Friday, 14 February 2025

புத்தி சம்பாதிக்கப்போட்டி...

 சென்ற வருடத்தின் கடைசி நாளான 31.12.2024 நமது பெரியார் காலண்டரில் போடப்பட்டிருந்த தந்தை பெரியாரின் வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது.

‘பணம் சம்பாதிப்பதில் போட்டி போடுவதை விடப் புத்தி சம்பாதிப்பதில் போட்டி போட வேண்டும்’ என்ற அந்த வாசகத்தைப் பற்றி என் இணையர், குழந்தைகளிடம் உரையாட நேர்ந்தது.

பணம் சம்பாதிப்பதற்கு வேலைக்குச் சென்று சம்பாதித்தல், சிக்கனமாக இருத்தல், பல வகையில் சேமித்தல் எனப் பல நேர்மையான வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனால், புத்தி சம்பாதிப்பதற்கு என்ன வழிமுறை, அதை எப்படிச் சம்பாதிப்பது என்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்கவும் விவாதிக்கவும் இந்தப் பொன்மொழி வழிவகுத்தது.

புத்தி என்றால் என்ன? புத்திசாலி என்றால் திறமைசாலி என்று சொல்கின்றோம், திறமையும் புத்தியும் ஒன்றா என்றால் இல்லை.
திறமையை எப்படி பயன்படுத்தி உயரவேண்டும் என்பதற்குப் புத்தி தேவை.

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்தக் காலக்கட்டத்தில்,
புத்தியைச் சம்பாதிப்பதற்கு இருக்கும் இரண்டு வழிகள், பட்டறிவும் படிப்பறிவும். படிப்பறிவைப் பொறுத்தவரையில் நமது முன்னோர்களுக்குப் பிறப்பின் அடிப்படையில் முழுமையாக மறுக்கப்பட்டது. எவ்வளவுதான் பட்டறிவு இருந்தாலும் படிப்பறிவே சபையில் நம்மை முந்தி இருக்கச் செய்கிறது. அதனைப் போலவே பெண்களுக்கு எவ்வளவு பட்டறிவு அடிப்படையிலான புத்திசாலித்தனம் இருந்தாலும் படிப்பறிவு தேவை.

நமது முன்னோர்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி வாய்ப்பு நமக்குக் கிடைத்தபோது, கிடைக்கிற போது அதனைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவது என்பது புத்தியைச் சம்பாதிப்பது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வெளிநாட்டில் சென்று படித்த பட்டங்களும், பெற்ற முனைவர் பட்டங்களும் இன்றைக்கும் கூட யாரும் வியந்து பார்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. அதற்குக் காரணம் புத்தியைச் சம்பாதிப்பதில் நாங்கள் யாரும் யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல, சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக்காட்டியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அதனால் அவர் என்றும் வரலாற்றில் நிற்கிறார்.

புத்தியைச் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக நிற்கின்றார்.

‘பக்தி வந்தால் புத்தி போகும்,புத்தி வந்தால் பக்தி போகும்’ என்றார் தந்தை பெரியார்.பக்தி என்றால் என்ன என்பதும், மதவாதிகள் எப்படிப் பக்தியின் பெயரால் சுரண்டுகிறார்கள், பெண்ணடிமைத்தனத்தை வடிவமைக்கிறார்கள்,கட்டிக்காக்கிறார்கள் என்பதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பவற்றை அறிந்து கொள்வதும் அதைப் பற்றிய தெளிவு கொள்வதும் புத்தியைச் சம்பாதிப்பதே.

27.12.2024, நமது காலண்டரில் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பொன்மொழியான ‘பிறரின் அனுபவம், நமக்குத் தெரியும் பாடங்கள்‘ என்பது அச்சிடப்பட்டுள்ளது.



புத்தியைச் சம்பாதிப்பதற்குப் பிறரின் அனுபவத்தை எப்படிப் பெறுவது? நமது வீட்டுப் பெரியவர்களின் அனுபவத்தை நேரடியாகக் கேட்டுப்பெறலாம். மற்றவர்களின் அனுபவத்தைப் பெறுவதற்கான வழி புத்தகங்கள், திரைப்படங்கள், பாடல்கள், இன்றைக்குச் சமூக ஊடகங்கள் என்று பல வழிகளில் கிடைக்கின்றன. ஆனால், எதனைப் பெறுவது, எதனை விலக்குவது, எதனைப் படிப்பது, எதனைப் படிக்காமல் தள்ளி வைப்பது என எல்லாமே புத்தியைச் சம்பாதிப்பதற்கான வழிமுறைகளாக இருக்கின்றன.
புதிது புதிதாய்க் கற்றுக்கொண்டு நம் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும் வாழ்க்கை வாழ்வதற்கான வழிமுறையே புத்தியைச் சம்பாதிப்பதாகும். புத்தியைச் சம்பாதிப்பதற்கான வழிமுறைகளில் ஒன்று நேர மேலாண்மை.’

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்” என்ற திருக்குறளுக்கு டாக்டர் கலைஞர்
அவர்கள் “வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக்கொண்டே இருக்கும் வாள் என்று அறிவார்கள்” என்று எழுதுகின்றார். நம் வாழ்க்கையில் இழக்கும் ஒவ்வொரு நாளும் நமது ஆயுளில் நாம் குறைக்கும் ஒரு நாள். எனவே என்ன செய்வது என்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, பட்டியலிட்டு நாள்தோறும் அதன்படி நடப்பதும் செய்வதும் புத்தியைச் சம்பாதிப்பதேயாகும். ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அறிவதே புத்தியைச் சம்பாதிப்பதாகும்.

“நம் மக்கள் முன்னோர்கள் சொன்னதையும், பார்ப்பனர்கள் சொன்னதையும் ஆராய்ந்து பார்க்காமல் இன்றைக்கும் மடையர்களாக இருக்கிறார்கள். மேனாட்டில் காணப்படும் புதிய முறைகள் இங்கேயும் ஏன் தோன்றக்கூடாது? அந்நாட்டில் உள்ள மனிதன் அநேக அதிசய அற்புதத்தைக் காணுகிறபோது உன்னாலும் ஏன் காண முடியாது? காரணம் அறிவைப் பயன்படுத்தாததே.

பொருள் அத்தனையும் மற்றும் உயிரற்ற பொருள் சாணி, மூத்திரம் வரை எல்லாம் கடவுள்கள் மயமாகவே இருக்கின்றன. இப்படி எண்ணிக்கையற்ற கடவுள்கள் பேர் சொல்லத் தெரியாத கடவுள்கள் எங்கும் கடவுள்கள் மயமாகவே இருந்தும், இதுவரை ஒரு விதப் பலனும் ஏற்படவில்லை என்பது மட்டுமல்ல, நம் மக்களைப் புத்தியற்றவர்களாகவே ஆக்கிவிட்டன. சுலபத்தில் திருத்தமுடியாத அளவுக்கு இத்தனையும் சேர்ந்து நம் மக்களின் அறிவைப் பாழாக்கிவிட்டன” என்று குறிப்பிடுகிறார் தந்தை
பெரியார். (மனித வாழ்வின் பெருமை எது?) பாழாகிப்போயிருக்கும் அறிவைப் புதுப்பிப்பதே புத்தியைச் சம்பாதிப்பதாகும்.புத்தியைப் பற்றிப் பேசும்போது தந்தை பெரியார் “மனிதனுக்கு இன்று வேண்டியது பணமோ, வீடோ, வாகனமோ
அல்ல. புத்தி வளர்ச்சிதான் வேண்டும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றார். புத்தி வளர்ச்சிக்கு மிகக் கேடாக இருப்பது பக்தி.

இறை நம்பிக்கை உடையவர்கள் இந்த உலகம் நிலையில்லாதது. தற்காலிகமானது.நீங்கள் இறந்த பின் அடையப்போகும் மேல் உலகமே மேலானது. அதை நோக்கி நீங்கள் உங்கள் கவனத்தைச் செலுத்துவதே ஞானம் என்று கற்பிக்கின்றனர். அதையும் மந்தைக் கூட்டமாய் மக்கள் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்குப் பெரும் பணத்தைச் செலவு செய்கின்றனர். எதையும் கேள்வி கேட்கவேண்டும். எவர் சொன்னாலும் எதைச்சொன்னாலும் கேள்வி கேட்கப் பழக்கவேண்டும். கேள்வி கேட்க கேட்க புத்தி வளர்ச்சியாகும். புத்தி வளர்ச்சியே புத்தி சம்பாதிப்பதாகும்.

வெறுமனே பாட நூல்களில் இருக்கும் கருத்துகளில் மட்டும் மூளையைச் செலுத்தாமல், எந்த ஒரு நிலையிலும் பகுத்தறிவைப் பயன்படுத்துவதே புத்தி சம்பாதிப்பதாகும்.ஒரு நாளைக்கு 15 மணி நேரம்,16 மணி நேரம் கூட நாங்கள் பணம் சம்பாதிக்கச் செலவு செய்யத்தயார் என்பவர்களுக்கு மத்தியில் தினம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரமாவது புத்தியைச் சம்பாதிக்கச் செலவு
செய்யுங்கள் என்பதை நாம் வலியுறுத்தவேண்டும். எனவே புத்தி சம்பாதிப்பதை நோக்கி இளைய
சமுதாயம் நடக்க நாம் வழி நடத்துவோம்.

நன்றி : உண்மை இதழ் பிப்ரவரி 1-15,2025

No comments: