Thursday 24 November 2022

ஆசிரியர்கள் இன்னும் ஒருதாய்

 அறிவு என்னவோ

இது இயற்கைதானே என்கிறது...

ஆனால் மனது என்னவோ

முழுக்க அழுகையால் நிரம்புகிறது...


எங்கள் கிராமத்து பள்ளிக்கு

தலைமை ஆசிரியராகத்தான்

வந்தார் அவர்

40 ஆண்டுகளாய்

எனது பேச்சில்

எனது எழுத்தில்

தொடர்ந்து வந்தார்..


அவரோடு ஏற்பட்ட தொடர்பு

இறுதி மூச்சுவரை தொடர்ந்தது...

சுவாசிப்பதை அவர் நிறுத்தியது

எனக்கு நெஞ்சை

அடைப்பது போல் இருக்கிறது...


மாமனிதர்கள் சிலர்

தங்கள் செயல்களால்

மனதுக்குள்

உட்கார்ந்து விடுகிறார்கள்..

உயரப் பறக்கும் காலெமெல்லாம்

ஏற்றி விட்ட ஏணிகள்

மனதில் நிறைந்து விடுகிறார்கள்...


பேருந்து வசதியில்லாக் காலத்தில்

பள்ளியிலேயே இருந்துகொண்டு

இருக்கும் நேரமெல்லாம்

மாணவர்களுக்கு இலவசமாய்

போதித்த மனது 

எவ்வளவு பெரிய மனது ?


எத்தனைபேரை உயர்த்திய

கரங்கள் இந்த ஆசிரியரின் கரங்கள்

எத்தனை ஊரின் பள்ளிகளை

செழுமைப்படுத்திய

சிந்தனை இந்த ஆசிரியரின் சிந்தனை...


எங்கும் பயமில்லை...

எவர் கேள்விக்கும் பதிலுண்டு...

நேர்மை என்ற ஒன்றால்மட்டுமே

நிமிர்ந்து நின்ற

எங்கள் தலைமை ஆசிரியரே...

வீரி(செட்டி) சாரே..

ஆசிரியர்கள் இன்னும் ஒருதாய்

என்பதற்கு எடுத்துக்காட்டாய்

வாழ்ந்தவரே...

மறைந்து விட்டீர்கள் என்றாலும்

நாங்கள் வாழும் காலெமெல்லாம்

எங்கள் மனதில் வாழ்வீர்கள்!


                                                         வா.நேரு

                                                           24.11.2022




திரு.வீ.வீரி(செட்டி) சார் அவர்கள் தான் கற்பிப்பதை நிறுத்திக்கொண்டார்.

 எனக்கு தலைமை ஆசிரியராக இருந்த திரு.வீ.வீரி(செட்டி) சார் அவர்கள் தான் கற்பிப்பதை நிறுத்திக்கொண்டார்.பள்ளியில் கற்ற கல்வியை விட மதுரைக்கு நான் வந்த பின்பு அவரிடம் கற்ற கல்வி அதிகம்.புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருந்தார். குறிப்புகளை எடுத்து நோட்டு நோட்டுகளாய் எழுதிக் குவித்துக்கொண்டே இருந்தார்.பல ஊர்களில் ஆசிரியராக,. தலைமை ஆசிரியராகப் பணியாற்றி எங்கள் ஊருக்கு 1979-ல் தலைமை ஆசிரியராக வந்தார்.தன் தனித்தன்மையால் ஊர்மக்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் எல்லோர் மனதிலும் நிறைந்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக(CEO),மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளராக(Inspector Of Matriculation ) பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் மதுரை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்தார்.தனது 75 வயது வரை சைக்கிளில்தான் மதுரை முழுவதும் சுற்றி வந்தார்.கடந்த சில ஆண்டுகளாக சைக்கிள் எடுக்கவில்லை. காலில் அறுவைசிகிச்சை செய்ததால் வீட்டை விட்டு செல்ல இயலாமல் வீட்டிற்குள்ளேயே நடமாடினார்.இடையில் கொரனாவிலும் பாதிக்கப்பட்டு வென்று வந்தார்.இன்று மாலை இறந்துவிட்டார் என்று அவரது மகன் தொலைபேசியில் கூறினார்.நெருக்கமானவரின் இறப்பு துயரத்தைக் கூட்டுகிறது.80 வயதிற்கு மேற்பட்டவர்,இறப்பது இயற்கைதானே என்று அறிவு சொல்கிறது,ஆனால் மனம் முழுக்க துயரம் அப்புகிறது.எனது தாயின் இறப்பைப் போலவே இவரது இழப்பும் ....வருத்தத்தைக் கூட்டுகிறது


Thursday 17 November 2022

கருவியாய் 'கடவுள்'...

 எல்லாம் வல்ல 

கடவுளுக்கு

எதிராக எளிய மனிதன்

எப்படிப் பகைமை கொள்ள இயலும்?


உடன் பிறந்தவரோடு

உடன் பழகியவரோடு

உடன் வாழ்ந்தவரோடு

ஓர் இடத்தில் ஒன்றாய்

பயணம் செய்பவரோடு

ஒரு மனிதன் 

பகைமை கொள்ள இயலும்...

எங்கேயுமே காணாத கடவுளோடு

எங்கனம் ஒரு மனிதன்

பகைமை கொள்ள இயலும்?


அவரின்றி ஓர் அணுவும் அசையாது...

ஒரு மனிதன் சிரிப்பதுவும்

அழுவதுவும் 

மனித வாழ்க்கையில் எல்லாமே

அவரின் கருணையால் என்றானபின்

கடவுளைப் பகைமை கொள்வதுவும்

கடவுள் அருள்தானே...

பின் அதற்காக ஒரு மனிதருக்கு

மரண தண்டனை என்பது

எவ் வகையில் நியாயம்?



மனித உரிமை மீறல்கள்

உச்சபட்சமாக நடக்கும்

நாடாக ஈரான் இன்றைய நாளில்...

எப்போதும் அதிகாரம்

செலுத்த நினைக்கும்..

மக்களை வாட்டி வதைக்கும்

கொடுங்கோலர்களுக்கு

நல்ல துணை செய்யும்

கருவியாய் 'கடவுள்'...

அன்றைய காலம் முதல்

இன்றைய காலம்வரை...


                      வா.நேரு,

                      17/11/2022


https://www.bbc.com/tamil/articles/c881qlgyl23o



Monday 7 November 2022

விடை பெற்றீர்கள் தோழரே,கோரா..அவர்களே .வீரவணக்கம்...வீரவணக்கம்.



 விடை பெற்றீர்கள் தோழரே,கோரா..அவர்களே .வீரவணக்கம்...வீரவணக்கம்.


மதுரையில் எனக்கு பல ஆண்டுகளுக்கு முன் இயக்கரீதியாக அறிமுகமானவர் தோழர் கோவிந்தராஜ் என்ற கோரா. மதுரையில் மத்திய அரசு நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவில் வேலை பார்த்தார்.மதுரையில் அந்த அலுவலகத்தில் இருந்த திரு.கீதா இளங்கோவன் ITS அவர்கள் எனக்கு அறிமுகமானவராக இருந்தார். அவருக்கு கீழே வேலைபார்க்கும் அலுவலராக கோரா இருந்தார். நான் மத்திய அரசு நிறுவனமான தொலைபேசித்துறையில் இருந்த நிலையில் இயக்க நிகழ்வுகளுக்கு மட்டும் கறுப்புச்சட்டை போடுபவனாக இருந்தேன்.கோரா அவர்கள் அலுவலகத்தில் ,வெளியில் எப்போதும் கறுப்புச்சட்டைதான்.கறுப்புச்சட்டை என்பது மட்டுமல்ல,கறுப்புச்சட்டையில் சிவப்பு நூலால் நெய்யப்பட்ட NO GOD கடவுள் இல்லை என்னும் வாசகமும் இருக்கும்.மதுரையில் அவர் இருந்தபொழுது ,அவரது குடும்பம் சென்னையில் இருந்தது.அவர் மட்டும் மதுரையில் தங்கி,வெளியில் உணவு சாப்பிட்டுக்கொண்டு அலுவலகப் பணி செய்து கொண்டிருந்தார்.மதுரையில் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கட்டாயம் இருப்பார்.மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டங்கள்,தெருமுனைக் கூட்டங்கள் என்று வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் மதுரையில் திராவிடர் கழகக் கூட்டங்களில் கலந்து கொள்வார்.2005-2010 காலங்களில் மாற்றலாகி சென்னை சென்று விட்டார்.சில ஆண்டுகள் தொடர்பில் இல்லை.


வாட்சப் வந்த பிறகு மீண்டும் தொடர்பில் இணைந்தார்.பல செய்திகளை எனக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்.விடுதலையில் நான் கலந்து கொண்ட செய்தி வந்தாலோ அல்லது நான் எழுதிய கட்டுரைகள் வந்தாலோ அழைத்துப்பேசுவார். வெறுமனே பாராட்டு என்பதாக அந்த உரையாடல் இருக்காது.சரியாக இருந்தால் பாரட்டுவார்.தவறு என்று பட்டால் மிகத்தீவிரமாக விவாதிப்பார்.வாதாடுவார்.இருவரும் ஒத்துக்கொள்ளும் பொதுக்கருத்து வரும்வரை அவரின் கருத்து விவாதம் இருக்கும்.ஆனால் விடுதலை,உண்மை என எந்த இதழில் வந்தாலும் முதலில் ஒரு தீவிரமான வாசகராக அதைப் படித்து,தனக்குப் பட்டதை உடனே தெரிவிப்பார்.


தந்தை பெரியார் மீதும் திராவிடர் கழகத்தின் மீதும் அவருக்கு இருந்த பற்று என்பது சொற்களால் விவரிக்க இயலாது.அப்படி ஒரு பற்று.அய்யா ஆசிரியர் அவர்கள் மீது பற்றும்,அவர் சொல்வதை அப்படியே ஏற்று கழகச்செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்.அவரது வீட்டிற்கு ஒரு முறை தந்தை பெரியார் பிறந்த நாள் சமயம் சென்றிருந்தேன். வீட்டிற்கு முன்னால் கொடிக்கம்பம்.திராவிடர் கழகக் கொடியை ஏற்றச்சொன்னார். கடவுள் இல்லை கல்வெட்டு வீட்டின் முன்னால்.தன்னுடைய இணையர் அம்மா ஹேமமாலினி அவர்களையும்,மகன் புவனன்,மகள் தமிழரசி எனக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.அவரது மகள் தமிழரசி ,தனது தந்தையின் குண நலன்களையும் தங்களைக் கவனித்து வளர்த்த விதத்தையும் மிக அருமையாகவும் நெகிழ்வாகவும் குறிப்பிட்டார்.அது மட்டுமல்ல தனது தந்தையின் பிடிவாதக் குணத்தைப் பற்றியும் பல செய்திகளைச் சொன்னார்.


மதுரையில் இருக்கும்போது நடந்து கொண்டே இருப்பார். பயணித்துக்கொண்டே இருப்பார்.விடுதலை,விடுதலை ஞாயிறு மலர் போன்றவற்றில் அவரின் கட்டுரை வரும்.திடீரென்று அவரது இல்லத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் சென்றபோது ,வீட்டில் ஏதோ முயற்சி செய்தபோது தவறிக் கீழே விழுந்து விட்டார் என்று சொன்னார்கள்.அந்த விழுந்ததன் காரணமாக அவரது பயணம் தடைபட்டது.முதுகுத் தண்டில் பிரச்சனை ஏற்பட்டதால் நிறைய தூரம் பயணம் செய்யக்கூடாது என்று சொல்கின்றார்கள் நேரு என்றார் ஒருமுறை. அதில் ஆரம்பித்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் செல்லவேண்டும் என்றால் இரண்டு மூன்று பேர் துணை இருந்தால்தான் செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது.அப்போதும் தொடர்ந்து படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார்.


அவருக்கு நன்றாகத் தெலுங்கு தெரியும்.பெரியார் பெருந்தொண்டர் அய்யா வீரபத்திரன் அவர்களும் ,இவரும்(கோராவும்)தான் விசாகப்பட்டினம்  மற்றும் ஆந்திரா தெலுங்கானா தோழர்களோடு திராவிடர் கழகத்தின் தொடர்பாளராக இருந்தவர்கள்.இனி அய்யா வீரபத்திரன் மட்டும்தான்.தெலுங்கான தோழர் சாராய்யா மீது அவ்வளவு அன்பு செலுத்துவார்.அவரும் கோரா மீது மாறாத பாசம் வைத்திருப்பார்.அண்மையில் பஞ்சாபில் நடந்த அகில இந்திய நாத்திக மாநாட்டில் கலந்து கொண்டபோது கூட நானும் சாராய்யாவும் கோரா அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.


சில ஆண்டுகளுக்கு முன் அவர் எனக்கு வாட்சப்பில் அனுப்பிய பல மொழிபெயர்ப்புகளை ஒன்றிணைத்து 'மதம் தேவைதானா? ' என்னும் தலைப்பில் மின்புத்தகமாக வெளியிட்டோம். இளவல்,திராவிடர் கழக மாணவரணித்தலைவர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களும்,உடுமலை அவர்களும் அந்த மின்புத்தகம் வெளிவருவதற்கு பெரிதும் உதவி புரிந்தனர்.


ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு முன் தனக்கு புற்று நோய் வந்திருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.மிக அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.உண்மையான,உரமான ஒரு பெரியார் தொண்டராக அந்த நோயை அவர் எதிர்கொண்டார்.டைம்ஸ் ஆப் இந்தியாவில் வரும் ஆங்கிலச்செய்திகளை தமிழில் மொழி பெயர்த்து எனக்கும் மற்றவர்களுக்கும் அனுப்புவார்.நாத்திகக் கருத்து உடைய தெலுங்குக் கட்டுரைகளை மொழி பெயர்த்து எனக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார்.வாட்சப்பில் அழைப்பார்.குரல் எப்போதும் போல கம்பீரமாகவே இருக்கும்.இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர் அனுப்பிய செய்திக்கு பதிலாக வணக்கம் போட்டு அனுப்பியிருந்தேன்.(நவம்பர் 4)." வணக்கம் எமக்கு வேண்டாம்;வந்தேறிகள் பார்ப்பனர்களை எதிர்த்து நாணேற்றுக " என்று பதிவு இட்டிருந்தார்.இதுதான் அவர் எனக்கு கடைசியாக கொடுத்த செய்தி. எனது இறுதி மூச்சுவரை அதைச்செய்வேன் தோழா..... அவரின் இணையர் அவர்களும் ,மகன் புவனன் அவர்களும் மருமகள் நிலவழகி அவர்களும்,மகள் தமிழரசி அவரின் இணையர் ,அவரின் பேரப்பிள்ளைகள் என அத்தனை பேரும் அவர் மீது அன்பு மழை பொழிந்து ,நோய் வாய்ப்பட்டு இருந்த நேரத்தில் கவனித்துக்கொண்டனர்.


இன்று(7.11.2022) அதிகாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது.என்னதான் பகுத்தறிவாதியாக இருந்தாலும் அழுகை வந்தது.உறவுகள் இழப்பை விட தோழமைகளின் இழப்பு கண்ணீரை வரவைக்கிறது.வீரவணக்கம்! வீரவணக்கம் தோழரே! 


மதம் தேவைதானா மின் புத்தகத்தில் இருக்கும் சில குறிப்புகள்


நூலாசிரியர் கோரா பற்றி அவரின் துணைவியார்


'கோரா'வின் நடய்ப் பயணம்: 26.4.1952 இல் சென்னய் மயிலாப்பூரில் பிறந்த கோரா என்கிற‌ கோவிந்த ராஜன், 1971இல் பத்திரிகய்த் தகவல் அமய்வனத்தில் தமிழ்த் தட்டச்சராகச் சேர்ந்தார்: 1976இல் சுருக்கெழுத்தராக விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டார்; அங்கு அலுவலக நேரத்திற்குப் பிறகு, தனக்குத் தானே எந்தப் பயிற்றுநர்களின் உதவியும் இல்லாமல், தெலுங்கு மொழி பேச ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அதில் முன்னேறினார்.அவரது முன்னேற்றம் மிகுந்த வியப்பிலாழ்த்தியது; தெலுங்கய் எழுத்துக் கூட்டிப் படிக்கவும் எழுதவும் மட்டுமல்லாமல் மொழி பெயர்த்து எழுதவும் ஆரம்பித்தார்; நமது தாய் மொழியான தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்.அடுத்து, அய்தராபாதுக்கு மாற்றலானார்,அவர், அலுவலகம் மற்றும் எங்கு சென்றாலும் கருப்புச் சட்டய்தான் அணிந்து செல்வார்; தெலுங்குப் பத்திரிகய்யான 'யோஜனா-வில் சார்-ஆசிரியராக பணியாற்றினார்.இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னய்க்கே மாற்றப்பட்டார்.21 வயது வரய் மூடநம்பிக்கய்யில் இருந்த என்னய், அதிலிருந்து வெளியே கொண்டுவர, பத்து ஆண்டுகள் பெரியாரியலய்ப் போதித்து, தந்தய் பெரியாரின் அறிவுரய்களய் எடுத்துக் கூறி, கடவுள் மறுப்பாளராக மாறினேன் (மாற்றினார்); பிள்ளய்களய் அதே போல் வளர்த்து சுய மரியாதய்த்‌ திருமணங்களும் நடத்தி வய்த்தோம்; அவரது விருப்பமான தந்தய் பெரியாரின் சிலய்யினய் வீட்டில் வய்த்தோம்; இனனும் எழத நிறய்ய விடய்யங்கள்   இருந்தாலும், ஒரு பக்க அளவுக்கே எழுதச் சொன்னதால், இத்துடன் முடிக்கிறேன்! 

என்றும் கோராவின் அன்பு துணய்வி (காதலி) வே. ஹேம மாலினி


நூலாசிரியர் கோரா பற்றி அவரின் மகள்


அப்பா... ன்னா  பெரியார் பித்தன்; வெளிப்படை ; சுயமரியாதை; ஏடாகூடம் (இதுதான் சரி இப்படித் தான் செய்யணும் னு சொன்னா கண்டிப்பா ஏறுக்கு மாறாக செய்வதில் வல்லமை பெற்றவர்.) ; நாத்திகம் பேசுவதற்கு அஞ்சாதவர்; அதுவும் மத்திய அரசில் வேலை பார்த்துக்கொண்டு பாப்பானுக்கு எதிரே (Single Man Army) கருப்பு சட்டையில் சிகப்பு நிறத்தில் " NO GOD" னு போட்டு உட்காருவார்.  


எந்த வெயிலிலும் வெப்பத்திலும் நிறம் மாறாத கருஞ்சட்டைக்கு சொந்தக்காரர்.   யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத தன்மானத்தின் எடுத்துக்காட்டு. 


அப்பா கொஞ்சியதில்லை (பேரப் பிள்ளைகள் வரும் வரை )

ஏசியதில்லை, அதிர்ந்து பேசியதில்லை, முறைத்ததில்லை,

சோறு ஊட்டியதில்லை ஆனால் நாத்திகத்தை என்னில் ஊற வைத்த ஊற்று அவர். 


நான், நானாக சுயமரியாதையுடன் வாழ பெரியாரியத்தை புகுத்தாமல், வாழ்க்கை முறையில் சொல்லித்தந்த என் பெரியார் .


என்னை பார்த்தும், என் அப்பாவைப் பார்த்து வியந்தும், என் நண்பர் ஒருவர் பகுத்தறிவுவாதியாக மாறி இன்று தன் மனைவிக்கும்  பிள்ளைகளுக்கும்  பெரியாரையும், நாத்திகத்தையும் கொண்டுசேர்த்து  வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கிறார் என்று எண்ணும் போது, நான் அப்பா பொண்ணுதான்ப்பா... என்று பெருமையுடன் மார்தட்டி கொள்ளலாம்.


அப்பா அளவுக்கு அறிவும், சொற்களை கையாளும் திறமையும், இல்லனாலும் அப்பாவோட இந்த ,மொழிபெயர்ப்புக்கு தட்டச்சு உள்ளீடு செஞ்சதுல பெருமகிழ்ச்சி எனக்கு. 

அப்பாவுடன் சேர்ந்து நானும் மணக்கிறேன். 😉😇


கோரா. தமிழரசி சோபன்


நூலாசிரியர் கோரா பற்றி அவரின் மகன்

 

அவர்தான் கோரா

வெண்தாடி வைத்தபயிர் பகுத்தறிந்து வளர்ந்தார்

வெண்டூவி வைத்தமயிர் மைதீட்டலை விரும்பார்

வெண்டாவி மடைமைதனை இடித்துரைக்க மரவார்

வெண்சாரைத் துவையலொக்க மனக்கறையைத் துடைப்பார்


கருத்துகளைத் துணிவுடனே எடுத்துரைக்கும் மவ்வம்

கருங்காலி உருதியினால் இலனென்னும் எவ்வம்

கருந்தோலின் உழைப்பதனை பூநூலது தெவ்வும்

கருந்துகிலன் கண்டதுமே திருமண் மண்கவ்வும்

- கோரா புவன்




புத்தகத்திற்குள்  புகுவதுற்கு முன்,

                                 வணக்கம்.

பெரியாரியலை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையின் மூலம் எனக்கு வியப்பையும் , ஒரு நேர்மறையான அணுகுமுறைக்கான வாழ்க்கை முறையையும் அளித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.அந்த வகையில் சென்னையில் வாழும் திரு.தி.கோரா என்னும் கோவிந்தராசன் அவர்கள் தான் மட்டும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவராக மற்றும் அல்ல , தனது குடும்பத்தையே பெரியாரியலை ஏற்றுக்கொண்டவர்களாக மாற்றியிருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. எந்த வித சபலங்களுக்கும் ஆளாகாமல் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பீடு நடை போடும் பெரியாரியல் குடும்பம் அவரது குடும்பம்.ர். எனக்கு மதுரையில் கிடைத்த அருமையான நண்பர் திரு.கோரா அவர்கள்.சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் மத்திய அரசுத்துறையில் , பத்திரிக்கை நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.மத்திய அரசுப்பணியில் இருக்கும்போதே எப்போதும் கருப்புச்சட்டைதான் போட்டிருப்பார்.மத்திய அரசுப்பணி என்பதே பெரும்பாலும் பார்ப்பனர்களை அதிகாரிகளாகக் கொண்டிருக்கும் பணி. அந்தப் பணியில் கருப்புச்சட்டை மட்டுமல்ல, கருப்புச்சட்டையில் கடவுள் இல்லை " NO GOD " என்னும் வாசகம் எழுதிய கருப்புச்சட்டையோடுதான் வலம் வருவார்.



மதுரையில் இருந்து சென்னைக்குப் போய் பணி நிறைவு பெற்றார்.பணியில் இருந்தபோதும் சரி,ஓய்வுக்குப்பின்னும் சரி பெரியாரியல்தான் வாழ்க்கை.பேச்சு,மூச்சு எல்லாம் அய்யா பெரியாரும்,ஆசிரியர் அய்யா வீரமணியும்தான்.இவர் பிறப்பால் தெலுங்கு பேசும் வாய்ப்பு  பெற்றவரல்ல, ஆந்திராவில் வேலை பார்த்தபொழுது தெலுங்கைகத் தானாகக்  கற்றிருக்கிறார்.தெலுங்கினைப் பேசவும் எழுதவும் அதன் மூலம் பயிற்சி பெற்றிருக்கிறார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள நாத்திகர்கள், பகுத்தறிவாதிகள் பல பேரை தெலுங்கு மூலம் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்.


வாழ்க்கையில் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகள் ஏற்படும்போது தந்தை பெரியாரின் தொண்டர்களைப் பொறுத்த அளவில் அப்படியே இடிந்து உட்கார்ந்து விடுபவர்கள் அல்ல. அதற்கு மாற்றாக தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொன்னது போல 'தவிர்க்க இயலாததை ஏற்றுக்கொண்டு ' தொடர்ந்து உற்சாகமாக பயணிப்பவர்கள்.சமூகத்திற்கு பயனளிப்பவர்கள்.  



இந்த மின் புத்தகம் கோரா என்னும் கோவிந்தராசன் அவர்கள் தெலுங்கிலிருந்து  தமிழில் மொழி பெயர்த்த தொகுப்புகள். இந்த மொழி பெயர்ப்பில் கவிதைகள் இருக்கின்றன. ஒரு சிறுகதை இருக்கிறது. பல தலைப்புகள் குறித்து கட்டுரைகள் இருக்கிறது.தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இருக்கிறது.எல்லாமே தெலுங்கு இதழ்களில் கடந்த சில மாதங்களாக வெளிவந்தவை.திடீரென உடல் சீர்கெட்டது.படுத்த படுக்கையாகவே நீண்ட நேரம் படுத்திருக்க வேண்டிய சூழல்.அவரது அன்பு இணையர் திருமதி ஹேமா கோரா அவர்கள் மிக நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.தடைகள் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல தந்தை பெரியாரின் தொண்டர்கள்.மாறாக தங்கள் மன உறுதியின் மூலம் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கக்கூடியவர்கள் பெரியார் இயக்கத்தவர்கள் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு திரு.கோரா அவர்கள்.படுத்த படுக்கையாக இருந்தாலும் தொடர்ச்சியாக தெலுங்கில் இருந்து  மொழி பெயர்த்து அதனை தனது மகள் தமிழரசியிடம் தட்டச்சு செய்யச் சொல்லி, அதனை வாட்சப்பில் எனக்கு  அனுப்பிக்கொண்டிருக்கிறார். பல நாட்களாக எனக்கு வந்த பின்பு இதனை ஒரு தொகுப்பாக ,புத்தகமாக ஆக்கினால் என்ன ? என்னும் கேள்வி பிறந்தது. அருமைத்தோழர் பிரின்சு என்னாரசு பெரியார் அவர்களிடம் அந்தக் கேள்வியைப் பகிர்ந்து கொண்டபோது அவரும், பெரியார் திடல் தோழர் எழுத்தாளர் உடுமலை அவர்களும் உற்சாகமாக மின் புத்தகமாக இதனைக் கொண்டுவரலாம் என்று உற்சாகம் அளித்தனர்.அதன் விளைவாக இந்த மின் புத்தகம் தங்கள் கைகளில்........


பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் என்ற வகையில் இவரது மொழிபெயர்ப்புகள் மிகப்பெரிய மகிழ்ச்சியை எங்களுக்கு கொடுக்கின்றன.தான் யாருடைய கட்டுரையை,கருத்தை மொழியாக்கம் செய்கின்றேன் என்பதனை கட்டுரையின் துவக்கத்திலேயே மொழி பெயர்ப்பாளர் கோரா அவர்கள் கொடுத்து விடுகின்றார். இடை இடையே தனது கருத்துக்களை அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கின்றார்.புத்தகத்தை அச்சிடாமல ,அதே நேரத்தில் விரும்புகிறவர்கள் படிக்கும் வண்ணம் இந்த மின் புத்தகம் என்னும் ஆக்கம் அமைந்திருக்கிறது.இந்த நூற்றாண்டின் கணினியால் வந்த விளைச்சல் இது. படித்து தாங்களும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கலாம்.


                                                                                                                                                                        அன்புடன்

                                                                                                                                                                        வா.நேரு,11.08.2019 




 



 


Sunday 6 November 2022

கனடா நாட்டு சுற்றுப்பயணம்.(1)

 


சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தாம்பரம் மாவட்டத்தலைவர் அய்யா ப.முத்தையன்,பொறுப்பாளர் மோகன்ராஜ்,பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர் அய்யா நாத்திகன்,கழகச்சொற்பொழிவாளர் காரைக்குடி தி.என்னாரெசு பிராட்லா,பெரியார் திடல்-மாநில இளைஞரணி பொறுப்பாளர் சோ.சுரேசுஅன்புச்செல்வன்,வலைக்காட்சி தோழர்கள் அன்பரசன்,மகேசு உள்ளிட்ட தோழர்களோடு ,

கனடா மாநாட்டிற்கு பயணம் சென்ற 16 தோழர்களும் அய்யா ப.முத்தையன் அணிவித்த பொன்னாடைகளோடு..