Tuesday, 11 March 2025

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க மலரில் எனது கட்டுரை....









 

வாசிக்கும் மனம்...

 

                                        

 

ஒரு நல்ல

புத்தகத்தின் வாசிப்பு

நம்மை எங்கெங்கோ

அழைத்துச்செல்கிறது


அத்துவானக் காட்டில்

துயரத்தில் அல்லல்படும்

அவர்களின் துயரத்தில்

நம்மையும் கூட

பங்குபெற வைக்கிறது..


ஏதுமற்ற பழங்குடிப்பெண்ணாக

இருந்தாலும் அவளின்

கள்ளங்கபடமற்ற நகைப்பும்

வாழ்ந்து காட்டவேண்டும்

எனும் உள்ளத் துடிப்பும்


தன் துயரை மட்டுமே

எண்ணி அழுதுகொண்டிருக்காமல்

தன்னைப்போல் பாதிக்கப்பட்டு

அழுதுகொண்டிருப்பவர்களுக்காக

நீளும் அவளின்

உதவிக் கரங்களும்


உன்னதமாக வாழ்வது எப்படி

என்னும் உண்மையைப்

போதிக்கிறது எழுத்தின் வழியே

அரிவாள் ஜீவிதம்நாவலின்

ஜெகந்திஏனோ படித்து

முடித்தபின்பும் மனதிற்குள்

வாழ்ந்து கொண்டிருக்கிறாள்

கதை என்னமோ அவள்

சாகும் இடத்தில்

இருந்துதான் தொடங்குகிறது !

 

                   வா.நேரு,11.03.2025




 

Thursday, 6 March 2025

நெருப்புச்சிலிர்ப்புகள்...கவிஞர் ம.வீ.கனிமொழி

 அழகிய வடிவமைப்புடன் ,அமெரிக்காவில் இருக்கும் தோழர் ம.வீ.கனிமொழி அவர்களின் 'நெருப்புச்சிலிர்ப்புகள்' கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.தோழர் ம.வீ.கனிமொழி அவர்களின் தாயார் ,திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் ,வழக்கறிஞர் அம்மா வீரமர்த்தினி அவர்கள் இந்த நூலினை எனக்குத் தபாலில் அனுப்பிவைத்தார்.  நன்றிகள் அவருக்கு.இனி 'நெருப்புச் சிலிர்ப்புகள் ' நூலுக்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரை தங்களின் வாசிப்பிற்கு...










                                  அணிந்துரை

 

தோழர் ம.வீ. கனிமொழி அவர்களின் 60 கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு நூல் இந்த ‘நெருப்புச் சிலிர்ப்புகள் ‘. அவ்வப்போது தோழர் ம.வீ. கனிமொழியின் கவிதைகளை இணையத்தின் வழியாக வாசிக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது அப்போதே நான் இவரை வியந்து பார்த்திருக்கிறேன் உவமையை,படிமத்தை வெகு இயல்பாகத் தன் கவிதையில் நடமாட விடுவது மட்டுமல்ல, எவரும் சிந்திக்காத கோணத்தில் கருத்துக்களைக் கவிதைகளாக தரும் இவரின் ஆற்றல் எனக்கு வியப்பைத் தந்திருக்கிறது. அப்படிப்பட்ட கவிஞரின் 60 கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கின்ற வாய்ப்பு கிடைத்த போது உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.முதலில் இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

 தனக்குப் பிடித்ததை,தன் வாழ்வைத் தான் விரும்பியவண்ணம் அமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் பெருவிருப்பம் உடையவர் இவர்..எதையும் நேரிடையாக எதிர்கொள்ளக் கூடியவர். பேசக்கூடியவர். அந்தத் தன்மை,தனித்தன்மை அவரின் கவிதைகளிலும் வெளிப்படுகிறது.

 
“காடோடிப்/பாடும் என்/ குரல் இறவா/புகழ் பெற்றது “ என்னும் இக்கவிஞர் நாடோடி வாழும் நிலையில் கவிதை பாடுகின்றார்.” எத்தனையோ /கவிதைகளில் /உலா வருகிறேன்” என்று காலம் கடந்தும் வாழப்போகும் தன் கவிதைகளின் வழியாக இறவாத் தன்மையை அடைவேன் என்னும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.படைப்புத்தானே ஒருவரின் பெயரை நிரந்தரமாக இந்த உலகில் நிறுவும் வழி.

 
தேடல் என்னும் கவிதை அத்தனை கவித்துவமாய் இருக்கிறது. ‘என் கவிதைக்கான/

ஒற்றைச் சொல்லை’ என்று முடியும் அந்தக் கவிதை ஒரு சிறுகதையின் முடிவைப் போல இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னால் “ அந்தி மாலை /வானத்தில் /தேடுகிறேன் / காலை நேரத்துக்/கதிர்களைத்/துழாவுகிறேன்…” என்று தொடரும் கவிதை ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்து நிறைவடைகிறது.

 
தனது கவிதை எப்போது கனமாகிறது என்பதைத் தனது கவிதையின் வழியாகவே தோழர் சொல்கின்றார்.” கட்டுக்கடங்காதச் /சினத்தின் போதும் “ என்று ஆரம்பிக்கும் அந்தக் கவிதை “ ஒரு காகிதமும் /ஓர்  எழுதுகோலும் /போதுமாய் இருக்கிறது” என்று நின்று பின்பு தொடர்ந்து முடிவில் “லேசாகிறது /மனம்!/கனமாகிறது/கவிதை !” என்று முடிக்கின்றார்.நல்ல கவிதை.நிகழ்வுகளைக் காட்சிப்படுத்த அற்புதமான படிமங்களை இந்தக் கவிதையில் கவிஞர் கையாண்டிருக்கிறார்.

 
புத்தாண்டு வாழ்த்துகளைக் கவிதை வழியாகத் தெரிவிக்கும் இவரின் கேள்விகள் நியாயமானவை.ஆராய்ச்சிக்கும் தீர்வுக்கும் உரியவை. “ஒரு பக்கம் / வாணவேடிக்கைகள் / மறுபுறம் அதிர்வேட்டுகள் /சத்தங்கள் /பால் சுரக்கும்/ காம்புகளை/ அறுத்துப் போடுகிறது” என இருவேறு உலகங்களாக இருக்கும் இந்தப் பூமியில் புத்தாண்டு வாழ்த்துகள் என்னும் குரல் யாருக்கானது என்னும் கேள்வியை இந்தக் கவிதையின் வாயிலாக எழுப்புகிறார்.

 
“மரணத் தேதியை அறிந்தும்/எதிர்கொள்ளும்/அம்மனத்தின் போராட்டத்தை/நாளை எச்சொற்கள்/அடுத்த தலைமுறைக்குக்/கடத்தும்?”  எனக் ‘கல்லறைக் கனவுகள் ‘  என்னும் கவிதையில் கேள்வியை எழுப்புகிறார். அருகில் இருந்து பார்த்தவர்கள் அறிவார்கள்,அந்த உறவுகளின் மனப்போராட்டத்தை.மரணத் தேதியை அறிந்த பின்பும் அமைதியாக அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அளிக்க இந்த மாதிரியான கவிதைகள் பயன்படட்டும்.

 சங்க இலக்கியங்கள் பற்றிய கவிஞர் ம.வீ.கனிமொழியின் உரைகள் ,கேட்பவர்க்கு எப்போதும் வியப்பைத் தரும்.பொறியாளர் எப்படி சங்க இலக்கியங்களுக்குள்  இவ்வளவு ஆழ்ந்து ,தோய்ந்து உரை தருகிறார் என்று.’முத்தக் கொத்தல் ‘ என்னும் கவிதையில் காதலும் இருக்கிறது,ஊடலும் இருக்கிறது,சங்க இலக்கியமும் இருக்கிறது.இரசித்துப் படிக்கலாம்.ஆழமான அன்பை அளப்பதற்கான ஒரு வழியையும் தனது கவிதையின் வாயிலாகத் தோழர் ம.வீ.கனிமொழி கூறுகின்றார். இளையவர்கள் அதனைக் கற்றுக்கொள்ளலாம் ‘ஆழம் ‘ என்னும் கவிதையினை வாசிப்பதன் மூலமாக.

இந்தக் கவிதைத் தொகுப்பின் தலைப்பாக இருக்கும் ‘நெருப்பின் சிலிர்ப்புகள் ‘ என்னும் கவிதையில் “அத்தி மர நிழலைத்/தேடி அலைந்த காலம்/உண்டு/செர்ரி மரத்தின் நிழலில் /இன்று இளைப்பாறுகிறேன் “ என்று தனது இரண்டு வாழ்நிலை இடங்களைச் சுட்டிக் காட்டி “மரங்கள் /சமத்துவ விரும்பிகள் /அவை எப்படி/அஃறிணையாகும்?” என்னும் கேள்வியை எழுப்புகிறார்.சமத்துவம் விரும்பா மனிதர்கள்தானே அஃறிணைகள் என்பதைச்சுட்டும் இக்கவிதை மரங்கள் ஏன் நெருப்புச் சிலிர்ப்புகளை வீசுகின்றன என்பதனை கவித்துமாய்க் காட்டுகிறது.

 
ஏன் “ஒருபோதும் தனிமையை /என் உணர்வின்/படிமங்கள் கூட/உணர்வதில்லை” என்பதை ‘உணர்வின் படிமங்கள் ‘ என்னும் கவிதையில் முடிப்பதற்கு முன் குறிப்பிடுகின்றார்., “ஒற்றைக் குயில் /கூவிக் கொண்டிருக்கும்/வரை/மெல்லியத் தென்றல் /தீண்டும் வரை.. “ என்று வரிசையாக படிமங்களை நம் கண் முன்னே அக்கவிதையில் வரிசைப்படுத்துகிறார். வகைப்படுத்துகிறார்.அவர் சுட்டும் ஒவ்வொரு உவமையும் நம் கண் முன்னே காட்சியாக விரிந்து தன்னைப் படிமம் என்று சுட்டிக் காட்டுகிறது.அழகியலும் கருத்தும் ஒன்றை ஒன்று விஞ்ச போட்டியிடும் கவிதை இது.

 
கவிஞர் ம.வீ.கனிமொழி “ஓணான்-காகம்-தவளை- காதல்” கவிதை வழியாக்க் காதலை நன்றாகவே பகடி செய்கிறார்..’விந்தை மாதவள் ‘ என்னும் கவிதையில் தாய்மை –புனிதம் என்பதைக் கவிதையின் வழியே கட்டுடைப்பு செய்கின்றார்.” கடந்து பாருங்கள்/தெரியும்/கண்டங்கள் தாண்டும்/இன்பம்” என்று ‘’நிம்மதியின் சாயல் ‘கவிதையில்  நம் நாட்டில் பெண்களுக்கு நிகழும் துன்பங்களை கவிதையின் வழியே பட்டியலிடுகின்றார்.’பல்லி’ என்னும் தலைப்பில் கவிதையைப் படித்தபொழுது உவமைக் கவிஞர் ‘சுரதா’ எழுதிய ‘போலி உடும்பு ‘ என்னும் கவிதை நினைவுக்கு வந்தது.இரண்டு கவிதைகளுமே குறி சொல்லும் பல்லியைக் கேலி செய்யும் கவிதைகள்.இரண்டுக்கும் ஒற்றுமையும் உண்டு,நிறைய வேற்றுமைகளும் உண்டு.

 
இப்படி இக்கவிதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையையும் சிறப்பித்துச்சொல்ல ஏராளமான செய்திகள் உள்ளன.தமிழ்க் கவிதை உலகில் தனக்கான பாணி,தனித்துவமான பாணி என்பதை நிருபிக்கும் வண்ணம் கவிஞர் ம.வீ.கனிமொழியின் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. கட்டாயம் ஆங்கிலத்தில் இதனைத் தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள் மொழிபெயர்க்கவேண்டும். தஸ்லிமா நஸ்ரின் வங்க மொழியில் தன் கவிதைகளை, நாவலை எழுதிப் பின் ஆங்கிலத்தில் தானே மொழிபெயர்ப்பதுபோல தோழர் ம.வீ.கனிமொழி அவர்களும் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவேண்டும் என்பது  நம் விருப்பம்.ஆங்கிலத்திலும் அற்புதமாக பேசக்கூடிய,எழுதக்கூடிய தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள்.இரண்டு மொழிகளிலும் ஒன்று போல இந்தத் தொகுப்பு வெளியிடப்பட்டால் இன்னும் சிறப்பாகும்.

இத்தொகுப்பை நம் தோழர்கள் வாங்கிப் படிக்கவேண்டும். முழுமையாகப் படித்து தங்கள் கருத்துகளை இந்த நூல் ஆசிரியர் கவிஞர் ம.வீ.கனிமொழி அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.தன் மனதில் உள்ள கருத்துகளை கவித்துவத்தோடும் துணிச்சலோடும் வெளிப்படுத்தும் தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள் இன்னும் பல படைப்புகளைத் தரவேண்டும் என்னும் பெரும் விருப்பத்தோடு ,அவருக்கு இந்தக் கவிதைத் தொகுப்பிற்காக என் மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்.மென்மேலும் வளர்க! படைப்புகளால் இந்த உலகில் ம.வீ.கனிமொழியாக தாங்கள் என்றும் வாழ்க!

                       

 

மதுரை                                         தோழமையுடன்

 

05.10.2024                                             முனைவர் வா.நேரு,

                                                     தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு,

                                                       பெரியார் திடல்,சென்னை-600 007.




Tuesday, 4 March 2025

தமிழில் குறள்வெண்பா எழுதும் அமெரிக்கர்…வாழ்க்கையையும் சேர்த்துச் சொல்லவேண்டும்… (சென்ற இதழ் தொடர்ச்சி)- முனைவர் வா.நேரு

தமிழில் குறள்வெண்பா எழுதும் அமெரிக்கர்…- முனைவர் வா.நேரு

March 4, 2025 

வாழ்க்கையையும் சேர்த்துச் சொல்லவேண்டும்…

(சென்ற இதழ் தொடர்ச்சி)

கேள்வி: திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்று மூன்று பகுதிகள் உள்ளன. சிலர் இன்பத்துப் பாலைப் படிப்பதில்லை; அதைப் பற்றி பேசுவதில்லை; இன்னும் கேட்டால் இன்பத்துப் பாலைப் படிக்காதே என்று சொல்லக்கூடியவர்களும் இருக்கிறார்கள். உங்களுடைய கருத்து என்ன?



பதில்: இது தப்பான கருத்து. மூன்றையும் படிக்க வேண்டும். சில பேர் காமத்துப்பால் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் அய்யய்யோ, இது ஏதோ காமத்தைப் பற்றியது என்று நினைப்பார்கள். அப்படி இல்லை. திருக்குறளில் இருக்கும் காமத்துப்பால் காமத்தைப் பற்றியது அல்ல, மனதைப் பற்றியது. ஒரு தலைவன், தலைவி அவர்களுடைய மனதைப் பற்றியதுதான் காமத்துப்பால், அதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையா?. காமத்துப்பாலில் வரும் ஊடலைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். கணவன், மனைவி அல்லது இரண்டு நண்பர்களுக்குள் பிரச்சனைகள் வரும். அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, பிரிந்து போன பின்பு நாம் புரிந்து கொள்ளவில்லையோ என்பதைப் புரிந்து கொள்வதற்குத் திருக்குறள் உதவும். அதன் மூலம் பிரிந்த உறவு கூடி மேலும் பலமாகும். முன்பிருந்ததைவிட வலுவாகும்.

கேள்வி: எல்லோருக்கும் எல்லா நாடுகளுக்கும் செல்வம் சேர்க்க வேண்டும் என்னும் ஆசை இருக்கிறது. திருவள்ளுவரும் செல்வத்தைச் சேருங்கள் என்று சொல்கின்றார். இன்றைக்குக் கார்பரேட் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் செல்வத்தைச் சேருங்கள் என்று சொல்கிறார்கள். இவர்கள் சேர்க்கச் சொல்லும் செல்வத்திற்கும், திருவள்ளுவர் சேர்க்கச் சொல்லும் செல்வத்துக்கும் என்ன வேறுபாடு?

பதில்: முதலில் செல்வம் என்றால் என்ன என்பது தெரிய வேண்டும்; புரிய வேண்டும். கல்வி என்னும் அதிகாரத்தில் உள்ள கடைசிக் குறள்.
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கல்விதான் செல்வம். மற்றவை எல்லாம் செல்வங்கள் அல்ல. செல்வம் என்றால் என்ன என்று நான் சொல்லித் தருகிறேன் என்று திருவள்ளுவர் வருகிறார். வந்து கல்விதான் செல்வம் என்று சொல்கின்றார். இதற்குப் பன்னாட்டு நிறுவனத்தார் என்ன செய்வார்கள்? ஒன்றும் செய்யமாட்டார்கள்.

திருக்குறளில் இருக்கும் காமத்துப்பால் காமத்தைப் பற்றியது அல்ல, மனதைப் பற்றியது.
ஒரு தலைவன், தலைவி அவர்களுடைய மனதைப் பற்றியதுதான் காமத்துப்பால்

கேள்வி: கல்வி அதிகாரத்தில் 10 குறள்கள் கல்வியின் தேவை பற்றியும் கல்லாமை அதிகாரத்தில் 10 குறள்கள், கற்காமல் இருப்பதன் துன்பம் பற்றியும் இருப்பதைப் பற்றித் தங்கள் கருத்து…

பதில்: ஆமாம், மிகச்சிறப்பான அதிகாரங்கள். திருக்குறள் எல்லோருக்குமானது. ஒரு குறளைப் பார்க்கும்போது அது யாருக்கு? அரசருக்கா, அமைச்சருக்கா, மக்களுக்கா என்பதை நாம் பார்க்க வேண்டும். கல்வி இல்லை என்றால் செஸ் போர்டு இல்லாமல் செஸ் விளையாடுவது போல என்றும், தோற்றுப் போய்விடுவீர்கள் என்றும் கல்லாமை அதிகாரத்தில் கூறுகிறார்.

கேள்வி : திருக்குறள் பல
மொழிகளில் மொழிபெயர்க்கப்
பட்டுள்ளது. திருக்குறளை மொழி பெயர்ப்பது பற்றித் தங்களின் கருத்து?

பதில் : திருக்குறளின் கருத்தை மட்டும் மொழி பெயர்ப்பது, அது வெறும் உரை.அது மொழிபெயர்ப்பு ஆகாது. திருக்குறளில் கருத்து மட்டும் அல்ல ஓசை நயம் இருக்கிறது, இசை இருக்கிறது, நகைச்சுவை இருக்கிறது.விளையாட்டுத் தன்மை இருக்கிறது.ஆழம் இருக்கிறது. இன்னும் எத்தனையோ இருக்கிறது.இது அனைத்தும் மொழிபெயர்ப்பிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் எந்த மொழிக்காரரும் விரும்பிப் படிப்பார்கள்.உலகத்தில் இன்னும் பலர் திருக்குறளைப் படிக்கவில்லை. மொழிபெயர்ப்பையும் ஒரு பாட்டாகவோ, செய்யுளாகவோ கொடுக்கவேண்டும். இரசித்துப் படிக்கும்படி மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.

கேள்வி: பிள்ளைகளுக்குத் திருக்குறளின் மேல் ஆர்வம் உண்டாக என்ன செய்ய/வேண்டும்?

பதில்: பல வகைகளில் செய்யலாம். ஒரு குறளுக்கு ஏற்ப நாடகம் போடச் சொல்லலாம்.

கேள்வி: அமெரிக்காவில் உள்ள மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்கள், ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியுள்ளார். ஒரு திருக்குறள்.அதன் கருத்தை விளக்கும் வகையில் ஒரு சிறிய கதை. அப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களா?

பதில்: நல்ல முயற்சி.கருத்தோடு வாழ்க்கை யையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட ஒரு திருக்குறளை நான் எப்போது, எப்படி, எந்த நேரத்தில் புரிந்து கொண்டேன் என்று எழுதவேண்டும். 20 வயதில் அல்லது 40 வயதில் நமக்கு ஒரு குறளின் பொருள் முழுமையாக விளங்கும். நாம் ஒரு சிக்கலில் இருக்கும் போதோ, மகிழ்ச்சியில் இருக்கும்போதோ குறளின் பொருள் நமக்கு முழுமையாக விளங்கும். அதை எழுத வேண்டும். திருக்குறள் நமது சொத்து. வாழ்க்கை முழுக்கப் பயன்படும் சொத்து.

கேள்வி: கல்வி என்பது இன்று அகடாமிக்காகப் பார்க்கப்படுகின்றது. கல்வி என்பதன் அளவுகோலாகத் திருவள்ளுவர் எதைக் குறிப்பிடு
கிறார்?..

பதில்: திருவள்ளுவர் குறிப்பிடும் கல்வி அகடாமிக்கு உரியது மட்டுமல்ல; வாழ்க்கைக்கு உரியது. அரசனாக வேண்டுமா? நீ எப்படிக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதைத் திருக்குறள் சொல்கிறது. அப்புறம், மெய்ப்பொருள் காண்பதற்கான அறிவைக் கற்றுக்கொள்வதுதான் திருவள்ளுவர் கூறும் கல்வி.

ஓர் அய்ம்பது நிமிட உரையாடல். ஆசை ஆசையாக திருக்குறளைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார். மிக அருமையாக இருந்தது.மிகவும் தோழமையோடு திருக்குறள் பற்றி பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அவருக்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டோம்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் மார்ச் (1-15),2025

சென்ற இதழின் இணைப்பு 

\https://vaanehru.blogspot.com/2025/02/blog-post_75.html


Monday, 3 March 2025

செத்தபின்பும்....

 

ஒரு கொள்கைக்காகவே

வாழ்தல்…

ஒரு கொள்கைக்காகவே

பேசுதல்…

ஒரு கொள்கைக்காகவே

சாகுதல்…

இவையே ஒரு மனிதரை

செத்தபின்பும்

பேசவைக்கும்..

அவரைப் பற்றிப் பலரும்

எழுத வைக்கும்…

 

                       வா.நேரு,03.03.2025

Saturday, 1 March 2025

தமிழ்நாடு வெல்லும்...தளபதி வாழ்க!

 

பிறந்த நாள்

கொண்டாட்டம் என்பது

கொள்கையைப்

பிரச்சாரம் செய்யும்

ஒரு வழிமுறை

என்றார் பெரியார்…

பட்டி தொட்டி எங்கும்

ஊர்தோறும் இன்று

உடன்பிறப்புகள்

ஒன்றிணைந்து உரக்க

முழுக்கங்களை

எழுப்பியிருக்கிறார்கள்...

திராவிட மாடல்

அரசின் நாயகர்

மாண்புமிகு முதல்வர்

தளபதி மு.க.ஸ்டாலின்

வாழ்க ! வாழ்க! என

வாழ்த்தி நாமும்

முழக்கம் சொல்லுவோம்..

‘தமிழ்நாடு போராடும்

தமிழ்நாடு வெல்லும்’

                        வா.நேரு,01.03.2025