Saturday 22 April 2023

புத்தகமும் நானும்(2)...முனைவர் வா.நேரு

புத்தகம் படிப்பது மகிழ்ச்சி என்பது மனதில் மிக அழுத்தமாக சிறு வயதில் இருந்தே ஒட்டிக்கொண்டது. நல்ல புத்தகம் நம்மை உயர்த்தும் என்பது என் வாழ்க்கை அனுபவமாக இருக்கிறது. " ஒரு கதையோ கவிதையோ படிப்பதற்கு முன் இருந்ததை விடவும் படித்து முடித்ததற்குப் பிறகு வாசகர் தன் மனதளவில் ஓரலங்குலமாவது வளர்ந்திருப்பாரேயாகில் அந்தப் படைப்பு,அந்த எழுத்து நல்ல எழுத்து என்று நாம் தீர்மானித்துக்கொள்ளலாம் " என்று ஒரு நூலில் எழுத்தாளர் திலகவதி கூறியிருப்பார். உலகப்புத்தக நாளில் நல்ல புத்தகங்கள் பற்றியும் புத்தகங்களை நேசிக்கும் மனிதர்களைப் பற்றி நினைப்பதும் எழுதுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.2017-ல் புத்தகமும் நானும் என்று எழுதிய கட்டுரைக்கு பலர் கொடுத்திருந்த பின்னோட்டம் உற்சாகம் கொடுத்தது.2023-ல் இரண்டாவது கட்டுரை. 

 கடந்த 6 ஆண்டுகளில் புத்தகமும் நானும் என்று சிந்திக்கும்போது,முதலில் நினைவுக்கு வருபவர்கள் தோழர் அகனும் தோழர் பொள்ளாச்சி அபியும்.இருவருமே படைப்பாளர்கள். 'எழுத்து' என்ற இணையதளத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்கள்.இருவரும் தாங்கள் எழுதுவது மட்டுமல்ல, எழுதுகின்ற மற்றவர்களுக்கு நல்ல ஊக்கம் கொடுப்பவர்கள். தோழர் பொள்ளாச்சி அபியின் ;எங்கேயும் எப்போதும் 'என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் தோழர் அகன் அவர்களின் முயற்சியால் வெளிவந்தது.பலரின் பாராட்டைப் பெற்றது. தோழர் அகன் அவர்கள் அய்யா கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் மாணாக்கராய்,அவரைப் பற்றிய நூல்களை,கவிதைகளைத் தொகுத்துக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.அவரும் படைப்புகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.மகிழ்ச்சி. 

 தோழர் அகன் அவர்கள் 'வல்லினச்சிறகுகள் 'என்னும் மின் இதழை ஆரம்பித்தார். உலகம் முழுவதும் எழுதிக்கொண்டிருக்கும் பல தமிழ் எழுத்து பெண் ஆளுமைகளை ஆசிரியர் குழுவில் இணைத்தார்.முழுக்க முழுக்கப் பெண்களின் படைப்புகள்தான் நூற்றுக்கு 90 சதம் அந்த இதழில் இடம்பெற்றன.என்னிடம் நூல் மதிப்புரைகள் நீங்கள் இந்த 'வல்லினச்சிறகுகள் 'இதழில் எழுதவேண்டும் என்றார்.மகிழ்ச்சியாக எழுத ஒப்புக்கொண்டு தொடர்ந்து எழுதினேன்.பல பெண் எழுத்தாளர்களின் நூல்களைப் பற்றியே பெரும்பாலும் எழுதினேன்.'சங்கப்பலகை; என்னும் தொகுப்பு நூலாக அவரே பதிப்பித்தும் கொடுத்தார்.அது தவிர 'சொற்களின் கூடுகளுக்குள் 'என்னும் அடுத்த கவிதைத் தொகுப்பு நூலும் அவரே பதிப்பித்துக்கொடுத்துள்ளார்.மகிழ்ச்சியான தோழமை. 

 அதைப்போல இயக்கத்து தோழராக இருந்தாலும் எப்படிப்பட்ட புத்தக நேசிப்பாளர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் என்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இந்தக் காலகட்டத்தில் அமைந்தது. எனது சிறுகதைகளைத் தொகுத்து 'நெருப்பினுள் துஞ்சல் ' என்னும் சிறுகதைத் தொகுப்பாக அவரின் எழிலினி பதிப்பகம் சார்பாக வெளியிட்டார். கொரோனா காலகட்டத்தில் அவர் சிறுகதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டு இரண்டு அருமையான சிறுகதைத் தொகுப்புகளை கொடுத்துள்ளார். 'வாருங்கள் படிப்போம் ' என்னும் குழுவினை பேரா.உமா மகேசுவரி அவர்களுடன் இணைந்து ஆரம்பித்து,தொடர்ந்து அருமையான புத்தகங்களை சூம் வழியாக வாரந்தோறும் நூல் திறனாய்வுகளைக் கேட்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்..

 வாருங்கள் படிப்போம் என்னும் குழுவின் மூலமாக பல எழுத்து ஆளுமைகளை அறிந்துகொள்ளவும்,அவர்களின் எழுத்துகளை வாசிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. 'வாருங்கள் படைப்போம்' என்னும் குழுவை தோழர் வினிதா மோகன் அவர்களுடன் இணைந்து அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் ஆரம்பித்து,வாரம் ஒரு படைப்பாளர் என்ற முறையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அருமையாக நடந்து கொண்டுள்ளது.'வாருங்கள் படைப்போம் ' குழுவில் படைப்பாளராக என்னை தோழர் அர்ஷா அவர்கள் பேட்டி எடுத்ததும்,பல விடயங்களை மனம் விட்டுப்பேச முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. சக எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள்,அவர்கள் எண்ணம் என்ன?...எழுத்தை எழுத எந்த நேரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்,எப்படி அதனை விளம்பரப்படுத்துகிறாகள்,எழுத்தாளர்களுக்கு நண்பர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று பல கோணங்களில் புரிந்து கொள்ள உதவும் நேரம் இந்த படைப்பாளர் நேரம்.அண்ணன் எல்.குமரன்,இளங்கோ,தோழர்கள் சுனிதா,வினோத் பரமானந்தன்,தங்கைகள் மலர்விழி,சித்ராதேவி எனப்பலர் இந்தக் குழுவின்மூலம் அறிமுகமானவர்கள்.தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் குமரேசன் போன்ற ஆளுமைகளை எல்லாம் நெருக்கமாக உணர்ந்து கொள்ள உதவிடும் குழு இது. 

 திராவிடப்பொழில் என்னும் ஆராய்ச்சி இதழ் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத்தின் சார்பாக ஆரம்பிக்கப்பட்டது. பல்கலைக் கழகத்தின் வேந்தர்,திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ,அந்த இதழின் ஆசிரியர் குழுவில் என்னை இணைத்து அறிக்கை வெளியிட்டார்கள்.வாழ்வில் மிக்க மகிழ்ச்சியான தருணம் அது.2021 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட அந்த ஆராய்ச்சி இதழ் மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.பெரியார் பன்னாட்டு மய்யம் அமெரிக்காவின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன்,பாரிஸ் பேராசிரியர் டாக்டர் கண்ணபிரான் இரவிசங்கர்,பழனி பேரா.ப.காளிமுத்து,பேரா.நம்.சீனிவாசன்,சிங்கப்பூர் பேரா.சுப.திண்ணப்பன்,முன்னாள் துணைவேந்தர் பேரா.ஜெகதீசன்,முன்னாள் திட்டக்குழுத்தலைவர் அய்யா முனைவர் நாகநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருக்கும் அந்தக் குழுவில் இருந்து செயல்படுவது பல புதிய வெளிச்சங்களை எனக்குக் காட்டியுள்ளது.  

ஆய்வுக் கட்டுரைகள் எழுதுதல்,ஆய்வுக்கட்டுரைகளை எழுத்தாளர்களிடமிருந்து வாங்குதல் எனப் பல புதிய அனுபவங்களைக் கொடுப்பதாக திராவிடப்பொழில் இதழ் அனுபவம் அமைந்திருக்கிறது.தோழர் மு.சங்கையா,தோழர் ஓவியா,அண்ணன் ஆ.செல்லப்பாண்டியன்,பேரா.மு.சு.கண்மணி எனப்பலரின் கட்டுரையைப் பெற்றதும் அது திராவிடப்பொழில் இதழில் வெளிவந்ததும் மகிழ்ச்சியைத் தந்தது. 

 மதுரை காமராசர் பல்கலைக் கழகம் 2010-ல் முனைவர் பட்டம் கொடுத்தது. அப்போதே அந்த ஆய்வேட்டை புத்தகமாக ஆக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது.என்னுடன் வேலை பார்த்த அண்ணன் சு.கருப்பையா அவர்கள் ,ஆய்வேட்டைப் புத்தகமாக கொண்டுவர முயற்சி எடுங்கள் என்றார். இந்த ஆண்டு எனது ஆய்வேட்டின் நூலாக்கம் 'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் ' என்னும் தலைப்பில் வந்துள்ளது.எழிலினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.நண்பர் கவிஞர் இரவி அவர்களும்,திருமங்கலம் அய்யா பார்த்தசாரதி அவர்களும் இந்த நூலுக்கு நூல் மதிப்புரை எழுதி அனுப்பி உள்ளார்கள்.எனது 6-வது புத்தகமாக வந்துள்ள இந்தப்புத்தகம் பலராலும் விரும்பிப் படிக்கப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

 வாசிப்போர் களம் மதுரை,தேடித்தேடிப் படிக்கும் பல ஆளுமைகளை அறிமுகப் படுத்தியுள்ளது.அண்ணன் செளந்தர் அவர்கள்,அண்ணன் சு.கருப்பையா,தோழர் சங்கையா,தோழர் காமராஜ்,தோழர் சுந்தரராஜன்,திரு.எஸ்.சுப்பிரமணியம் சார்,எழுத்தாளர் பாலகுமார் விஜயராகவன் எனப் பலரும் புத்தகங்களை விரும்பி விரும்பி படிப்பவர்கள்..இதில் சிலர் புத்தக ஆசிரியர்கள்..புத்தகங்களை எழுதி வெளியிட்டவர்கள்.பல அரிய புத்தகங்களை அறிந்துகொள்ள தூண்டுதலாக திரு.எஸ்.எஸ். சார்,அண்ணன் சு.கருப்பையா போன்றவர்களின் நட்பு எப்போதும் உதவுகிறது. அதிலும் திரு எஸ்.எஸ். சார் அவர்கள் படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. 

 கொரோனா காலம் தொடங்கியவுடன்,புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தலைவர் அய்யா நடராசன் அவர்களும் புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தலைவர் அய்யா சிவ.வீரமணி அவர்களும் சூம் வழியாகப் புத்தகங்களைப் பற்றிப்பேசுங்கள் என்றனர்.திராவிட இயக்கத்துத் தலைவர்களின் தன் வரலாற்று நூல்களை அதில் பேச ஆரம்பித்தேன். அய்யா சுப.வீ அவர்களின் தந்தை அய்யா காரைக்குடி இராம.சுப்பையா,அம்மா திருமகள் இறையன்,அய்யா டர்பிடோ ஜனார்த்தனம் எனப் பல தலைவர்களைப் பற்றியும் இயக்க நூல்களைப் பற்றியும் அதில் தொடர்ச்சியாகப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. புதிய தோழர்கள் பலர் நண்பர்களாகக் கிடைத்தார்கள்.தங்கை வீ.இளவரசி சங்கர்,கவிஞர் ம.கவிதா,குடியாத்தம் தோழர் தேன்மொழி,தோழர் இசையின்பன்,தோழர் உடுமலை வடிவேல்,இளவல் பிரின்ஸ் என்னாரசு பெரியார்,மதுரை பழக்கடை அண்ணன் அ.முருகானந்தம்,அய்யா பொ.நாகராசன் எனப் பல இயக்கத்தோழமைகள்,வாசிப்பை உயிராக நேசிக்கும் தோழமைகள் கிடைத்தனர்.இதில் பலர் படைப்பாளிகள். 

 பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர் அய்யா சோம.இளங்கோவன் அவர்கள்,அவரின் உடன்பிறப்பு அய்யா பேரா.சோம.வேலாயுதம்,அம்மா டாக்டர் சரோஜா இளங்கோவன்,தங்கை அன்புடன் ஆனந்தி,கவிஞர் கனிமொழி என வெளிநாட்டில் வாழும் ,புத்தகங்களை நேசிக்கும் பெரியவர்கள்,தோழர்களின் தொடர்பும் உற்சாகம் அளிக்கிறது.அறிவுவழிக் காணொலி வழியாகவும் பல புத்தகங்களைப் பற்றிப்பேசவும்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தும் காணொலி கூட்டங்களில் புத்தகங்களைப் பற்றிப்பேசவும் வய்ப்புக்கிடைத்தது.

 வாரந்தோறும் ஒரு பகுத்தறிவு சம்பந்தப்பட்ட நூலை தோழர்கள்,தோழியர்கள் பேசுவதும்,பெரும்பாலும் நூலை எழுதிய நூல் ஆசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்துவதுமாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் கூட்டங்கள் நடந்து வருவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களும் அண்ணன் பாவலர் சுப.முருகானந்தம் அவர்களும் நிறையக் கவிதைகளைப் படைக்கிறார்கள்.கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வருகின்றார்கள். கவிக்கோ துரை.வசந்தராசன் வாசகர் வட்டம் என்னும் அமைப்பினை ஏற்படுத்தி அய்யா கவிக்கோ துரை.வசந்தராசன்,கவிஞர் வெற்றிப்பேரொளி,கவிஞர் முனைவர் ரேவதி எனப் பல ஆளுமைகள் வாரந்தோறும் புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். நானும் வாய்ப்பு இருக்கும்போது அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றேன். 


இந்தக் கால கட்டத்தில் படித்த புத்தகங்கள் போலவே கேட்ட புத்தகங்களும் அதிகம்.இணையமும் சூமும் அதற்கான வழியைக் கொடுத்திருக்கின்றன. எழுத்தாளர் பாவண்ணன் ஒரு இடத்தில் கூறியிருப்பார். "விதைகளைப் பறவைகள் தூவிக்கொண்டே இருக்கின்றன.ஈரம் இருக்கும் இடத்தில்,வலிமை இருக்கும் விதைகள் முளைத்துக்கொள்கின்றன' என்று. அப்படித்தான் புத்தகங்களும்..புத்தகங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்போம். நல்ல புத்தகங்களைப் பரப்பிக் கொண்டே இருப்போம்.நல்ல புத்தகங்களைப் பகிர்வோம்.அனைவருக்கும் 2023 புத்தக நாள் வாழ்த்துகள்...

                                                               முனைவர் வா.நேரு,23.04.2023.




புத்தகமும் நானும்.......உலக புத்தக நாளை முன்னிட்டு(1).........வா.நேரு


5 comments:

முனைவர். வா.நேரு said...

திராவிடப் பொழில் இதழின் ஆசிரியர் குழுவிலும்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவராகவும் இருக்கிற தோழர் நேரு

புத்தக தினமான இன்று புத்தகமும் நானும் கட்டுரையில்

வாசிக்கத் தூண்டியவர்களின் ஒரு நீண்ட பட்டியலை தந்து நினைவுகளை நம்மோடு பகிர்திருப்பது
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அனைவருக்கும்
புத்தக தின நல்வாழ்த்துகள் .💐💐💐🤝
தோழர்.மு.சங்கையா...வாட்சப்பில்..

Anonymous said...

வணக்கம் அண்ணா!
தங்களின் "புத்தகமும் நானும்" என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரை தங்களின் நினைவாற்றலை எண்ணி வியக்க வைக்கிறது.

இந்தக் கட்டுரை எழுத்துலகத்தில், திராவிடர் கழகத்தில், பகுத்தறிவாளர் கழகத்தில், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தில் தங்களோடு பயணிக்கும் அனைவருக்குமான புத்தக நாள் பரிசு என்று கருதுகிறேன். புத்தகங்களுடனான தங்களின் பயணம் இனிதே தொடரட்டும் அண்ணா!
தாங்கள் நல்ல உடல் நலமும் மனநலமும் பெற்று பல ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ வேண்டும் புத்தகங்களோடு என்று வாழ்த்துகிறேன்!
என்றும் அன்புடன் உங்கள் அன்புத் தங்கை,
வி. இளவரசி சங்கர்

முனைவர். வா.நேரு said...

மகிழ்ச்சியும் நன்றியும்...

Kavitha Elango said...

புத்தகத்தோடு அணுக்கமான தங்கள் வாழ்க்கைப் பயணமும் வாழ்த்துப் பதிவுமே விதைத்தூவுகிற பணியைச் சிறப்பாகச் செய்கிறது. முனைந்து முளைக்க முயற்சிக்கிறோம் அய்யா நாங்கள்...

தங்கள் சீரிய எழுத்துப்பாதையில் சந்தித்த பல்லோர் பட்டியலில் பெயரிணைந்த பெருமைப் பெற்று மகிழ்கின்றோம்! 🙏🥰

முனைவர். வா.நேரு said...

மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ...