Sunday, 18 December 2016

‘வாடி’, ‘போடி’ என்று பேசாதீர்! துணைவரைத் தேடும் உரிமை பெண்களுக்கே .......

பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு
குழந்தைப் பேறு பெண்களின் தனி உரிமை!
‘வாடி’, ‘போடி’ என்று பேசாதீர்!
துணைவரைத் தேடும் உரிமை பெண்களுக்கே!
ஆணவக் கொலைகளைத் தடுப்பீர்!
பெண்களே அணிமணிகளைத் தவிர்ப்பீர்!
சம வேலைக்கு சம ஊதியம்
இந்துத்துவாவை எதிர்ப்போம்!
பூரண மதுவிலக்குத் தேவை!
விவசாயிகளுக்கு வாழ்வுயர்வு தேவை
இழிவுபடுத்தும் வேதங்கள் - ஸ்மிருதிகளை எரிப்போம்!
தேவை அனைத்திலும் பாலின சமத்துவம்!!
தீப்பொறி பறக்கும் திருவாரூர் மகளிர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள

திருவாரூர், டிச.18 பாலின சமத்துவம் உள்ளிட்ட தீப்பொறி பறக்கும் 36 தீர்மானங்கள் திருவாரூரில் நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:
பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு
மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கும் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட ஆவன செய்யுமாறு மாநில, மத்திய அரசுகளையும் தனி யார்த் துறைகளையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதி பதவிகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வழிசெய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2:
33 சதவீத இடஒதுக்கீடு
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாமல் 1996ஆம் ஆண்டு முதல் முடக்கப்படுவதற்குக் காரணமான அனைத்துத் தரப்பினருக்கும் இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறது. இனியும் காலதாமதமின்றி நடப்புத் தொடரிலேயே அந்த சட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்குமாறு அனைத்துக் கட்சிகளையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. அதில் உள்ஒதுக்கீடு கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்பதையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. தவறும்பட்சத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அனைத்துத் தரப்புப் பெண்களையும் குறிப்பாக மாணவிகளை ஒன்றுதிரட்டி வீதிக்கு வந்து கடுமையாகப் போராட நேரிடும் என்றும் இம் மாநாடு எச்சரிக்கிறது.
தீர்மானம் 3:
விவாகரத்து வழக்குகள்
மணவிலக்கு முறையை குற்றப் பார்வையோடு பார்க் காமல், பெண்களின் உரிமை உணர்வோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கவேண்டும் என்றும் இம்மாநாடு கருதுகிறது. இத் தகு வழக்குகளில் காலத்தை விரயமாக்கும் போக்குத் தடுக்கப்பட்டு, மூன்று மாதத்திற்குள் முடித்திட வகை செய்யவேண்டுமென்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. விருப்பற்ற இரு சாராருக்கும் காலநீட்டிப்பு தேவையற்ற மன உளைச்சலைத்தான் ஏற்படுத்தும்.
தீர்மானம் 4:
குழந்தைப் பேறு - பெண்ணின் உரிமை
குழந்தைப் பேறு என்பதை பெண்களே முடிவு செய்ய வேண்டுமேயல்லாமல் இதில் ஒரு தரப்பாக வெறும் ஆண்கள் ஆதிக்கத்திற்கு இடம் இருக்கக்கூடாது என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 5:
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளும் வளர்ந்து வருகின்றன. ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. இது மிகவும் வெட்கப்படத்தக்கதாகும். சட்டம் வெறும் காகிதமாக இல்லாமல் நகமும், பல்லும் உள்ளதாக மாற் றப்பட்டு, செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்றும் இது போன்ற குற்றங்களை விசாரிக்கும் காவல்துறைப் பிரிவில் பெண்களையே அதிகமாக நியமிக்குமாறும் மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 6:
பெண்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
ஆண்கள்-பெண்கள் விகிதாச்சாரத்தில் பெண்களின் எண்ணிக்கை நாளும் குறைந்து வருவது அதிர்ச்சிக் குரியதாகும். பெண் சிசுக்களை அழிப்பதில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும்கூட இருக்கவே செய்கிறார்கள்! பெண்ணுரிமை இயக்கங்கள் வெளியில் வந்து விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் பாசறை இதற்கு முன்னுரிமை கொடுக்கும் என்று இம்மாநாடு தெரி வித்துக்கொள்கிறது. கருவில் வளர்வது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்துச் சொல்லுவது குற்றம் என்று ஆக்கப் பட்டாலும் நடைமுறையில் இச்சட்டமெல்லாம் முனைமுறிந்த மூளியாகவே காணப்படுவதை மாற்றி, உயிரோட்டம் உள்ளதாகச் செயல்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7:வாடி - போடி என்று அழைக்கக் கூடாது
பெண்களை வாடி, போடி என்றும், வா, போ என்றும் மரியாதைக் குறைவாக ஒருமையில் அழைக்கும் பிற் போக்குப் புத்தியிலிருந்து ஆண்கள் மாற வேண்டும் என்று இம்மாநாடு கண்டிப்பாகத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் பார்ப்பனக் கலாச்சாரத்தைக் கைவிடாவிட்டால், பெண்கள் எதிர்நிலையில் ஆண்களை விளிக்கும் நிலை ஏற்படும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது.
தீர்மானம் 8:
யோகாவிற்குப் பதில் கராத்தே பயிற்சி
பள்ளிகளில் பெண்களுக்கு யோகாவிற்குப் பதில் வீர விளையாட்டுகளையும், கராத்தே போன்ற தற்காப்புக் கலை யையும் அவசியம் கற்றுத்தர வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.தேவைப்பட்டால்பெண்களுக்குத்துப்பாக்கிச் சுடும் பயிற்சியையும் அளித்து, துப்பாக்கி உரிமத்தையும் அளிக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9:
வாழ்விணையரைத் தேர்வு செய்யும் உரிமை
18 வயது அடைந்த பெண்கள் தன் வாழ்விணையரை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவர்களின் உரிமையே ஆகும்! தேவைப்பட்டால், பெற்றோர்கள் வழிகாட்டலாம்; அதேநேரத்தில், வலுக்கட்டாய முறையிலோ வன்முறையிலோ அணுகுவது சட்டப்படி குற்றம் மட்டுமல்ல; மனித உரிமைக்கு எதிரானது என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம் 10:
ஜாதி ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்
ஜாதி ஆணவக் கொலைக்குக் கவுரவக் கொலை என்று கூறி ஜாதியைக் கடந்து காதல் திருமணம் செய்கிறவர்களைப் படுகொலை செய்யும் ஜாதி வெறியர்களை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. இதில் ஈடுபடும் குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய கடுந்தண்டனை அளிக்கப்பட்டால், அது சமுதாயத்திலே ஓர் அதிர்வை ஏற்படுத்தும் என்பதால், இந்த வகையிலே அரசுகள் செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.  போதிய வயதடைந்த பெண்கள் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்வதை நாடகக் காதல் என்பதெல்லாம் அசல் பிற்போக்குத் தனம் என்பதையும் இம்மாநாடு அறிவித்துக் கொள்கிறது. ஜாதியைப் பார்த்து வருவதல்ல காதல் என்பதையும் இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 11:
பெயருக்கு முன் தலைப்பெழுத்து
குழந்தைகளின் தலைப்பெழுத்துக்கு (ஐவையைட) தாய், தந்தை இரு பெயர்களைப் பயன்படுத்தலாம் என்ற மாநில அரசின் ஆணையிருந்தும், நடைமுறையில் போதுமான அளவில் பயன்படுத்தாதிருப்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, நூறு சதவீதம் செயல்படுத்துமாறு இம்மாநாடு பெற்றோர்களைக் கேட்டுக்கொள்கிறது. ஆதார், கடவுச்சீட்டு  (ஞயளளயீடிசவ), நிரந்தர கணக்கு எண் அட்டை (ஞய ஊயசன) போன்ற மத்திய அரசு ஆவணங்களில் தலைப்பெழுத்துகள் நீக்கப்பட்டு, தந்தை பெயர் மட்டும் பயன்படுத்தப்படுவதால், தாய், தந்தை பெயர்களைப் பயன்படுத்தும் மாநில அரசின் ஆணை பயனற்றதாகி விடுகிறது. ஆதார் உள்ளிட்ட மத்திய அரசு ஆவணங்களிலும் தாய் பெயரும் சேர்க்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 12:
உயர் கல்விக்கு ஊக்கம் தருக!
பெண் கல்வி வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என்றாலும் மேல் வகுப்புகளுக்குச் செல்லச் செல்ல பெண்களின் சதவீதம் குறைந்து வருகிறது. (னுசடியீ டீரவள) அதனைத் தடுக்கப் பெண் கல்விக்கு ஊக்கம் தரும்வகையில் அரசுகள் போதிய ஊக்கத் தொகையையும், வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 13:
இரயில் பெட்டிகளில் பெண்களுக்குக் கூடுதல் இடங்கள்
இரயில்களில் பெண்களுக்கான தனிப் பெட்டிகள் மிகவும் சுருக்கப்பட்டு வருவதை மாற்றி, கணிசமான அளவில் விரிவுப்படுத்த வேண்டும் என்று இரயில்வே துறையை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 14:
(அ) அணிமணிகள் வேண்டாமே!
பெண்கள் நகை, பட்டுப் புடவை, அணிமணிகள் இவற்றில் ஆர்வம் காட்டுவதைத் தவிர்த்து, உரிமை உணர்வுப் பக்கம் ஊக்கம் பெற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. குறிப்பாக வளையல் அணிவதை அறவே தவிர்க்க வேண்டும் என்றும்,  தாலி கட்டிக் கொள்வதையும் கட்டாயம் பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(ஆ) அழகுப் போட்டிக்கு ஆயத்தப்படுவதைவிட, அறிவுப் போட்டிக்கும், அனுபவப் போட்டிக்கும் முந்துறுவதே மகளிருக்கு மாண்பை உருவாக்கும்.
தீர்மானம் 15:
சட்டங்கள் இருந்தும் செயல்படாத தன்மை
குழந்தைத் திருமண சட்டம் - 1929, விபச்சார தடுப்புச் சட்டம் - 1956, வரதட்சணை தடுப்புச் சட்டம் - 1961, பெண்களை இழிவுபடுத்திடும் சித்தரிப்புத் தடுப்புச் சட்டம் 1986, பாலியல் தொந்தரவு தடுப்புச் சட்டம் - 2000, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் - 2005, பாலியல் வன்முறைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் - 2012 முதலிய சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதை இம்மாநாடு வருத்தத்துடன் சுட்டிக்காட்டுவதுடன் எந்த நோக்கத்துக்காக இத்தகு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டனவோ, அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது. குறைந்தபட்சம் மேல்நிலை, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களில் இவற்றைப் பற்றிய விவரங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும், இந்தச் சட்டங்கள்பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 16:
பெண்களுக்கு அர்ச்சகர் உரிமை
ஆண்களைப் போலவே பெண்களுக்கு வழிபாடு மற்றும் அர்ச்சகர்கள் உரிமைக்கான சட்டம் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 17:
இழிவுபடுத்தும் வேதங்கள் - ஸ்மிருதிகள்
பெண்களை இழிவுபடுத்தும் வேதம், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்களைத் தடை செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இதுகுறித்தவற்றைப் பாடத் திட்டங்களிலிருந்து அறவே நீக்கி வைக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதற்கென வரும் ஆண்டில் மகளிரே முன்னின்று அத்தகைய பகுதிகளின் நகல்களை எரிக்கும் போராட்டத்தை அறிவிக்க கழகத் தலைவரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 18:
தமிழிலேயே பெயர் சூட்டுக!
தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாக வேறு மொழிப் பெயர்களை வைக்காமல், குறிப்பாக சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டாமல், பெயர், எண்கணித ஜோதிடத்தில் ஏமாந்து விடாமல் தமிழிலேயே பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று இம்மாநாடு வற்புறுத்துகிறது.
தீர்மானம் 19:
விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை
துணைவரை இழந்த பெண்களைத் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குதல், விதவைகளுக்குப் பூச்சூட்டல் (அத்தன்மையை அழிக்க) போன்றவற்றிற்கு முன்னிலைப்படுத்துதல் என்பதை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டுமாய் இம்மாநாடு முக்கியமாகக் கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறது. அதன் மூலமாகச் சமுதாயத்தில் ஒரு விழிப்பை ஏற்படுத்த முடியும் என்று இம்மாநாடு கருதுகிறது.
தீர்மானம் 20:
மூடத்தனங்களைக் கைவிடுக!
கோயிலுக்குச் செல்லுதல், சாமியார்களை நாடுதல், மதச்சடங்குகளில் ஆர்வம் காட்டுதல், குறிப்பிட்ட கோயில்களுக்குச் சென்று நிர்வாணப் பூஜை செய்தல் இவற்றை இழிவாகக் கருதி மனரீதியாகப் புதிய சிந்தனை, ஊக்கம் பெறுமாறு பெண்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 21:
பெண்கள் நுகர்வுப் பொருள்கள் அல்ல!
தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் பெண்களை வில்லியாகவும், கோழையாகவும், கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் பலவீனர்களாகவும் சித்தரிப்பதற்கும் இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. பெண்கள் வீரமானவர்கள் என்று பழைய காலத்து வரலாற்றுப் பாத்திரங்களைப் பெருமையாகப் பேசும் இந்தத் துறையினர், நிகழ்காலத்திலும் பெண்களை வீரமுள்ளவர்களாக, துணிவுள்ளவர்களாக, திறன் உள்ளவர்களாக, தலைமை தாங்கும் பண்புள்ளவர்களாகச் சித்தரிப்பதில் மனத் தயக்கம் காட்டுவது ஏன் என்ற வினாவை இம்மாநாடு கலையுலகினரையும், படைப்பாளிகளையும், எழுத்தாளர்களையும், அரசியல்வாதிகளையும் கேட்க விரும்புகிறது.
அதேபோல பெண்களை அரைகுறை உடையுடன் அட்டைப் படம் போடுவது, விளம்பர நுகர்வுப் பொருளாகச் சித்தரிப்பது - நாய் விற்றக் காசு குரைக்காது என்ற போக்கில் நடந்துகொள்வது ஆண்களின் அழுக்கு மனப்பான்மையையே காட்டுவதாக இம்மாநாடு கருதுகிறது. இந்நிலை நீடித்தால் பெண்களை ஒன்றுதிரட்டி திரைப்படம், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், விளம்பர நிறுவனங்கள் முன் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்று இம்மாநாடு அறிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 22:
சமையல் - ஆண்,  பெண்ணுக்குப் பொதுவானதே!
சமையல் என்றாலே பெண்கள்தான் என்ற நிலை மாற்றப்பட்டு, ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான பணி என்ற மற்ற நாடுகளின் நடைமுறைகளை இந்த நாட்டிலும் பின்பற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 23:
பாலின சமத்துவம்
சமூகநீதி என்பது பாலியல் நீதியும் உள்ளடக்கியது என்பதை இம்மாநாடு தெளிவுப்படுத்தி பிரகடனப்படுத்துகிறது. பாலின சமத்துவம் என்பது மனித உரிமை என்று  அய்.நா.மன்றம் அறிவித்திருப்பதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இம்மாநாடு தெரிவிக்கிறது.
தீர்மானம் 24:
கற்பு என்பது பொதுவானதே!
கற்பு என்பது எந்தப் பொருளில் கூறப்பட்டாலும் சரி, அதனை முதன்மைப்படுத்தி பெண்களை ஒடுக்குவது என்பது சமுதாயக் கூடா ஒழுக்கம் என்று கருதப்பட வேண்டும் என்றும், கற்பு என்பது ஒழுக்கமே; கட்டுப்பாடே என்று கருதப்படுமேயானால், அது ஆண் - பெண் இருவருக்குமே பொதுவானதாக ஆக்கப்பட வேண்டும், உருவாக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 25:
வரதட்சணையும் - நன்கொடையும்
வரதட்சணை என்பது குற்றம். ஆனால், நன்கொடைகள் குற்றமல்ல என்று வியாக்கியானம் சொல்லுவதெல்லாம் யதார்த்தத்தில் ஒன்றேதான் என்பதால் இந்த மறைமுகப் பேரம் சட்டப்படியாகத் தடுக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 26:
பெண் ஏன் அடிமையானாள்?
பெரியார் என்று பெண்கள் மாநாடு கூட்டி பட்டம் கொடுத்துப் பெருமை பெற்றவர்கள் பெண்கள். பெண்ணுரிமை தளத்தில் பெரியார் படைக்க விரும்புவது வெறும் புதுமைப் பெண்ணல்ல; புரட்சிப் பெண்கள் என்பதை உணர்ந்து, அதனைப் பாடத் திட்டமாகவும், சமுதாயக் கருத்தாகவும், மாற்றியமைக்கப் பாடுபடுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. குறிப்பாக தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? எனும் நூலை ஓர் இயக்கமாகவே முனைந்து பரப்பிடுவது என்று இம்மாநாடு முடிவு செய்கிறது
தீர்மானம் 27:
பெண்களின் திருமண வயதை உயர்த்துக!
இன்னும் சில குறிப்பிட்ட வட்டாரங்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்குத் தந்திரமான முறையில் திருமணம் நடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. திருமண வயது 18 என்று ஆக்கப்பட்டாலும் கல்வியில் மேலும் உயர்நிலை எட்டும் வகையில் அந்தத் திருமண வயதை நடைமுறையில் தள்ளிப்போடும் மனப்பான்மையைப் பெண்கள் பெற வேண்டும் என்றும், படிக்கும்போதே திருமணம் செய்து  வைக்கும் நிலை தடுக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. பெண்களின் திருமண வயதை மேலும் உயர்த்தும் வகையில் சட்டம் இயற்றுமாறும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 28:
ஜாதி மறுப்புத் திருமண இணையர்களின் குழந்தை எந்த ஜாதி?
ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் இடஒதுக்கீடு பெறுவதற்கு தந்தையின் ஜாதியைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை மாற்றி, தாய் அல்லது தந்தையாரின் ஜாதியை பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வைத்துக் கொள்ளலாம் என்ற முந்தைய நிலை தொடருவதற்குச் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருமாறு மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 29:
உச்சநீதிமன்றத்தின் தவறான தீர்ப்பினை மாற்றுக!
மாமியாரை மருமகள் எட்டி உதைத்தால் அது ஒன்றும் குற்றமல்ல என்றும், என் மகன் உன்னை விவாகரத்து செய்து விடுவான்! என்று மாமியார் மிரட்டுவதும் குற்றமல்ல; இது குற்றவியல் பிரிவு 498இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்சநீதிமன்ற அமர்வு (நீதிபதிகள் எஸ்.பி.சின்கா, சிரியாக் ஜோசப் -  நாள்: 22.7.2008) வழங்கிய தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டு, சட்டத் திருத்தத்தின் மூலம் பெண்களுக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 30:
மூப்படைந்த பெற்றோர்களைப் பேணுக!
மூப்படைந்த பெற்றோர்களைப் பேணிக் காப்பதில் ஆண்களைவிட பெண்கள் கூடுதல் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு இம்மாநாடு பெண்களைக் கேட்டுக்கொள்கிறது. இதன்மூலம் ஆண்களிடத்திலும் புதிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று இம்மாநாடு கருதுகிறது.
தீர்மானம் 31:
மார்பகப் புற்றுநோயும் பெண்களும்
மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வரும்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அனைத்து சுகாதார நிலையங்களிலும் அதனைக் கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவி செய்யவுமான வசதிகளைச் செய்து கொடுக்குமாறும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 32:
திருநங்கைகள் உரிமை - வளர்ச்சி
மூன்றாவது பாலினமான திருநங்கைகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள வாரியத்தை பெயரளவுக்கு இல்லாமல் செயல்படும் வாரியமாக ஆக்க வேண்டும் என்றும், சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் திருநங்கைகளையும் நியமனம் செய்ய வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 33:
இந்துத்துவாவைப் புறக்கணித்திடுக!
இந்துமதம், இந்துத்துவா என்பதெல்லாம் பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் பெண்களை அடிமைப்படுத்தும் அடிப்படை நோக்கம் கொண்டவை என்பதால், இவற்றிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கி நிற்குமாறு பெண்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 34:
சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கிடுக!
சம வேலைக்குச் சம ஊதியம் என்ற அடிப்படையில் ஆண் - பெண் ஊதிய விகிதத்தில் வேறுபாடு கூடாது என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 35:
தேவை முழு மதுவிலக்கு
ஆண்களிடம் உள்ள மதுப் பழக்கமென்பது பெரும்பாலும் குடும்பத் தலைவியையும், பிள்ளைகளையும், ஒட்டுமொத்த குடும்பத்தையும் பெரிதும் பாதிக்கச் செய்வதால் முழு மதுவிலக்கை செயல்படுத்துமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 36:
விவசாயக் குடும்பங்கள் மீட்சி பெற
மழை பொய்ப்பதாலும், நதிநீர் தடைப்படுவதாலும் விவசாயத் தொழில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. அதை நம்பி வாழும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாகிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது. இந்த நிலையில் வங்கிக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், நட்டப்படும் விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்குவதில் தாராள சிந்தனையையும் மனிதாபிமானத்தையும் காட்ட வேண்டும் என்றும், மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. இம்மாதிரி சூழலில் மத்திய அரசு தேவையான நிதி உதவியையும் மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும், இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
விவசாயம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.விவசாயத் தொழிலில் ஆண்களுக்கு நிகராகப் பென்களும் பெரும் அளவில் ஈடுபடுவதையும் இம்மாநாடு சுட்டிக்காட்டி நினைவூட்டுகிறது.

நன்றி : விடுதலை 18.12.2016

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தீர்மானங்கள் நிறைவேறட்டும்

முனைவர். வா.நேரு said...

1929-களில் முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்தான் இன்றைய சட்டங்கள். நாளைய சட்டங்களே இன்றைய தீர்மானங்கள். தீர்மானங்கள் நிறைவேறட்டும்.... அய்யா நன்றி...