Saturday 1 April 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(4)....முனைவர்.வா.நேரு

 

                              ஆப்செண்ட் போட்டால் வேலை போய்விடும்...


தொடந்து எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி அவர்கள் தன் பண்ணைக்காடு பணி அனுபவத்தைச்சொல்ல ஆரம்பித்தார்." பண்ணைக்காட்டில் 10-ஆம் வகுப்பிற்கு ஆங்கிலமும்,9,10,11 ஆம் வகுப்புகளுக்கு கணக்கும் பாடம் எடுத்தேன்.பண்ணைக்காட்டில் 2 ஆண்டுகள் வேலை பார்த்தேன்.அப்போதே 10-ஆம் வகுப்பில் 40 மாணவ,மாணவிகள் இருந்தார்கள்.இருபாலர் பள்ளி.90 சதவீதம் மாணவ,மாணவியர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.10 சதவீதம் தொலை தூரத்திலிருந்து மலைப்பகுதி கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள்.

ஆசிரியர்கள் தங்குவதற்கு குவார்ட்டர்ஸ்(வீடுகள்) இருந்தது.ஊருக்குள் வீடு எளிதில் கிடைக்காது.பஞ்சாயத்து யூனியன் தண்ணீர் பைப் இருந்தது.அந்தப் பள்ளியைக் கட்டியவர்கள் தொலை நோக்குப்பார்வையோடு கட்டியிருந்தார்கள்.பக்கத்திலேயே பிரைமரி ஹெல்த் செண்டர் இருந்தது.அவர்களுக்கும் ஸ்டாப் குவார்ட்டர்ஸ் இருந்தது.ஆசிரியர்கள் நாங்கள் அந்த ஊரிலேயே குவார்ட்டர்ஸ்ஸில் தங்கினோம்.பாடங்கள் நடத்தினோம்."


படித்து முடித்தவுடன் வேலைக்கு வருவது.சம்பளம் வாங்கி செலவழிப்பது போன்ற அனுபவம் மிக இனிமையான அனுபவம்.எனக்கும் கூட அந்த அனுபவம் கிடைத்தது.பசுமை நிறைந்த பல நினைவுகள், நம் எண்ணக் கூட்டுக்குள் புதைந்து கிடக்கும் நினைவுகள் அவை.இப்படி தனது அனுபவங்களை விவரித்த எனது தலைமை ஆசிரியரிடம் " மாணவர்களைச்சமாளிப்பது என்பது எளிதாக இருந்ததா?அன்றைக்கு இருந்த மாணவ-மாணவிகளிடம் கீழ்ப்படிதல் இருந்ததா? " என்ற கேள்விகளைக் கேட்டேன். மிக லேசாகச்சிரித்துக்கொண்டே " மாணவர்களைக் கையாளுவது மிக எளிதாக இருந்தது.அன்றைக்கு மாணவர்கள் 10-ஆம் வகுப்பு,11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 1/2 அடி,6 அடி இருப்பார்கள்.ஆனால் ஆசிரியர்கள் சொல்லுக்கு அவ்வளவு கீழ்ப்படிவார்கள் " என்றார்.


இந்தக் கேள்வியை நான் கேட்டதிற்கு எனக்கு ஒரு அனுபவம் உண்டு.எனக்குத் தெரிந்த  பெண் ஒருவர்.அவர் ஏதாவது ஒரு வேலைக்குப் போயே ஆக வேண்டும் என்ற கட்டாயம். கணவரைப் பிரிந்து தனியாக இருந்த நிலையில் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக வேலைக்குப் போகவேண்டும் என்ற முடிவெடுத்த அந்தப் பெண் " நீங்கள் எனக்கு ஒரு வேலை பாருங்கள். ஆனால் தயவுசெய்து என்னை ஆசிரியர் வேலைக்கு மட்டும் போகச்சொல்லி விடாதீர்கள்.என்னால் பிள்ளைகளைச்சமாளிக்க முடியாது' என்று கையெடுத்து கும்பிட்டுச்சொன்னார். அந்தப் பெண் பட்டம் பெற்றவர். நன்றாகப் படிக்கக் கூடியவர்.நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்.என்னால் மாணவ,மாணவிகளைச்சமாளிக்க முடியாது என்ற எண்ணம்,தன்னம்பிக்கை இன்மை அவரது உள்ளத்தில் இருந்தது.இப்படிப்பட்ட சிலரையும் நம்மைச்சுற்றிப் பார்க்கிறோம்.

ஆசிரியர் தொழிலில் பயம் இல்லாமல் பணியாற்ற என்ன செய்யவேண்டும் என்று எனது தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது " கற்றுக்கொண்ட பாடத்தில் தெளிவு இருக்கவேண்டும்.கணிதம் நடத்துகிறோம் என்றால் கணித அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.மாணவர்கள் நம்மிடம் இப்படிக் கேள்வி கேட்டால் என்ன பதில் கொடுப்பது என்று நமக்கு நாமே ஒத்திகை பார்க்கவேண்டும்.நமக்குத் தெரிந்ததை மாணவ,மாணவிகள் புரிந்து கொள்கிற மாதிரி சொல்வது என்பது ஒரு கலை..அது ஆசிரியர் வேலைக்கு போனவுடன் வராது.பழகப் பழக,நாம் தயாரித்துப் போக போக வந்துவிடும் " என்றார்.


"நீங்கள் பண்ணைக்காட்டில் வேலை பார்த்தபொழுது மறக்க முடியாத சம்பவம் ஏதும் உண்டாங்க சார் ?" என்ற கேள்வியை நான் கேட்டவுடன் " ஆமாம்.உண்டு, உண்டு" என்றார்." ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரைப் பொறுத்துத்தான் அந்தப் பள்ளி சரியாக இருக்கமுடியும்.பண்ணைக்காட்டில் ஒரு தலைமை ஆசிரியர் இருந்தார்..கடமையாக சரியாகச்செய்ய வேண்டும்,வளர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.இது எல்லாம் சரிதான்.ஆனால் சுயநலம் கடுமையாக இருந்தது.அதற்கு ஓர் உதாரணம்.,


ஒருமுறை திங்கட்கிழமை.ஒரு இடை நிலை ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை.விடுப்பு கடிதமும் கொடுக்கவில்லை.அப்போது கையொப்பம் இடுகிற ஏட்டிலே நாங்கள் எல்லாம் கையெழுத்துப்போடும்போது,அந்த இடை நிலை ஆசிரியரின் பெயருக்கு நேரே ஆப்செண்ட் என்று எழுதிவிட்டார்.இப்படி எழுதினால் கண்டிப்பாக அவருக்கு வேலை போய்விடும்..ஆமாம்,தலைமை ஆசிரியர் ஆப்செண்ட் என்று போட்டுவிட்டால் ,வராத ஆசிரியரின் வேலை போய்விடும்.அந்தக் காலத்தில் அன்றைக்கெல்லாம் ஆசிரியர்களுக்கு கோர்ட்டுக்கு எல்லாம் போகத்தெரியாது.ஆப்செண்ட் போட்டுவிட்டார்.நான் அப்போதுதான் வேலைக்கு வந்திருக்கிறேன்.இருந்தாலும் ஒரு அநியாயம் நடப்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.


தலைமை ஆசிரியரிடம் வாதிட்டேன்." அய்யா,இது ஒரு மலைப்பகுதி.வெள்ளிக்கிழமை முடிந்து ஊருக்குப் போய்விட்டால் ,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரில் என்ன நடந்ததோ,நடக்கவில்லையோ நமக்குத் தெரியாது.(அன்றைக்கு தந்தி ,டெலிபோன் வசதி எல்லாம் கிடையாது.) அவர் போன இடத்தில் ஏதோ நடந்திருக்கிறது.விடுப்புக் கடிதம் கொடுத்து விட முடியவில்லை.நீங்கள் அவர் வந்தவுடன் விடுப்புக் கடிதம் வாங்கிக்கொள்ளலாமே,நீங்கள் அதனை விடுப்பு என்று குறித்தால் என்ன " என்று நான் சொன்னேன். அதெல்லாம் முடியாது,ஆப்செண்ட் போட்டது ஆப்செண்ட் போட்டதுதான் என்று சொல்லிவிட்டார்.


நான் விடவில்லை.கையெழுத்துப்போட்டுப் போன ஆசிரியர் நண்பர்களையெல்லாம் அழைத்தேன்."இப்படிச்சொல்கின்றார் தலைமை ஆசிரியர் -என்ன செய்யலாம்? " என்று கேட்டேன்.அப்போதுதான் அவர்களுக்கு 'ஆப்செண்ட் ' என்று போட்டதின் சீரியஸ்னஸ் தெரிகின்றது.நாளைக்கு அவர்களுக்கும் அது வரலாம்." சார்,அவர் சொல்வது சரி.அவர் வந்தபிறகு நீங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமென்றாலும் எடுங்கள் " என்று அனைவரும் தலைமை ஆசிரியரிடம் சொன்னார்கள். "அதெல்லாம் உங்கள் வேலை இல்லை,நீங்கள் போங்கள் " என்று கடுமையாகச்சொன்னார்.போய்விட்டோம்.ஒரு மணி நேரம் கழித்து என்னை அழைத்தார்."வீரிசெட்டி,நீங்கள் சொன்னதை நான் உணர்ந்திட்டேன்.லீவுன்னு போட்டுட்டேன் " என்றார்.


அது மட்டுமல்லாமல் பணியாற்றும் இடத்தில் அவர் செய்யும் தவறுகளை நான்தான் சுட்டிக்காட்டுவேன்.குறிப்பாக பள்ளிக்கூடத்திற்கென வரும் நாளிதழ்,மாத இதழ்,வார இதழ் எல்லாம் அவர் வீட்டிற்குப் போய்விடும்.அடுத்தவாரம்தான் பள்ளிக்கூடத்தில் வந்து போடுவார்.இது ரொம்ப நாளாக அந்த ஊரில் நடந்து கொண்டு இருந்திருக்கின்றது.ஆசிரியர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.என்னிடம் சொன்னார்கள்.'நமக்கு ஒரு லீடர் கிடைச்சுட்டாண்டா' என்ற மகிழ்ச்சி ஆசிரியர்களுக்கு. தலைமை ஆசிரியரைத் தனியே பார்த்துச்சொன்னேன்." பத்திரிக்கைகளை,இதழ்களைப் பள்ளி நேரத்தில் இங்கு கொண்டு வந்து போட்டு விடுங்கள்.பிறகு எடுத்துக்கொண்டு போய் வீட்டில் போட்டுக் கொள்ளுங்கள் "என்று சொன்னேன்.ரைட்,ரைட் என்று ஏற்றுக்கொண்டு அதனைச்செய்தார்.

(தொடரும்)

                              

4 comments:

Anonymous said...

தலைமை ஆசிரியருக்கு வழிகாட்டும் அளவிற்கு தலைமைப் பண்பு கொண்டவராக இருந்திருக்கிறார் உங்களுடைய ஆசிரியர் வீரி செட்டி அய்யா அவர்கள். அய்யாவுக்கு எமது தலை தாழ்ந்த வணக்கங்கள்!

தங்களுடைய ஆசிரியர் சொல்ல, நீங்கள் கேட்டதை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் அண்ணா! உங்கள் ஆசிரியர் உங்களுக்குக் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய காட்சிகளை அப்படியே மிக அழகாக, நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அண்ணா! சிறப்பு! தொடரட்டும் உமது எழுத்துப்பணி!

தனக்கு அறிவூட்டிய ஓர் ஆசிரியரை அவர் வாழும் காலத்தில் மெச்சும் மனிதர்களே அரிதாக இருக்கும் இக்காலகட்டத்தில்.... மறைவிற்குப் பின்னும் அவர்களைப் போற்றி வணங்கும் தங்களின் பண்பு பாராட்டுக்குரியது அண்ணா வாழ்த்துகள்!
என்றும் அன்புடன்,
உங்கள் தங்கை,
வி. இளவரசி சங்கர்

முனைவர். வா.நேரு said...

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தங்கையே...

முனைவர். வா.நேரு said...

பல பத்தாண்டுகள் அறந்தாங்கிப் பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எனது தாய்மாமா திரு.தங்கமுத்துராசா அவர்கள் தனது கருத்தினைப் பதிவிட்டதோடு,செல்பேசியிலும் அழைத்துப்பாராட்டினார்.. அவரின் கருத்து " ஆசிரியராக ஆன பின்புதான் நல்ல ஆசிரியராகப் பணியாற்ற என்ன தேவை என்பதைத் தெரிந்துகொண்டேன் என்பது மிகவும் உண்மையான கருத்து. பலருக்கும் பயன்படும். நல்ல ஆசிரியராக மட்டும் அல்லாமல் ஆசிரியர்களுக்காகவும் பாடுபட்டார் என்பதை அறிய அவர்பால் பெரும் மதிப்பு ஏற்படுகிறது. தொகுத்து வழங்கியுள்ள மாப்பிள்ளை வா.நேரு அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும். மாமா தங்கமுத்துராசா " .நான் பெரிதும் மதிக்கும் ஆளுமை,எனது மாமா திரு.தங்கமுத்துராசா அவர்கள். திராவிட இயக்கக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுள்ளவர்.புலவர் பட்டம் பெற்றவர். மேடையில் மிக நன்றாகப் பேசக்கூடிய இலக்கியச்சொற்பொழிவாளர்.எழுத்தாளர்.அவரின் உண்மையான பாராட்டு உற்சாகம் அளிக்கிறது. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் மாமா...

Anonymous said...

👌👌