Friday, 14 March 2025

அம்மா செண்பகம் இராமசுவாமி புகழ் நிலைக்கட்டும்....

 பெரியாரின் தத்துவத்தை

இளையோர் மனங்களில்

ஏர்போல் உழுது ஆழ

விதைக்கும் அன்பர் இவர்…


‘பெரியாரைப் புரிந்துகொள்வது

எப்படி?’ –ஓர் அற்புதமான

நூலினை ஆய்ந்தறிந்து

கொடுத்த பெருந்தகை இவர்..


‘கலகக்காரர் தோழர் பெரியார்’

எனத் தொடங்கி கடந்த

கால் நூற்றாண்டுக்காலத்தில்

தந்தை பெரியார் பற்றி

ஐந்து நிஜ நாடகங்களைக்

கொடுத்தவர் இவர்…


இந்த நாட்டில் சிவப்புச்சட்டை

ஆட்சி மலர இந்தக்

கருப்புச்சட்டைக்காரர்தான்

தேவையென்பதை ஆய்ந்து

ஏற்றுக்கொண்டவர் இவர்…


விதம்விதமாய்ப் பெரியாரை

உற்று நோக்குகிறார்..

வேறுபட்ட வடிவங்களில்

நாடகமாய் அரங்கேற்றுகிறார்…


இளையோர் பங்கேற்பால்

அரங்கங்களை அதிர வைக்கிறார்..

பெண்களின் வெடிச்சிரிப்பால்

பழமைவாதிகளைப்

பயந்தோட வைக்கிறார்…


கருப்பும் நீலமும் சிவப்பும்

இணைந்து போராடும்

ஓர் எதிர்காலத்தைக் கட்டமைக்கிறார்

தன் நாடகங்களின் வழி…

 

27 ஆண்டுகளுக்கு முன் மறைந்த

தன் இன்னுயிர் இணையர்

அம்மா செண்பகம் இராமசுவாமி

அவர்களின் நினைவாய்

அவர் நினைவு நாளில்

தான் எழுதிய நூல்களின் வழியே

தமிழ் சமூகம் அம்மாவை

நினைவு கூரக் களம் அமைக்கிறார்…


மார்க்ஸ் மேல் அளவற்ற காதல்

கொண்ட ஜென்னிபோல்

மார்க்ஸ் நினைவு நாளில் மறைந்திட்ட

அம்மா செண்பகம்மேல் அளவற்ற

காதல் கொண்ட தோழர்

மு.இராமசுவாமியை நேரில் கண்டோம்

மனதில் உவகை கொண்டோம்..


எப்போதும் தோழர் மு.இராமசுவாமியை

இயக்கிக் கொண்டே இருக்கும்

அம்மா செண்பகம் இராமசுவாமி

புகழ் நிலைக்கட்டும்!வாழ்க!

வாழ்க !அவரின் நினைவுகள்! 

வா.நேரு,14.03.2025


2 comments:

தோழர் மு.இராமசுவாமி said...

தங்கள் அன்பிற்கு நன்றி! நினைவேந்தலுக்கு வந்து அழகு சேர்த்த தங்கள் அன்பிற்கு நன்றி!...வாட்சப் வழியாக

வா.நேரு said...

நன்றி தோழர்