தைக் கொடுக்கின்றனர். இசையும் கவிதையும் இணையமும் இணைந்து எளிய மக்களின் உணர்வை, வேதனையை உலகெங்கும் விதைக்கின்றன.

கவிதை என்பது சிறு உளியைக் கொண்டு பெரும் மலைகளை உடைக்கும் சாதனம்.எனவே, மார்ச்21 உலகக் கவிதை நாளைக் கொண்டாடும் அதே நாளில் திராவிட இயக்கக் கவிஞர்களை நினைவில் கொள்வோம். அவர்களின் கவிதைகளை மனதில் கொள்வோம்.கவிதைகளைப் படைப்போம்.

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் மார்ச் (16-31)-2023


திராவிட இயக்கக் கவிஞர் பொன்னிவளவன் அவர்கள்..விளக்கம் கமெண்ட் காலத்தில் பார்க்க...





3 comments:

முனைவர். வா.நேரு said...

இந்தக் கட்டுரையைப் படித்து அய்யா ஆசிரியர் இராமசாமி,மதுரை அவர்கள் அலைபேசியில் அழைத்துப்பாராட்டினார். அய்யா,மற்ற கவிஞர்களை எல்லாம் குறிப்பிட்டு சிறப்பாக,சுருக்கமாகச்சொல்லி இருக்கிறீர்கள்.கவிஞர் பொன்னிவளவன் அவர்களை விட்டு விட்டீர்களே என்றார்...ஆமாம் அய்யா,அவர் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.அவரின் கவிதைகளைப் படித்ததில்லை.அவரின் நூல் எதுவும் வைத்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். இல்லை என்றார்.

கவிஞர் பொன்னிவளவன் அவர்களின் நூலைத் தேடிப்படிக்க வேண்டும்.இணையத்தில் தேடியபோது அய்யா நக்கீரன் துணை ஆசிரியர் ஆருர் தமிழ்நாடன் அவர்களின் கட்டுரை கிடைத்தது.அக்கட்டுரையின் சில பகுதிகளைப் பகிர்ந்துள்ளேன்.

திராவிட இயக்கக் கவிஞர்களில் பாரதிதாசன், சுரதா ஆகியோர் வரிசையில், இடம்பெற்றவர் புலவர் பொன்னிவளவன். இயற்பெயர் நவநீதகிருஷ்ணன். கவியரசர் என்றும் போற்றப்பட்டவர்.

‘மாதவிக் காப்பியம்’, ‘பொன்னிவளவன் கவிதைகள்’ உள்ளிட்ட பல நூல்களைப் படைத்த புலவர், சுரதாவைத் தன் கவிதை ஆசானாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார். குடந்தையருகே உள்ள பாபநசம் பகுதியைச் சேர்ந்த பொன்னிவளவன், தஞ்சை புலவர் கல்லூரியில் பயின்றவர். சென்னை வண்ணாரப்பேட்டை உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய புலவர், தண்டையார்பேட்டையில் வசித்துவந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டார்....
அண்ணாவைப் போன்ற கரகர காந்தக் குரல் - ஈர்ப்பான உரைப்பாங்கு - இன, மொழி உணர்வுடன் கூடிய உணர்ச்சிப் பேராற்றல் - முறுக்கிய மீசைக்குக் கீழே பளீரிடும் வெள்ளைப் புன்னகை - உயரம் குறைந்த கருநிறத் திருமேனி - தோளின் இருபுறமும் காலைத் தொங்கவிட்டு மார்பை அலங்கரிக்கும் வண்ணப் பொன்னாடை - பண்பார்ந்த நடத்தை - மரியாதைத் தோற்றம் - சற்றே கோபம் வீசும் பொடிவாடை - இதுதான் அவரது அடையாளம்...
65களில் தமிழகத்தைத் தணல் காடாக்கிய, திமுகவின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, புலவரும் பங்கேற்றார். தூத்துக்குடி போஸ் மைதானத்தில் நடந்த போராட்டத்தில் களமிறங்கிய அந்தத் திராவிடக் கவிஞரைக் கைதுசெய்து, அங்கிருந்த நீதிமன்றத்தில் நிறுத்தினர் காவல்துறையினர். குற்றக் கூண்டில் ஏற்றப்பட்ட புலவர், தனது வாக்குமூலத்தை ‘எண் சீர் விருத்தத்திலேயே’ கொடுத்து, அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். உலகிலேயே கவிதையால் வாக்குமூலம் கொடுத்த முதல் கவிஞர் அவர்தான். அவருடைய சாதனை இதுவரை இன்னும் எவராலும் முறியடிக்கப்படவில்லை.


அவர் கொடுத்த வாக்குமூலக் கவிதை இதுதான்.


'மதிப்புமிகு நடுவர்க்கு வணக்கம்! நீதி
மன்றத்தில் நிற்கின்றேன் குற்றக் கூண்டில்!
கொதிப்போடு மொழிப்பிரிவைக் கொளுத்தி விட்டேன்!
கொழுத்துப்போய் அல்ல!இதைக் குற்றம் என்று
விதிப்பீர்கள் தண்டனையை! ஏற்றுக் கொள்வோம்!
வீண்வாதம் நான்செய்ய மாட்டேன்! இந்தி
எதிர்ப்புணர்வில் மொழிப்பிரிவை எரித்த செய்கை
எனதுமன சாட்சிக்கோ குற்ற மல்ல!


முன்னேற்றக் கழகத்து கவிஞன் நானோ
முத்தமிழைக் கற்றுணர்ந்த புலவன்; ரொம்பச்
சின்னவன்தான்! இருந்தாலும் பிறர்ம திக்கும்
சீர்வாய்ந்த பேச்சாளன்! இந்தி தன்னை
என்னென்னவோ விதத்திலும் எதிர்த்துப் பார்த்தேன்!
எழுதிப்பார்த் தேன்!பேசிப் பார்த்தேன் ! இன்னும்
என்னவழி! ஆட்சிமொழிச் சட்டம் தன்னை
எரிப்பதுதான் வழிஎன்று எரித்தும் பார்த்தேன் !


தயங்கவில்லை; மயங்கவில்லை; இந்த நாட்டில்
தமிழ்படித்தோர் இந்திதனை எதிர்ப்ப தற்கு
பயங்கொண்டு ஒதுங்கிவிட்டால் இனிக்கும் வெல்லப்
பாகுநிகர் தமிழ்கெட்டுச் செத்துப் போகும்!
நயங்கெட்ட இந்திமொழி வந்து குந்தி
நாட்டாண்மை செய்திடுமே! அதனால் நன்றாய்
இயங்குகிற இயக்கத்தில் உள்ள தொண்டன்
எரித்திட்டேன் ஆட்சிமொழிச் சட்டம் தன்னை!


சாட்சிமொழி பலசொல்லிக் காட்டி நீங்கள்
சட்டத்தை நினைவூட்டிச் சுமையைக் கூட்டி
ஆட்சிமொழிச் சட்டத்தை எரித்த தற்கு
'அளித்திடுக நீ வாக்கு மூலம் !' என்றீர்.
சாட்சியென்ன? சாட்சியென்ன? நீங்கள் சொல்லும்
சட்டமென்ன? ஆட்சியென்ன? எனது - நெஞ்சின்
சாட்சிக்கோ நான்குற்ற வாளி யல்ல!
சட்டம் அதைக் குற்றமென்றால் மறுக்க மாட்டேன்!


அழியாமல் வளர்கிறது எங்கள் கட்சி!
அதனைநான் எப்போதும் நினைத்தி ருப்பேன்!
கமழ்கின்றார் எனதுமன நிறைவாய் எங்கள்
கற்கண்டு தனித்தலைவர் அறிஞர் அண்ணா!
தமிழ் காக்க எரிந்தவனாம் சின்னச் சாமி
தன்னையும்நான் மனநினைவில் உலவ வைப்பேன்!
தமிழ்காக்கும் தொண்டனுக்கு இந்த நாட்டில்
தண்டனைதான் பரிசென்றால் ஏற்றுக் கொள்வேன்!'


புலவர் பொன்னிவளவனின் உணர்ச்சித் தமிழை உள்ளன்போடு வணங்குகின்றேன்.
எழுத்தாளர் ஆருர் தமிழ்நாடன்...

மேலை சு சுசிலா said...

மிகவும் நேர்த்தியான அற்புதமான கட்டுரை. இன்றைய மக்களுக்குத் தெரியுமோ தெரியாதோ சுதந்திரமாகப் படி தாண்டி வெளி உலகிற்கு வர விதை போட்டவர் ஈவேரா என்று. காலம் உள்ள வரை திராவிட இயக்கம் வளர்ந்தோங்கி நிற்கும் என்பது திண்ணம்

Anonymous said...

மகிழ்ச்சி.நன்றி தங்கள் கருத்திற்கு...