நாலு தெருக் கத ...
வா.நேரு
நாலு தெருக் கத என்பது ஒரு புதினம். மயிலாடுதுறையைச் சார்ந்த கி தளபதிராசு அவர்கள் இதை எழுதியிருக்கிறார். திராவிடன் குரல் வெளியீடாக இந்தப் புதினம் திசம்பர் 2024 ஆண்டு வெளிவந்திருக்கிறது 196 பக்கங்கள் உள்ள இந்த நூலின் விலை உருவாய் 200.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டுவிழா நிறைவு விழாவில் தமிழ்நாட்டின் தலைமை அமைச்சர் அவர்களும் கேரளநாட்டின் தலைமை அமைச்சர் அவர்களும் திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர் வைக்கம் போராட்டம் என்பது உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய வரலாற்று திருப்புமுனையைக் கொடுத்த ஒரு போராட்டம்.
வைக்கம் போராட்டத்தை இன்றைய இளைஞர்கள் மத்தியில் எப்படிக் கொண்டு செல்வது? சிலர் வைக்கம் போராட்டத்தைப் பாடல்களாக பாடி இருக்கிறார்கள். அய்யா பழ அதியமான் வைக்கம் போராட்டத்தைப் பற்றி மிக அருமையான ஓர் ஆய்வு நூலை வைக்கம் போராட்டம் என்னும் தலைப்பிலேயே எழுதியிருக்கிறார்.
அவர் ஒன்றிய அரசுப் பணியிலே பணியாற்றியக் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு வைக்கத்திற்குச் சென்று கேரள அரசின் பல்வேறு துறைகளுக்கு சென்று அங்கு பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பை அவரது சிறைவாழ்வை முழுமையான தரவுகளோடு சான்றுகளோடு கொடுத்திருக்கக் கூடிய ஒரு நூலாக அந்த நூல் விளங்குகிறது.
நாலு தெருக் கத என்ற இந்த நூலைப் பொறுத்தவரை புனைவுகளின் வழியாக நடந்த வரலாற்று நிகழ்வை உரையாடல் வழியே, படிப்பவர் மனத்தில் பதிய வைக்க எழுத்தாளர் கி தளபதிராசு அவர்கள் முயன்று அதிலே வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பதை இந்தப் புதினத்தைப் படிக்கும் போழ்து நமக்குத் தெளிவாய் தெரிகிறது. அதன்படி இந்த நாலு தெருக் கதயின் நாயகன் இனியவன் பத்து ஆண்டிற்கு முன் சென்னையில் ஒரு நாளிதழில் செய்தியாளராக வேலைக்குச் சேர்ந்தாலும் செய்தியை அனுப்புவதோடு தன் வேலை முடிந்தது என்று நினைக்காமல் கட்டுரைகள் எழுதி அதை அந்த நாளிதழ்க்கு அனுப்பிய செய்திகளை படித்த அந்த நாளிதழை நடத்துபவற்குப் பிடித்துப் போனதால் தொடர்ந்து எழுதச்சொல்லி ஊக்கப்படுத்தியதன் விளைவாக அவன் எழுதிய கட்டுரைகள் அவனை நல்ல எழுத்தாளனாக அடையாளப் படுத்தியது.
சில ஆண்டுகள் அந்த இதழில் வேலை செய்துவிட்டு அதன்பின் அனைவரும் அறிந்த ஆங்கில நாளிதழுக்குச் சென்று அதற்குப் பின் தொலைக் காட்சிக்கு மாறிவிட்டான் என்று உழைப்பால் உயர்ந்த ஒருவரை இன்றைய இளைஞர்களுக்கு முன் எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஒருவரை கதை மாந்தனாய் படைத்திருக்கிறார் இந்த புதினம் எழுதியவர்.
நாலு தெருக்கத என்னும் இந்தப் புதினம் நடப்பு நிகழ்வுகள் அடிப்படையில் இன்றைய வாழ்க்கை முறையின் அடிப்படையில் ஒரு பகுத்தறிவு குடும்பம் எப்படி நடைபெறுகிறது என்பதை இயல்பான உரையாடல்கள் மூலமாக படிப்பவர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது இதிலே அறிவுக்கரசு என்ற ஒரு கதை மாந்தனை படிக்கும் போது திராவிடர் கழகத்தின் செயலவை தலைவராக இருந்த அய்யா சு.அறிவுக்கரசு அவர்களை நேரடியாக அறிந்தவர்களுக்கு அவர் அப்படியே உயிரோடு எழுந்து வந்து இந்தக் கதைக்குள்ளும் உரையாடல்களுக்குள்ளும் நடமாடுவது போல் தெரிகிறது. அந்த அளவிற்கு அந்த உண்மையான மாந்தர் அறிவுக்கரசுவை இந்தப் புதினத்தின் வாயிலாக உயிர்ப்பித்திருக்கிறார் எழுத்தாளர் தளபதிராசு. மேலும் வைக்கம் வரலாற்றை மட்டுமல்ல நிறைவாழ்வு வாழ்ந்து கொள்கையை மட்டுமே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த தந்தை பெரியாரின் தொண்டர்களை இப்படியும் நினைவில் நாம் வைத்துக் கொள்ளலாம் வருங்காலத் தலைமுறைக்கு அடையாளம் காட்டிச்செல்லலாம் என்பதற்கு இந்தப் புதினத்தைப் படைத்தவர் வழிகாட்டி இருக்கிறார். அதைப்போல வாழ்ந்து மறைந்த சில பெரியாரிய உணர்வாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய சில பெரியாரிய உணர்வாளர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையை விவரிப்பதாக இந்தக் கதை அமைந்திருப்பது என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பெரியார் வழி வாழும் ஒரு குடும்பத்தில் ஓர் இளைஞன் பகுத்தறிவு அடிப்படையில் திருமணம் செய்து கொள்கிறான். அத்தோடு தம்மை சார்ந்தோருக்கும் பகுத்தறிவு வழியில் சாதி மறுப்பு காதல் மணத்தைத் செய்வித்துக் குமுகப் பொறுப்புடன் வாழ்கிறான். என்பதைச் சுவையாகச் சொல்லும் கதைதான் இந்தப் புதினத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் சமதளத்தில் பாய்ந்து ஓடுகிற கதை நீர்.
சென்ற நூற்றாண்டில் குமுக உரிமைக்கான முதன்மை முன்னெடுப்பு வைக்கம் போராட்டம் அதன் அனைத்து நிகழ்வுகளும் அதில் பெரியாரின் பங்கும் எப்படி என்று விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு போராட்டத்தை சான்றுகளின் வழி ஆவணப்படுத்தி வரலாறாகப் பதிவு செய்வது செய்தி பரவலில் ஒரு வகை இன்னொரு வகை ஆய்வாளர்கள் மாணவர்கள் குமுக ஆய்வில் ஆர்வம் உள்ள படிப்பவர்கள் ஆகியோருக்கு அவ்வரலாறு பயன்படுவது மட்டுமல்லாமல் அப்போராட்ட உணர்வைப் புனைவாக எழுதி பொது மக்கள் படிக்க இது போன்ற புதினம் உதவும் என்று அணிந்துரையில் பழ.அதியமான் குறிப்பிட்டிருக்கிறார்.
எந்த இடத்தில் சாப்பிடவேண்டும் என்று முடிவெடுத்து இந்தக் கதையின் நாயகன் இனியவன் மகிழுந்தை நிறுத்துவதற்குக் கூட ஒரு காரணத்தை சொல்லுவதாகப் புதினத்தில் வருகிறது. இதேக் கருத்தை ஒட்டி சில நாளைக்கு முன்பு அடையாறு ஆனந்த பவன் உணவக உரிமையாளர் ஒரு நேர்காணலில் ஒருகாலத்தில் எல்லோரும் உணவகம் நட்த்த முடியாது என்றும் அது ஒரு குறிப்பட்ட பிரிவினர் மட்டுமே நடத்த முடியும் ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை யார் வேண்டுமானாலும் காசு இருந்தா நடத்தலாம் என்றும் யாரும் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்ற நிலையை உருவாகிக் கொடுத்தவர் பெரியார்தான் என்று வெளிப்படையாகச் சொன்னது மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியது மக்கள் நடுவில். அதைவிடச் சிறப்பு என்னவென்றால் அவர் பகுத்தறிவாளர் இல்லை நாளும் சிலையை வழிபடும் போக்கு உடையவர்தான் என்றாலும் அவர் பெரியாரைப் பற்றிக் கொடுத்த நேர்காணலை பார்த்தப்பிறகு அவர் மேல ஒரு மதிப்பு வந்தது என்று என்று போகிறபோக்கில் இனவுணர்வு அடிப்படையில் நாம் ஒத்திசைவு கொடுக்கவேண்டும் என்ற கருத்தை இந்தப் புதினத்தில் எழுத்தாளர் விதைக்கின்றார் அது மட்டுமின்றி பற்றா இனவுணர்வா எது முதன்மை என்றால் இனவுணர்வு என்னும் விடைக்கான உரையாடலாக மேற்கண்ட உரையாடலை இணையர்களுக்கு இடையே நடக்கின்ற உரையாடலாகப் புதினத்தைக் காட்டியிருக்கிறார்.
இப்படி உள்ளும் புறமும் பெரியாரியல் அடிப்படையில் இந்தப் புதினத்தைப் அமைத்திருந்தாலும் எந்த இடத்திலும் பெரிய அளவிற்கான பரப்புரை நெடியில்லை என்றாலும் பெரியாரியல் குறித்த புரிதலைக் கொடுக்கும் வண்ணம் உரையாடல்கள் இருக்கின்றன.
கதை சொல்லுதல் என்பது காலம் காலமாக நம் குருதியில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கலை. அது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்யுள் வடிவில் நிகழ்வுகளைக் கதைகளாக்கி கற்பனைகளோடு கலந்து கொடுத்த பெருமைக்குரிய இனம் நம் இனம். அப்படிச் சொல்லுகிற கதை யாருடைய கதை என்பது மிக முதன்மையானது கழக இலக்கியத்தில் குமுகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள மாந்தர்கள் பாடப்பட்டிருக்கிறார்கள். அனைத்து நிலைகளிலும் இருந்தவர்களும் எழுதி இருக்கிறார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கல்லைப் பற்றிப் பாடுவதும் கல்லுக்குத் தொண்டு செய்யும் மன்னனை பற்றிப் பாடுவது மட்டுமே இலக்கியம் என்று ஆகிப் போனது. எனவேதான் 20 ஆம் நூற்றாண்டில் 21ம் நூற்றாண்டில் கதை சொல்லுதல் கதை எழுதல் என்பது எதற்காக யாருக்காக யாரால் என்ற வினாக்களோடு தொடர்கிறது.
இந்த நாலு தெருக்கத என்னும் புதினம் ஒரு பகுத்தறிவாளரால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த குமுகத்தில் வாழும் அனைவரும் ஒரு பகுத்தறிவுக் குடும்பத்தின் வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் தன் வாழ்வியலைப் பகுத்தறிவு அடிப்படையில் அமைத்துக் கொண்டாலும் தனக்கு மாறுபட்ட வாழ்வியலைக் கொண்டிருக்கும் மனிதர்களோடும் எப்படி ஒத்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து வாழமுடியும் என்பதும் இந்தப் புதினத்தின் வழியாக காட்டியது வெகு சிறப்பு.
இந்தப் புதினத்தின் வெற்றி எந்த இடத்திலும் கதை தொய்வில்லாமல் செல்வது. சில கிளைக்கதைகள் நீண்டும் சில கிளைக்கதைகள் ஓரிரு பக்கங்களிலும் முடிந்திருக்கின்றன என்பதும் ஒருவகை புரட்சிதான். காரணம் ஒரு கிளைக்கதை என்றால் 10 பக்கம் என்றக் கணக்கில் 25 கிளைக்கதைகளை கொண்டு 250 பக்கம் எழுதவேண்டும் என்று பல எழுத்தளர்கள் பக்கங்களைத் தீர்மானித்துவிட்டு எழுத அமருவர். இந்தப் புதின எழுத்தளர் தளபதிராசு அவர்களைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட வரைமுறை எல்லாம் வகுத்துக்கொள்ளாமல் இயல்பான கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு கதைகளைப் படைத்துள்ளார் என்பது சிறப்புதான் என்றாலும் ஆங்கிலச் சொற்கள் வடமொழிச் சொற்கள் எனப் பழமொழிச் சொற்கள் இந்தப் புதினத்திற்குள் வருகின்றன என்பதை படிக்கும் போது நமக்கு வருத்தமாக உள்ளது என்றாலும் நாம் இவர் மீது மட்டும் பழியைச் சுமத்த முடியாது. காரணம் நம்மைச் சுற்றி உலவும் ஊடகம் எல்லாம் திட்டம் போட்டே தமிழை அழித்துக் கொண்டு இருக்கிறது என்பதை நாம் கடந்து செல்ல முடியாது. மேலும் ஆசிரியர், பேராசியர் என்று சொல்லிக் கொள்வோர் பேசுவதை எழுதுவதை எல்லாம் படித்தால் கேட்டால் தமிழ் விரைந்து சாகுமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல படையெடுப்புகளை எல்லாம் தாண்டி நிலைத்து நிற்கும் செம்மொழி என்ற அடிப்படையில் இனி வரும் நூல்கள் எல்லாம் தூயத் தமிழில் படைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை இந்தப் புதினம் படைத்த எழுத்தாளர்க்கு வைக்கிறேன்.
நடக்காத நிகழ்வுகளான இராமாயண மகாபாரதக் கதைகளை வரலாறு என்று சொல்லி மக்கள் நடுவில் புகுத்துவதற்கு ஒரு பெருங்கூட்டம் தமிழர் நாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் கேடுகளுக்கு சாவு மணியை அடிக்க உண்மையான நிகழ்வுகளை கதைகளாக்கி அதை மக்களிடம் கொண்டு சென்று புதியதொரு வழியை நாம் சமைக்க வேண்டும் அதற்கு தளபதிராசு போன்றோர் தொடர்ந்து எழுதி புதிய எழுத்தாளர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்பதே என் அவா!
No comments:
Post a Comment