Saturday, 15 February 2025

மனித வாழ்வின் பெருமை எது? ..தந்தை பெரியாரின் நூல் அறிமுகம்



மனித வாழ்வின் பெருமை எது?

ஜெ.வெண்ணிலா மகேந்திரன்,தலைவர்,சிந்தனை மேடை,மதுரை.

 

'மனிதவாழ்வின் பெருமை எது ?’ என்னும் தந்தை பெரியாரின் நூலினை அறிமுகப்படுத்தி உளவியல் வல்லுநர் வெண்ணிலா மகேந்திரன் அவர்கள் உரையாற்றினார்.அவர் தனது உரையில் “  மனித வாழ்வின் பெருமை எது என்னும் இந்த நூல் தந்தை பெரியார் அவர்கள் 1956 இல் பேசிய பேச்சின் தொகுப்பு. இன்றைய நாளில் இந்த நூலை படிப்பது, பார்ப்பது நமக்கு ஒரு ஊக்கமாக இருக்கும். நாம் இந்த நிகழ்வு முடிந்து போகும்போது உற்சாகமாக இருக்க வேண்டும். அந்த உற்சாகத்தை நமக்கு ஊக்கமூட்ட கூடியதாக இந்த நூல் இருக்கிறது.

 

1956-இல் அய்யா பேசிய அந்த உரை இன்றைக்கும் ஏற்புடையதாக இருக்கிறதா என்றால் இருக்கிறது. இன்றைய உலகம் சமூக ஊடக உலகம். முகநூல் போன்றவற்றில் நிறைய விளம்பரங்களை நாம் பார்க்கலாம். உங்களுக்கு ஊக்கம் வேண்டுமா?, உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி வேண்டுமா?. இந்த செமினாரில் கலந்து கொள்ளுங்கள். இதற்குக் கட்டணம் 99 ரூபாய்தான், வெறும் 199 ரூபாய்தான் என்ற விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். சிலருக்கு அப்படிப் பார்த்தவுடன் அந்த கோச்சிங் போகலாம் என்று கூட தோன்றும். இந்தப் புத்தகத்தைப் படித்தால் அப்படிப்பட்ட கோச்சிங் எல்லாம் தேவையில்லை.

 

ஒரு சின்ன நிகழ்வு மூலமாக நான் ஒன்றை நடத்திக் காட்ட விரும்புகிறேன் என்று இரண்டு மாணவிகளை அழைத்தார். அந்த மாணவிகளிடம் ஒருவரை கேமரா என்றும் இன்னொருவரை கேமராவின் மூலம் படம் எடுப்பவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார். பின்பு கேமரா மூலம் படம் எடுக்கச் சொன்னார் .மூன்று போட்டோ எடுத்தார்கள். எதை நோக்கி எடுத்தீர்கள் ஏன் எடுக்கச் சொன்னீர்கள் என்று என்னிடம் கேள்வி கேட்டீர்களாஎன்ற ஒரு நிகழ்வை நடத்திவிட்டு அதைப் பற்றி அவைக்கு விளக்கினார்.

 

எந்தச் செயலாக இருந்தாலும் ஒரு நோக்கத்தோடு செய்யும்போதுதான் அந்தச் செயலை மிக நன்றாகச் செய்ய முடியும். நான் படம் எடுக்கச் சொன்னேன். ஆனால் எதற்காக என்ற நோக்கம் அவர்களுக்குத் தெரியவில்லை. அதனால் அவர்களால் சரியாக எடுக்க முடியவில்லை.. அதைப்போல எந்த நோக்கம் என்பது முக்கியம் ஒரு நோக்கத்தோடு செய்யும்போதுதான் எந்தச் செயலையும் மிக நன்றாகச் செய்ய முடியும்.

 

சரி. இன்னொரு எடுத்துக்காட்டு .இந்தப் பெரியார் மையத்திற்கு முன்னால் ஒரு மூன்று, நான்கு சிவப்பு வண்ணக் கார்கள் நிற்கிறது என்று வைத்துக் கொள்வோம் .நான் உங்களிடம் எத்தனை சிவப்பு கார்கள் பார்த்தீர்கள் என்று கேட்டால் மூன்றோ

நான்கோ பார்த்தேன் என்று சொல்வீர்கள். அதையே ஒரு சிவப்புக் காரைப் பார்ப்பதற்கு  100 ரூபாய் பரிசு என்ற அறிவித்துவிட்டு நீங்கள் எத்தனை காரைப் பார்த்தீர்கள் என்று கேட்டால் உற்சாகமாக எண்ணிச் சொல்வோம். இன்னும் கேட்டால் இரண்டு மூன்று சிவப்பு கார்களை நாமே கூட வரச் சொல்லி அதையும் சேர்த்து எண்ணி சொல்வோம். ஒரு செயலைச் செய்வதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் ஒரு செயலைச் செய்வதினால் ஒரு பலன் எனக்கோ என் குடும்பத்திற்கோ இருக்க வேண்டும் அப்போதுதான் நான் அடுத்த இடத்தை நோக்கி நடப்பேன். ஒரு வியம் நடக்க உபயோகம் இருக்க வேண்டும் அந்த நகர்வு எதுவாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது தான் இந்த நூலில் உள்ள கருத்து.

 

இப்போது எல்லோரும் கேட்பது இதுதான். என் பையன் படிக்கிறான்,ஆனால் ஏன் தொடர்ந்து படிக்க மாட்டேங்கிறான்? ஒரு நாள் படிக்கிறான், மறுநாள் படிக்க மாட்டேங்கிறான். நமக்குக் கூடத் தோணும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்போம். இரண்டு நாள்  நடப்போம் அடுத்த நாள் எழுந்து  நடக்க மனசு வராது. உணவுக் கட்டுப்பாட்டு இரண்டு நாள் கடைப்பிடிப்போம். மூன்றாவது நாள் மாற்றி நிறைய சாப்பிட்டு விடுவோம். இவை எல்லாம் ஏன் நடக்கிறது?. தொடர்ந்து ஒரு செயலைச் செய்யக்கூடிய ஒரு ஊக்கம் என்பது எதில் இருக்கிறது? நம்முடைய பர்போஸில் இருக்கிறது. அதாவது  நம்முடைய நோக்கம். நாம் எதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நம்மை நகர்த்திக் கொண்டு போய்க் கொண்டு இருக்கிறது அந்த பர்போஸ்தான், அந்த நோக்கத்தைத் தான் தந்தை பெரியார் அவர்கள் 1956லயே இந்தப் புத்தகத்தின் மூலமாகத் தெரிவித்து இருக்கிறார்.

 

அது மட்டுமல்லாது அந்த நோக்கத்தை எப்படி நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பர்பஸ் ஒன்று இல்லாவிட்டால் அந்த இடத்தில் மாறுபட்ட விஷயங்கள் நடக்கும் என்பதை இந்தப் பிள்ளைகள் மூலமாக நாம் அறிந்தோம். நாம் வெறுமனே சொற்களால் சொல்லாது, இரண்டு பேரை அழைத்து அவர்களை ஒரு நிகழ்வை நிகழ்த்தச் சொல்லி அதன் மூலம் விளக்கும் போது எளிதாகப் புரிகிறது. அந்த அந்த இடத்தில் செயல் முழுமை அடையாது. அதனால் அடுத்த முறை நாம் செயல்பட மாட்டோம் என்பது தெரிகிறது. இதைத் தந்தை பெரியார் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார் இதனை நான் எடுத்துக்காட்டோடு சொல்கிறேன்.

 

 நான் ஒரு மாணவனைக் கூப்பிடுகிறேன். நான் ஒரு வியாபாரி. ஒரு பழத்தைச் சாப்பிட்டால் நீ நன்றாகப் படிப்பாய் ,சாப்பிடு  என்று அவனிடம் கொடுக்கிறேன். அவன் மகிழ்ச்சியாக வாங்கிச் சாப்பிட்டு விட்டுப் போய் விடுவான். அடுத்து அவனது அண்ணனைக் கூப்பிட்டு இந்தப் பழத்தின் சாற்றைக் குடித்தால் மிகப்பெரிய ஆளாக உங்கள் தம்பி  ஆகிவிடலாம் என்று சொன்னால் அவரும் காசு கொடுத்து இந்தப் பழச்சாற்றை வாங்கி தம்பியிடம் கொடுத்து குடிக்கச் சொல்லிவிட்டுப் போய்விடுவார். அடுத்து அவது பெற்றோர்களைக் கூப்பிட்டு இந்தப் பழம் காயாக இருக்கும்போது சாப்பிட்டால் உங்கள் பிள்ளைகள் நன்றாக வருவார்கள் .நீங்களும் நன்றாக இருப்பீர்கள் என்று சொன்னவுடன் அவர்களும் வாங்கிக் கொடுத்துச் சாப்பிட்டு விடுவார்கள் .யாருமே கேள்வி கேட்கவில்லை. பழம் சாப்பிட்டால் எப்படிப் படிப்பு வரும்? பழச்சாறு சாப்பிட்டால் எப்படிப்  பெரிய ஆளாகி விடுவார்?  காயைச் சாப்பிட்டால் என் பிள்ளைகள் எப்படி நன்றாக வருவார்கள்? என்றெல்லாம் யாரும்  கேள்வி கேட்கவில்லை.ஆனால் மாணவன்  நன்றாகப் படிக்கவில்லை. வியாபாரியை இவர்கள் மூன்று பேரும் ஒன்றாகப் பார்க்கும் பொழுது அந்த வியாபாரி என்ன சொல்கிறார் என்றால் டீச்சர் எவ்வளவு மார்க் போடுகிறார்களோ அதைப் பொறுத்து தான் இந்த பையன் படிப்பான் என்று சொல்கிறார்.

 

அப்போ பழத்தை விற்பனை செய்தது, பலச்சாற்றை விற்பனை செய்தது, காய்கறி விற்பனை செய்தது எல்லாமே ஏமாற்றுத்தானே. இது வந்து ஒருத்தர் சொல்கிறார் இன்னொருத்தர் ஏற்றுக் கொள்கிறார் என்று சாதாரணமாக கடந்து போக முடியாது. இந்த நூலில் எப்படிப்பட்ட அயோக்கியத்தனம் சமூகத்தில் நடக்கிறது என்பதைப் பெரியார் சொல்லி இருக்கிறார் அவர் சொல்லில் சொல்வதென்றால் இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதை இந்த நூலில் 1956-ல் எடுத்துக்காட்டாக கொடுத்திருக்கிறார்.தந்தை பெரியார் அவர்கள் எந்த விசயத்தையும் சாதாரணமாகச் சொல்லவில்லை.ஒரு மனிதர் பிறக்கிறார்,வளர்கிறார்,கிழவன் ஆகிறார்.அவருக்கு என்றைக்கு சுவாசம் போய்விடுகிறதோ அன்றைக்கு நாம் அவரை செத்துப்போய்விட்டார் என்று சொல்கிறோம்.’சத்து போவதுதான் செத்துப்போவது ‘ என்று பெரியார் சொல்கின்றார்.செத்துப்போன பின்பு நம்மை எரிக்கவோ,புதைக்கவோ செய்கிறார்கள்.பின்பு ஆத்மா மேலே போகிறது.பின்பு மறுபிறப்புக்கு அனுப்பிவிடுகிறார்கள்.மறுபிறப்பில் முதல் வகுப்புன்னா அது பார்ப்பனர்.2-வது வகுப்புன்னா சத்திரியர்.சரி போன ஆத்மா மறு பிறப்பா வந்திருச்சே,அப்போ செத்தவரின் மகன் கொடுக்கும் திவசம் யாருக்குப் போகும் என்று தந்தை பெரியார் கேட்கிறார்.இப்படி நடக்கிற ஒரு விசயத்தை வைத்து பிராக்டிக்கலா ஒரு கேள்வி கேட்கிற தன்மை பெரியாரிடம்தான் இருக்கிறது

 

 

 

மனிதனுடைய சிறப்பு என்னவென்றால் தந்தை பெரியார் சொல்கின்றார் இந்த  நூலின் அணிந்துரையை அய்யா நமது ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியிருக்கின்றார்.  அதில் பல விளக்கங்களை அய்யா ஆசிரியர் சொல்லி இருக்கிறார்கள்.மிக ஈர்ப்பாக இருக்கிறது. .மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு உள்ள சிறப்பு இயல்புகள் என்று பட்டியலிட்டுவிட்டு ஆனால் விலங்குகளுக்கு உரிய சிறப்பு இயல்பு 2000 ஆண்டுகளுக்கு முன்னால் என்ன இருந்ததோ அதுதான் இன்றைக்கும் இருக்கிறது. மாறவில்லை. ஆனால் மனிதர்களைப் பொறுத்த அளவில் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். மாட்டுவண்டியில் போனார்கள் அன்றைக்கு. இன்றைக்கு விமானத்தில் போகின்றோம் .அன்று விறகு அடுப்பு இன்றைக்கு கேஸ் அடுப்பு. தந்திகளை பயன்படுத்தினோம் இன்றைக்கு வாட்சப்பை செய்தி அனுப்பப் பயன்படுத்துகிறோம். நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம். ஏனென்றால் பகுத்தறிவு என்பது மனிதர்களுக்கு இருக்கிறது.

 

நாம் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறோம். இந்த மாறுதல் யாருடைய பகுத்தறிவால் என்றால் நிச்சயமாக நம் நாட்டுப் பகுத்தறிவால் அல்ல.  நாம் பயன்படுத்தும் எல்லாக் கண்டுபிடிப்புகளும் வெளிநாட்டில் இருந்து வந்தது. அப்போ மேல்நாட்டிற்கும் நமது நாட்டிற்கும் என்ன வேறுபாடு என்று பெரியார் பார்க்கின்றார். நம்மால் எல்லாம் இந்த பேர்டு வியூ பார்க்கவே முடியவில்லை. ஆனால் பெரியார் பார்த்து இருக்கின்றார்.சொல்லியிருக்கின்றார். ஏன் நடக்கவில்லை என்றால் இங்குதான் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.வெளிநாட்டில்  பார்ப்பனர்கள் இல்லை. நமது நாட்டில் அறிவு வளர்ச்சி இன்மைக்கு காரணம் பார்ப்பனர்கள் தான் என்பதைப் பெரியார் சுட்டிக் காட்டுகிறார்.

 

பெரியார் சொல்கிறார்,” கதைகள் புராணங்கள் இவைகள் எல்லாம் சொல்லிச் சொல்லி அதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது . மதங்கள் என்றால் கேள்வி கேட்கக்கூடாது. நம்பிக்கை என்றால் கேள்வி கேட்கக்கூடாது. கடவுள் சொன்னதால் சொல்வதை ப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் பார்ப்பனர்கள் அவர்களுடைய நல்வாழ்க்கைக்காச் சொல்லி மற்றவர்களை தாழ்த்தி கீழ இறக்கி வைத்தார்கள். யாரையாவது ஒருத்தர், நீ எல்லாம் என்ன ஆளு  என்று பேசப் பேச நான் பெரிய ஆள் இல்லை என்று எழுந்திருக்கவே மாட்டார்கள். அது  ஒரு உளவியல்.பார்ப்பனர்கள் அதைக்காலம் காலமாக இந்த நாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

பெரியார் ஒரு போலீஸ்காரர் கதை சொல்கிறார். ஓர் இடத்தில் இந்த இடத்தில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்று போர்டு போட்டிருக்கிறார்கள்.  அதைக் கண்காணிப்பதற்காக ஒரு போலீஸ்காரரைப் போட்டு இருக்கிறார்கள். ஒருவன் சிறுநீர் கழிப்பதற்காக அந்த இடத்தில் ஒதுங்குகிறான். கண்காணிப்பு செய்கிற போலீஸ்காரர் என்ன செய்ய வேண்டும் டேய், அந்தப் பக்கம் போகாத, அந்த இடத்தில் இருக்காதே என்று சொல்லவேண்டும் அல்லவா?. அப்படிச் சொல்லாமல் அந்தப் போலீஸ்காரர் அந்த ஆள் உட்கார்ந்து போகும் வரை பார்த்துவிட்டு, எழுந்திருத்தவுடன் நீ இந்த இடத்தில் சிறுநீர் கழித்து விட்டாய் ,பைனைக் கட்டு ,தண்டனையை அனுபவி  என்று சொல்வதைப் போல கடவுள் ஒருவன் தப்பு செய்வதற்கு முன்னாடியே நீ தப்பு செய்யாதே என்று தடுப்பதற்குப் பதிலாக, தப்பு செய்த பிறகு தண்டனை வாங்கிக் கொள், பிரார்த்தனை செய், பிராயச்சித்தம் செய் என்று சொல்வதைப் போல் இருக்கிறது என்று சொல்கிறார். இதைப் படிச்சிட்டு ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் தனியா உக்காந்து சிரிச்சுக்கிட்டு இருந்தேன். இந்த மாதிரியான ஒப்பீடு, இந்தக் கடவுள் போலீஸ்காரர் ஒப்பீடு ரொம்ப அருமையாக இருந்தது.

 

இதைவிட ஒரு பெரிய ஏமாற்று பாவமன்னிப்பு. நான் ஒரு பாவமன்னிப்பு கேட்டு விட்டால், அடுத்த தப்புக்கு ரெடியாகி விடுவேன். இதற்கு ஒரு கதையைச் சொல்லுகின்றார். ஒரு பாதிரியாரிடம் ஒரு திருடன் வந்து பாவமன்னிப்பு சீட்டுக்காகக் காசு கொடுத்துக் கேட்கிறார். பாதிரியார் கொடுக்கிறார். அந்தத் திருடன் கேட்கிறார்.அய்யா இது வந்து செய்த பாவத்திற்காக, செய்யப் போற பாவத்துக்கும் சேர்த்து பாவ மன்னிப்புச் சீட்டு வாங்கலாமா என்று கேட்கும் பொழுது பாதிரியார் பணத்திற்கு ஆசைப்பட்டு ஆஹா வாங்கிடலாம் என்று சொல்கிறார்.  நான் செய்யப் போற தப்புக்கு சேர்த்து பாவமன்னிப்புச் சீட்டுக் கொடுங்கள் என்று பணம் கொடுத்து திருடன் வாங்கிகொண்டுப் போகிறான். அன்றைக்கு இரவு அந்தப் பாதிரியாரின் வீட்டில் அந்தத் திருடன்  திருட வருகிறான். பாதிரியார் ஏன் என் வீட்டில் திருடுகிறாய் என்று  சொல்லும் பொழுது, நான்தான் பாவமன்னிப்புக்கு ஏற்கனவே டிக்கெட் வாங்கி விட்டேனே அதனால் பேசாமல் இருங்கள் என்று சொல்லி வீட்டில் இருக்க பொருளை எல்லாம் திருடி கொண்டு போகிறான். இந்தப் பாவமன்னிப்பு என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதைத் தந்தை பெரியார் இந்தக் கதையின் மூலம் விளக்குகிறார்.

 

அய்யா சொல்கிறார் .இந்த மாதிரி பகுத்தறிவு பிரச்சாரம் செய்தபோது முன்பு சாணி அடித்தார்கள்.அக்கிரகாரத்தில் போய்ப் பேசியபோது,’இராமசாமி சரியாகத்தானே பேசுகிறார்,இராமாயணப் புத்தகத்தில் இருப்பதைத் தானே பேசுகிறார் .” என்று இப்போது ஆதரிக்கிறார்கள்.ஆனால் யார் இன்னும் என்னை எதிர்க்கிறார்கள் என்றால் பார்ப்பனப் புரோகிதத்தால் பொறுக்கித் தின்பவர்கள்தான் என்னை எதிர்க்கிறார்கள் என்று 1956-ல் சொல்கின்றார்.அந்த பொறுக்கித் திங்கிற விசயம்,இப்போதும் 2025-லும் நடக்கிறது.நாம் இந்த மாதிரியான பிரச்சாரம் செய்தாலே இந்தப் பொறுக்கித் திங்கிற விசயம் மாறும்.

 

அதே மாதிரி இந்த திவசம் கொடுக்கிற ஆட்களைப் பற்றி ஒரு காட்சியைத் தந்தை பெரியார் காட்டுகிறார்.பார்ப்பனர் கிட்ட  ஒரு மடையன் வந்து (தந்தை பெரியார் மடையன் என்ற சொல்லைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்.நான் மாற்ற விரும்பவில்லை.அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவ்வளவு சரியானது) திதி கொடுக்கிறான்.தந்தை பெரியார் பக்கத்தில் இருக்கிற தண்ணீரை வாரி வாரி இறைக்கிறார்.ஏன் என்று கேட்கும்போது ஈரோட்டில் இருக்கும் என் பயிருக்கு இங்கிருந்து தண்ணீர் பாய்ச்சுகிறேன் என்று சொல்கின்றார்.உடனே அவர் அது எப்படி போகும் என்று கேட்கநீ திதி கொடுக்கும் பொருள் மேலோகத்திற்குப் போகும்போது நான் தண்ணீரை ஊற்றினால் அது ஈரோட்டிற்குப் போகாதா என்று கேட்கிறார்.இதைப் பல திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.ஆனால் எப்படிப் பட்ட,சிந்தனையைத் தூண்டும் கேள்வி இது.

  

தந்தை பெரியார் என்ன சொல்கிறார் என்றால் ஒரு பானை செய்கிறவர் ,ஒரு பானையைத் தன் வாழ்க்கைகாகச் செய்கிறார்ஆனால் அது மற்றவர்களுக்கு பயனாக இருக்கிறது.ஒரு விவசாயி தன் வாழ்க்கைகாகத்தான் விவசாயம் செய்கின்றார்.ஆனால் அவர் விளைவிக்கும் பொருள் மற்றவர்களுக்குப் பயன்படுகிறது.ஆனால் பார்ப்பனர்கள் தங்கள் வாழ்க்கைகாகச் செய்வது யாருக்குப் பயனாக இருக்கிறது என்று கேட்கிறார்.

 

நான் இங்கு வந்து பேசுகிறேன் என்றால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதுநான் ஞானியாக இங்கு வரவில்லை.ஏதோ ஒன்று கிடைப்பதால்தான் நாம் தொடர்ந்து செய்கின்றோம்.எதோ ஒன்று கிடைக்கிறது அல்லவா,அது உன்னை ஊக்கப்படுத்துவதுபோல் வைத்துக்கொள் என்று தந்தை பெரியார் சொல்கின்றார்.சுய நலமாக நாம் செய்தாலும் அதனால் கிடைக்கும் புகழால்தான் எல்லோரும் செய்கின்றோம்.புகழுக்காகத்தான் உலகமே சுழன்று கொண்டிருக்கிறது.ஆனால் ஒரு தனிமனிதர் சுய நலமில்லாமல் அடுத்தவர்களுக்காத்த் தொண்டாற்றுவதற்கு ஓடும்போது,அதனால் ஒரு புகழ் கிடைக்கிறது அல்லவா?. அந்த நோக்கத்திற்காக ஓடும்போது உற்சாகம் கிடைக்கிறது என்று பெரியார் சொல்கின்றார்.

 

அப்படிப்பார்க்கும்போது நாம் எல்லோரும் பெருமைப்படவேண்டும்.பெரியார் தொண்டர்கள் அனைவரும் பெருமைப்படவேண்டும். நமது வாழ்க்கைக்கு ஒரு  நோக்கம் இருக்கிறதுஎன்ன வகையான நோக்கம் என்றால்ஒரு கதை.ஒரு கழுதை இருக்கிறது.அதற்கு நிறைய கிரீடம் வைத்திருக்கிறார்கள்.ஒரு அரச கிரீடத்தை வைத்து ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள்.எல்லோரும் அந்தக் கழுதையைப் புகழ்கிறார்கள்.அந்தக் கழுதை என்ன நினைக்கிறது என்றால் ,நமக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் என்று.ஊர்வலம் முடிந்தபிறகு அந்தக் கிரீடத்தை எடுத்து விடுகிறார்க்ள்.அந்தக் கழுதை ஊருக்குள் வருகிறது.ஒரு ஆளும் மதிக்கவில்லை.அப்படித்தான் நமது வாழ்க்கையும்.


எனக்கு அம்மா என்று ஒரு கிரீடம்,மனைவி என்று ஒரு கிரீடம்.மகள் என்று ஒரு கிரீடம். உளவியலாளர் என்னும் ஒரு கிரிடமும் இருக்கிறது.இந்தக் கிரீடம் எல்லாம் கழட்டியபிறகு நான் யார்?ஒவ்வொரு கிரீடமும் ஒரு கட்டத்தில் போய்விடும்.

 

ஒவ்வொரு கிரீடமாக கழன்றபிறகு நான் யார்?எல்லாக் கிரீடமும் கழட்டியபிறகு நான் யார்?மதுரையில்  என் கொள்கை உறவுகள் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த மேடை சிந்தனை மேடை.நான் அதன் தலைவர்.என் வாழ்க்கை முழுவதும் இந்தச் சிந்தனை மேடை இருக்கும்.என்னை உருட்டிக் கொண்டு போகும்.என்னை நகர்த்திக்கொண்டு போகும்நான் படுத்து இருந்தால் கூட வேலை செய்யத்தூண்டும்.உங்கள் கிரீடத்தை எல்லாம் தாண்டி இந்த சமூகத்திற்கு நீங்கள் செய்யும் வேலை,அதனால் கிடைக்கும் புகழ்.உங்களுக்குப் புகழ் வேண்டும் என்றாலும் பாராட்டு வேண்டும் என்றாலும் மனிதர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.இதற்காக நீங்கள் ஓடினால் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக ஓடமுடியும் என்று பெரியார் சொல்கின்றார்.

 

இல்லையென்றால் எனது பிள்ளைக்கு என்னவெல்லாம் நான் செய்தேன்,இன்று அது கண்டுக்கல,என் மனைவிக்கு என்னவெல்லாம் செய்தேன் என்று மனத்தாங்கல் வரும்ஆனால் இந்தத் தொண்டு செய்வதில் மனத்தாங்கல் வருவதற்கு வழியே இல்லை.இதைத்தான் தந்தை பெரியார் இந்த நூலில் சொல்லி முடித்திருக்கிறார்.தன்னலம் இல்லாது பொதுத்தொண்டு செய்வதுதான் மனித வாழ்வின் பெருமை.அந்தப் பெருமைதான் நம்மை எல்லாம் நகர்த்திக்கொண்டு போவது.நீங்கள் இங்கு வந்திருப்பது,இரண்டு மணி  நேரம் இருப்பது எல்லாம் வீண் இல்லைஇதுதான் உங்களுக்கான,எனக்கான சுவாசம்.இந்த சுவாசம்தான் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.உயிரோட்டமாக வைத்திருக்கிறது..இந்த நூலை,மனித இனத்திற்கே ஒரு மோட்டிவேசனாக,ஊக்கமாக  இருக்கக்கூடிய ஒரு நூலை அறிமுகப்படுத்த வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. “என்று உரையாற்றினார்.

 

(02.02.2025,மதுரையில் பேசியது)

தொகுப்பு : முனைவர் வா.நேரு.

நன்றிள் விடுதலை 15.02.2025







 

No comments: