Wednesday, 15 January 2025

திராவிட ஆய்தம்... வா நேரு

 திராவிட ஆய்தம்

  வா நேரு 

எத்தனையோ நூல்களைப் படிக்கின்றோம் ஆனால் சில நூல்கள்தான் அதன் உள்ளடக்கத்தால் வெளிப்படுத்தும் கருத்தால் பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு மட்டுமின்றி நம் சிந்தனையை தூண்டுகிறது அந்தவகையில் அமைந்த நூல்தான் அண்மையில் நான் படித்த  நூலான இரா நரேந்திரகுமார் அவர்கள் எழுதிய திராவிட மரபணு  என்னும் நூல் அதைப் பற்றி பார்க்கப் போகிறோம் 

இந்த நூலுக்கு பதிப்புரை எழுதியுள்ள காவ்யா பதிப்பகத்தின் காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள்  திராவிடம் என்பது  தமிழைத் தாயாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பமாக திராவிட மொழிகளைப் பேசும் இனத்தைக் குறிக்கும் சொல்லாக திராவிடர்கள் வாழும் நாட்டைக் குறிக்கும் இடமாக  திராவிடக் கருத்தியலை அதன் அரசியலைக் குறிக்கும் என்று நான்கு வகையாக திராவிடக் கருத்தியலை நாம் பார்க்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளார் .
திராவிடக் கருத்தியலை அதன் அரசியலைக் குறிக்கும் இந்த நூல் மொத்தம் 160 பக்கங்கள் உடையது.இந்த நூல் முதல் பகுதியில் 5 கட்டுரைகளும் இரண்டாம் பகுதியில் 2 கட்டுரைகளும் முன்னுரை என்னும் ஒரு கட்டுரை என மொத்தம் 8 கட்டுரைகளைக் கொண்ட நூல்  மேலும்  ஒரு நல்ல கட்டுரையாளர் என்பவர் வெறுமனே கருத்துக்களை கோர்த்துத் தருபவர் அல்ல மாறாக வகை வகையாக  வண்ணங்களில் இருக்கும்  கருத்தியலை உள்வாங்கி அதற்குள் இருக்கும் முரண்களைக்  கண்டுபிடித்து எளிய முறையில் உண்மையை படிப்போர் மனத்துள் கடத்தும் வியன்மிகு  கலைஞன்.

அந்த வகையில் நரேந்திரகுமார் என்னும் கட்டுரையாளரின் பரந்து பட்ட படிப்பறிவையும் பல நூல்கள் வழியாக உணர்ந்த கோட்பாடுகளை பல மாந்தர்களின் செயல்களை எல்லாம் உள்வாங்கி  அவற்றையெல்லாம் திராவிடக் கருத்தியல் என்னும் நுண்கண்ணாடியால் அளவிடுவதையும் இந்த நூல் நமக்கு அடையாளம் காட்டுகிறது

திராவிடச்சிந்தனை என்னும் முதல் கட்டுரை திராவிட இயக்கத்தின் வரலாறாகவும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் பல்வேறு பணிகளை புதிய நோக்கில் எடுத்துரைப்பதாகவும் அமைந்திருக்கிறது மேலும் தேவையற்ற வேளையில் கூட கடவுள் மறுப்பைத் திராவிட இயக்கத்துடன் அடையாளம் காட்டிப் பேசுவது ஆரியத்தின் சூழ்ச்சி என்றும் கடவுள் மறுப்பு மட்டுமே திராவிட இயக்கக் கோட்பாடு இல்லை அது ஓர் ஆயுதம் அடையாளம் ஆரியத்துக்கு எதிரான கொள்கை  என்று எடுத்துரைத்து திராவிடச் சிந்தனையின் காலமுறை வளர்ச்சியை அடையாளம் காட்டுகிறார் ஒவ்வொரு துறையிலும்

 

இன்றைக்கு அண்ணாவின் தேவை அறிவுலகாலும் சிந்தனையாளர் நயன்மை உணர்வாளர்களாலும் உணரப்படுகிறது என்று பேரறிஞர் அண்ணாவை அண்ணா என்னும் கட்டுரையில் குறிப்பிடும் எழுத்தாளர் ஒரு காலத்தில் அண்ணாவை வெறுத்து ஒதுக்கிய ஆரிய இந்து மாபெரும் தமிழ்க்கனவு  என்னும் நூல் மூலம் எப்படிக் கொண்டாடுகிறது என்பதையும் எதிர் நிலையில் இருந்தவர்கள்கூட அண்ணாவின் பங்களிப்பை எப்படி எல்லாம் உச்சி முகர்ந்து பாராட்டுகிறார்கள் என்பதையும் மிகச்சிறப்பாகச்சொல்லி இருக்கின்றார் அதனைத் தொடர்ந்து சோர்விலாச்சூரியன்  என்னும் கட்டுரையும் மானமிகு தன் மதிப்புக்காரர்(சுயமரியாதைக்காரர் ) கலைஞர் என்னும் கட்டுரையும் கருணாநிதி அவர்களை சிறப்பாக படம் பிடித்துக்காட்டும் கண்ணாடிகளாய் எவர் படித்தாலும் கருணாநிதி என்னும் ஆளுமையை எண்ணி எண்ணி மகிழும்படி அமைந்திருக்கும் கட்டுரைகள் தாம்

திராவிட இயக்கம் செயகாந்தனும் பிறரும் என்னும் கட்டுரை செயகாந்தனின் இன்னொரு பக்கத்தை நமக்குக் காட்டுகிறது இதுவரை ஆரிய ஊடகங்கள் ஊதிப்பெருக்கியது போல  திராவிட இயக்கத்திற்கு எதிராக மிக முரட்டுத் தன்மையுடன் கொடும் சொற்களுடன்  பல்வேறு கருத்துக்களை உதிர்த்தவர்தான் சொன்னவர்தான் செயகாந்தன் என்பது  நாம் அறிந்த்தே. இது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு திராவிட இயக்க ஆளுமைகளைப் போற்றியவரும் செயகாந்தன் என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளோடு நாள் உள்ளிட்ட சான்றுகளோடு தோழர் நரேந்திர குமார் இந்த நூலில் கூறுகின்றார்.

நான் ஒரு முரண்களின் மூட்டை என்று தன்னைத் தானே திறனாய்வு செய்து  கொண்டவர் செயகாந்தன் அப்படிப்பட்ட ஒரு முரண் என்பது அவரது வாழ்க்கை முழுவதும் இருந்தது ஆனால் அந்த முரணில் வெளிவந்த கருத்துக்கள் திராவிட இயக்கத்திற்கு ஒத்திசைவாகவும்  இருந்திருக்கிறது தந்தை பெரியாரின் செயலால் அவரின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது என்று செயகாந்தன் சொன்னது எத்தனை பேருக்குத் தெரியும் மேலும்  திராவிட இயக்கத்திற்கு இசைவாக அவர் என்னென்னவெல்லாம் சொல்லி இருக்கிறார் என்பதை கோர்வையாக தொகுத்துக் கொடுத்ததோடு அதற்குள் இருக்கும் அரசியலையும் மிக நுட்பமாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் இரா நரேந்திர குமார் 

 

இந்த நூலின் பகுதி 2 இல் 2 கட்டுரைகள் இருக்கின்றன அவற்றில் ஒன்று கடைவிரித்தேன் கொள்வாரில்லை  கட்டிக்கொண்டேன் என்று  வள்ளலார் பற்றி தான் பள்ளியில் படிக்கின்ற நிலையில் தொடங்கி வள்ளலார் எப்படி மறைந்தார் என்பது பற்றி மறைமலையடிகள் எழுதி வைத்திருந்த கடிதம்வரை விவரிக்கும் ஒரு கட்டுரையும் வள்ளலார் பற்றி நமக்கு புது வெளிச்சம் பாய்ச்சிகிறது இந்த நூல்



அடுத்தது பிரதிவாதம் என்ற தலைப்பில்  ஆண்டாள் பற்றி பாடிவிட்டார் என பாவலர் வயிரமுத்துவுக்கு எதிராக அறிவிலார் பரப்பிய பொய்களை எதிர்ப்புகளை உடைத்து உண்மை எது என்பதைத் தெளிவாக உணரவைக்கும் கட்டுரை

தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த அளவில் ஆரியர்களின் கோட்டையாக 1930 களில் 40களில்  அவா்களின் மொழி மட்டுமே தமிழ் இலக்கியமாக இருந்ததை உடைத்தது திராவிட இயக்கத்தைச் சார்ந்த பெரியார் அண்ணா கருணாநிதி பாவேந்தர் போன்று  பலரும் எளிய நடையில் புரியும் வண்ணம் எழுதி எழுத்துலகில் பெரும் புரட்சியை விதைத்து அடித்தளத்தை மறுமலர்ச்சியை  மாற்றத்தை ஏற்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம் என்பதை மறைத்து இன்றைக்கு புதுமை படைப்பாளர்கள்  என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்கிற நாங்கள் கட்டுடைக்கிறோம் என்று சொல்லிவிட்டு இழிவான சொற்களை பெரிதாக எழுதி விட்டால் அது பெரிய இலக்கியம்  என்று பிதற்றுகின்ற கேடர்களுக்கு  இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்று பாவேந்தர் தன்னுடைய  நூலால் ஏற்படுத்திய மாற்றம் 1940 களிலேயே கட்டு உடைத்தல் என்பதற்கான களச் சான்றாக  நிற்கிறது




 

இந்த தமிழ் குமுகத்தில் ஆரியர்கள்  வேதம்  மரபு  புனிதம்  பழங்கதைகள் என்று  ஏற்படுத்தி வைத்திருந்த அத்தனை கட்டுக்களையும் தங்களுடைய இலக்கியத்தால் பேச்சால் நாடகத்தால் திரைப்படங்களால் உடைத்து எறிந்தவர்கள் திராவிட இயக்கத்தலைவர்கள் என்பதற்கு  அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள் அறிவு கெட்டவனே என்று பராசக்தியில் கருணாநிதி அவர்கள் எழுதிய உரையாடல் 70  ஆண்டுகளுக்குப் பின்பும் கேட்பவரின் மனதில் சுர்ரெனத் தைக்கிறது என்று திராவிட  இயக்கத்தின் கருத்தியலை மிகத் தெளிவாக  விவரித்திருக்கும் திராவிட மரபணு  என்னும் நூல் படிக்க வேண்டிய நூல் மட்டும் அல்ல  நம் இல்லங்களில் இருக்கவேண்டிய நூல் மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிய நூல் அதுமட்டுமின்றி உரைநடையைக் கூட பா  போல எப்படி எழுதுவது என்பதைக் கற்றுக்கொடுக்கும் நூல் திராவிடக் கருத்தியலை மிகச்செழுமையாக படிப்பவரின் மனத்தில் நின்றிடும் நூல் இதுவென பரிந்துரை செய்கிறேன்

நன்றி : புகழ்ச்செல்வி  இதழ் ( தி பி 2056 சிலை சுறவம் சனவரி 2025 

2 comments:

Anonymous said...

எதிர்பாரா உவகை தந்த இனவுணர்வுத் திறனாய்வு ! என் முகநூலில் பகிர்ந்து கொள்கிறேன். இனி வரும் நூலில் பயன்படுத்திக் கொள்கிறேன். நிறையன்பும் நன்றியும்!

முனைவர். வா.நேரு said...

நன்றிங்க அய்யா,மகிழ்ச்சி.