அண்மையில் படித்த புத்தகம் : பர்தா ( நாவல்)
நூல் ஆசிரியர் : மாஜிதா
முதல் பதிப்பு : ஜனவரி 2023
பதிப்பகம் : எதிர் வெளியீடு,பொள்ளாச்சி.,
9894875084,9942511302
மொத்த பக்கங்கள் : 136 ,விலை ரூ 200
கலைஞர் நூற்றாண்டு நூலக எண்:
894.81135493 MAJ ;2
இந்த நாவலை நாவல் ஆசிரியர் ‘ஒவ்வொரு
உரையாடலிலும் என் சிந்தனையின் மையத்தை அசைத்துச்சென்ற விளிம்பின் குரல் ‘ஹெச்.ஜி.ரசூலுக்காக’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.ஹெச்.ஜி.ரசூல் ஒரு கலகக்காரர்.அந்தக் கலகக்காரருக்கு இந்த நூல்
என நாவலாசிரியர் குறிப்பிட்டிருப்பது, கதையின்
உள்ளடக்கத்திற்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது.ஊர் விலக்கம்
செய்யப்பட்ட எழுத்தாளர் அவர்.
’ ஆயிரம் நபிமார்கள் இருந்தும்
ஏனில்லை வாப்பா
ஒரு
பெண் நபி?’
என்னும் கேள்வியைக் கவிதையின்
வாயிலாகக் கேட்டவர். இலங்கையிலிருந்து சென்று இலண்டனில் வசிக்கும் நாவல்
ஆசிரியர் மாஜிதா, தமிழ்நாட்டின் தென்கோடியில் இருந்து மறைந்த
ஹெச்.ஜி.ரசூலுக்கு இந்த நூல் என்று
குறிப்பிட்டிருந்ததே இந்த நூலை எடுத்துப் படிப்பதற்கு எனக்குத் தூண்டுகோலாக
இருந்தது.
கரன் கார்க்கி அவர்கள்
தனது ‘ஒற்றைப்பல்
‘ நாவலில் ‘கடவுளின் வழியாக
வாழ்க்கையைப் பார்ப்பது’ என்பதற்கும் ‘வாழ்க்கையின்
வழியாகக கடவுளைப் பார்ப்பது ‘என்பதற்குமான வேறுபாட்டைத் தனது
கதாபாத்திரங்களின் வழியாக நுட்பமாக விளக்கி இருப்பார். அதுபோல
இந்த ‘பர்தா ‘ நாவலின் ஆசிரியர் ‘பர்தா’வை மதவாதிகளாக இருக்கும் ஆண்கள்
பார்ப்பதற்கும் ,கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அதனைப்
பெண்கள் பார்ப்பதற்குமான வேறுபாட்டை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் ஒரு
புனைவாகக் கொடுத்துள்ளார்.மிக நல்ல முயற்சி. துணிவான முயற்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
மதத்தின் அதிகார மையங்கள் அவ்வளவு வலிமையானவை. சாதியைப் போலவே கொடூரமானவை. மதத்தின் அதிகாரமையம் எப்போதும் பெண்ணைக் கட்டுப்படுத்தும் குரலைக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறது.ஒரு
50 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் பார்த்த இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெண்களுக்கும், இன்றைக்கு நாம் பார்க்கும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெண்களின் உடைகளுக்குமான வேறுபாட்டை,அதன் காரணத்தை இந்த நாவல் தெளிவாக விளக்குகிறது.
136 பக்கங்கள்.22 அத்தியாயங்கள் உள்ள நாவல்.நாவலின் முதல் அத்தியாயம் ‘சுரையா’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நாவலுக்கே ‘சுரையா ‘ என்னும் பெயரைக் கொடுக்கலாம்.ஏனெனில் இந்த நாவலே சுரையா என்னும் ஒரு பெண் கதாபாத்திரத்தின் கதைதான்.ஆனால் சுரையா சிறுமியாக இருக்கும்போது ஆரம்பித்து ,முடிவில் ஓர் இளம்பெண்ணின் தாயாக இருக்கும் காலம்வரை ‘பர்தா ‘வின் தாக்கம்,உளவியல்,ஆண்களின் மனவோட்டம் எனத் தொடர்ந்து பேசுவதால் சுரையாவும் பர்தாவும் எனப் பெயர் வைத்திந்தாலும் பொருத்தமாக இருக்கும் எனினும் ‘பர்தா
‘ என்னும் தலைப்பு பொருத்தமானதாகவே இருக்கிறது.ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும் தலைப்பாக இருக்கிறது.
இலங்கையில் இருக்கும் தனது சொந்த ஊரான மாவடியில் ,வாய்க்கால் நீர் விளையாட்டு விளையாடும் சிறுமி சுரைக்கா பற்றிய அறிமுகம்,அவளது தந்தை ஹயாத்து லெப்பை,
சுரைக்கா விரும்பும் ‘டயனா கட்
‘ ,அவளது தாய் பீவி,
வீட்டிற்கு யாரும் விருந்தினர்கள் வந்தால் தாவணி அணியவேண்டும் என்னும் கட்டுப்பாடு என்று முதல் அத்தியாயத்தில் வேகமெடுக்கும் இந்த நாவல், முழுவதும் அருமையான விவரிப்புகளாலும் உண்மைத்தன்மை வாய்ந்த நிகழ்வுகளின் கதைகளாலும் உயிரோட்டமாய் நகர்கிறது.
ஈரானுக்கும் அமெரிக்காவும் நடக்கும் போரில் நாமெல்லாம் ஈரானின் பக்கம் இருக்கிறோம்.ஆனால் இஸ்லாமியப் பழமைவாதத்தை உலகமெல்லாம் பரப்புவதில்,பெண்களைக் கட்டுபடுத்துவதில் ஈரானின் பழமைவாதப்பங்கு குறித்து இந்த நாவல் பேசுகிறது.சில ஆண்டுகளாக இஸ்லாமியப் பெண்களுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கும் ஹபாயா என்னும் உடலை முழுவதும் மறைக்கும் கருப்பு உடைக்கு அடிப்படை ஈரான் என்று இந்த நாவல் குறிப்பிடுகிறது. இதனால் ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாக ஏற்படும் வசதியின்மையை(அசெளகரியத்தை) இந்த நாவல் பேசுகிறது.
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில்,பர்தா வேண்டாம் எனச்சொல்லும் சுரைக்கா-விற்கு அவளது குடும்பம் கொடுக்கும் தண்டனை கொச்சிக்காய் தண்டனை என்னும் அத்தியாயம் குடும்பத்தின் வன்முறையை அப்பட்டமாகக் காட்டுகிறது.ஆமினா டீச்சரின் எதிர்க்குரல் ஹயாத்து லெப்பைக்குக் கொடுக்கும் எரிச்சல்,அவரது குடும்பத்து பெண்களின் மீதான் வன்முறையாக விழுகிறது.பல்கலைக்கழகம் படிப்புவரை பர்தா கட்டாயப்படுத்தப்பட்டதால் ,பர்தாவை அணியும் சுரைக்கா, பின்பு அதனை விட்டுவிடுகிறாள். லண்டன் சென்றபிறகு அவளுக்கு அதனை வற்புறுத்த யாருமில்லை என்பதால்,பர்தாவைப் பற்றிய சிந்தனை இல்லை.
ஆனால் பர்ஹானா என்னும் பெண்மணி விரும்பி பர்தாவை லண்டனில் அணிந்து கொண்டு வாழ்கிறாள்.அவளது கருத்து, நமக்கு இது தேவை என்பதாக இருக்கிறது.அவளிடம் ஒரு வெள்ளைக்காரி வெறுப்பை உமிழ ,பர்ஹானா உடுத்தியிருக்கும் பர்தாவும் ஹபாயாவும் காரணம் என்று உணர்கிறபோது ,பாதுகாப்பின் அடிப்படையிலும் பர்தாவைப் பற்றி யோசிப்பதாக வருகிறது.
நகரத்திற்கும் கிராமத்திற்குமான வேறுபாடும் சுட்டப்படுகிறது. நகரத்தில் பர்தா இல்லாமல் இருப்பது சுலபம்.ஆனால் கிராமத்தில் அப்படி இருப்பது மிகக்கடினம் என்று ஓரிடத்தில் சுரைக்கா பேசுவார்.சாதியென்றாலும் ,மதம் என்றாலும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்று மிகத் தீவிரமாகக் கண்காணிக்கும் இடங்களாகவும்,கடைப்பிடிக்கவில்லை என்றால் தண்டனை தரும் இடங்களாகவும் கிராமங்கள்தான் இன்றைக்கும் இருக்கின்றன,அது தமிழ்நாடாக இருந்தாலும், இலங்கையாக இருந்தாலும்.
சுரைக்காவின் தாய்,
இலண்டனிலிருந்து வரும் சுரைக்காவை பர்தாவை அணிந்துகொள்ளச்சொல்லும்போது, சுள்ளெனச் சொல்லி சுரைக்கா மறுக்கிறாள். சுரைக்காவின் தாய் அமைதியாகிறாள். ஆனால் தனது மகளிடம் செல்லாத தனது கருத்தை , மகளின் மகளான,தனது பேத்தி றாபியாவிடம் மறைமுகமாகத் திணிக்கிறாள்.அதனை நம்பும் பேத்தி றாவியா பர்தாவை விரும்பி ஏற்றுக்கொள்வதாகக் கதை முடிகிறது.இந்த இடத்தில் நாவல் ஆசிரியர் ஒரு சமரசம் செய்திருப்பதுபோல் தோன்றுகிறது.
பேசக்கூடாது என்று சொல்லப்படும் ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு மாஜிதா, தனது முதல் நாவலையே மிகச்சிறப்பாகப் படைத்துள்ளார்.” இஸ்லாமியப் பெண்ணுக்கான சீருடையாகப் பர்தாவை அல் குர் ஆன் பரிந்துரைக்கவில்லை எங்கிறது ஒரு தரப்பு..இஸ்லாமியப் பெண் மூடப்பட்டவளாக இருப்பதே மார்க்கம் காட்டும் நெறி என்கிறது இன்னொரு தரப்பு.இந்த இரண்டு கருத்து முனைகளுக்கு இடையில் ஊசலாடும் பெண்களின் நிலையே நாவலின் கதையாடல்.பீவி,அவரது புதல்வி சுரையா,சுரையாவின் மகள் றாபியா ஆகிய மூன்று முதன்மைப் பாத்திரங்களும் பர்தாவின் உள்ளடக்கமாக ஆகிறார்கள். இல்லை. ஆக்கப்படுகிறார்கள். மத நம்பிக்கையாகவும், அரசியல் நிர்ப்பந்தமாகவும் அதிகார அடக்கு முறையாகவும் பர்தா உருமாற்றப்படுகிறது ஏனெனில் அது ஓர் ஆடை மட்டுமல்ல.இந்த உண்மையைச் சுட்டிக்காட்டும் நாவலாசிரியர் மதத்துக்கும்,அரசியலுக்கும் ஆண் மைய அதிகாரத்துக்கும் எதிரான எதிர்ப்புக் கொடியாகப் பர்தாவை உயர்த்துகிறார்.
கூரான வாளின் மீது நடக்கும் சாகசத்தை முதல் நாவலிலேயே அச்சமின்றி மேற்கொண்டிருக்கிறார் பாத்திமா மாஜிதா “ என்னும் சுகுமாரன் அவர்களின் கருத்து நாவலின் பின் அட்டையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. உண்மைதான். பெண்ணியம்,பெரியாரியம் பேசக்கூடிய தோழர்கள் மட்டுமல்ல அனைவருமே படிக்கவேண்டிய நாவல் இது.
பரப்பவேண்டிய நாவல் இது.
தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை ஒரு பெண் கூறுவதாக இந்த நாவலாசிரியர் குறிப்பிட்டு இந்த நாவலைப் படைத்திருக்கிறார். எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிராகக் கட்டிவைத்திருக்கும் கோட்டைகள் எல்லாம் பெண்களாலேயே இடிக்கப்படும் என்னும் நம்பிக்கையத் தரும் நாவல் இந்த நாவல் .முதல் நாவலையே பேசப்படும் நாவலாக, படிப்பவர்களை யோசிக்க வைக்கும் நாவலாகப் படைத்திருக்கும் எழுத்தாளர் மாஜீதா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்….
முனைவர் வா.நேரு,@
மதுரை.30.08.2026

