Tuesday 18 April 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்:(8).....முனைவர் வா.நேரு

 

                                                'வெள்ளைக்காரப் பசங்க'

.:

நத்தம் அரசு உயர் நிலைப்பள்ளியில் வேலை பார்த்த அனுபவத்தைத் தொடர்ந்தார் எனது தலைமை ஆசிரியர் " இதில் என்ன ஆகிவிட்டது என்றால்,2-ஆம் ஆண்டு பெற்றோர்கள் இந்த ஆசிரியர் ஆங்கிலப்பாடம் எடுக்கின்ற வகுப்பில்தான் என் பிள்ளையைச்சேர்க்கவேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் குவிந்துவிட்டார்கள்.அவர் ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டார்.அப்படி ஒரு நிலைமை அங்கே இருந்தது.


எதற்காக பெற்றோர்கள் அப்படி என் வகுப்பில்தான் தங்கள் குழந்தைகளைச்சேர்க்க வேண்டும் என்று விரும்பினார்கள் என்றால் ,மாணவர்களை ஆங்கிலம் பேசவைத்தேன்.ஆங்கில வகுப்பிலும் சரி வெளியிலும் சரி என்னிடத்தில் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று வைத்தேன்.எங்கு பேசினாலும் ,எதைப் பற்றிப்பேசினாலும் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும்.நத்தத்தில் காய்கறி வாங்க கடைக்குப்போவேன்.ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்பதற்காக பயந்துகொண்டு என் பக்கத்திலேயே வராமல் இருந்தார்கள்.பின்பு தைரியமாக வந்தார்கள்.பேசினார்கள்.வாக்கியத்தில் பேச வேண்டியதில்லை,எப்படி வேண்டுமானாலும் பேசு என்றேன்.Bus not come,Hospital going இப்படித்தான் முதலில் பேசினார்கள்.பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி என்றால் மகிழ்ச்சி அப்படி ஒரு மகிழ்ச்சி.1964-களில் கிராமத்தில்..இதை எல்லா ஆசிரியர்களும் செய்யலாம்தானே..வேற கிளாஸ் பையனுக எல்லாம் என் கிளாஸ் பையனுங்கள 'வெள்ளைக்காரப் பசங்க ' என்று கிண்டல் செய்வார்கள்.

கணிதத்திலும் அப்படித்தான்.ஆனால் கண்டிப்பு அதிகம்.வீட்டுப்பாடம் கொடுத்தால் கண்டிப்பாகப் பார்த்துவிடுவேன்.ஏனோ,தானோ என்பது இல்லை. " சார்,எனக்கு வேற வேலை இருந்துச்சு,உடம்புக்கு முடியலை" என்று சொன்னால் மட்டும்தான் விட்டுவிடுவேனே தவிர,வீட்டுக்கணக்கு செய்யாமல் வந்தால் அன்றைக்கு அடிதான்.எனக்கு வகுப்பு இருக்கிறது என்றால் ,மணி அடிப்பதற்கு முன்பே வெளியே நிற்பேன்.மணி அடித்து ஆசிரியர் வெளியே வந்தவுடன் உள்ளே போய்விடுவேன்.அதைப்போல மணி அடித்தவுடன் ,வகுப்பை முடித்துக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியேறி விடுவேன்." என்றார்.

ஆங்கில மொழி என்பது ஒரு கருவி.ஒரு சிற்பியின் கையில் இருக்கும் உளி போன்றது ஆங்கிலம். ஒரு மனிதனின் முன்னால் அழகிய,உறுதியான கல் இருக்கலாம்.அவன் மனதிற்குள் இப்படிச் சிற்பம் வடிக்கவேண்டும் ,அப்படிச்சிற்பம் வடிக்கவேண்டும் என்று ஆயிரமாயிரம் எண்ணங்கள்,நோக்கங்கள் இருக்கலாம்.ஆனால் கையில் உளி இருக்கவேண்டும்,சிற்பத்தை நன்றாக உருவாக்க அந்த உளியை எப்படி  லாவகமாகப் பயன்படுத்தவேண்டும் என்னும் திறமை இருக்கவேண்டும்.அந்தத் திறமை பொத்தென்று வானத்தில் இருந்து குதித்துவிடாது. முயற்சியும் பயிற்சியும் இணைந்த கடுமையான உழைப்பு வேண்டும்.அப்போதுதான் அழகிய சிற்பத்தை வடிக்கமுடியும்.அப்படித்தான் ஆங்கிலமும்.தாய்மொழியில் நன்றாகப் படிக்கவும் எழுதவும் தெரியும் ஒருவருக்கு எந்த மொழியையும் கற்றுக்கொள்ளமுடியும்.


தமிழ் நாட்டில் இருக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்த எனது தலைமை ஆசிரியர் அதனை மேம்படுத்துவதற்கு தன்னுடைய பணிக்காலம் முழுவதும் பணியாற்றி இருக்கிறார்.தன்னைப் பற்றிச்சொல்லும்போதே தான் எப்படி ஆங்கிலத்தில் புலமை பெற்றேன் என்பதைச்சொல்லுவார்.மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த காலத்தில்(1955-1959) ஆரம்பித்தது ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் வேண்டும் என்னும் ஆசை என்பார்..கல்லூரியில் நல்ல ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் பேசுவார்கள். ஆங்கிலத்தில் கேள்வி கேட்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்துவார்கள். என்பார் ஆங்கிலத்தில் கல்லூரியில் சொற்பொழிவுகள் நடக்கும்.காங்கிரசுகாரர்கள் எல்லாம் அன்றைக்கு கல்லூரிக்கு வந்து ஆங்கிலத்தில் பேசுவார்கள்.திரு.இராஜாஜி அவர்கள் மதுரை தியாகராசர் கல்லூரியில் பேசினார்.அருமையான ஆங்கிலத்தில் பேசினார். ஆங்கிலத்தில் யார் பேசினாலும் நான் கேட்கப்போய்விடுவேன் என்பார். ஒரு பக்கம் அற்புதமான மேடைத்தமிழில் அறிஞர் அண்ணா,நாவலர் நெடுஞ்செழியன்,பேரா.அன்பழகன்,சி.பி.சிற்றரசு,நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் எல்லாம் தியாகராசர் கல்லூரியில் பேசினார்கள். வட மாநிலத்து காங்கிரசு தலைவர்கள் எல்லாம் கல்லூரிக்கு வந்து ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்பார்.


தொடர்ச்சியாக ஆசிரியராக வேலைபார்த்த காலங்களில் 25 வருடங்களுக்கு மேலாக 'The Readers Digest' என்னும் பத்திரிக்கையின் சந்தாதாரர் என்றார்.வீட்டிற்கு அந்தப் பத்திரிக்கையை வரவைத்து விடாமல் படித்திருக்கிறார்.தன்னுடைய ஆங்கில அறிவு வளர்ச்சிக்கு அந்தப் பத்திரிக்கையின் பங்கும் உண்டு என்பார்.தியாகராசர் கல்லூரி நூலகத்திற்கு வரும் 'The Science Digest ', 'The Mirror ' போன்ற பத்திரிக்கைகளைத் தொடர்ச்சியாகப் படிப்பேன் , 'The Times Of India' என்னும் பத்திரிக்கை அப்போது இலண்டனில் இருந்து வரும்,அதனையும் தியாகராசர் கல்லூரி நூலகத்தில்  படிப்பேன் என்பார்.அதைப்போல நூலகத்தில் இருந்த பல புத்தகங்களை,ஆங்கிலப்புத்தகங்களை தொடர்ச்சியாக எடுத்துப்படித்தேன் என்றார்.அப்போது படித்ததுதான் 'ஜவஹர்லால் நேரு எழுதிய 'The Discovery of India 'போன்ற பல புத்தகங்கள் என்பார்.


தன்னுடைய வாழ் நாள் முழுவதும் ஆங்கில மொழியைக் கற்றுக்கொண்டே இருந்தார். கற்றுக்கொடுத்துக்கொண்டே இருந்தார்.தன்னுடைய இறுதிக்காலம்வரை ஆங்கில இந்து பேப்பரை முழுமையாகப் படித்தார்.நடுப்பக்கக் கட்டுரைகள் முக்கியமான தலைப்புகளில் வந்திருந்தால்,போனிலேயே கூப்பிட்டுச்சொல்லி விடுவார்.நேரு இது உங்களுக்குப் பயன்படும்,படியுங்கள் என்பார்.நானும் படித்துவிடுவேன்.ஆங்கில இந்துப்பேப்பரைப் படித்துவிட்டு,அன்றைய செய்தித்தாளில் வந்திருந்த அவருக்குத் தெரியாத ஆங்கில சொற்களை எல்லாம் பேனாவில் கோடிட்டு வைத்துவிடுவார். பின்பு அத்தனை சொற்களையும் நோட்டிலோ தான் வைத்திருக்கும் டைரியிலோ எழுதிவிடுவார். பின்பு ஆக்ஸ்போர்டு டிக்சனரி எடுத்துத் தெரியாத சொற்களின் பொருள் பார்ப்பார்,பின்பு ஒலிப்பு உச்சரிப்பை(Phonetic Symbol) எழுதுவார்.ஒரு பத்து சொற்கள் அந்த நாளில் முழுமையாகப் படித்து மனதில் பதிய வைத்துவிடுவார். பின்பு அந்தச்சொல்லைப் பேச்சில்,எழுத்தில் பயன்படுத்துவார்.


இந்த நேரத்தில் நான் படித்த இன்ஸ்பயரிங் இளங்கோ என்பவர் எழுதிய 'ஜெயிப்பது நிஜம் '  என்னும் புத்தகம் நினைவுக்கு வருகிறது. பிறப்பால் அவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி.ஆங்கிலத்தில் Ph.D, பல விருதுகள், பல பேருக்குவேலை கொடுக்கும் இளங்கோ, பல ஆயிரக்கணக்கானோர் மத்தியில் சிறப்புரை ஆற்றும் இளங்கோ என அவரின் சாதனைகள் பிரமிக்க வைக்கிறது. அது எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆங்கில மொழி மீது அவருக்கு ஏற்பட்ட காதல்,விருப்பம். ஆங்கில மொழி உனக்கு வராது என்று ஏகடியம் பேசியவர்களுக்கு முன்னால்,அந்த ஆங்கிலத்தை வைத்தே நான் ஜெயித்துக்காட்டுகிறேன் என்று மனதில் எடுத்த வைராக்கியம்., எனக்கு sight இல்லாமல் இருக்கலாம். அதற்காக நான் வருத்தப்படவில்லை, உட்கார்ந்து அழுது கொண்டிருக்கவில்லை. எனக்கு இருக்கும் vision-மூலம் இந்த உலகத்தை வியப்படைய வைக்கிறேன் என்று வியப்படைய வைத்திருக்கும் இன்ஸ்பயரிங்க் இளங்கோ,தன்னைப் பற்றி எழுதிய புத்தகம் 'ஜெயிப்பது நிஜம்'.மிக அருமையான புத்தகம்.இதை வாசிப்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் அந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.


என்னுடைய தலைமை ஆசிரியரும் ஆங்கிலம் தெரியாததால் கல்லூரி புதுமுக வகுப்பில் அல்லது இளம் அறிவியல்-கணிதம் பட்டப்படிப்பில் அவமானம் பட்டிருக்கலாம்.மனதில் துன்பப்பட்டிருக்கலாம்.தெரியவில்லை.அதைப்பற்றி அவர் சொல்லவில்லை.ஆனால் ஆங்கிலத்தை மிகக் கெட்டியாகத் தன் வாழ்வில் பிடித்துக்கொண்டார்.மற்றவர்கள் பிடித்துக்கொள்ளவும் வழிகாட்டினார்.ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால்,தங்கு தடையில்லாமல், உயர்தர ஆங்கிலத்தில் பேசினார். ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தால்,அவரைப் போல யாரும் எழுத முடியாது என்ற அளவிற்கு எழுதினார்.மற்ற ஆசிரியர்கள் நலனில் அக்கறை காட்டினார்.அதுமட்டுமல்ல,நினைத்துப்பாருங்கள்,1964-65களில் நத்தம் போன்ற கிராமப்புற பள்ளிக்கூடத்தில்,அந்தப் பிள்ளைகளை ஆங்கிலத்தில் பேசவைக்கவேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள்தான்,அவரது வகுப்பில் என் பிள்ளை படிக்கவேண்டும் என்று பெற்றோர் கேட்கும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது...


தான் நத்தத்தில் வேலை பார்த்ததைத் தொடர்ந்த எனது தலைமை ஆசிரியர் "அன்றைக்கும் இதே உடைதான்.வெள்ளை வேட்டி,வெள்ளைச்சட்டைதான்.கீழேயிருந்து மேலேவரை எல்லோரும் பேண்ட் போட்டுத்தான் பள்ளிக்கு வருவார்கள்,என்னைத்தவிர.இதிலிருந்து என்ன தெரிந்துகொண்டோம் என்றால் எளிமை,தரக்குறைவானதோ,இழிவானதோ அல்ல.நடத்தையும்,பணியாற்றும்தன்மையும் அதாவது செயல் திறனுமே ஒரு மனிதனைத் தீர்மானிக்கிறது,மதிக்க வைக்கிறது." என்றார்.உண்மைதானே..தனது வாழ்க்கையையே ஒரு பாடமாக நமக்கு வழங்கிச்சென்றிருக்கிறார்.


(தொடரும்)...






6 comments:

Anonymous said...

அருமை..இப்படி முழு நேரமாக மாணவர்களுக்காக இருக்கும் ஆசிரியர்கள் அரிது.அதுவும் அந்த காலகட்டத்தில் ஆங்கிலம் பேச வைப்பது எல்லாம் சாதாரண விசயமில்லை.அவரிடம் பயின்ற மாணவர்கள் உண்மையில் ஒரு நல்ல ஆசிரியரால் வழிநடத்தப்பட்டவர்கள்

முனைவர். வா.நேரு said...

உண்மைதான்..கருத்திற்கும் வாசிப்பிற்கும் நன்றி.

முனைவர். வா.நேரு said...

"மிக அருமையான அனுபவம் மிக்க பதிவு! பயிற்சியும் முயற்சியும் இணைந்த கடுமையான உழைப்பு எத்தகைய இலட்சியத்தையும் இலக்கையும் அடையமுடியும் என்பது தெளிவாகிறது! மிக்க நன்றி!" .தொலைத்தொடர்பு தொழிலாளர் முன்னேற்றச்சங்கத்தின் அகில இந்தியப் பொறுப்பாளர் அண்ணன் ஆ.செல்லப்பாண்டியன் அவர்கள் முக நூலில்

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க அண்ணே...

Kavitha Elango said...

இன்றைக்காவது இணைய உலகம் இருக்கிறது. ஆனால் அன்றைய காலகட்டங்களில் கிராமத்துப் பிள்ளைகளுக்கு, என்னதான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சி பெற்று வெளி வந்தாலும் அடிப்படையாக ஓரிரு சொற்கள் கூட பேச்சு வழக்கில் தெரியாமல் தான் இருந்தது. அறிவார்ந்த பிள்ளைகள் கூட ஆங்கிலம் அறியாத, அறிய முடியாத தம் சூழ்நிலையால் நகரத்துப் பிள்ளைகளைப் பார்க்கும் போது ஒரு ஏக்க மனநிலையே தொடர்ந்தது. மாணவர்களின் அம்மனம் அறிந்து பணியாற்றிய தங்கள் தலைமை ஆசிரியரை நினைக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.

முனைவர். வா.நேரு said...

"தங்கள் தலைமை ஆசிரியரை நினைக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது."மகிழ்ச்சியும் நன்றியும் அம்மா...