Tuesday 25 July 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(22)...முனைவர் வா.நேரு

 

அய்யா,என் மகனை உருப்படி ஆக்கி விட்டீர்கள்…

 

ஓர் ஆசிரியருக்குக் கிடைக்கும் மரியாதை என்பது சொற்களால் விளக்க முடியாதது.இதயத்தின் ஆழத்தில் இருந்து வரும் நன்றி உணர்ச்சியால் வரும் மரியாதை அது.மதுரையில் இருக்கும் பிரபல வழக்கறிஞர் அண்ணன் சுந்தரம் அவர்கள்.எனது சொந்த ஊரான சாப்டூருக்கு மிக அருகில் இருக்கும் வண்டப்புலியைச்சார்ந்தவர். என்னோடு பத்தாம் வகுப்பில் அந்த ஊரைச்சேர்ந்த நண்பர்கள் ராஜாராம்,கிருஷ்ணமூர்த்தி(இப்போது காவல்துறை உதவி ஆய்வாளர்) ஆகியோர் உடன் படித்தனர்.அண்ணன் கல்யாணசுந்தரம் என்ற சுந்தரம் என் அண்ணனோடு பதினொன்றாம் வகுப்புவரை படித்தவர்.படிக்கும் காலத்தில்  சேட்டை என்றால் அப்படி ஒரு சேட்டை பண்ணும் கோஷ்டியைச்சார்ந்தவர்.வாழ்க்கையில் உறவினர் ஒருவர் சொன்ன சொல்லால் மனக்காயம் பட்டு ,ஒரு திருப்புமுனையால் வாழ்க்கையில் உந்தப்பட்டு பல மொழிகளைக் கற்று,இன்றைக்கு மிகப்பெரிய வழக்கறிஞராக மதுரையில் வசிப்பவர்.சாப்டூரில் அவர் 6-ஆம் வகுப்பில் மூக்கையா வாத்தியாரிடம் ஆங்கில எழுத்துகளைக் கற்றுக்கொண்டதை,ஆங்கில மனப்பாடப் பாட்டை தமிழில் எழுதிக் கொண்டு வந்து அதை வாசிக்கும்போது திரு.கோதண்டராமன் வாத்தியாரிடம்  மாட்டிக்கொண்டதை எல்லாம் சொல்லும்போது வாய்விட்டுச் சிரிக்கலாம்.அவரோடு பேசிக்கொண்டிருப்பது எனக்கு மிகப்பிடிக்கும்.நிறைய விசயங்களைப் பேசுவார்.உரிமையோடு எதார்த்தமாகவும் எங்கள் வட்டார மொழியையும் இணைத்துப் பேசுவார்.


“டேய், நான் சுப்புலாபுரம் போய்,மூக்கையா வாத்தியாரைப் பார்த்து,காலில் விழுந்து வணங்கி வந்தேன்” என்றார் ஒருமுறை.அண்ணன் சுந்தரத்திற்கு 6-ஆம் வகுப்பு பாடம் எடுத்தவர் திரு.மூக்கையா ஆசிரியர் அவர்கள்.’அவர் எல்லாம் இல்லாவிட்டால், நான் எல்லாம் உருப்பட்டிருக்கவே மாட்டேன்’என்றார்.ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஆசிரியரைச்சென்று பார்த்து அவரை வணங்கி வந்தேன் என்று சொல்லும்போது அவரிடம் இருந்த அந்த நன்றியுணர்ச்சி சொற்களில் தெரிந்தது. மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.உயரத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறோம்,எந்த இடத்தில் ,எப்படிப்பட்ட சூழலில் இருந்து படித்து இன்றைக்கு உயரத்தில் உட்கார்ந்திருக்கிறோம் என்று நினைப்பவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவர்கள் ஆசிரியர்கள்தான்.


திரு.வீரிசெட்டி சார் அவர்களை நான் தல்லாகுளம் தொலைபேசி நிலையத்தில் வேலை பார்க்கும்போது அடிக்கடி பார்ப்பேன்.சில நேரங்களில் இப்போது தல்லாகுளம் வாடிக்கையாளர் சேவை மையம் இருக்கும் இடத்திற்கு முன்னால் இருக்கும் டீக்கடையில் டீ குடிப்போம்.எப்போதும் டீயை ஆற்றித்தான் எனது தலைமை ஆசிரியர் குடிப்பார். பல் பிரச்சனையால் சூடாக சாப்பிடுவதில்லை என்றார் ஒருமுறை.பல நேரங்களில் அவருக்கு கொடுக்கும் டீயை வாங்கி முழுமையாக ஆற்றி நான் கொடுப்பேன்.அப்புறம் எனது டீயை நான் குடிப்பேன்.டீ குடிப்பதற்கும் அவர் கொஞ்சம் நேரம் எடுத்துக்குடிப்பார்.அப்படி ஒருமுறை நான் டீயை வாங்கி ஆற்றிக்கொண்டிருக்கும்போது ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்தப் பக்கம் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் எனது தலைமை ஆசிரியரைப் பார்த்தவர் ,வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு எங்கள் அருகில் வந்தார்.தமுக்கம் மைதானத்திற்கு முன்னால் ரோட்டில் இருக்கும் டீக்கடை அது.எப்போதும் வாகனங்களும் ஆட்களுமாக வெகு பரபரப்பாக இயங்கும் சாலை அது. நிறுத்திவிட்டு மேலே ஏறி வந்தவர்,எனது தலைமை ஆசிரியரின் காலில்  நெடுஞ்சாங்கிடையாக முழுமையாக விழுந்து வணங்கினார்.நானும் அவர் அருகில் இருக்கிறேன்.நான் சட்டென்று விலகினேன்.எனது தலைமை ஆசிரியர் அவரது பெயரைச்சொல்லி,’எழுந்திருங்க,எழுந்திருங்க,ஏன் இப்படி ரோட்டில்’ என்றார்.பின்பு அந்தக் காலில் விழுந்த நபர் எனது தலைமை ஆசிரியரிடம் நலமெல்லாம் விசாரித்தார்.இவரும் அவரிடம் நலமெல்லாம் விசாரித்தார்.அவர் சென்ற பிறகு அவர் யாரென்று நான் விசாரித்தேன்.

தான் வேலை பார்த்த … பள்ளியில் வேலை பார்த்த அலுவலர் அவர் என்றார். ஒரு சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டார்.அந்த நேரத்தில் அந்தச்சிக்கலில் இருந்து அவர் வெளியே வர நான் உதவினேன்.அந்த நன்றியுணர்ச்சியோடு இருக்கிறார் என்றார்.இப்படி பல பேருக்கு இக்கட்டான நேரங்களில் எனது தலைமை ஆசிரியர் உதவியிருக்கிறார்.


சாப்டூரில் தலைமை ஆசிரியராக திரு.வே.வீரிசெட்டி சார் அவர்கள் வேலை பார்த்த போது நடந்த ஒரு நிகழ்வு.அவரே சொல்லியது.எங்கள் ஊர் பெரியராஜா அவர்கள் எங்கள் தலைமை ஆசிரியரின் செயல்பாட்டால் ஈர்க்கப்படடு,பல முறை இவரிடம் பேசியிருக்கிறார்.இவரும் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து பேசியிருக்கிறார்.


எங்கள் சாப்டூர் பேருந்து நிலையத்திலிருந்து எங்கள் ஊர் அரசு உயர் நிலைப்பள்ளி 1 கி.மீ.தூரத்திற்கு மேல் இருக்கும். பேருந்தை விட்டு இறங்கி,ஊரின் நடுத்தெரு வழியாக நடந்து ,ஊரைக் கடந்து அழகாபுரிச்சாலைக்குச்செல்லும் வழியில் இருக்கும் பள்ளிக்கு செல்லவேண்டும்.அந்த அழகாபுரிச்சாலையில்தான் எங்கள் ஊர் ஜமீந்தார்கள் திரு.பெரியாராஜா,திரு.தர்மராஜா அவர்களின் பங்களாக்கள் இருக்கிறது.அப்படி ஒரு முறை எங்கள் ஊர் பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி,ஜமீந்தார் பங்களாவுக்கு அருகில் வரும்போது,பெரியராஜா அவர்கள் அங்கு நின்று கொண்டு இருந்திருக்கிறார்.எங்கள் தலைமை ஆசிரியர் வணங்கி இருக்கிறார் .எங்கள் தலைமை ஆசிரியருடன் பெரியராஜா அவர்கள்  பேச ஆரம்பித்திருக்கிறார்.இவரும் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்..அப்போது அந்த வழியாக தலையில் கடலைக் கொடிக் கட்டை தூக்கிக்கொண்டு வந்த விவசாயி,எங்கள் தலைமை ஆசிரியரைப் பார்த்தவுடன் ,தலையில் இருந்த சுமையை ஓரமாக இறக்கிவைத்துவிட்டு, ‘அய்யா எனது பிள்ளையைப் படிக்க வச்சுட்டீங்க,ஆர்வமாகப் படிக்கிறான் இப்போது.அவனை உருப்பட வைத்து விட்டீர்கள் “ என்று சொல்லி எனது தலைமை ஆசிரியர் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார்.எங்கள் ஊரின் மிகப்பெரும் பணக்காரரான ஜமீந்தார் பெரியராஜா அவர்களுக்கு எங்கள் தலைமை ஆசிரியரின் மேல் மரியாதையும் ஈர்ப்பும் வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.


என்னைப் பொறுத்த அளவில் நான் காலில் விழுவதை ஏற்றுக்கொள்ளாதவன்.என்னுடைய சிறு வயதில்,எனது அம்மாவைப் பெற்ற பாட்டி,(எங்கள் அவ்வா..சண்முகத்தாய்) ‘டேய் ,உங்க அப்பா இறந்தபிறகு,உங்களை எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உங்க அம்மா வளக்கிறா,அவ காலில் விழுந்து கும்பிடு ‘ என்று சொன்னபோது, “என் காலில் மட்டுமல்ல,வாழ்வில் எவர் காலிலும் விழக்கூடாது “என்று எனது அம்மா சொன்ன சொல் இன்றும் கூட மனதில் நிற்கிறது.தந்தை பெரியாரின் பெரியாரியலைப் பின்பற்ற ஆரம்பித்த பின்பு,அரசியல்வாதிகள் எல்லாம் அவரவர் தலைவர்கள் காலில் விழுந்து வணங்குவதைப் பார்க்கும்போது மனதிற்குள் ஒரு மெல்லிய புன்னகை ஓடும்.அவை எல்லாம் பிரதிபலன் பார்த்து காலில் விழுவது.அதைச்சிலர் கலையாகவே வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மூத்தவர்கள் காலில் விழுவது,தங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் காலில் விழுவது என்பது மரியாதை காராணமாக பலர் விழுந்து வணங்குகிறார்கள்.அது சரியா?தவறா என்ற விவாததிற்குள் நான் போக விரும்பவில்லை.ஆனால் திரு.வீரிசெட்டி சார் அவர்களின் காலில் அவ்வளவு நன்றி உணர்ச்சியோடு பலர் விழுந்து வணங்கியதை நான் பார்த்திருக்கிறேன்.அப்படி பல மாணவ,மாணவிகள் ,உடன் பணியாற்றிய ஆசிரியர்கள்,ஊழியர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மை புரிந்தவராக,அவர்கள் மனதில் என்றும் நன்றி உணர்ச்சியை .ஏற்படுத்தக் கூடியவராக எனது தலைமை ஆசிரியர் திரு.வே.வீரிசெட்டி சார் அவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்…

                            (தொடரும்) 

No comments: