உற்சாகம்
தரும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள்.
(முனைவர் வா.நேரு)
25 1 2025-ல் மதுரையிலும் 26.1.2025 பழனி மாவட்டம் கோரிக்கடவிலும் தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி முகாம்களில், பயிற்றுநராகக் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.. மதுரையில் தலைமைச்செயற்குழு உறுப்பினர் அண்ணன்
வே. செல்வம் அவர்களுடைய ஒருங்கிணைப்பில் மாநில சட்டத்துறை சார்பாக நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை மாநில சட்டத்துறையின் செயலாளர் வழக்கறிஞர் மு.சித்தார்த்தன் அவர்களும் மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் நா.கணேசன் அவர்களும்
மற்றும் அவர்களோடு இணைந்து திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும் , சட்டத்துறையின் பொறுப்பாளர்களும்
உறுப்பினர்களும் இணைந்து இந்த
நிகழ்வை நடத்தினர். அதேபோலக் கோரிக்கடவு நிகழ்ச்சியைப் பகுத்தறிவாளர் கழகத்தின் பழனி மாவட்ட
தலைவர் திராவிடச் செல்வன், வழக்கறிஞர் சக்திவேல் மற்றும் பழனி திராவிடர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் இணைந்து நடத்தினர்.
நம்பிக்கையைக் கொடுத்தது
மனதளவில் மிகப்பெரிய உற்சாகத்தையும் நம்பிக்கையும் கொடுப்பதாக இந்த இரண்டு பெரியார் பயிற்சி பட்டறைகளும் நடைபெற்றன இந்த இரண்டு நிகழ்வுகளையும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த திராவிடர் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அய்யா தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்கள் இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பேசுகின்ற பொழுது ஒரு கருத்தினைக் குறிப்பிட்டார். “ மாணவ, மாணவிகளே உங்களுக்கு வகுப்பினை எடுக்கக்கூடிய இந்தக் கருத்துரையாளர்கள் வெவ்வேறு பகுதியில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று யோசித்தால் தனிப்பட்ட முறையில் எந்தப் பலனும் இல்லை. ஆனால் பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு வாழக்கூடிய இவர்கள், வாழ்க்கையிலே வெற்றி பெற்றிருக்கிறார்கள் இவர்கள் தாங்கள் கடைப்பிடித்த பெரியார் கொள்கைகளால் பெற்ற வெற்றிகளை, பெற்ற மனமகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும், நீங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் வெற்றியாளராகவும் விளங்குவதற்கு வழிகாட்டக் கூடியவர்களாகவும் அவர்கள் வந்திருக்கிறார்கள், தான் பெற்ற உயர்வை நீங்களும் பெற வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
மருத்துவர் கவுதமனின் பயிற்சி
ஜெயக்குமார் அவர்கள்
குறிப்பிட்டதை அசை போட்டுப் பார்த்தேன். உண்மைதான்.இந்த இரண்டு நிகழ்வுகளிலும் குன்னூர் மருத்துவர் கவுதமன் அவர்கள் ‘பேயாடுதல்,சாமியாடுதல் அறிவியல் விளக்கம் ‘ என்ற தலைப்பில் பாடம் எடுத்தார்கள். அவர் ஊட்டி
அருகில் உள்ள குன்னூரில் மிகப் புகழ்பெற்ற ஒரு மருத்துவர். அங்கு
மருத்துவமனை வைத்திருக்கிறார். நாள்தோறும் வரக்கூடிய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறார். இரண்டு நாட்கள் தனது தொழிலை விட்டுவிட்டு இந்தப் பயிற்சி முகாம்களுக்குப் பாடம்
எடுக்க வந்திருக்கிறார். அது மட்டுமல்ல குன்னூரில் இருந்து தன்னுடைய சொந்த செலவில் காரில்
மதுரைக்கு வந்து பின்பு கோரிக்கடவிற்கு வந்து மாணவ மாணவிகளுக்குப் பாடம் எடுத்திருக்கிறார்.தன்னுடைய வகுப்பினை
ஆரம்பிக்கும்போது,தான்
எவ்வளவு பின் தங்கிய ஒரு கிராமத்தைச் சார்ந்தவன் என்பதையும்,விவசாயப்பின்னணி
உள்ள ஒரு குடும்பம் என்பதையும்,தான் மருத்துவர் ஆவதற்குத் தந்தை பெரியாரின் கொள்கைகள் எப்படிக் காரணம் என்பதையும் ,தான் மருத்துவர் ஆன பின்பு செய்திருக்கக்கூடிய முக
அறுவை சிகிச்சைகளையும்,9000 முக
அறுவை சிகிச்சையில் 6000 முக
அறுவை சிகிச்சைகள் இலவசமாக ஏழைகளுக்குச் செய்தது
என்பதையும்,தன்னுடைய
இணையர் மறைந்த அம்மா டாக்டர் பிறைநுதல்செல்வி அவர்களின் தொண்டறப்பின்னணியும்
தொடக்கத்தில் குறிப்பிட்டு உரையாற்றினார்.
வகுப்பில் மாணவ மாணவிகளின் மனதில் தான் சொல்லும் கருத்து நிலைத்து
நிற்கும்வண்ணம் ஆடினார்,பாடினார்,குரலை உயர்த்தினார்,இறக்கினார்,ஓர் ஓரங்க நாடகம் போலவே மாணவ,மாணவிகள்,பங்கேற்பாளர்கள் மனதில் பதியும் வண்ணம் பாடம் நடத்தினார்.இடை இடையே இருமிக்கொண்டு,தண்ணீரைக் குடித்துக்கொண்டு
பாடம் நடத்தினார்.
அதைப்போலவே இந்த நிகழ்வில் பாடம் எடுத்த மா.அழகிரிசாமி அவர்கள், பேரா.நம்.சீனிவாசன் அவர்கள்,திராவிடர் கழகத்தின் தகவல் தொழில்
நுட்ப அமைப்பாளர் வி.சி.வில்வம்,கழகத்தின்
துணைப்பொதுச்செயலாளர்கள் வழக்கறிஞர் சே.மெ.மதிவதனி அவர்களும் பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார் அவர்களும் மற்றவர்களும் பல பகுதிகளில் இருந்து வந்து இந்தப் பயிற்சி
முகாம்களில் பாடம் எடுத்தார்கள்.
மிக நுணுக்கமாக அமர்ந்து கேட்டனர்:
வகுப்புகள் சிறப்பாக அமைந்ததும் மாணவ மாணவிகள் மிக நுணுக்கமாக
அமர்ந்து கேட்டதும் குறிப்புகள் எடுத்ததும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.மதுரையில் மிகச்சிறப்பாக குறிப்புகள் எடுத்த
மாணவ மாணவிகளுக்கு 2000,1000 எனப் பரிசுகள் கொடுத்தார்கள். அதனைப்போலக் கோரிக்கடவு-வில் புத்தகங்களைப்
பரிசாக்க் கொடுத்தார்கள்.குறிப்புகள் எடுக்க வைப்பதற்கான மிகச்சிறந்த முயற்சி இது.
1987-ல் நான் குற்றாலத்தில் பயிற்சி முகாமில்
கலந்துகொண்டபோது எடுத்த குறிப்புகள் இப்போதும் என்னிடம் உள்ளது.அய்யா ஆசிரியர்
அவர்கள், அய்யா துரை.சக்கரவர்த்தி அவர்கள்,அய்யா கு.வெ.கி.ஆசன் போன்றவர்கள் எடுத்த பாடமும் அந்தக் குறிப்புகளைப்
புரட்டும்போதெல்லாம் நினைவுக்கு வருகிறது.
49 ஆண்டுகளுக்கு
முன்னால் தொடங்கப்பட்டு,வருடந்தோறும்
நடைபெறும் குற்றாலம் பயிற்சி முகாமில் பயிற்சி
பெற்றவர்கள்தான் பெரும்பாலும் திராவிடர் கழகத்தின்,பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். நான்கு
நாட்கள் நடைபெறக்கூடிய குற்றாலம் பயிற்சி முகாம் என்பது தந்தை பெரியாரை, திராவிடர்
கழகத்தை, தந்தை பெரியாருக்குப் பின்னால்
இயக்கத்தை வழி நடத்திய அன்னை மணியம்மையாரை,இன்று நம்மை வழி நடத்தும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி
அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கும் தெளிவு பெறுவதற்குமான ஒரு
மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.
ஆசிரியர் கட்டளையிட்டார்.
வருடத்திற்கு ஒருமுறை நடக்கக்கூடிய பயிற்சி முகாம் மட்டுமல்லாது அந்தந்த பகுதிகளில் ஒரு நாள் இரண்டு நாள் பயிற்சி முகாம்களைத் தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்ற திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் 2023 மே11 அன்று ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழுவில் கட்டளையிட்டார்.அவருடைய கட்டளையை ஏற்று மிகச் சிறப்பாக இந்தப் பயிற்சி பட்டறைகள் நடைபெறுகின்றன
கோரிக்கடவுவில் நிகழ்ந்த பயிற்சி முகாம் 49 வது பயிற்சி முகாம் என்று அய்யா இரா.ஜெயக்குமார் அவர்கள் குறிப்பிட்டார். கோரிக்கடவு என்பது பழனி அருகில் உள்ள ஒரு சின்னக் கிராமம். 3500 மக்கள் தொகை கொண்ட ஒரு ஊர் என்றாலும் கூட அந்த ஊரில் மாணவ மாணவிகளைத் திரட்டியது மட்டுமல்லாது ஊரில் இருக்கக்கூடிய முக்கிய பிரமுகர்களை அழைத்து மதியம் பிரியாணி, சாப்பாடு மற்றும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து அந்த நிகழ்வுகளை நடத்தினர்.சின்னத் தண்ணீர் பாட்டிலில் கூட தந்தை பெரியார் ,அன்னை மணியம்மையார்,அய்யா ஆசிரியர் படங்களை.நமது கொள்கையை அச்சிட்டு பயன்படுத்தியதை விடுதலை சிறப்பாகச் சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.பழனி மாவட்டப்பொறுப்பாளர்கள் மாவட்டத்தலைவர் முருகன்,மாவட்டச்செயலாளர் அருண்குமார், திண்டுக்கல் கழகப்பொறுப்பாளர் அண்ணன் வீரபாண்டி ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினர்.
வழக்குரைஞரணி சார்பில் முதல் பயிற்சி முகாம்
அதேபோலவே மதுரையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மிகப்பெரிய அளவிற்கு
உணவு ஏற்பாடும் மற்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தலைமை
ஏற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த திராவிடர்
கழகச் சட்டத்துறையின் மாநிலத் தலைவர் அய்யா வழக்கறிஞர் த.வீரசேகரன்
அவர்கள் திராவிடர் கழகம் சார்பாகப் பயிற்சி
முகாம்கள் நிறைய நடைபெற்றிருக்கின்றன. ஆனால் சட்டத்துறையின் சார்பாக நடக்கக்கூடிய
முதல் பயிற்சி முகாம் இதுதான் என்று குறிப்பிட்டார்.
தான் குற்றாலத்தில் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட நிகழ்வை அவையில்
பகிர்ந்துகொண்டார்.திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் ,வழக்கறிஞர் அம்மா அ.வீரமர்த்தினி
அவர்கள் ,இந்தப்பயிற்சிப் பட்டறைக்காகவே சென்னையில் இருந்து
வந்து,நிகழ்வைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். சட்டக் கல்லூரியில் படிக்கக்கூடிய பல மாணவ மாணவிகள் மதுரை பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். அவர்களின் புரிதலுக்கு ஏற்ப அரசியல் சட்டம் சார்ந்த வகுப்புகளாக
இந்த வகுப்புகள் அமைந்தன.மிகச்சிறப்பாக ‘இந்திய அரசமைப்புச் சாசனமும் ,அறநிலையத்துறை சட்டமும் ‘ மற்றும் ‘தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச்சிந்தனை ‘ என்னும்
தலைப்புகளில் வகுப்புகளை வழக்கறிஞர் சே.மெ.மதிவதினி
எடுத்தார்.’பெரியார்
மீதான அவதூறுகளுக்குப் பதிலடி’ என்னும்
தலைப்பில் அமைந்த வழக்கறிஞர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்களின் வகுப்பில்
தொடக்கம் முதல் இறுதிவரை கேள்வி பகுதிகளாகவே அமைந்தது. நமது இயக்கம் சார்ந்த
அவதூறுகளை மாணவ,மாணவிகள்
கேட்க,அதற்கு மிக நல்ல விளக்கங்களைப் பிரின்ஸ் என்னாரெசு
பெரியார் அளித்தார்.புதுவகை உத்தியுடன் அமைந்த வகுப்பாக இந்த வகுப்பு அமைந்தது.
புரிதலுக்கு ஏற்றவாறு வகுப்புகள்
அரசியல் சட்டத்தின் வாயிலாகவும்,தமிழ்நாடு சட்டங்கள் வழியாகவும் தந்தை பெரியாரை, அய்யா ஆசிரியர்
வீரமணி அவர்களைத் திராவிடர் கழகத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நிகழ்வாக இந்தப் பயிற்சிப் பட்டறை அமைந்தது.’தமிழர் தலைவரின்
சாதனைகள்’ என்னும்
தலைப்பில் மதுரையில் பேரா.நம்.சீனிவாசன் அவர்களும்,கோரிக்கடவுவில்
தோழர் வி.சி.வில்வம் அவர்களும் மிகச்சிறப்பாக வகுப்புகளை எடுத்தனர்.’தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு ‘ என்னும்
தலைப்பில் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி,பகுத்தறிவு
ஊடகப்பிரிவின் மாநிலத்தலைவர் ,மா.அழகிரிசாமி அவர்களும்,’சமூக நீதி வரலாறு ‘என்னும் தலைப்பில் நானும் இரண்டு
பயிற்சிப் பட்டறைகளிலும் வகுப்புகள் எடுத்தோம். கோரிக்கடவைப் பொறுத்த அளவில் கல்லூரி மாணவ மாணவிகள் சிலர், பள்ளி மாணவ மாணவிகள் அதிகம். எனவே அவர்களுடைய புரிதலுக்கு ஏற்றவாறு அங்கு வகுப்புகள்
நடத்தப்பட்டதோடு அதை பெரும் உற்சாகத்தோடு அந்த மாணவக்குழந்தைகள்
கேட்டுப் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்தது.
பாடம் எடுக்கக் கூடியவர்களிடம் ஒருங்கிணைப்பாளர் அய்யா தஞ்சை இரா.ஜெயக்குமார்
அவர்கள் பெரும்பான்மையாக கல்லூரி மாணவ மாணவிகள் இருக்கிறார்கள் அல்லது பள்ளி மாணவ
மாணவிகள் இருக்கிறார்கள் எனவே அதற்கு ஏற்றார் போல் உங்கள் தலைப்புகளின் கீழ்
செய்திகளைச் சொல்லுங்கள் என்று பயிற்றுநர்களுக்கு ஆலோசனையைக் கொடுத்தார். நேரத்தைக் கடந்து வகுப்புகள் சென்றால் பெல்
அடித்து ,முடிக்க
வழி வகுத்தார்.பயிற்றுநர்கள் ஒரு பள்ளியின் ஆசிரியர்கள் என்றால்,இரா.ஜெயக்குமார் அவர்கள் தலைமை ஆசிரியர் போல் வழி நடத்தினார்.
காணொலி வாயிலாக தமிழர் தலைவர் உரை
இரண்டு பயிற்சி வகுப்புகளிலும் காணொளி வாயிலாகத் திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி வீரமணி அவர்கள் உரையாற்றினார்கள். அதனை
வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அவ்வளவு ஈர்ப்பாகக் கவனித்துக் குறிப்புகளை எடுத்துக் கொண்டனர்.அந்த வகையில் திராவிடர் கழகம் என்பது ஓட்டு கேட்காத ஓர் இயக்கம் என்பதையும், அதனுடைய
செயல்பாடுகளையும் 100 ஆண்டுக் காலச் சுயமரியாதை இயக்கத்தினுடைய வரலாற்றையும் அதற்காக உழைத்த
கருப்பு மெழுகுவர்த்திகளையும் இளைய தலைமுறை உணர்ந்து கொள்வதற்கும் அறிந்து
கொள்வதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இந்தப் பயிற்சிப் பட்டறைகள் அமைந்தன..அவர்கள் புரிந்து கொள்வதற்கான ஒரு பக்குவத்தை, புரிதலை
இந்தப் பயிற்சி முகாம்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
இந்தப் பயிற்சி முகாம்கள் தமிழ்நாட்டினுடைய ஒவ்வொரு கிராமத்திலும் மற்றும்
பல பகுதிகளிலும் நடக்கின்ற பொழுது நம்முடைய இயக்கத்தினுடைய பெருமைகளை மட்டுமல்லாது
தங்களுடைய கடந்த கால வரலாற்றையும் இன்றைய வரலாற்றையும் இளைய தலைமுறை உணர்ந்து கொள்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக
இருக்கும்.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 50-வது நிகழ்வு வடசென்னையில் பிப்ரவரி 9-ந்தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது.”வரலாற்றுச்சிறப்பு
மிக்க இந்தப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தமது 50-வது
எண்ணிக்கையைத் தொட இருக்கிறது.அந்த வகையில் பிப்ரவரி 9-ந்
தேதி வடசென்னை மாவட்டக்கழகத்தின் சார்பில் 50-வது ஒரு நாள்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற இருக்கிறது.இதில் தமிழர் தலைவர் ஆசிரியர்
மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மாணவர்கள்,இளைஞர்களுக்கு
வகுப்புகள் எடுக்க இருக்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்”
என்று பெரியாரியல் பயிற்சிப்பட்டறை பொறுப்பாளர் மானமிகு இரா,ஜெயக்குமார் அவர்கள் செய்தி கொடுத்திருக்கிறார்கள்.
நெல் நாற்றுகளை வளர்க்கும் பணி!
50-வது பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு மனமார்ந்த
வாழ்த்துகள்.பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் என்பது நெல் நாற்றுகளை வளர்க்கும்
பணி. பெரியாரியல் என்னும் ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு தாங்கள் வளர்வதோடு,சமூகம் வளர்வதற்கும் தாங்கள் ஏதாவது செய்யவேண்டும் என்னும் உந்துதலைக்
கொடுக்கும் பயிற்சிப்பட்டறைகள் இவை.இந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்கு,நமது திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழக,சட்டத்துறை,மகளிரணிப்பொறுப்பாளர்கள் என்று பலரும்
இணைந்து உழைத்து இந்த நிகழ்வை நடத்துகின்றனர். நிகழ்வினை நடத்தி முடித்தபின்,அது நிறைவாக அமைய,நம் கழகப் பொறுப்பாளர்களின் முகத்தில் தோன்றும்
மகிழ்ச்சி என்பது துன்பப்பட்டு ஒரு குழந்தையைப் பெற்ற தாய்,தன்
குழந்தையைப் பார்த்து அடையும் மகிழ்ச்சிக்கு ஒப்பானது.அப்படிப்பட்ட மகிழ்ச்சியை
என்னால் கழகப்பொறுப்பாளர்களின் முகங்களில் பார்க்கமுடிந்தது.இந்த 49 பயிற்சிப் பட்டறைகளும் வெற்றிகரமாக நடைபெற உழைத்த,உதவிய,இணைத்த,பாடம் நடத்திய அத்தனை பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும்
பாராட்டுகளும்.அத்தனை பேரும் இயங்குவதற்கு உந்து சக்தியாக இருந்து இந்த ஆற்றல்
மிக்க பயிற்சிப்பட்டறைகள் நடைபெறக் காரணமாக இருக்கும் ,திராவிடர் கழகத்தலைவர் அய்யா
ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கங்கள்.நன்றிகள்.
அய்ம்பதாவது பயிற்சி பட்டறை வடசென்னையில் பிப்ரவரி 9-ந்தேதி நடைபெறுகிறது.தமிழர்
தலைவர் ஆசிரியர் பங்கேற்று வகுப்பெடுப்பது சிறப்புக்குரியதாகும்.
No comments:
Post a Comment