Tuesday 4 July 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(19)

 


                மாவட்ட விளையாட்டு போட்டி..

பாகனேரியில் தனது பள்ளி அனுபவத்தை எனது தலைமை ஆசிரியர் திரு.வே.வீரிசெட்டி அவர்கள் தொடர்ந்தார்.” அங்கே(பாகனேரியில்) ஏற்கனவே ஒரு பெரிய பொறுப்பை ,அந்தப் பள்ளிக்கூடத்திற்கு கொடுத்திருந்திருக்கின்றார்கள். நான் போய் ஒருமாதம்தான் ஆகிறது.இராம நாதபுரம் மாவட்ட ஸ்போர்ட்ஸ் போட்டி அங்கே நடத்த வேண்டும்.மாவட்ட விளையாட்டுப்போட்டி.அன்றைக்குத் தேதியிலேயே(1978-79) கிட்டத்தட்ட ரூ 50,000 செலவு ஆகக்கூடிய ஒரு போட்டி.பிறகுதான் எனக்கு இந்தத் தகவல் வந்தது.முதலில் தெரியாது.ஆகா,பெரிய பாரத்தையல்லவா வந்தவுடன் நம் மீது தூக்கி வைத்துவிட்டார்கள் என்று யோசித்தேன்.சரியென்று சொல்லிவிட்டு,ஆசிரியர்களைக் கூப்பிட்டுக்கொண்டு நேரே எம்.எல்.ஏ. உ.சுப்பிரமணியம் அவர்களின் வீட்டிற்குப் போய்விட்டோம்.

அவரிடம் நேரே சென்று “ என்னங்கையா,நீங்கதான் வாங்கிக் கொடுத்திருப்பீர்கள் போலிருக்கிறது,மாவட்ட விளையாட்டுப் போட்டி நடத்துறதுக்கு..ரூ 50,000 பணத்திற்கு நாங்கள் எங்கே போறது? “ என்றேன்.” ஒன்னும் கவலைப்படாதீங்க சார், வண்டியை எடுத்துக்கிட்டு நாலு ஊருக்குப் போவோம்.வசூல் பண்ணுவோம்.கணக்கு கமிட்டி நானே போட்டுவிடுகின்றேன்.” என்றார்.அவருடைய ஒரு தம்பி ,தி.மு.க.,அவருடைய இன்னொரு தம்பி அ.தி.மு.க..ஊர்ப்பொதுக் காரியம் என்பதால் எல்லோரையும் இணைத்துவிட்டார்.அப்பவே கமிட்டியைப் போட்டு ,இதை-இதை எல்லாம் செய்யவேண்டும் என்று செலவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.வசூல் பண்ணியும் கொடுத்துவிட்டார்கள்.பணத்தை என்னிடம் கொடுக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.நீங்களே ஒரு ஆளைப்போட்டு,அவர் பொறுப்பில் விட்டு விடுங்கள் என்று சொல்லி விட்டேன்.இந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் நான் மதுரைக்கு வரும் போதெல்லாம் ,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை(CEO) அதிகாரியைப் பார்த்து எனக்கு மதுரை மாவட்டத்திற்கு மாற்றல் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன்.

மாவட்ட விளையாட்டுப் போட்டி நடத்துவது என்பது எனது சக்திக்கு மீறிய பணி.ரொம்ப,ரொம்ப சக்திக்கு மீறிய பணி.ஆனால் நல்லபடியாக விளையாட்டுப் போட்டியை நடத்தினோம்.மாவட்ட விளையாட்டுப்போட்டி என்றால் மாவட்டத்தில் இருக்கிற எல்லா உடற்கல்வி ஆசிரியர்களையும் அழைக்கவேண்டும்,நடத்தவேண்டும்.அப்போது பாகனேரி பள்ளியில் ஒரே ஒரு உடற்கல்வி ஆசிரியர்தான் இருந்தார்.எல்லா அரசுப்பள்ளிகளிலும் ஒரே ஒரு உடற்கல்வி ஆசிரியர்தான் இருப்பார்கள். மாவட்ட விளையாட்டுப்போட்டி என்று சொல்கிறபோது மாவட்டத்தில் இருக்கும் அத்தனை பள்ளிகளிலும் இருக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களை அழைக்கவேண்டும்.

உடற்கல்வி ஆசிரியர்களை சமாளிப்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல.அவர்கள் சொல்வதைத்தான் தலைமை ஆசிரியர்கள் கேட்கவேண்டும் என நினைப்பார்கள். விளையாட்டுப் போட்டியை நடத்திய தலைமை ஆசிரியர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றால்,ஒழுங்கில்லாத கணக்கை வைத்துக்கொண்டு அதில் இருந்து நிறைய உடற்பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிறைய செலவுகள் செய்திருக்கின்றார்கள்.

நாம் ஒழுங்காகக் கணக்கு வைத்திருக்கின்றோம்.முறையற்ற செலவுகளுக்குச் செலவு செய்வது எனக்கு சரிப்பட்டு வராது.முடியாது என்று சொல்லிவிட்டேன்.அவர்களுக்கு வேண்டிய வசதியெல்லாம் செய்து கொடுத்தாகிவிட்டது.போக்குவரத்து படிகள்,தங்க இடம்,தங்கி இருக்கும்போது உணவு எல்லாம் கமிட்டியனரே செய்து கொடுத்தார்கள்.அவர்கள் அங்கேயே ஒரு மெஸ்ஸையே தொடங்கி வந்த அனைவருக்கும் சாப்பாடு போட்டார்கள்.பள்ளிக்கூடத்திலேயே சமைத்து,விளையாட வந்த மாணவ,மாணவிகள் மற்றும் எல்லோருக்கும் சாப்பாடு போட்டார்கள்.மிக நன்றாகவே அதனைச்செய்தார்கள்.

விளையாட்டுப்போட்டி எல்லாம் முடிந்தது. நிம்மதி என அமர்ந்த வேளை,விளையாட்டுப்போட்டிகள் முடிந்த மறு நாள் எனக்குச் சாப்டூருக்கு மாறுதல் என்று ஆர்டர் வருகின்றது.ஆர்டரை வாங்கிக் கொண்டு சாப்டூர் வந்தேன்.” என்று குறிப்பிட்டார்.

பள்ளிக்கூடம் என்பது படிப்பதற்கு மட்டும் அல்ல. மாணவ,மாணவிகளை அனைத்து நிலைகளிலும் உருவாக்குவதற்கு என்று சொல்கின்றோம்.திறமையுள்ள மாணவ,மாணவிகளைக் கண்டுபிடிப்பதற்கு போட்டிகள் நடத்துவது மிகத் தேவையாக இருக்கிறது.மதுரையில் இருக்கும் சில தனியார் பள்ளிகளை நான் பார்த்திருக்கிறேன்.மதுரையில் மாணவ,மாணவிகளுக்கான எந்தப் போட்டிகள் நடந்தாலும் ..பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி,மாறுவேடப்போட்டி,இசைப்போட்டி,விளையாட்டுப்போட்டி என நடக்கும்போட்டிகளுக்கு தங்கள் மாணவ,மாணவிகளை அனுப்புவார்கள்.அதற்கு மாணவ,மாணவிகளைத் தயார் செய்வார்கள்.அவர்களும் தங்கள் பள்ளியில் போட்டிகளை நடத்துவார்கள்.

அரசுப்பள்ளிகளில் அப்படி மாணவ,மாணவிகளை போட்டிக்கு அனுப்புவதாக இருந்தாலும் சரி,போட்டிகளைத் தங்கள் பள்ளியிலேயே நடத்துவதாக இருந்தாலும் அடிப்படைத் தேவை பணம்.எந்தத் தலைமை ஆசிரியராக இருந்தாலும் தங்கள் கைப்பொறுப்பாக பணத்தைப் போட இயலாது.வசூல் செய்துதான் நடத்த வேண்டும். இன்றைக்கு எப்படிப்பட்ட நடைமுறைகள் இருக்கின்றன என்று தெரியவில்லை.அரசாங்கமே இப்படி போட்டிகள் நடத்துவதற்கு பல முன்னெடுப்புகளை எடுக்கிறது என்று நினைக்கின்றேன்.

நமது நாட்டு விளையாட்டு வீரர்கள் உலக அளவில் பதக்கங்களை வெல்வதற்கு அடிப்படையாக அமைவது அவர்களை இளம் வயதிலேயே அடையாளம் காண்பது.அப்படி அவர்களை அடையாளம் காண்பதற்கான இடம் ஆரம்ப,உயர் நிலைப்பள்ளிக்கூடங்களே.அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான களம் விளையாட்டுப்போட்டிகளே.அப்படி விளையாட்டுப்போட்டி நடத்துவதில் இருக்கும் நடைமுறைச்சிக்கல்களை எனது தலைமை ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்.இன்றைக்கும் கூட அப்படிப்பட்ட நிலைமைதான் இருக்கிறது.

மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடும்போது நம்பிக்கையுடன் விளையாடுவதால், அவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது. அவர்களுக்கு சுயவிழிப்புணர்வு ஏற்படுகின்றது. குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு மாணவர், தனது அதிகமான நேரத்தை விளையாட்டிற்கு செலவழித்து, பல செயற்பாடுகளை அதற்காக மேற்கொள்கின்றார். அதன் காரணமாக தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு அவர் உள்வாங்கப்படுகின்றார். எனவே அவர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும், முழுமையான ஆரோக்கியம் உள்ளவராகவும் மாறுகிறார்.

விளையாட்டு பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகளின்போது, ஒவ்வொரு மாணவரும் மற்ற மாணவர்களுடனும், பயிற்சியாளர்களுடனும் பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதுடன், அவர்கள் சமூகத்துடன் புதிய உறவுகளை வளர்த்துக் கொள்கிறார்கள். விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வியிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்துக் கொள்கின்றனர். விளையாட்டில் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை கற்றுக்கொள்கின்றனர். அதுவே அவர்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவதற்கு காரணமாக அமைகிறது. விளையாட்டில் ஈடுபடும்போது வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் தோல்வியை தாங்கிக் கொள்ளும் தன்மை, வெற்றியை கொண்டாடும் முறைமை மற்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது தமது அணியின் ஏனைய வீரர்களின் நிலையை அறிந்து கொள்ளல் போன்றவற்றை அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.

இவை அனைத்தும் எதிர்காலத்தில் அவர்கள் தங்களது இலக்குகளை வெற்றி கொள்வதற்கு அதிக பங்களிப்பை செலுத்துகின்றன.. விளையாட்டில் ஈடுபடும் மாணவர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் ஆகியோரை மதித்து நடக்கவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. எனவே விளையாட்டில் உண்டாகும் ஏனையோரை மதிக்கும் பழக்கம் பின்னர் அவரை வாழ்க்கையிலும் தானாகவே நிலைத்து நிற்கச் செய்கின்றது. விளையாட்டில் ஈடுபடும்போதும் அதற்கான பயிற்சிகளின்போதும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாகப்படுத்தும்போது அவர்கள் மீது மதிப்பு, மரியாதை ஏற்படும். இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்துவதாக விளையாட்டும், அதற்கான பயிற்சியும் அமைந்துள்ளது. இது மாலைமலர் பத்திரிக்கையில் வந்த கட்டுரை.

 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் போட்டி பின்பு ஒன்றிய அளவிளான போட்டிகள்,பின்பு மாவட்ட அளவிளான போட்டிகள்…என்று அடுத்தடுத்த போட்டிகளுக்கு மாணவ,மாணவிகள் செல்லும்போதுதான்  நாட்டிற்கு மிகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் கிடைக்க முடியும். ஆனால் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நேரடியாக நன்கொடை வசூல் செய்வதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.அப்படி போட்டிகளை நடத்துவதற்கு ஊர்க்காரர்களின்,ஊரின் முக்கிய மனிதர்களின் உதவி தேவை என்பதனை தனது அனுபவத்தின் மூலமாகச்சொல்லி இருக்கின்றார் என நினைக்கின்றேன்.அப்படி வசூல் செய்யும் பணம் முறையாகச்செலவு செய்யப்பட வேண்டும் என்பதிலும் மிகவும் கவனமாக இருந்திருக்கின்றார்.இந்த அனுபவமும் மிக முக்கியமான அனுபவம் என நினைக்கின்றேன்,

                              (தொடரும்)

 

 

No comments: